Saturday 5 September 2009

முஸ்லிமாயிருத்தல்

உண்மைத்தன்மை குறித்து பல நேரங்களில் சிந்திக்கிறேன். எவ்வாறு உண்மையாளனாகக் காட்டிக் கொள்வது, எப்படி மற்றவர்களுக்கு அதனை விளங்க வைப்பது. உண்மையில் நான் நல்லவன். என்னிடம் கெட்ட எண்ணங்கள் இல்லை. தீவிரவாதம் தொடர்பாகவோ அல்லது குண்டு வெடித்தல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவனோ அல்லது அப்படியான சிந்தனைகளிலோ நான் இல்லை என்று எப்படி அவர்களுக்கு விளங்கப்படுத்துவது?
அண்மையில் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்த ஒரு இரவுப் பொழுது நேரம் இரவு 11.50. நித்திரை, உடல் களைப்பு, பிரயாண சோர்வு, ஸ்ரண்டட் எயார் போட்டில் இருந்து எனது இடத்துக்கு ரக்ஸி பிடித்துப் போவதென்றால் அறுபது பவுன் செலவழிக்க வேண்டும். அவ்வளவு பணத்தைச் செலவழிக்க எனது மனைவி இப்பொழுதெல்லாம் அனுமதி தருவதில்லை. எல்லாம் கிறடிட் கிறஞ் செய்த மாயம்.
ஐரோப்பா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு வேறு வரிசை; எங்களைப்போல வெளிநாட்டு அன்னியருக்கு வேறு வரிசை. எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த இமிகிறேசன் அதிகாரி சீல் குத்திவிட்டார்.
ஆனால் பக்கத்தில் நின்ற சி.ஐ.டி.யோ யாரோ, பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஒரு ரூமுக்குள் இருத்திவைத்துக் கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்விகளில் பாஸ்போர்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகாரி என்னிடம் கண்டதெல்லாம் நான் ஒரு முஸ்லிமாக இருப்பதுமட்டும்தான். ஐரோப்பாவில் பிறந்த முஸ்லிமோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிமோ என்ற பாகுபாடு இல்லாமல் ‘முஸ்லிம்கள் என்றால் சந்தேகி’ என்ற ஒரு நிலைமை ஐரோப்பாவில் தோன்றிவருவது தெளிவாகத் தெரிகிறது.
எங்கே இருக்கிறீர்கள்? இங்கு முஸ்லீம் இளைஞர்கள் எப்படி? உங்களது பக்கத்து வீட்டுக்காரர் யார்? உங்களது மனநிலையில் வெள்ளைக்காரர் எப்படி? உங்களுக்கு இந்த நாடு பிடித்திருக்கிறதா? ஏதேனும் வெறுப்பு இருக்கிறதா இங்கு? என்று அந்த ஒஃபிஸர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உரையாடல். எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. நடுச்சாமத்தில் என்னை வைத்திருந்து என்ன கேள்வி?
முஸ்லீம்கள் என்றாலே குண்டு வைத்து விடுவார்களோ எனும் சந்தேகத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக பயப்படுகிறார்கள். அப்படி சில சம்பவங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய அதீத பற்று போன்ற விடயங்கள் இங்குள்ள மீடியாக்களில் அடிக்கடி பாவிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய இளைஞனை தாடி, தலைப்பாகை, ஜிப்பா, பைஜாமா தோற்றத்தில் கண்டால் பொலிஸில் இருந்து இமிகிறேஸன் ஒஃபிஸர் வரை மிரண்டு போகிறார்கள். இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக-ஐரோப்பாவில்-இருக்கிறது.
உண்மையில் இது பின்லேடன் என்ற நபரை முன்னிறுத்தியதான ஒரு தோற்றப்பாடான அச்சமாகும். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சூத்திரதாரி என்று சந்தேகிக்கும் பின்லேடன் தாடி, ஜிப்பா, தலைப்பாகை கட்டி இருக்கிறார் என்பதற்காக அந்த உடை ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனை என்ன வென்று சொல்ல.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் அல்லது மதரஸா பிள்ளைகள் பயன்படுத்தும் ரூமால் அல்லது பெரிய ஸ்காஃப் ஏதோ பயங்கரவாதத்தின்அடையாளம் போல ஒரு மருட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்துவந்த ஒருவர் எனது நண்பனுக்கு அந்த ஸ்காஃபை கொடுத்தார். குளிருக்கு கழுத்தில் சுற்றிக் கொள்ளச் சொல்லி. ஆனால் அந்தத் தமிழ் நண்பர் எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். அவர் என்னிடம் தரும்போது சொன்னார் ‘என்னத்துக்கு சும்மா வம்பு’. உண்மையில் அவர் தமிழர். இந்த விறைக்குளிருக்கு கழுத்தில் கட்டுவதற்கே பயப்படுகிறார் அந்த ஸ்காபை. அதாவது மனப்பயம் சந்து இடமெங்கும் வியாபித்துள்ளது விளங்குகிறது.
அண்மையில் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த ஸ்காஃபை கட்டியிருந்த ஒரு பாடகி பயங்கரவாதத்தின் சின்னத்தை அணிந்திருக்கிறார் என்று ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகி பிரிட்டனிலும் பெரும் செய்தியாக வந்தது.
என் பாஸ்போர்ட்டை திருப்பித்தந்த அந்த ஒஃபிஸர் சொன்னார், ‘இது ஒரு சாதாரணமான விசாரிப்புதான், குறை விளங்க வேண்டாம்’. இங்கே குறை விளங்குவதற்கு அப்பால் ஒரு முஸ்லிம் ஆளை ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் பிரச்சினை. மும்பைத் தாக்குதலின்போதும் இது தெளிவாகவே தெரிந்தது. இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதான் எல்லா டெலிவிசன், பேப்பர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ அல்லது இந்துத் தீவிரவாதி என்றோ அல்லது பௌத்த தீவிரவாதி, யூத தீவிரவாதி என்று எந்த ஊடகங்களும் குறிப்பிட்டு சொல்வதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதி என்பது ஒரு சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்க்கிற சொல். அதுதான் இப்பொழுது உலகமெங்கும் நடக்கிறது.
ஒரு பொதுமகன் எவ்வாறு உண்மையானவன் என்பதனை பொலிஸிடமும் இமிக்கிறேசன்காரரிடமும் நிரூபிக்கிறது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது ஐரோப்பாவில்.
ஐரோப்பாவில் இருக்கின்ற அனேகமான முஸ்லிம்களின் பூர்வீகம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் என்றுதான் இருக்கின்றன. அவர்களின் பூர்வீக நாடுகளில் எல்லாமே யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் யாராவது ஒரு சொந்தக்காரன் ஒரு தொடுசலாக இருப்பான். அதனால் இவருக்கும் ஒரு தொடுசல் வர சாத்தியம் இருக்கிறது. அப்படித்தான் பலர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால் மதத்தைச் சொல்லி ஒரு முழுச் சமூகத்தை விரல் சுட்டி பயங்கரவாதிகள் என்று சொல்வது தினம் தினம் அதிகரித்துச் செல்கின்ற ஒரு விடயமாக மாறிவருகிறது ஐரோப்பாவில்.
ஒபாமாகூட முஸ்லிம் ஆட்கள் கூப்பிட்ட ஒரு விருந்துக்கும் இதுவரை போகவில்லை. காரணத்தையும்அவர் சொல்லவில்லை.

குடும்ப வைத்தியருக்கான 2009 விருது

From left : Mrs. Nagina Khan - senior receptionist , Rt Hon. John Mc Donnell MP (Guest of honour), Dr Shashikanth , Dr Carol Cooper , Mrs. Marie Boulter - Practice nurse and Miss Shayrun Begum - Practice Administrator

இந்த ஆண்டுக்கான சிறந்த குடும்ப வைத்தியருக்கான விருதினை எனது நண்பரும் தீபம் தொலைக்காட்சியில் வைத்திய ஆலோசனை வழங்கி வருபவருமான டொக்டர் ஷசிகாந்த் பெற்றுள்ளார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

Monday 17 August 2009

செயற்கை விந்துகள் துள்ளும் உலகம்

ஒரு மாதிரியாக செயற்கையான விந்தணுக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சமூகம், குடும்பம், ஆண் பெண் உறவு, உடலுறவு எல்லாவற்றிற்கும் பெரும் சவாலாக அமையப் போகும் ஒன்று என்று இப்பொழுதே குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

யுலை 9ஆம் திகதி லண்டனில் இருந்து வெளிவரும் ‘சன்’ பேப்பரில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். ஆதாம் ஏவாள் இருவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள். ஏவாளை ஆதாம் கூப்பிடுகிறார். ‘நீ தேவையில்லை ஆதாம்’ என்றபடிக்கு செயற்கை விந்து டப்பாவை கையில் பிடித்தபடிக்கு ஏவாள் நிற்கிறாள்.

ஏற்கனவே சிங்கிள் மம், சிங்கிள் பாதர் என்று சிந்திக்கத் தொடங்கிய வெளிநாட்டு சமூக அமைப்புக்குள் உடலுறவில்லாத செயற்கை கருத்தரிப்பு அறிமுகமாகி டெஸ்ட் ட்யூப் பேபி என்று வந்து, அதற்கும் ஆணின் உயிருள்ள விந்தினை வயிற்றில் சுமந்து பிள்ளை பெற்றவர்கள் இப்பொழுது ஆண்களின் விந்தே தேவையில்லை எனும் அளவிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

முந்தி ஜீன்களை எடுத்து ஆடு செய்யப்போய் வத்திக்கான் திருச்சபை அல்லலோலகல்லோலப்பட்டதன் பிறகு இப்பொழுது ஒருத்தருக்கும் சொல்லாமல் ஆய்வுக் கூடங்களில் விஞ்ஞானிகள் மறு உருவங்கள் மறு வடிவங்கள் என்று ஒரு செல்லில் இருந்து மறு செல்லுக்கு என்று உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த உருவாக்கம் உலக நியதிகளோடு ஒத்துப்போக மாட்டாது என்று திருச்சபைகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது ‘சிங்கிள் மம்’ போன்றவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தங்களது கருப்பைக் குடத்துக்குள் இனம் தெரியாத ஆணின் விந்தை வாங்கி அடைகாக்கத் தேவையில்லை.
இயந்திரங்கள் செய்த விந்தை எடுத்து வைத்துக்கொண்டு பிள்ளை பெத்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரின் விந்து என்று அல்லாடவும் தேவையில்லை.

அந்தரங்கங்கள், அருமையான உடலுறவு எனும் இன்பம் என்பவையெல்லாவற்றையும் மறுதலிக்கும் ஒரு சமூகம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
செயற்கை விந்தணுவின் மூலம் முழுமையான ஒரு பிரசவத்தை எந்தக் குறையுமில்லாமல் செய்விக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உடலுறவின் மூலமான தொந்தரவுகள் இல்லை என்றும், ஒருவருக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து வாழவேண்டுமென்ற வாழ்வை விரும்பாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்த திங்கட்கிழமை காலை எங்கள் அலுவலகத்தில் இருந்த இருபது வயது பெண்மணி மிகவும் குதூகலமாக இருந்தாள். ‘இனி ஆண்களின் துணை தேவையில்லை’ என்றாள். ‘என்னத்துக்கு’ என்றுகேட்டேன். பிள்ளை பெறுவதற்கு என்றாள். ‘அப்போ செக்ஸுக்கு’ என்று கேட்டேன். அதற்கு மழுப்பினாள். ‘செக்ஸுக்கு ஆண்கள் வேண்டும். ஆனால் கருத்தரிப்பிற்கு செயற்கை விந்தா?’ என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை.
லண்டனில் ‘பிக்கட்லி சேக்கஸ்’ எனும் இடம்தான் விபச்சாரிகளுக்கு பேர் போன இடம். இடம் ஊத்தை. அந்த இடத்தில் போய் சுத்தினாலே தெரியும், தம்பி செக்ஸ் செய்யும் பெண்களிடத்துதான் வந்திருக்கிறார் என்று.
எனக்கு எல்லாவற்றையும் இந்த இரண்டு கண்களால் பார்த்து உணரவேண்டும் என்ற அவா இருக்கிறது. ஒரு நாள் அங்கு போனேன். சுற்றிவர செக்ஸ் சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது.
முதன் முதல் பார்க்கும்போது உண்மையில் அது ஒரு அதிசயம்தான். போய்ப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும். அங்கே மக்கள் வந்து தங்களுக்கான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு போவதை கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன், வாங்கும் பொருட்களை. வளைந்து கொடுக்கும் ஆண்குறிகள் பல வடிவங்களில் பல சைஸ்களில் இருக்கின்றன. பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்து வைத்திருக்கிறார்கள். அதனை வாங்குகிற பெண்கள் பல வயதினர். பிளாஸ்டிக்கால் செய்த, காற்று ஊதிப் பெண்ணாக்கிவிட்டு அதனோடு உடலுறவு கொள்ளத்தக்க பெண்ணுருவங்கள். உயிரற்றவை அவை. ஆனால் தனியே இருக்கும் ஆண்கள் அதனை வாங்கிப் போகிறார்கள் என்றார் விற்பனைப் பெண்மணி. காலையில் எழும்பி மூஞ்சையை நீட்டிப் பிடிக்காது, புறுபுறுக்காது, நகை நட்டு, சாறி, மூக்குமின்னி கேக்காது, சாப்பாடு குடிப்பு தேவையில்லை, உறங்காது இரவு முழுக்க பகல் முழுக்க விழித்திருக்கும் அந்த பிளாஸ்டிக் பெண்மணி. எனவே அது இலகு என்று வாங்கிப் போகிறார்கள் என்றாள் அவள். எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடிய ‘வாய்’ போன்ற பொருட்கள், யோனி போன்ற பொருட்கள், முலையைக் கௌவிப் பிடிக்கக்கூடியதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியதுமான பொருட்கள் செக்ஸ் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பொருட்கள், மேகஸின்கள், புத்தகங்கள், படங்கள், ஆண்,பெண் நிர்வாணப் படங்கள் வீடியோக்கள், சீடிகள், பாட்டுகள் என்ற எப்பொழுதும் வியாபாரம் நடக்கும் கடைகள் அவை.

லெஸ்பியன், கே எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல சோடி சோடியாகவும் ஆண்கள் பெண்களும் இந்தக் கடைகளுக்கு வருகிறார்கள்.
உடலுறவின் நிலைகளை மாற்றி மாற்றி துய்த்துணர இப்போதைய தலைமுறை பழகிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஒரு மனிதனின் செல்லை எடுத்து அதேபோல ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்பொழுது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு இந்து நாடென்று உணரப்படுகின்ற இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேச்சு அடிபடுகிறது.
ஓரினச் சேர்க்கை பற்றி அதன் மன உணர்வுகள் பற்றி அப்படி இல்லாத என்னைப் போன்றவர்கள் முழுமையாக தெரிவிக்க முடியாது. ஆனால் அடிமனதின் உணர்வுகளில் எதிர்ப்பின் மீதான கவர்ச்சியின்மை உணர்ச்சியின்மை பற்றி ஒரு ‘கே’யுடன் உரையாடி இருக்கிறேன். அழகான ஆணைக் கண்டால் அவரோடு உடலுறவு கொள்ளத் தூண்டும் எண்ணங்கள் தனக்கு வரும் என்று சொன்னார்.
ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான அழகான பெண்ணைக் கண்டால் எல்லாம் துடிப்பது போல; ஒருபால் உறவுக்காரருக்கு அது இருக்குமாம் ஒத்த பாலினைக் கண்டால்.
வெளிநாடுகளில் ஒரு பால் சேர்க்கைக்காரர்கள் ஒன்றாக இருந்து வாழ்கிறார்கள். ஆனால் ஆண் ஒருபால் உறவுக்காரர்களின் பின் வழி மூலமான உடலுறவால் எயிட்ஸ் போன்ற பேராபத்து தொடர்பான அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது. எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் உறவு கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வீதியில் இறங்கிக் குதூகலித்த ஆட்களின் தொகை பிரமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கையிலும் ஒரு பாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களவாகவே தங்கள் சோடிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாக அவர்களும் சிந்திக்கிறார்கள். கூடித் திருமணம் முடித்து வாழ்வது என்பது ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஒரு விசயமேயில்லை.
இங்கு சுரங்க ரயில், பஸ்களில் ஆண் ஆண், பெண்பெண் சோடிகள் கட்டிப் பிடித்து உதட்டு முத்தம் எல்லாம் கொடுத்து சந்தோசமாக பயணம் செய்வார்கள். எங்களுக்கு அதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.
எனது சின்ன மகள் கூட சொல்வான் அவை லெஸ்பியன் என்று. சில விசயங்கள் ஆரம்பத்தில்தான் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்.
இலங்கையில் எங்கள் கிராமங்களில்கூட ஆண்கள் சின்னப் பையன்களோடு உடலுறவு கொள்வது நடந்திருக்கிறது. அது ஒருவகை உணர்வுகளின் வெளிப்பாடுதான். அவர்கள் ஆண்களோடுதான் சாகும்வரை உடலுறவு கொள்வார்கள் என்றில்லை. வளர்ந்தபிறகு கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகள் பெத்து இருப்பார்கள். அது ஒரு கவர்ச்சி மட்டும்தான்.
ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மறுபாலில் வெறுப்புள்ளவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் முடித்து உடலுறவு கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது அதீத வளர்ச்சி, தொழில் நுட்பத் தாக்கம், துய்த்து எல்லாவற்றையும் அனுபவித்துவிடத் துடிக்கும் மனம் என்ற விடயங்களால் அன்பு, ஆதரவு என்பன எல்லாம் சிதறிப் போகின்றன. பிரபலங்களுக்கு எல்லாம் இது பெரிய தலையிடிதான். எங்களுக்கு முன்னால்இருக்கும் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று பிள்ளைகள். ‘ஜாக்ஸனைப்போல ஒரு சிறந்த அப்பாவை உலகத்தில் நாங்கள் காணவில்லை’ என்று மனமுருகி பிரேதத்துக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருக்க ஜாக்சனின் மனைவி ஒரு அறிக்கை விடுகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் ஜாக்ஸனுக்குப் பிறந்தது அல்ல. தான் ஜாக்ஸனின் டொக்டரோடு உடலுறவில் ஈடுபட்டுத்தான் பிறந்தது என்று.
பிள்ளைகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். தந்தை செத்தபிறகுகூட அந்தப் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுகிறார்களில்லை. இந்தப் பொறிபோதும் மீடியாக்களுக்கு. அந்தப் பிள்ளைகளை வேதனைப்படுத்துவதற்கு.

உண்மையில் உடலுறவின் தாத்பரியம், லிமிட் என்று எதனையும் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்பொழுது செயற்கை விந்துகளும் ஊர்ந்து ஊர்ந்து வந்துவிட்டன.
எல்லாம் செயற்கையாகவே போகப்போகிறதா என்று அச்சப்படத்தேவையில்லை என்கிறாள் மனைவி. ஏனெனில் மனம் முழுக்க காதலுடன் செய்யும் உடலுறவுக்கு நிகரில்லை. அந்த இன்பத்துக்கும் ஈடில்லை.

Sunday 16 August 2009

அவருக்கு மட்டுமான சூரியன்

நவஜோதி அகஸ்தியரின் மகள் என்பது மட்டும் கவிதைகளை எழுதுவதற்கான அடையாளம் இல்லை. நவஜோதிக்குள் இருக்கும் ஒரு கவிதைக்குரல்தான் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’. அவரது முதலாவது கவிதைகளின் தொகுப்பு இது.
வரலாறும் அனுபவமும் எப்பொழுதும் பண்பட்ட ஆக்க இலக்கியவாதிகளைத் தரும். ‘தீபம்’தொலைக்காட்சியின் இலக்கிய நேரம் பகுதிக்கு ஆர்வமுடன் அவர் எழுதிய கவிதைகள் சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு நான் ‘விஷவல்’சேர்த்து அழகு படுத்தியிருந்தேன். மனப்பதிவுகள் மனஅதிர்வுகள் வெளிப்பாடுகள் இவரது கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதைகளுக்கு என்ன வரையறை கொடுப்பது என்பது பலவாறாக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன்று.
எல்லாக் கைகளையும் தட்டிவிட்டு அகல விரித்துக் கொண்டு ‘புதுக்கவிதை தனது ஆழத்தைப் பதித்து ஆண்டுகள் பல.
எமது ஆழ் மனதுக்குள் சிக்காராக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைப்பாகைக் கவிஞன் எல்லாவற்றையும் 39 வயதுக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டான். அவனைவிட வேறு யார் உளர். (பாரதி பிறந்த நாள் - 1882 – டிசம்பர் 11. இவ்வுலகை விட்டுப் போன நாள் 1921- செப்டம்பர் 12.)
இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துவிட்டுப்போன கவிதைகளால் மட்டுமே அவன் உலகம் முடியும் வரை வாழுகிறான்.
‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு முறையும் பெண்கள் எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். எனது செவ்வியொன்றில் பிராங்போட் ரஞ்சனி சொன்னது இன்னும் மனதுக்குள் இருக்கிறது. “பெண்கள் ஆண்கள் என்று என்ன? இரண்டும் சாப்பிடுவது ஒரே மாதிரி குடிப்பது ஒரே மாதிரி சுவாசிப்பது ஒரே மாதிரி பேசுவது ஒரே மாதிரி சிரிப்பது ஒரே மாதிரி கேட்பது ஒரே மாதிரி பின்னரென்ன வேறுபாடு மேல் எண்ணம் ஆண் என்பது” .
“எழுத்துக்கள் என்ன செய்துவிடப் போகின்றன. எவ்வளவு எழுதினோம் எழுதுகிறோம் ஆனால் சமூகம் மாறுகிறதா? என்று எனது பத்திரிகையாளரான எனது நண்பி ஒருத்தி கேட்டாள். “தொடர்ந்து செய்யுங்கள் எங்காவது ஒரு அதிர்வு ஏற்படும் சிலவேளை உங்கள் பார்வை படாத இடத்தில் கூட அது நிகழலாம்”என்றேன்.

கவிதைகளை தொகுப்புக்காக தெரிவு செய்வது எப்படி என்பதில் படைப்பாளிகளின் தைரியம் எந்த மட்டில் இருக்கவேண்டும் எனப்படுவது மிகவும் குழப்பகரமானதாவே இருக்கிறது. பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் படைப்புக்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பிற்கு எடுபடுமா என்ற அச்சம் இருக்கிறது.
தெரிவு என்பது என்ன? வெளிவந்த கவிதைகள் தானே இவை. எல்லாவற்றையும் தொகுப்பில் சேர்க்கலாமே என்பதுதான் நவஜோதியின் அபிப்பிராயமாக இருந்தது.
பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும்போது அழகாக இருக்கும் கவிதைகள் தொகுப்பில் வரும்போது அழகாக இல்லாமல் போகின்றதா? அல்லது என்ன?
கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து அவரவர்க்கும் ஒவ்வொரு தேவையும் ரசனையும் வெளிப்பாடும் இருக்கிறது.
நவஜோதியின் கவிதைகள் உணர்வுகளின் வடிகாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதனை உணருகிறேன்..
மன நெருடல்கள் கவிதைகளாகவோ சிறுகதையாகவோ வேறு ஏதாவதாகவோ வடிகாலாய் மொழியாய் பிரிக்கப்படும்போது ஒரு ஆறுதல் வரத்தான் செய்யும். அந்த ஆறுதல்தான்.

‘நானும் உன்னுடன் வந்திருக்கலாமேஎன நினைத்தேன்எவ்வளவு தூரம் வந்தாலும்ஓர் இடத்தில் பிரியத்தானே வேண்டும்அந்த இனிய அனுபவத்தைநெஞ்சில் தேக்கிக் கொண்டேன்புகையிரதம் போய்க் கொண்டிருந்தது.
(உனக்கு நினைவிருக்கிறதா)

ஒரு தேர்ந்த வாசகன் கவிதைகளுக்குள் தன்னை உட்புகுத்தி அதன் இடைவெளிகளை நெருக்கிக் கொண்டு ஐக்கியமாகும்போது கவிதை வெற்றியடைந்து விடுகிறது.
சில வேளைகளில் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்தாளரின் தன்னுணர்வால் மட்டும் வெளிப்படும்போது அது வாசகனுக்கு சலிப்பைக்கூடத் தந்துவிடும். அதற்காக எதை எழுதலாம் எதை எழுதாமல் விடலாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தரப்படக்கூடாது.
மனத்தின் பாடுகளை கவிதையாக்கி பார்ப்பதுதானே கவிஞனின் வேலை.
உண்மையில் உறவுகள் எமது பூமி தாய் நிலம் பார்க்கும் அவலங்கள் இவைகளை கவிதைகளாக வெளிப்படுத்தும் அற்புதம் கவிஞர்களுக்கு மட்டுமே வாய்த்தது.
எத்தனையோ உணர்வுகளை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்வுகள் இருக்கும் எழுதத் தெரியாது. எத்தனை பேர் மற்றவர்களை ஆகர்ஷிக்கிறார்கள்.
எண்ணிப் பார்த்தால் லட்சக் கணக்கான மனிதர்களுக்குள் ஒரு கவிஞர் உட்கார்ந்திருப்பார். உண்மையில் கவிஞன் ஒரு அற்புதம் தானே.

நெகிழும், மிதக்கும், வேதனைப்படுத்தும், எம்பிக் குதிக்கும் உணர்வுகளை கவிதைகளால் வடிய விடுவது ஒரு ஆசுவசிப்புத்தான்.

பகலில் தேவையில்லாமல்தேய்ந்து விட்டேன்
இரவின் அமைதியை தேடுகிறேன்நிம்மதியை;
இரவின் கருப்பைக்குள் தேடுகிறேன்.நினைத்துப் பார்க்கிறேன்.
வியர்த்தம் தெரிகிறது.போர் கடுமையாக இருந்தபோதுகையில் வரும் வெற்றியின் இனிமைஇஎன்னுள் பிறை தெரிகிறது நான் பிறை கண்டவள் நிலாக் கண்டவள் அல்ல... (இதயத்தின் தவிப்பு)

இது நவஜோதியின் ஆசுவாசிப்பு.


பெரும்பாலான கவிதைகளில் தனிமை மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதும் சில புள்ளிகளை மட்டும் சுற்றி வருவதும் வாசகனுக்கு சலிப்பைத் தரலாம். மொழியின் போதாமை தொக்கி நிற்பதனை குறிப்பிடாமல் செல்ல முடியவில்லை. எனக்கு. ஆழமான வாசிப்பு இன்னும் உள்வாங்குதல் மொழியை செழுமை செய்தல் போன்றவற்றை நவஜோதிக்கு சொல்லக்கூடிய ஒன்று எனலாம்.

கவிதைகளோடு வாசம் செய்வதும் கவிதைகளோடு சயனிப்பதும் எவ்வளவு சுகமானது.லண்டனில் ஒரு நல்ல கவிதை சொல்பவர் கிடைத்திருக்கிறார். அவர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
கவிஞருக்குள் இருக்கும் இரக்கம், அன்பு, மற்றவரை கனம் பண்ணுதல்,விருந்தோம்பல் என்ற எல்லாப் பண்புகளும் நவஜோதியில் இருக்கின்றன.. ஜோகரட்னத்திலும் அது மிகையாகவே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.

Monday 27 July 2009

லண்டனில் கார்



லண்டனில் ஒரு கார் வாங்குவதும் இலங்கையில் ஒரு யானை வாங்குவதும் சரி. இரண்டையும் கட்டி மேய்க்கும் செலவு ஒன்றுதான். லண்டனுக்கு வந்து பத்து வருடமாகியும் கார் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. காரணம் இங்கு போக்குவரத்துக்கு அவ்வளவாகப் பிரச்சினை இல்லை. முந்தி என்றால் எனது அலுவலகத்துக்கு மேலேயே ரூம் இலவசமாக தந்திருந்தார்கள். ஆகவே, படியில் இறங்கி படிகளில் ஏறினால் வீடும் அலுவலகமும் வந்துவிடும். அதற்குப் பிறகு அலுவலகமே 5 நிமிட நடை தூரத்தில் ஒரு வீடு வாங்கித் தந்தது எனக்கும் வேலை நண்பர்களுக்கும். அதில் எனக்கு ஒரு ரூம். ஆகவே, காரின் சிந்தனை வரவில்லை. இப்பொழுது இருக்கும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 10 நிமிட தூரம்தான் நடை.
ஆனால், குடும்பத்துடன் போகவர ஒரு கார் இருந்தால் நல்லது என்று மனிசி ஒருவருடத்துக்கு முன்பு ஒரு கதையைப் போட்டது. அதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது கார் பற்றிய கவலை. லண்டனில் உள்ள குளிர் சாதாரணமானது இல்லை. சாறி உடுத்துக் கொண்டோ சாதாரணமான சேட்டை உடுத்துக் கொண்டோ இந்தக் குளிர் காலத்தில் போகமுடியாது. அதுக்கு ஹீற்றர் போட்ட ஒரு கார் இருந்தால் நல்லதுதான் என்பது மனிசியின் வாதம்.
வத்தளையில் இருக்கும் போது மனிசி படிச்சுப் படிச்சு சொன்னது, ''கார் பழகுங்கோ, கார் பழகுங்கோ ஒரு 15 ஆயிரம் ரூபாய்தானே பழகுங்கோ'' என்று ஆனால் அசட்டையீனத்தால் மனிசி சொன்னதைக் கேட்கவில்லை.இங்கு வந்ததன் பின்பு என்னதான் இலங்கையில் ஓடத் தெரிந்திருந்தாலும் இங்கு லைசன்ஸ் எடுப்பதற்கு லேனர்ஸிடம் போய் கார் பழகி சட்டதிட்டங்களை முறையாகப் படித்து அதனை அவதானித்து ஐம்பது பவுண் காசு கட்டி பின்னர் லேனர்ஸ் கார்காரருக்கு எழுபது பவுண் அளந்து போய்த்தான் எக்ஸ்ஸாமினர் 45 நிமிடம் ஓடவைத்துப் பார்த்து எல்லாம் நூற்றுக்கு நூறு சரியென்றால் மாத்திரம் அவர் லைசன்சுக்கு பாஸ் பண்ணுவார்.
எக்ஸாமினர் கண்ணுக்குள் எண்ணெயை விட்டுக் கொண்டு நாங்கள் கார் ஓடுவதைப் பார்த்துத்தான் ஓ.கே. பண்ணுவார்.ஊர் உலகத்துக்குத் தெரியாத பல பிழைகள் அவரது கண்களுக்குப் பட்டுவிடும். 16 சிறிய பிழைகளில் 15 விடலாம் என்றிருக்கிறது. அந்த சின்ன பிழைகளில் கண்ணாடி சரியாகப் பார்க்க வேண்டும், ஸ்ரேறிங் அங்கும் இங்கும் அல்லாடக்கூடாது, வெள்ளை கோட்டை மீறக்கூடாது என்று மயிர்போல சிறிய அவதானமும் தேவை.
பெரிய பிழைகளில் மஞ்சள் கோட்டில் மனிதர் இறங்கி விட்டால் காரை சிறிது மூவ் பண்ணினாலும் உடனே பெயிலாக்கிவிடுவார். றவுண்ட் எபெளட்டில் சரியான லேனை தெரிவு செய்யாவிடில் ,பொக்ஸ் ஜங்சனில் பிழையாக போய் நின்றால் வன்வே பாதையில் பிழையான பக்கத்திற்குப் போய் நின்றால் பின்னுக்கு எடுக்கும்போது சரியாக எடுக்காவிடில் பெயில் பெயில் தான்.
அதுதான் இங்கு லண்டனில் ஒருவர் லைசன்ஸை எடுத்துவிட்டால் ஒரு பெரிய பேறு பெற்றவராக தன்னை நினைத்துக் கொள்வார்.
அது சரிதான்இந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நூல்போல எல்லாம் சரியாக செய்து விட்டால் அவர் பாஸாகி விடுவார். இது ஒரு வெட்டிமுறிக்கிற வேலை இல்லைத்தான். அப்படி என்றால் இத்தனை பேர் கார் வைத்து ஓட முடியாதே.
ஆனால், எல்லாம் மிக நுணுக்கத்தில் இருக்கிறது. இரண்டு பரீட்சைகள் பாஸ் பண்ண வேண்டும். ஒன்று கேள்வி தொடர்பான பரீட்சை அதனை 35 பவுண் கட்டி பாஸ் பண்ணின சேட்டிபிக்கட்டோடுதான் அடுத்த பிறக்டிக்கலுக்கு போக வேண்டும். இவ்வாறு பல கட்டங்கள் தாண்டினால் பிறகு கார் எடுக்க வேண்டும் இதனைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னனான். கார் வாங்குவது மிகவும் சுலபம். 10 ஆயிரம் பவுண் காரையும், ஒரு ஆயிரம் பவுண் கொடுத்துவிட்டு வீட்டுக்கு கொண்டு வந்துவிட முடியும். பிறகு மாதா மாதம் கட்ட வேண்டும். இங்கே சாதாரண வருமானம் உள்ளவர்களுக்கு கார் ஒரு பெரும் சுமை. றோட் ரக்ஸ் வருடம் 220 பவுண், இன்சூரன்ஸ் வருடம் 800 பவுணில் இருந்து....., எம்.ஓ.ரி. 100 பவுண் வருடம் என் று இவ்வளவும் இருந்தால் தான் காரை றோட்டில் இறக்க முடியும்.இப்பொழுது பொலிஸ்காரரிடம் இருக்கும் சாதனம் மூலம் காரின் நம்பர் பிளேட்டை அது கண்டவுடன் இன்சூரன்ஸ், எம்.ஓ.ரி, இருக்கிறதா? றோட் ரக்ஸ் இருக்கிறதா என்று பார்த்து றீட் பண்ணி விடும். பொலிஸ்காரர் மறித்து செக் பண்ணத் தேவையில்லை.
அப்போ நான் கார் பழக ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மாதத்தில் 4 கிளாஸ் ஒரு வகுப்புக்கு 21 பவுண் கொடுத்தாயிற்று. கார் இப்பொழுது நான் சொன்னபடி கேட்கிறது. டொமினிக் ஜீவாவின் பாணியில் சொல்வதென்றால் வாலாயப்பட்டிருக்கிறது.இனித்தான் எக்ஸ்ஸாம் எடுக்க வேண்டும்.
மாத்தளையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஓடப்பழகி விட்டேன். ஆரம்பத்தில் கந்தரோடையில் இருக்கும் பொழுது மாமாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் ஒரு கிழவிக்கு இடித்த ஒரு கதையும் இருக்கிறது. மோட்டார் சைக்கிள் லைசன்சுக்கு அப்ளை பண்ணிவிட்டேன். மாத்தளையில் வைத்து,
இது நடந்தது 1983 அப்போ எனது நண்பனின் அப்பா படிவங்களையும் நிரப்பி ஒரு லேனர்ஸ் காரரை பிடித்து எக்ஸ்ஸாமினரிடம் கொண்டு போகும் போது படிவத்துக்குள் 100 ரூபா நோட்டொன்றும் வைத்து எக்ஸ்ஸாமினரிடம் கொடுத்தார். ஏன் நூறு ரூபா என்று கேட்டேன். அவர் பாஸ் பண்ணிவிடுவார் என்றார். 100 ரூபா வைக்க படிவம் எல்லாம் பெயிலானவர்களுடையதாக இருந்தது அன்று.
ஒரு சுவரில் கீறி இருக்கும் ஹைவே கோட் களை ஒரு குச்சியால் தொட்டு காட்டி இது என்ன என்று கேட்பார் அவர் 100 ரூபா படிவம் காரராக இருந்தால் பிழையாகச் சொன்னாலும் பரவாயில்லை.பின்னர் 8 போடச் சொன்னார். கால் ஒரு முறை ஊன்றிவிட்டேன். ஆனால் நான் பாஸ் தான் என்பது எனக்கு தெரியும்.ஏனெனில் 100 ரூபா காரர்களில் ஒருவராக நானும் இருந்தேன். மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் பிரச்சினை ஒருவாறு முடிந்தது. அன்றைக்கு மட்டும் ஒரு ஐம்பது பேர்வரை வந்திருப்பார்கள். அவருக்கு மாதம் என்ன வருவாய் லஞ்சமாக கிடைத்திருக்கும்.எம்.ஓ.ரீ என்றொரு சாமானை எனக்கு லண்டன் வரும் வரை தெரியாது. றோட்டில் ஓடுவதற்கு புகை, நச்சுவாயு, நாசமறுப்பு எதுவும் இல்லாமல் நல்ல வாகனம் என்று உறுதிப்படுத்தி பதிவு செய்த கராஜ் ஒன்று சான்றிதழ் தரவேண்டும்.இலங்கையில் இந்தியாவில் எம்.ஓ.ரீ. செய்யப் போனால் 90 வீதமான வாகனங்களை இரும்புக் கடைக்கு தான் போடவேண்டும். அவைகள் விடும் புகை மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் ஓட்டை விழுந்து விடும் அளவுக்கு இருக்கின்றது.அதுவும் ஆட்டோவில் போகும் போது லொறிகாரர் அல்லது பஸ் காரர் நேரே இருக்கைக்கு பக்கத்தில் வைத்து அக்ஸிலேட்டரை அமத்துவார் பாருங்கள். எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது தினமும்.ஒரு ரெஸ்ரிங்கும் இல்லை மண்ணும் இல்லை. நாலு ரயரும் ஒரு இரும்பு துண்டும் இருந்தால் அது வாகனம். மனிதரின் சுகாதாரமாவது மண்ணாவது? ஊழலிலும் லஞ்சத்திலும் எல்லாவற்றையும் சாதித்து விடத் துடிக்கும் இலங்கையராகிய எமக்கு வேறு என்னத்தைப் பற்றி யோசிக்க.இங்கு லண்டனில் லஞ்சம் இல்லாத அதிகாரிகளால் தான் நாடு முன்னேறிக் கொண்டே போகிறது.
ஒருமுக்கியமான விடயம் எல்லா பரீட்சைகளும் பாஸ் பண்ணி ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி 2009இல் லைசன்ஸ் தந்து விட்டார் எக்ஸ்ஸாமினர் எனக்கு. இப்ப கார் என்ற சுமையை தூக்கி கொண்டு மனிஸியையும் ஏத்திக்கொண்டு திரிகிறேன்.

அறைதல் ( கவிதை)

பாய்ந்து வந்துமுகத்தில்
அறைகிறதுபனித்துளி
பொலிஸ்காரரின் சைரன் ஒலிகாதுக்குள் எரிகிறது
ஆணும் பெண்ணும்உதட்டை
உறுஞ்சி கடித்து எரிச்சலூட்டுகிறார்கள்
டயருக்கு செயின் பூட்டிபனிக்குள்
ஓடும் வாகனங்கள்கறிஸ் கறிஸ்
என்று சத்தமிட்டுகருவறுக்கின்றன
அதிகாலை என்றால்குயில்கள் கூவ வேண்டும்
குருவிகள்நெல் வயலுக்கள் குத்தி எழும்ப வேண்டும்
மெல்லிய தென்றல் முகத்தை வருட வேண்டும்
பெண்கள் குளித்து கோலம் போட வேண்டும்
முற்றத்தில் துளி நீர் தெளிக்க
பள்ளி வாசல் பாங்குகாதில் ஒலிக்க வேண்டும்
கறந்த பசும்பாலோடு சுட சுட
தேனீர் கலந்துஆவி பறக்க
குளித்த ஈர உடுப்போடு மனைவி
கொண்டு வந்து தர வேண்டும்
மெல்லமாய் சூரியன் மேலெளும்ப
வேண்டும்.
ச்சீ இதென்ன ……….

Tuesday 14 July 2009

நாய்கள்



நாக்கு சிவந்த நாய்க்குட்டி அது
எனக்கும் எல்லோருக்குமானது அது.
புலி போலவும் இருக்கும்
சில நேரம் நரி போலவும்
கொழும்பிலிருந்துலண்டனுக்கு
வந்திருந்தது அது.
விமானத்தில் இடம் பத்தாது என்று
கப்பலில் வந்தது அது.
ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்ததில்
நாக்கு இன்னும் நீண்டிருந்தது.
எச்சிலிலும் உப்பு இருந்தது
அதன் எச்சிலைஒருநாள்
எனது சின்ன மகள்
சுவைத்து விட்டு சொன்னாள்
ஜிம்மிக்கு உப்பு ஊறுகிறது என்று.
தனிய இருந்த எனக்குநாய்பூனை
பன்றிகளில் ஆர்வமில்லை
என்கொரு காதலி இருந்தாள்
அவளிடம் ஒரு நாய்க்குட்டி இருந்தது.
சிலோனும் லண்டனும்
நாயால் சேர்ந்திருந்தன.
ஒருநாய்இன்னொரு நாயை முத்தமிட்டது
நாக்கால் முத்தமிட்டதுவெள்ளைக்காரர் போல
எல்லா இடமும்நாக்கு பரந்திருந்தது நாய்க்கு
அதுதான் அவளுக்கும் பிடிக்கும்.
சிலோன் நாய்க்கு
ஒரு சிம்மாசனம்வேண்டுமென்று
மனைவி கேட்டாள்
எனது ஈஸி செயாரை
நாய்க்கான சிம்மாசனமாக்கினாள் மனைவி.
சிலோன் நாயும்
லண்டன் நாயும்
காதலிக்க தொடங்கி விட்டன.
நான் தரையில் படுத்திருக்கிறேன்.
மனைவியும் நாயும்
கட்டிலில்படுத்திருக்கின்றனர்
மனைவி உறங்கி விட்டாள்
குறட்டை சத்தம் மட்டும்
முழு அறையிலும்கேட்கிறது.
கொர் கொர் கொர்.....................

Saturday 27 June 2009

பறை மேளக்கலைஞன்

மேளம் உண்மையில் எனக்கு மிகவும் விருப்பமான இசைக்கருவி. இப்பொழுதெல்லாம் எமது கிராமத்தில் பறை மேளக்கலைஞர்கள் தங்கள் கலையை விட்டு விட்டு வேறு உத்தியோகத்துக்கு சென்று விட்டனர். காரணம் தமிழ் சமூகத்தில் அந்த கலைஞர்களை மதிக்காததும் உதா சீனப்படுத்தியதுமாகும். வெளிநாடுகளில் அவர்கள் தங்களது சாதியை சொல்லாமல் வாழக்கூடிய நல்ல தருணம் இருப்பதனால்அவர்கள் வெளிநாடுகளில் மதிப்போடு வாழ்கிறார்கள். இருந்தும் சாதிபார்க்கிற முட்டாள்கள் சாதியை தேடி அலைகிறார்கள். எனக்கு பல அனுபவங்கள் உண்டு எனது பெயரை அனஸ் என்று பலர் விளங்குவதில்லை அனக்ஸ் என்றுதான் நினைக்கிறார்கள். அதனால் கொக்கி போடுவார்கள் நீங்கள் எந்தப்பக்கம் அதற்கு அர்த்தம் ''நீ என்ன சாதி'' என்பதுதான். ''முட்டாள்களே முஸ்லிமில் சாதி இல்லையடா'' என்று மனதுக்குள் திட்டுவேன்.பரம்பரை தொழில் என்பது இப்பொழுது இல்லாமலாகி வருகிறது. வோஸிங் மெசின் வந்து விட்ட பிறகு கட்டாடி தொழில் குறைந்து விட்டது கொழும்பு போன்ற இடங்களில்.

இந்த பறையை இங்கே லண்டன் ஹவுன்ஸ்லோவில் கண்ட நான் உடனே எனது போனில் றைக்கோட் செய்தேன்.

14 வயதிருக்கும் கருவேலன்கண்டல் சிவாவின் அப்பா தம்பர் நாய் கடித்து செத்துப்போனார். அந்தக்காலத்தில் சிவாவின் அண்ணன்தான் வெளிநாட்டில் இருந்தவர். அதனால் தம்பர் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பபியவர் என்ற புகழோடு கருவேலன்கண்டலில் இருந்தவர். அவருக்கு நாய் கடித்து விட்டது. அவரின் பிரேதம் வலு சங்கையாக வீட்டின் முன் விறாந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சிவாவின் நண்பர்கள் என்ற படியால் செத்த வீட்டுக்கு போனோம். அப்போ அப்பா செத்த கவலையில் சிவா அழுது கொண்டிருந்தான்.

வீட்டுக்கு போனபோது முற்றத்தில் இருந்த பறை மேளக்கலைஞர்கள் மேளம் அடித்து நாங்கள் வந்த சேதியை ஊருக்கு அறிவித்துவிட்டார்கள். வீட்டு கேற்றடிக்கு யார் போனாலும் மேளமடித்து ஊருக்கு சொல்லிவிடுவார்கள். அதில் இருந்த மூத்த பறை மேளகக்கலைஞனுக்கு வயது 40 இற்கும் மேல் நன்றாக கள்ளுக்குடித்திருந்தார். இல்லாவிட்டால் அடிப்பதற்கு சுருதி சேராதல்லவா.

அவர் வெறும் மேலோடு இருந்தார் அவரின் முலை பெரிதாக இருந்தது. எங்களோடு வந்த ஒருவன் சொல்லிவிட்டான் ''அவற்றை பாச்சியை பாரடா'' எண்டு சத்தமாக. அவர் மேளம் அடிக்கும் ஒவ்வொருமுறையும் பாச்சி குலுங்கி குலுங்கி கெம்பி கெம்பி எழும்பியது.

அழுது கொண்டிருந்த சிவாவையும் கூப்பிட்டு காட்டியாச்சு. அப்பா பிரேதமாக கிட்க்கும் போது கெக்கட்டம் போட்டு சிரிக்கிறான் சிவா. அவனுக்கும் 14 வயதுதான் அப்பொழுது. பெரியவர்கள் எல்லோரும் சிவாவை கோபமாக பார்க்கிறார்கள். தேப்பன் பிரேதமாக கிடக்க மகன் அழாமல் சிரிக்கிறானே என்று. யாரிட்டை போய் சொல்லுறது அவரின் பப்பா ஆடுகிறது என்று அதுதான் அவன் சிரிக்கிறான் என்று.

பிரேதம் சுடுகாட்டுக்கு போகும் வரைக்கும் அவன் சிரித்துக்கொண்டுதான்இருந்தான்.

இங்கு ரவுஸர் உடுத்த பறைக்கலைஞன் மேளமடித்து பிச்சையெடுக்கிறார் மேளமும் நன்றாக அடிக்கிறார் நான் 20 பென்ஸ் போட்டேன்.

Monday 22 June 2009

லண்டன் சிற்றி

லண்டனில் என்ன விசேசம் என்று 1996 ஆம் ஆண்டு அக்குறணையில் இருந்து லண்டனுக்கு வந்து திரும்பி வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ''அங்கு இரட்டை தட்டு பஸ் இருக்கு தம்பி'' என்று. இரட்டைத்தட்டு பஸ் என்ன இங்கு கண்டியிலும் ஒன்று இருக்குதானே அது கடுகண்ணாவை கடுகஸ் தோட்டை போறது. ஆனாலும் கண்டியில் இருக்கும் 4 வருடத்தில் ஒருமுறைதானும் ஏறவில்லை அதில். ஏனெனில் பயம். போய் வந்தவர்கள் சொன்னார்கள். மேல் கூரை ஆடுகிறது என்று கண்டியில் உள்ள சிங்கள றைவர்களை நம்பி நான் அதில் ஒருநாளும் ஏறவில்லை. அது மகியாவ பாலத்துக்கு கீழால் போகும் போது பார்த்திருக்கிறேன் கூரை இடித்து விடும் என்கின்ற பயம் எனக்கு பார்க்கும் போதெல்லாம் வரும். 1958 இல் இரட்டைதட்டு பஸ் இலங்கைக்கு வந்து விட்டது. 122 ஆம் நம்பர் போட்டுக்கொண்டு மகரகம அவிசாவளைதான் முதல் பயணம்.

ஆனால் கண்டியில் அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கும் ஒரே ஒரு இரட்டைத்தட்டு பஸ் அது.

பிறகு லண்டன் வந்தாப்பிறகு இரட்டைத்தட்டு பஸ்தான் எல்லாத்துக்கும் என்றாகி விட்டது. எல்லாம் புத்தம் புதிய பஸ்கள். கூரை விழும் என்ற பயம் கிஞ்சித்தும் இல்லை. அதில் ஏறி மேல் தட்டில் முன் சீற்றில் இருந்து போவது எனக்கு அலாதி விருப்பம். ஏதோ நான்தான் அதனை ஓட்டுவது போல இருக்கும்.(ஒரு முறை ஒரு மேம்பாலத்தால் திருப்பும் பொழுது கிங்ஸ்டனில் வைத்து பாலத்தில் இடித்துவிட கூரை தனியாக வந்து விட்டது)

குட்டி பிள்ளைகள் முன் சீற்றில் மேல்தட்டில் இருந்து டுர் டுர்...... என்று ஓட்டுங்கள். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முந்தி லண்டனில் இருந்த டீசலில் ஓடும் இரட்டைதட்டு பழைய பஸ்களை முழுமையாக நிற்பாட்டி விட்டார்கள் சேவையில் இருந்து. அது பாதுகாப்பில்லையாம். கதவால் ஓடி ஏற முடியும். டீசல் புகை விடுகிறது. என்று சொல்லி நிற்பாட்டி போட்டார்கள்.இப்பொழுது எல்லாம் புதிய பஸ்கள் தான் வலு கலாதி. (இந்த வீடியோவையும் எனது மொபைல் போனில் இரட்டைத்தட்டு பஸ்ஸின் மேல் தட்டில் முன் சீட்டில் இருந்துதான் எடுத்தேன்)

லண்டன் சிற்றிக்குள்ளால் இரட்டைத்தட்டு பஸ்ஸில் பயணம் செய்வதே அழகான அனுபவம்தான்.

இப்பொழுதும் யாரும் என்னை கேட்டால் லண்டனில் என்ன இருக்கிறது என்று.

எனது பதில் இரட்டைத்தட்டு பஸ் தான்.

Thursday 11 June 2009

முரண் கவிதை


அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன்.

எனது தெருவால் சில நேரம் நிர்வாணமாய்ப்போவாள்
குத்திட்ட நேர் நோக்கில்
அவளைப்பற்றிய எல்லாவற்றையும்என்னுள் இறக்கியபடிக்கு
கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும்
தூசியும் மண்ணும்தான் அவை வாரி முடித்தவை.

கறுத்த உடல்
இன்னும் சரியாத முலைகள்
வெறும் மேலோடு திரிவாள்.

அவள் ஒரு சீமாட்டி என்றும்
திருமணம் முடித்தவளென்றும்
அம்மம்மா சொல்வா
அவளிடம் கேட்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை

ஆனால் ஏன் நிர்வாணமாய்த்திரிகிறாய்

ஆண்கள் அவளைக்கடந்து செல்கிறார்கள்
உணர்வற்றுயோனியின் ஊத்தையும் மணமும் வெறுத்து
அவள் நடக்கிறாள்

அம்மம்மா சொன்னா
அவள் கணவன் அவளுக்கு சூனியம் செய்தவன்

ஆண்குறி பலவீனப்பட்டவன்கள்சூனியம் செய்பவர்கள்.
அவள் அழகானவளாம்அவனும் அழகானவனாம்
அவனுக்கு செய்ய இயலாதாம்
அவள் இன்னொருவனுடன் செய்தாளாம்
அவன் சூனியம் செய்தானாம்….

எனது போர்வையை அவள் தூர எறிந்து விட்டாள்.

Wednesday 10 June 2009

'கெபாப்' எனும் எனக்கு எட்டிய கனி

எனக்கு இன்னும் மனதில் அச்சொட்டாய் இந்த விடயம் பதிந்து போய்க்கிடக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் டெல்லிக்கு போயிருந்த பொழுது கெபாப் கடைகள் எங்கள் ஊரில் இருக்கும் தேத்தண்ணி கடைகள் மாதிரி றோட்டு றோட்டாய் இருந்தன. ஆனால் இலங்கையில் இருந்து போன எனக்கு அது ஒரு புதினமான சாப்பாடு ஆனால் அதனை வாங்கி சாப்பிட என்னிடம் ஒரு 10 ரூபா பணம் இருக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போனவர்களிடமும் கேட்க எனக்கு மனமில்லை. இருந்த ஒரு மாதமும் அந்த கடைக்கு கிட்டபோய் நின்று கொண்டு அதன் வாசத்தை ஏக்கத்தோடு நுகர்ந்து விட்டு திரும்பியிருந்தேன்.

ஆனால் நான் லண்டன் வந்த பிறகு பார்த்தால் றோட்டு முழுக்க கெபாப் கடைகள்தானே. எனக்கு வலு சந்தோசம் இங்கு நாவூற மனதார சாப்பிட்டேன்.

இப்பொழுது குறைத்து விட்டேன். ஜி.பி சொல்லியிருக்கிறார் கொழுப்புணவை குறைக்க சொல்லி அதுதான்.

Tuesday 9 June 2009

ஒரு கள்வரின் நிலை

ஹவுன்ஸ்லோ அஸ்டா சுப்பர் மார்க்கட்டில் 40 பவுண் பெறுமதியான சாப்பாட்டு சாமான்களை களவெடுத்த ஒரு ஆபிரிக்க காரருக்கு செக்கியூரிட்டிகள் அமுக்கி பிடித்து அடிக்கிறார்கள்.

Sunday 7 June 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே அவதானிக்கபடுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.


எனது வாள்

கூர்வாளொன்றுஎப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்துகம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்பிரியம் காட்டுவதாய்
நினைத்து குரல்வளையை கீறிவிடும்
ரோஸாக்களைக் கொய்துகைப்பிடியில்
சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்கூர்வாளொன்று…

இது அவருடைய கவிதை இது போதும் அவரை அறிவதற்கு

Thursday 4 June 2009

ஆவி பிடித்தல் என்பது

அஞ்சலா ஜெகநாதனின் மூலிகை கூடம்

Wednesday 27 May 2009

தாலியால் நின்று போன திருமணம்


ங்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளை தாலியை கட்டுவோமா வேண்டாமா என்றுயோசிக்கிறார். தனக்கு தாலி கட்ட விரும்பமில்லை. கொஞ்சம் பெரியார் கொள்கைகளோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர். ஆனால், பெண் வீட்டுக்காரர் மாப்பிள்ளை லண்டன் என்றவுடன் சம்மதித்துவிட்டனர். பெண்ணுக்கு தாலி கட்டுவதுதானே மரபு. அதுதானே முறை என்று மாப்பிள்ளையின் வீட்டுக்காரர் அக்கம் பக்கத்துகாரர் ஒரே பிடியாய் பிடிக்கினம். ஆனால், மாப்பிள்ளையோ அது பெண்ணடிமைத்தனம் என்கிறார்.தாலி கட்டினால் புருசன் சாகும்வரை கழற்றக்கூடாது என்றுதான் ஊரில் வழக்கமிருக்கிறது. கழுத்திலை லேசான சங்கிலி போடுகிறவர்களும் கழுத்திலை பாரத்தை விரும்பாதவர்களும் இப்ப உள்ள பிள்ளைகளில் வேலைக்கு போகிறவர்களும் தாலியைக் கழட்டி வீட்டில் வைத்து விட்டே வருகிறவர்களை பார்க்கிறேன்.
புருசன் மரணமானபிறகு தாலியைத் தொடர்ந்து போட்டிருக்கிற ஒரு பெண்மணியையும் இங்கே கண்டிருக்கிறேன். அவ சொல்கிறா புருசன் இருக்கும் பொழுது மட்டும் ஆர் போடச் சொன்னவை? இது வேறுமாதிரியான எதிர்ப்பு.
1954 களிலே தமிழ் நாட்டில் தாலி தொடர்பான ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கிறது. தமிழர்களிடத்தில் இந்த தாலி தொடர்பான வழக்கம் ஏதும் இல்லை என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. பெரியார் தமிழகத்தில் தாலி இல்லாத பல திருமணங்களை நடத்தி வைத்தார்.
1968ம் ஆண்டு அண்ணாத்துரை காலத்தில் தமிழகத்திலே நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் தாலி இல்லாத கல்யாணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ் நாட்டிலே இது செல்லுபடியாகும்.
பெண்கள் விடயத்தில் ஆண்கள் செய்யும் அடிமைத்தன சாட்சியங்களுள் ஒன்று தாலி என்றே பெண்ணியவாதிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு பெண்விடுதலை தொடர்பாக பேசுகிறோமோ அதுபோல தாலிக்கும் மெட்டிக்கும் விடுலை வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
கணவர் இறந்தவுடன் கைவளையல்களை உடைத்து தாலியை அறுத்து குங்குமத்தை அழித்து என்று ஒரு பெண்ணுக்கு நடக்கிற கொடுமை தாங்கொணாதது எனவே இவையெல்லாம் இருந்தால் தானே அவளை அவ்வாறு செய்ய வேண்டும். தாலி அணியாவிட்டால் அறுக்கத் தேவையில்லையே என்று கேட்கும் பெண்களின் கேள்விகளும் சரியே.

உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர புதல்வற் பயந்த சிதலை அவ்வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி கற்பினின் வழா அ.
நற்பல உதவி பெற்றோன் பெட்டும் பிணைய அக! என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி, பல் இருங்கதுப்பின் நெல்லொரு தயங்கவதுவை நல் மணம் கழிந்த பின்றை

இந்த அக நானூற்று பாடலில் வருகின்ற திருமணக் காட்சியில் எங்குமே தாலி குறிப்பிடப்படவில்லையே. பிறகென்ன தாலி என்று அடம்பிடிக்கிறார் மாப்பிள்ளை. தாலி எங்கேயிருந்து தமிழர் வாழ்வில் புகுந்து இவ்வளவு பிரச்சினைகளையும் எழுப்புகிறது ஆண்டவனே!

தாலியால் ஒரு கல்யாணமே நின்று போனது எனக்குத் தெரியும். பெண் இங்கே புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு தங்கம் என்றாலே அலர்ஜி. அவள் ஒருவனை காதலித்தாள் பின்னர் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கல்யாணம் செய்ய சம்மதித்தாள். ஆனால், நோதாலி என்று சொல்லிவிட்டாள். பெற்றோர் பணக்காரர் தங்களது படாடோபங்களை இங்கு வெளிநாடுகளில் காட்டுவதற்கு கோவில்குளம், சாமத்தியவீடு, கல்யாண வீடு என்று அலைந்து திரிவார்கள். ஆனால் இங்குள்ள பிள்ளைகள் அப்படியில்லை. தாங்கள் எது நினைத்ததோ அதனைத்தான் செய்வார்கள். மற்றவர்களைப் பற்றி மிகவும் பார்க்க, கேட்க மாட்டார்கள்.

பிள்ளை சொல்லிவிட்டது தங்கம் எதுவுமே வேண்டாம். தாலி உட்பட ஆனால், பெற்றோர் தாலி கட்டாமல் என்ன கல்யாணம் என்று சொல்லி வாக்குவாதப்பட கல்யாணம் நின்று போனது. பின்னர் அந்தப் பெடியனும் பெட்டையும் லிவ் இன்டு கெதர் வாழ்க்கை வாழுகினம். அவர்களைத் தடுக்க முடியாது. அப்பிடித் தடுத்தால் அது இங்கே லண்டனில் கோட்டு கேஸ் என்று பெரிய பிரச்சினையாகிவிடும். தாலி ஒரு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் சிலருக்கு அது சுகம். பலருக்கு அது சுமையாகிக் கிடக்கிறது.

புன்னியாமீன்

நூறு புத்தகங்களை எழுதி விட்டார். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆசிரியர் என்பதற்கு அப்பால் அவர் இதுவரை 240 எழுத்தாளர்களின் முழு விபரங்களைத் தொகுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு எல்லா எழுத்தாளர்களும் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
எனக்கு 2005ம் ஆண்டு ஒரு சிவப்பு படிவம் ஒன்று அனுப்பி வைத்தார் புன்னியாமீன். அதில் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதனைப் பார்த்தவுடன் அலுப்புத்தட்டியது. நிறைய விவரங்கள். அது இது என்று அதிகம். அப்படியே வைத்துவிட்டேன்.ஆனால், ஏதோ ஒரு எண்ணத்தில் இங்கு செல்வராஜா லண்டனில் வைத்துத் தந்த ஒரு படிவத்தை பொறுமையாக உட்கார்ந்து எழுதிக் கொடுத்தேன். (தினக்குரலில் ஞாயிறு இதழில் வந்தது)அது இப்பொழுது தொகுதி 09இல் வந்திருக்கிறது. அதனைத் திறந்து பார்த்த பொழுதுதான் உண்மையில் புன்னியாமீனின் பெரும் சேவை எனக்குத் தெரிந்தது.தமிழ் எழுத்தாளர்களின் விபரத்தை முழுமையாகப் பதிவு செய்த புன்னியவான் அவர்.
எல்லா விபரங்களையும் மிகத் தெளிவாக தொகுத்திருக்கிறார். இது எல்லா நூலகங்களுக்கும் போகிறது. எல்லோரும் பார்ப்பர். அட இத்தனை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்களா இலங்கையில் என்று மூக்கில் விரலை வைப்பர். அது மட்டுமல்ல, மற்றவர்களைப் போல இல்லாமல் தெந்தட்டமான குறிப்புகள் இல்லாமல் விலாவாரியான குறிப்புகள் விபரங்களை சேகரித்து பதிப்பித்து இருக்கிறீர்கள். ஒரு சிறந்த தமிழ்ப் பணி செய்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் வன்னியில் தரமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் நிச்சயம் பதியப்பட வேண்டியவர்கள்.
கலாபூசணமே உங்களுக்கு மௌத்துக்குப் பிறகும் பேசப்படும் விடயம் இது. கை குலுக்கல்கள் உங்களுக்கு

இந்து திருமணம் தொடர்பான அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Betty LaDuke அவருக்கு நன்றி

Sunday 17 May 2009

(கவிதை) பிணங்களோடே வாழ்தல்

கருங்காக்கைகள் தொண்டை
அடைத்துப்போய் கிடக்கின்றன.
எத்தனை பிரேதங்களுக்கென்று
ஒப்பாரி வைப்பது
பிரேதம் செய்கிறது தேசம்.
தெருவில் வீட்டில்மதா கோவிலில்
பள்ளிவாசலில்
சூழ்ந்து கொண்டுள்ளபிரேதங்களின் குவியலில்
இடறுப்படுகின்றன காக்கைகள்


குஞ்சுகள் தொடர்பில் கவனமற்று
ஒற்றை வெளி மதிலில்
உட்கார்ந்து கொண்டேஅகவுகின்றன காக்கைகள்
புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய
பெண்ணுடலின் யோனிக்குள்
குண்டு வைத்து தகர்த்துப்போகிறான்ஒருவன்.

‘கேலி கேலி’யாக வெட்டிய
குழந்தையைகயிறில் தொங்கவிட்டுபோகிறான் மற்றொருவன்
வாய்க்குள் துப்பாக்கிவைத்து
சன்னம் பாய்ச்சி சிரிக்கிறான்இன்னொருவன்

பிரேதம்.வெட்டுதல் கூறுபோடுதல் எரித்தல் குதறுதல் புணர்தல் என்றெல்லாம்செய்து விட்டுஇறுதியில் பிரேதம் செய்கிறான்
தமிழிச்சிகள் தங்கள் யோனிகளைபாதுகாப்பு செய்யுங்கள்.
அல்லது அவர்களது குறிகளைஅறுப்பதற்கு கத்தி வைத்துக்கொண்டேபடுத்திருங்கள்
சிங்களச்சிப்பாய் அதோ வருகிறான் குறியோடு
கருங்காகங்கள் தொண்டைஅடைத்துப்போய்
அடுத்த திக்கு போகின்றன.
* கேலி கேலி - துண்டு துண்டாக (சிங்களச்சொல்) -


அஞ்சலி சு வில்வரத்தினம்

கவிஞர் சு. வில்வரத்தினம்
(1950 – 2006)
7.8.1950 இல் புங்குடுதீவு எனும் கிராமத்தில் பிறந்த கவிஞர் சு. வில்வரத்தினம் 2006.12.09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பில் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார். மரணிக்கும் போது அவருக்கு வயது 56.

வில்வரத்தினத்தின் வீட்டுக்கு போவதென்றால் எனது மகளுக்கும் மகனுக்கும் மிகவிருப்பம். அவரது திருகோணமலை மட்டிக்களி வீட்டுக்கு, திருகோணமலைக்கு போகும் நேரங்களில் நாம் போவோம்.

வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டு வேப்பமர நிழலில் உட்கார்ந்து அவரது அழகான குரலில் தனது இசைப்பாக்களை பாடும் பொழுது நாம் மகிழ்ந்து போவோம்.
இன்னும் எனது காதுக்குள் பூமியம்மா பூமியம்மா உன் புன்னகையை எங்கொளிச்சாய்?. நீசிரிக்க வயல்களெல்லாம் நீறுபூத்துக் கிடக்குதம்மா... என்று வில்வரத்தினம் பாடியது கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அகங்களும் முகம்களும் (1985), காலத்துயர் (1995), காற்றுவழிக்கிராமம் (1995), நெற்றிமண் (2000), என்ற தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2000 வரை எழுதிய கவிதைகளையும் இணைத்து -உயிர்த்தெழும் காலத்திற்காக 2001 மே இல் வெளிவந்தது.
1970இல் ஜீவாவின் மல்லிகை சஞ்சிகையில் எழுதத் தொடங்கியவர் வில்வரத்தினம்.
1989ஆம் ஆண்டு அவரது வீடு எரியூட்டப்பட்ட போது பல கவிதைகள் எரிந்து சாம்பராகியுள்ளன. இதனை மிகவும் கவலையோடு தெரிவிப்பார்.
காற்றுவழிக்கிராமம் -தனது ஊரின் அழிவு தொடர்பான சோகமான வடுக்களை சுமந்து அவர் எழுதிய கவிதைகள். ஒவ்வொரு தமிழ் கிராமத்தையும் இராணுவம் அழித்துப் போட்டு போனபின்பு இப்படித்தான் இருக்கும்.
முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம் பாத்திங்களோடு தேய்படும் வளையல் ஒலி ஆச்சி, அப்பு, அம்மோயென அன்பொழுகும் குரல்கள் ஒன்றையுமே காணோம்! என வில்வரத்தினம் எழுதினார்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையே தீர்வு என்று இறுதிவரை சொன்னவர் அவர்.
முஸ்லிம் மக்கள் புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட போது,

''எப்படி முடிந்தது என்னால் - தொழுகை வடுப்பூத்த நெத்திப்பொட்டில் சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் \ அவர்களை பிறந்த மண்ணினின்றும் துரத்தி\ என்னை நானே காயப்படுத்திக் கொள்ள\ என்று ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக நின்று தானாக ஒலித்தவர்.

இறுதிவரை வாசிப்பை கைவிடாதவர், யர்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் தனது இரத்தத்தை தானமாக கொடுத்த போது கிடைத்த அரசு நிவாரணப் பணத்தில் சி.என் அண்ணாத்துரையின் ~ரங்கோன் ராதா முதலான நூல்களை வாங்கி வாசிக்கும் அளவுக்கு வாசிப்பின் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். வில்வரத்தினம் அவர் தான் எழுதிய எல்லா கவிதைகளையும் நினைவில் பதித்து வைத்திருந்தார். அவரின் ஞாபக சக்தியை எண்ணி வியந்து இருக்கின்றேன்.
மு.பொ.வின் ''மார்கழி குமரி'' நீலாவணனின் ''ஓவண்டிக்காரா''போன்ற பாடல்களை வில்வரத்தினம் பாடக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் பல சந்தர்ப்பங்களில்.
இயக்கங்களாலும் இராணுவம், கடற்படையிலும் 18.10.1992இல் யாழ்ப்பாணத்தின் தீவுகள் சிறைப்பிக்கப்படுவதற்கு முதல் நாள் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை ஊருக்கு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் அவரும் சென்றார்.
ஆனால் இறுதிவரை அவரின் நம்பிக்கை கைகூடவில்லை. போர் எதிர்ப்பு பாடல்களிலும் கவிதைகளிலும் கருத்துக்களிலும் போராட்டச் சூழலின் எதிர் நல்விளைவுகளை கண்டார் சு. வில்வரத்தினம்.
36 வருடங்கள் ஓயாமல் எழுதிய கவிஞரின் பேனா உறங்கிவிட்டது.
ஆன்மீக நாட்டம் மீதூரப்பெற்றவர் சு. வில்வரத்தினம். தனது குருதேவராக ஸ்ரீ நந்த கோபாலகிரி அவர்களை வரித்துக் கொண்டவர். ''உயிர்த் தெழும் காலத்திற்காக''எனும் தனது பெரும் கவிதைத் தொகுப்பை தனது குருவுக்கு சமர்ப்பணம் செய்தார் இப்படி.

''உன்னைச் சரண் அடைந்தேன்
ஓம் குரு தேவா
உயிர்த் தெழுகின்ற காலத்திற்காக
என்னைத் தருவதெனினும்
இசைவேன் இஃது உனக்காக''

எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல நண்பராக, ஒரு சிறந்த கவிஞராக தனது மனைவிக்கு நல்ல கணவராக, ரட்ஷகிக்கும் சசி பவனுக்கும் மிக நல்ல அப்பாவாக வாழ்ந்த வில்வரத்தினம் இல்லாதது பெரும் துக்கமாகவும் கவலையாகவும இருக்கிறது எனது மனதில்.

Friday 15 May 2009

சிறுகதை- ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்


முன்னுரை ஒன்றுக்கு பிறகு வாசிப்போம்

இதில் வரும் ஜின்கள் எனும் விடயதானம் முஸ்லிம்களுக்கு தெரியும். ஏனைய அன்பர்களுக்காக கொஞ்சம் சொல்ல வேண்டும்.
ஜின்கள் அல்லாஹ்வின் படைப்பு என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. அவை கூட்டம் குடும்பத்தோடு வாழ்கின்றன. மனைவி பிள்ளைகள் இருக்கின்றன. இந்த உலகில் மனிதர் ஜின்களைப் பார்க்க முடியாது. ஆனால் ஜின்களுக்கு மனிதர்களைப் பார்க்க முடியும். மறுமை நாளில் இது மாறி இருக்கும். ஜின்களுக்கு மனிதர்களை பார்க்க முடியாது. இவை அரூபமானவை. இவைகளை ஆவிகள் என்றோ பேய்கள் என்றோ சொல்ல முடியாது. தனிப் பெரும் படைப்பு என்றுதான் இப்போதைக்கு சொல்லலாம். விளக்கம் பெரிது. இவை சில மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. ஜின் ஓட்டி காக்காவை ஆவி ஒட்டிக்காக்கா என்று ஒரு விளக்கத்திற்கு சொல்லிக் கொள்ளலாம்.

Bபத்வா – சபிப்பு
ஒழு – அங்க சுத்தி செய்தல்
ஹவுள் - பள்ளிவாசலில் இருக்கும் நீர்த்தடாகம்
ஸப் - தொழுகை வரிசை
பாங்கு – தொழுக்கான அழைப்பு
மஃரிபு – பின் அந்தி தொழுகை
மையத்து - பிரேதம்
சஹன் சாப்பாடு – ஒரு பாத்திரத்தில் சேர்ந்துண்ணல்
மதரஸா – அரபு கல்லூரி
ஜூம்மா கொதுபா - வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை
நூஹ் - ஈஸா, மூஸா, தாவூத் - இறை தூதர்கள்
கியாமத் - இறுதிநாள்
மௌலவி – மார்க்க அறிஞர்
சஹர்- அதிகாலை
ஹிஜ்ரத்- புலம்பெயர்வு

ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்

ளைய அப்துல்லாஹ்

பஸ்ஸில் இருந்து இறங்கிய பொழுது அழுகை அழுகையாக வந்தது. இது நான் பிறந்து வளர்ந்த ஊரா. இப்படி இருக்கிறதே. எல்லாம் இடிந்து. வீடுகள் இடிந்து, பள்ளிவாசல் இடிந்து, பாடசாலைகள் இடிந்து மரங்கள் ஷெல் அடிபட்டு பாறிப் போய், இறங்கு துறை அழிந்து, கடற்கரை எல்லாம் பாழடைந்து போய் படகுகள் எல்லாம் காணாமல் போய் வலை, வாழ்க்கை எல்லாம் அழிந்து போன கிராமமாக கிடந்தது எனது ஊர்.
நான் குர்ஆன் ஓதிய பள்ளி வாசல் ஷெல் அடிபட்டு சிதிலமாக கிடந்தது. இங்கு தான் எனது நிக்காஹ்வும் நடந்தது. முகப்பு தீராந்திகள் முறிந்து போய் கிடந்தன.

மூத்தம்மா பாதையால் நடந்து வருகின்றா. மூத்தம்மா என்றால் எங்களுக்கு உயிர். மூத்தம்மா தான் இந்த ஊரில் முது கிழவி. எமது ஊரைப்பற்றிய அத்தனை அறிவும் மூத்தம்மாவுக்கு உண்டு.
“என்னடா பாரூக் கந்தளாவுக்கு போனியே அங்கை ஏதேனும் குடுக்கிறாங்களா?” நிவாரணம் தொடர்பாகவே எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்ற காலம் இது.
“இல்லை மூத்தம்மா எல்லாம் வாறாங்க போறாங்க எதுவும் இல்லையாம் கையை விரிக்கிறாங்க.”
“நாசமாப் போவாங்க” மூத்தம்மா ஆகாயத்தை நோக்கி கையை ஏந்தி ''பத்வா ''செய்கிறா. “இது கியாமத்து நாளடா மோனை. எங்கை பாத்தாலும் கொலை, கொள்ளை, பறிப்புயெண்டு மனிசன் வாழ ஏலாம கிடக்குடா பாருக். உன்னர பொஞ்சாதி புள்ளைகளை நெனைச்சாத்தான் வவுறு பத்திக் கொண்டு வருகுதடா.”
மூத்தம்மா என்னை கவலைப்படுத்துகிறா. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். மனம் முழக்க விம்மலும் கேவலும் மட்டுமே மிஞ்சி கிடக்கிறது.
எங்களது ஊருக்கு மேலால் நெருப்பு கோளங்களாக ஷெல்கள், விர்...விர்.... என்று நூற்றுக்கணக்காக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. அதிகாலை 2.30 இலிருந்து கர்ண கடூரமான சத்தமும் சிதறலும் தான். அதிகாலையில் கொஞ்சம் வெளியில் வந்த பொழுது தான் தெரிந்தது புதிதாக துப்பாக்கிகள் முளைத்திருந்தன. ஒன்றாக இரண்டாhக பலவாக நூறாக..... அப்பொழுததான் தெரிந்தது நாம் துப்பாக்கிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கிறோம்.

யா அல்லாஹ் இதென்ன சோதனை.
மனைவியும் குழந்தைகளும் எனது காலுக்கு அடியில் குழறிக் கொண்டிருந்தனர். கைக்குழந்தைக்கு பால் கரைக்க மனைவி குசினிக்குள் போனா கூடவே பிள்ளைகளும்.
“சல்மா” என்று கூப்பிட்டு ஒலி மறையும் முன்பாக ~டொமீh; எனது வீட்டுக் குசினிக்குள் எனது செல்வங்கள் மூன்றும் சல்மாவும் கருகி எரிந்து சாம்பலாகி அழிந்து போய்.....
யா! அல்லாஹ் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
நினைவு திரும்பி விழித்த போது ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.
ஷெல்களின் சிதறல்கள் எல்லாம் ஊர் முழுக்க பரவி கிடந்தன. அம்மா கிடந்த மீன் பிடிக் கிராமம் இப்பொழுது கந்தகப் பூமியாய் கிடக்கிறது.

டுர்......டுர்......டுர்...... நன்றாக படித்துக் கொண்டிருந்த ஹனீபா இப்பொழுது கொஞ்ச நாளாக றோட்டு றோட்டாக வாகனம் ஒட்டிக் கொண்டு திரிகிறான். இரவு பகலாக
“ஹனீபா”
“என்ன?”
“எங்கை போறாய்”
“சொர்க்கத்துக்கு” ஹனீபாவுக்கு மூளை பிசகி விட்டது. ஷெல் அடித்த நாளில் இருந்து ஹனீபாவுக்கு மூளை குழம்பி விட்டது.
“நான் போகப் போறன்.”
“எங்கை”
“சொர்க்கத்துக்கு”
வாழ்வின் இழப்புகளை ஒட்டு மொத்தமாக அனுபவித்துப் போய் இருக்கிறோம். அல்லாஹ் ஏன் இப்படிச் சோதிக்கிறான்.
அழுது அழுது கண்கள் வற்றி விட்ட மனிதர்கள் தான் வீதிகள் எங்கும் நடந்து போகின்றனர்.
செழிப்போடு தான் ஒரு மாதம் முன்பு இருந்தது எமது கிராமம்.
சரூக் நானாவின் தேத்தண்ணிக் கடையில் ஒரு பானையில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. சீனிக்கு பதில் கருப்பட்டிதான் கடையில் இருக்கிறது. ஒருமாதம் அகதிகளாக போய்விட்டு வந்தபின்பு வீடுகளில் ஒரு சாமானும் இல்லை. எல்லாத்தையும் களவெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் கள்வர்கள்.

அஸருக்கான அதான் லவுஸ்பீக்கர் இல்லாமல் மோதினார் சொல்கிறார். லவுஸ்பீக்கர் பள்ளிவாசலின் கூரையில் சல்லடையாய்க் கிடக்கிறது. இறைவனின் மாளிகையைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒழு எடுப்பதற்கு ஹவுள் இல்லை. பக்கத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அள்ளி ஒழு எடுக்கும் போதே மனது அடைக்கிறது.
என்னிடம் ஒரே ஒரு ஷேட்டும் ஒரே ஒரு சாறமும் மாத்திரமே இருக்கிறது. வீடு இருந்த இடம் தெரியவில்லை. பள்ளிவாசல் ஹஸரத் இன்னும் அகதியாய்ப் போனவர் திரும்பவில்லை ஊருக்கு. மீளவும் அகதி ஆகிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. ஒழு எடுத்துவிட்டு பள்ளியின் ஓரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு பக்கம் சுவர் இடிந்து போயே கிடக்கிறது. நேற்றுத்தான் பள்ளியை கூட்டித் துப்புரவாக்கி மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
ஒரு கனதியோடுதான் ஸப்பில் நிற்கிறேன். தலை சுற்றுகிறது. நோன்பு முழு நோன்பு. சஹருக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. பட்டினி நோன்பு.

*********************************
ஊர் முழுக்க எல்லோரும் மனப்பாரத்தோடுதான் நடந்து திரிகின்றனர். வாழ்வு பற்றிய கேள்வி எல்லோர் மனங்களிலும் நிறைந்து கிடக்கிறது. எல்லோரும் நடைப்பிணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. முகம் முழுக்க சோகத்தை சுமந்து கொண்டுதான் எல்லோரும் இருக்கின்றனர்.
வீடுகள் இடிந்து போனவர்கள், வீடுகளுக்கு முன்னால் உட்கார்ந்து தாம் உண்டு உறங்கி ஆறுதல்பட்ட வீடுகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஷெ;லடிபட்டு வீடுகளில் நான்கு சுவர்களில் இரண்டு சிதறுபட்டவர்கள் தமது வீடுகளுக்குள் போய் உடைந்த சுவர்களை தட்டி கல்லுகளையும் மண்ணையும் சீமெந்து தூள்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பெண்கள் அழுது அழுது கொண்டிருந்தனர். வயதான கிழவிகள் வானத்தை பார்த்து அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டும் இந்த அழிவுக்கு காரணமானவர்களை சபித்துக் கொண்டும் இருந்தனர்.
சிறுவர்கள் உடைந்து சிதறித் தெறித்த ஷெல் துண்டங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அதனை பழைய இருப்புக்காரன் வரும் பொழுது கொடுக்கலாம் என்று ஒரு கிழவர் சொல்லியிருந்தார். காற்று வாக்கில் எல்லா இடங்களிலும் சிறுவர்கள் காதில் இந்த சங்கதி பரவிட்டிருந்தது. எல்லா சிறுவர்களும் இப்பொழுது ஷெல் துண்டுகளை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு கதையும் அடிபட்டது. இதரை வாழை மரத்தில் ஷெல் விழுந்திருந்தால் அது தங்கமாகி இருக்கும் என்பது தான் அது. அப்படி எதுவும் ஆகியிருக்குமோ இல்லையோ என்பதற்கு முதல் இதரை வாழை மரத்தை தேடி பெரியவர்களும் சிறுவர்களும் அலையத் தொடங்கிவிட்டனர்.
இடிந்து போன வீடுகளுக்கு சன்மானம் தருவதாக ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள் ஆனால் எவ்வளவு என்பதில் இன்னும் தீர்க்கமான முடிவு இல்லை.
தொடர்ந்தும் கர்ண கடூரமாக கிழக்கு பகுதியில் ஷெல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இரண்டு பகுதியினரும் சண்டைபோடும் சத்தம்தான் அது.
“எங்களை அல்லாஹ் காப்பற்றிவிட்டான்” என்று தேனீர் கடைநானா சொன்னார். அவர் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் பள்ளி வாசலுக்கு முன்னால் தான் அவரது கடை. பாங்கு சத்தம் காதில் விழுவதே போதும். அல்லாஹ் மறுமை நாளில் சொர்க்கம் தந்திடுவான் என்பது அவரது இறுதி நம்பிக்கை. அல்லாஹ் மனசைத்தான் பார்க்கிறான் என்பார். தொழ மாட்டார்.
விதம் விதமான இரும்பு துண்டுகள் ஊரெங்கும் சிதறிக் கிடந்தன. இரண்டு காபிர்களுக்கு இடையிலான சண்டையில் இடையில் அகப்பட்டுப் போனோமே என்ற வடு ஊர் முஸ்லிம்களின் முகத்தில் அப்பியே இருக்கிறது.
மஃரிபுக்கான அதான் கேட்கிறது. மோதினார் பாங்கு சொல்லி முடித்த பின்பு தான் நோன்பு திறப்பார். நோன்பு திறக்க பள்ளி வாசலுக்கு போக வேண்டும். இப்பொழுதுதான் இடிந்த ஷீட் துண்டுகள் கல்லுகள் சுவரின் மீதிகள் எல்லாவற்றையும் பள்ளித் தலைவர் கொஞ்ச ஆட்களோடு வந்து துப்புரவாக்கிப் போட்டு போனார்.
நோன்பு திறக்கிறதுக்கு ஈச்சம்பழம் மட்டும் பள்ளியில் இருக்கிறது. வழமைபோல கஞ்சி இந்த முறை காய்ச்சவில்லை. எல்லோரும் ஓட்டாண்டி, எல்லோரும் ஏழைகள் எங்கே கஞ்சி காய்ச்சுவது. உயிர் இருப்பதே பெரிய விடயம்.
பள்ளித் தலைவரின் மகளுக்கு ஷெல் தெறித்து விழுந்து கால் ஒன்று எரிந்து விட்டது. பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில் நோயாளியாகி படுக்கையில் இருக்கிறார். மகன் ஒருவரை அகதியாக போன போது கினாந்திமுனை மலைக்கு அடியில் வைத்து அவர்கள் செக் பண்ணியபோது பிடித்து வைத்திருந்தார்கள் பின்னர் வந்து விழுந்த ஷெல்லோடு அவர்கள் ஓடிவிட மகன் தப்பிட்டான்.

****************************

யாரோ நகர்ப்புறத்தில் இருந்து கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கிறார்களாம். கெண்டர் வாகனம் ஒன்று இடிந்த பள்ளி வாசலுக்கு முன்னால் வந்து நின்றது. “அஸ்ஸலாமு அலைக்கும்” தொப்பி போட்ட தடிப்பமான இரண்டு பேர் ஸலாம் சொல்லிகின்றனர். “வ அலைக்குமுஸ்ஸலாம்” எங்கள் கண்கள் கலங்கி இருந்தன. கென்டரில் வந்த டிறைவருக்கு பக்கத்தில் சீற்றில் இருந்தவர் கீழே இறங்கினார். மற்ற மூன்று பேரும் அவருக்கு கொடுத்த மரியாதையில் அவர் ஒரு பணக்காரர் தோரணையில் இருந்தார்.
கையில் ஒரு என்வலப் கட்டு வைத்திருந்தார். ‘கென்டர்’ நிறைய ஷொப்பிங் பையில் கட்டிய பொருட்கள் இருந்தன.
பணக்காரர் சலாம் சொன்னார். பள்ளி வாசலுக்கு தொழ வந்தவர்களுக்கு சலாம் சொல்லி ஒரு ஷொப்பிங் பை பொதியும் ஒரு என்வலப்பு கவரும் கொடுத்தார். வாங்கியவர்கள் அவரை நன்றியோடும் அல்லாஹ்வுக்கு நன்றியும் செலுத்தினர்.
இதற்கிடையில் ஒரு இருபது பேர்தான் ஆரம்பத்தில் இருந்தனர் பின்னர் பத்து பத்தாக பதினொன்று பன்னிரண்டாக நூறு பேர் வரை சேர்ந்து விட்டனர். எல்லோருக்கும் பணக்காரர் கொடுத்தார். அதில் நின்றவர்களில் பலர், முதன் முதலாக கைநீட்டி வாங்கியவர்களும் இருந்தனர்.
அகதித் தனம் அவ்வாறு செய்துவிட்டது. பிறகு தான் கேள்விப்பட்டேன் ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் முன்னால் ஒவ்வொரு கென்டர் வாகனத்தில் நகரில் உள்ள பணக்காரர்கள் அகதிகளுக்கு உதவி செய்ய வந்திருக்கிறார்களாம். அவர்கள் நல்லாயிருக்க வேணும்.
கஞ்சி நானா தனது போலியோ காலோடு ஓட முடியாமல் ஊரில் இருந்து விட்டார்.
கஞ்சி நானாவின் கைருசிதான் ருசி. நோன்பு நேரத்தில் நினைத்தாலும் அவரது கஞ்சியின் மணமும் ருசியும் குணமும் சுவையும் அடிநாக்கில் தொட்டு நிற்கும். நிற்கிறது.
கஞ்சி நானாவின் பாசிப்பயறு கஞ்சி, அவல் கஞ்சி ஊரில் வலு பிரபல்யம். அவருக்கு ஓட முடியாது. ஒரு கால் சூம்பிப் போய் இருந்தது. அதனால் அவர் பக்கத்து ஊருக்கு அகதியாக வரவில்லை. மனைவியும் மகன்மார் இரண்டு பேரும் அவரை விட்டுவிட்டு அகோர யுத்தம் நடந்த போது ஊரைவிட்டு ஓடி அகதியாகிவிட்டனர். கஞ்சி நானா அவரது வீட்டில் தான் இருந்தார். அவர் இருந்த போது மூன்று நாட்களாக பட்டினிதான். மூன்றாவது நாள் தான் ஆமிக்காரர் அவருக்கு பிஸ்கட்டும் தண்ணியும் சொக்லட்டும் கொடுத்தார்களாம். கஞ்சி நானா அசரவில்லை. வெடித்துச் சிதறிய ஷெல்கள் பற்றி கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் திரும்பிவந்த பொழுது கண்ணீரோடு வரவேற்க அவரால் முடிந்தது. தன்னை அந்தரிக்கவிட்டுவிட்டு போய் விட்டார்களே என்று அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. அன்போடு தான் இருந்தார். ஆனால் மனைவிக்கும் மகன்மாருக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வு பிடுங்கித் தின்றது. அங்கிருந்து வந்த ஷெல் ஒன்று நேராக கஞ்சி நானாவின் கஞ்சி வண்டில் மீது விழுந்து வெடித்து சிதறி வண்டிலை சின்னாபின்னமாக்கியதுதான் அவரால் தாங்க முடியாமல் இருக்கிறது. அவரின் ஒரே மூலதனம் இரண்டு பானைகளும் பத்து பெரிய கிளாஸ்களும் ஒரு லாம்பெண்ணை அடுப்பும் அந்த வண்டிலும் தான்.
அந்த கஞ்சி வண்டில்தான் குடும்பத்துக்கே சோறு போடுகிறது. ஆனால் அது சிதைக்கப்பட்டது. அவருக்கு தாங்க முடியாமல் இருந்தது. அதைத் தவிர தான் தனிய யுத்தத்தின் நேரம் இருந்தது பற்றி கவலை இல்லை.
கென்டரில் வந்த பணக்காரர் போலியோ காலால் கெந்திக் கெந்தி வந்த கஞ்சி நானாவுக்கு இரண்டு பைகளும் இரண்டு என்வலப்பும் கொடுத்தார். யாருக்கும் அதில் கோபமோ ஆட்சேபனையோ இருக்கவில்லை.

************************

நஷ்டஈடு கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கழிசான் ஷேட் போட்டிருந்தவர்கள் கூட்டினார்கள். மௌத்தாப்போனவைக்கு பதினைந்தாயிரம் தருகிறோம் என்றார்கள் சபை குழம்பி விட்டது. பிறகு ஒரு லட்சம் என்றார்கள் பிறகு ஆட்களே வரவில்லை சும்மா இருந்த எங்கள் வாழ்வை அழித்துவிட்டார்கள்
ஒரு ரீ விக்காரர்கள் சந்தியில் வந்து ஊர் சனத்தைப் பிடித்து என்ன நடந்தது என்று கேட்கிறார்கள் என்ன நடந்தது என்ற ஒரு கேள்வி போதும் முழு கஷ்டத்தையும் சொல்லிக் கொண்டு போக “ஓதலுமில்லை படிப்புமில்லை எங்கடை உம்மாவும் வெளிநாட்டிலை. ஷெல் வந்து விழுந்து எங்கடை வீடெல்லாம் உடைஞ்சு போச்சு....” பன்னிரண்டு வயது பெண்பிள்ளை உடைந்து உடைந்து அழுகிறது. ரி.வி. மைக்கில்.
மூத்தம்மா கண்ணை இடுக்கி பார்த்துக் கொண்டு வருகிறா. அவவுக்கும் இருந்த ஒரு மனையும் அழிந்து போய்விட்டது.
எனது மனைவியை அவதான் வளர்த்தெடுத்தா. மனைவியின் உம்மாவும் வாப்பாவும் இறந்ததன் பின்பு மூத்தம்மாவின் பொறுப்பில் வலு பக்குவமாக மனைவி வளர்ந்தா. இப்பொழுது தான் வளர்த்த பிள்ளை ஷெல்லில் சிதறிவிட்டது.
அந்த கவலைலயை தீர்க்க முடியாமல் மூத்தம்மா அழுது திரிகின்றா. இரவில் படுக்கும் போதும் நித்திரையில் உழறுகின்றா. தூக்கம் வராமல் அழுது மாய்கின்றா மூத்தம்மா.
செழிப்பாய் இருந்த ஊருக்கு கண்ணூறு பட்டுப் போய்விட்டது போல எல்லாமே அழிபாடுகள் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறது. மக்கள் பஸ்களில் இருந்து வந்து மூட்டை முடிச்சுகளோடு இறங்குகின்றனர். வரும் வழியெங்கும் புழுத்த மணம் மணக்கிறது.
மையத்துகள் தான் கிடக்கின்றனவோ அல்லது ஷெல்லடிபட்ட ஆடு மாடுகளின் நாற்றமோ தெரியாது. வாழ்விழந்து போனவர்கள் நோன்பை பிடித்துக் கொண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டு கேவி கேவி அழுகின்றனர். குருவி சேகரிச்சது போல சேகரிச்சு கட்டிய வீடு அடிபட்டு உடைபட்டும் போய்கிடப்பதை எப்படித்தான் தாங்க முடியும்? எத்தனை பெண்கள பாலைவன வெயிலில் வறுபட்டு உழைத்த பணத்தில் கட்டிய வீடுகள் வீட்டுச் சாமான்கள் எல்லாம் அழிந்து போயின. பெண்கள் தான் அதிகமாக அழுதுக் கொண்டிருந்தனர். கிராம உத்தியோகத்தர் கையில் குறிப்பு புத்தகம் பேனாவோடு வந்து யார் யாரெல்லாம் தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள் என்று குறித்து பெயர்களையும் விலாசத்தையும் ஆட்களின் எண்ணிக்கையும் எழுதிக் கொண்டார். அவர் வெள்ளைசாரமும் வெள்ளை ஷேட்டும் வெள்ளை தொப்பியும் போட்டுக் கொண்டிருந்தார். ஹஜ்ஜூக்கு போய் வந்தவர் காசுக்காரர். அவரின் ஒரு தொகை நகையும் பணமும் களவு போய்விட்டதாக சொன்னார். ஊரில் இருந்த வங்கிகள் எல்லாம் துப்புரவு பண்ணப்பட்டிருந்தன.
நோன்பு காலத்தில் அலைந்து திரிய முடியவில்லை வெயில் கொழுத்தியது. சாப்பாடு கிடைப்பதே அருமையாக இருந்தது. தனவந்தர்கள் உதவி செய்தார்கள். ஸகாத் பணம் ஒரு தொகை வந்தது ஊருக்கு. அரபிகளிடம் அகதிகளுக்கு என்று இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் வாங்கிய பணத்தில் ஒரு கொஞ்சமும் ஊருக்கு வந்தது.

************************

இப்பொழுது ஜின்களின் சலசலப்பு ஊரில் இருப்பதாக ஜின் ஓட்டி காக்கா பேசிக் கொண்டது கேட்டது. முதல் என்றால் ஜின்கள் உப்புக்கடல் தாண்டி வர வலு பிரயத்தனப்பட்டது தானாம். ஆனால் இப்பொழுது ஜின்கள் ஷெல் அடிபட்ட பூமியில் வந்து குடும்பத்தோடு இருக்கின்றனவாம்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் தூதுவராக நபிகளார் இருக்கிறார்கள். ஜின்களில் சூது வாதுள்ளவையும் இருக்கின்றன. அவைகள் இரவில் வந்து மரங்களை உலுப்புகின்றன. எப்பொழுதும் இரவில் ஆயத்துல் குர்ஸியை எல்லோரும் ஓதும்படி ஜின் ஓட்டி காக்கா சொன்னார். ஜின் பிடித்தால் போக்குவதற்கு சாமான் வாங்க வேண்டும் அதற்கு பணமுமில்லை பொருளுமில்லை. ஜின் ஓட்டி காக்கா நல்ல ஒரு செலவில்லாத வழியை காட்டித் தந்தார் அதுதான் ஆயத்தில் குர்ஸி (குர்ஆன் வசனம்)
இரவு ஜின்கள் பல வந்து தனது வீட்டுக்கு கல்லாலும் மண்ணாலும் எறிந்தனவாம். தான் அதுகளை வாலாயப்படுத்தி விட்டாராம் என்று கூறினார். சில ஜின்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததை தான் கண்டதாகவும் ஜின் ஓட்டி காக்கா சொன்னார்.
வாழ்க்கை இப்பொழுது மனிதன் ஜின் போலவும் ஜின் மனிதன் போலவும் இருந்தால் எப்படி இருக்கும் காபிர்களின் கண்களில் மறைந்து கொள்ளலாம் யாருக்கும் தெரியாமல் வாழலாம். ஆனால் குடும்பம் பிள்ளை குட்டி சாப்பாடு குடிப்பு என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எவ்வளவு வசதியாய் இருக்கும். துப்பாக்கி கொண்டு வருபவர்களை அடையாளம் காணலாம். கடத்திக் கொண்டு போக வரும் ‘சுது’ வாகனக்காரரை கண்டு கொள்ளலாம். உண்மையில் ஜின் வாழ்க்கையே மிகச் சிறந்தது இப்பொழுது எமது ஊரிலும் நாட்டிலும்.
ஜின்கள் வலு குழப்படி பண்ணுவதாக காக்கா சொன்னார். கொஞ்ச நாள் பாழடைந்து போன ஊருக்குள் இனி மனிதர்கள் வர மாட்டார்கள் என்று ஜின்கள் வந்து விட்டனவாக்கும். பல இடங்களில் ஷெல் அடிபட்ட செத்த மையத்துகளை புதைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு போய் விட்டோம். எல்லாமே சிதறிப் போய்விட்டன. பொதுவாக அகதியாகப் போகும் பொழுது மையத்தைப் பற்றி பார்க்க முடியாமல் தான் போனது. வாழ்வின் அவலங்களை சுமந்து கொண்டு ஊரைத் துறந்து போகும் பொழுது என்னத்தை செய்வது.
ஜின்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வாழுமாம். அவைகள் கூட ஒற்றுமையாக இருக்கும் என்றுதான் மதரஸாவில் ஓதும் போது ஹஸரத் சொல்லித் தந்தவர்.
ஜின்கள் அதிகமாக இரவில் தான் நடமாடுமாம். அவைகளின் மன நிலையை ஜின் ஓட்டி நானாவுக்கும் சரியாக தெரியாதாம். ஆனால் அவர்களில் தொழுகை நோன்பு, ஹஜ் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
குர்ஆனை திரிபுற ஓதிக் கற்றவர்களும் ஜின்களில் இருக்கிறார்களாம். ஆனால் அவை இப்பொழுது எமது ஊருக்குள் குடிகொண்டு பிராணனை வாங்குகின்றன.
தீய குணமுடைய ஜின்களால் தான் பிரச்சினை மனிதருக்கு. நல்லவர்களால் பிரச்சினை இல்லை. அவர்களிலும் தீய குணமுடையவர்கள் இருக்கிறார்கள்.

****************************

இன்னும் ஒரு கிழமை இருக்கிறது நோன்பு முடிய திங்கட்கிழமை பெருநாள். இது ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை. பொதுவாகவே இப்பொழுது ஜூம்மாத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் வீட்டில் இருந்து கொண்டு வரும் பாய்களை போட்டு தொழுவார்கள். ஜூம்மாத் தொழுகைக்கு நோன்பு காலங்களில் இவ்வளவு சனம் வரும். அவ்வளவு சனமும் இந்த ஊரில் தான் இருக்கின்றன ஆனால், சும்மா நேரங்களில் பள்ளி வாசலுக்கு மக்கள் வருவது மிகவும் குறைவு. அழிவு ஏற்பட்டதன் பின்பு அல்லாஹ்வின் பக்கம் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். அனேகமானவர்கள் நோன்பு நோற்கிறார்கள். அனேகமானவர்கள் தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முன்பு என்றால் நோன்பு காலங்கள் ஏதோ பெண்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டது போல இருக்கும். 8ஆண்கள் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. சிலர் நோன்பு காலங்களில் மதுகூட அருந்துகிறவர்கள் இருந்தார்கள். ஆனால் அழிவு மக்களை தெய்வத்தின்பால் திருப்பிவிட்டது. அழிவுகள் தான் பக்திக்கு மூலதனமாகவே இருக்கின்றன.
இது நூஹ் நபி ஈஸா, மூஸா, தாவூத் நபிகள் காலத்தில் இருந்தே இருக்கின்றன. இந்த வருஷம் தான் நிறைய பேர் எமது ஊரில் நோன்போடு திரிகின்றனர். வெயில் வறுத்து எடுக்கிறது.
பக்கீர் மார் சஹருக்கு எழுப்பியவுடன் ரபான் ஓசைக்கு சிறுவர்களும் பெரியவர்களும் எழும்பி விடுகின்றனர். நபிகளாரின் பெருமைகளை பைத்தாக பக்கீர்மார் ஓதுவார்கள் இரவில். சில பக்கீர்மாருக்கு ஒரே பாடல்கள் தான் தெரியும் சிலர் வருஷா வருஷம் பாடல்களை மாற்றுவார்கள். அவர்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே அமைந்திருக்கும் பொதுவாகவே றேடியோவில் பிரபல்யமான ஈ.எம். ஹனிபாவின் “அல்லாஹ்வை நாம் தொழுதால்.....” காயல்பட்டணம் ஷேக் மொஹமட்டின் “ஈச்சமரத்தில் இன்பச் சோலையில்.........” பாடலைப் பாட எல்லோரும் மறக்க மாட்டார்கள். ஆனால் பக்கிர் பாவாமார் இரவில் தூங்குவது இல்லை. இரவு இரண்டு மணிக்கு ரபான் ஓசை ஊரில் கேட்கும். அவ்வளவு நேரத்தோடு சஹர் செய்தால் பகல் முழுக்க கிடக்க ஏலுமே. ஆனால் பாவா ஊரெல்லாம் பாட்டுப்பாட வேண்டும். ஊரெல்லாம் எழுப்ப வேண்டும். அவரின் வேலை அவரோடு. எங்கள் வேலை எங்களோடு... வாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அல்லவா!
ஈஸா நபி நாற்பது நாள் நோன்பு நோற்றவராம். ஆனால் எங்களுக்கு முப்பது தான் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று மௌலவி கொத்துபாவில் சொன்னார்.
அழிவுகள் பற்றியும் அவை எல்லாம் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவது பற்றியும் மௌலவி பயான் செய்தார். இப்பொழுது எல்லாம் மௌலவியின் பயானுக்கிடையில் அழுகை அதிகமாக இருக்கிறது. ஷெல் வீச்சில் அவரது வீடு சேதமானது காரணமாய் இருக்கலாம். அல்லது அவரது உம்மா கொல்லப்பட்டது காரணமாய் இருக்கலாம். மௌலவி பிம்பரில் நின்று அழுதால் முன்னால் இருக்கும் பொதுமக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
எங்கள் ஒவ்வொருவரின் இழப்பின் மீதும் நாங்களும் விம்மி விம்மி அழுவோம். இழப்புகள் அழவைக்கின்றன. ஜூம்மா பிரசங்கங்கள் இப்பொழுது எல்லாம் கண்ணீரோடுதான் கலக்கின்றன. மௌலவி சொல்வார் “எல்லாம் அல்லாஹ்வின் சோதனை” என்று, அல்லாஹ்வின் சோதனை என்ன வடிவிலும் வருமாம்.
தண்ணீரில் அழிவு வந்தது. அதுவும் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்றாம். இந்த சுனாமி பேரழிவில் இருந்து நாம் மீண்டும் வரும் பொழுது திடீரென்று போர் அழிவு எம்மை சூழ்ந்து கொண்டது. எங்கு போவது? மௌலவி அழிவுகளின் பல வடுக்களை சொன்னார். இது கியாமத்து நாளுக்கு அண்மித்து விட்டதாக சொன்னார்.
உலக முடிவு நாளின் போது இப்படித் தானாம் செருப்பு அணியக்கூடிய வசதியில்லாதவன் ஆட்சியதிகாரத்துக்கு வருவானாம். பெண்கள் ஒட்டகத்திமில் போல கொண்டை கட்டுவார்களாம், முஸ்லிம்கள் சஹன் சாப்பிட அழைப்பது போல காபிர்கள் வாங்கோ வாங்கோ முஸ்லிம்களை அழிப்போம் என்று ஒன்றுகூடுவார்களாம். கொலையும் கொள்ளையும் விபச்சாரமும் ஊரில் அதிகரிக்குமாம். ஏமாற்று சுத்துமாத்து விளம்பரம் தேடுதல் எல்லாம் கூடுமாம். ஏன் கொலை செய்யப்படுகின்றான் என்று இறப்பவனுக்கும் ஏன் கொல்கிறோம் என்று கொல்பவனுக்கும் தெரியாதாம்.
ஏழைகள் திடீரென்று மாடி வீடுகள் கட்டுவார்களாம். பொழுது திடீரென்று போய்விடுமாம் இப்பொழுதான் காலை வந்தது போல இருக்குமாம் மாலை நேரம் வந்துவிடுமாம். பொழுதுகள் குறைந்து விடுமாம். காபிர்கள் அடர்ந்தேறுவார்களாம். பசி, பஞ்சம் தலைவிரித்தாடுமாம். அழிவின் போது கெட்டவர்களை அல்லாஹ் அழிப்பானாம். ஆனால் அதில் இருக்கும் நல்லவர்களும் இந்த அல்லாஹ்வின் அழிவுக்குள் மாட்டுப்பட்டு மாண்டு போவார்களாம். எனினும் கியாமத்து நாளில் அவர்கள் நல்லவர்களின் கூட்டத்தோடு எழுப்பப்படுவார்களாம். மௌலவி கியாமத் மறுமை நாள் பற்றியே அதிகமாக இப்பொழுது பயான் (பேச்சு) செய்வார். எப்போதும் அவரின் முகம் வெளிறிப்போய் இருக்கும். மறுமையை பயந்தவர் போலவே காணப்படுவர். மற்றவர்களுக்கு பயப்படும்படி சொல்லுவார். ஈஸா நபி வெகு விரைவில் வந்து விடுவார் என்றும் அவர் முஸ்லிம்களை காப்பாற்றுவார் என்றும் சொல்லுவார். ஈஸா நபிக்கும் காபிர்களுக்கும் யுத்தம் நடைபெறுவதை அழகாக ஹதீஸில் உள்ளது போல விபரிப்பார்.

********************************
நாளைக்கு எங்களுக்கு பெருநாள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து போய் இருக்கிறோம். எங்களைப் போலத்தான் தமிழ் மக்களும் அனாதையாய் அகதிகளாய் வாழ்வழிந்து போய் அகதி முகாம்களில் கிடந்துலைகிறார்கள். எனது நல்ல நண்பன் கௌரிதாசன் எங்கிருக்கிறான் என்று தேட வேண்டும். அவனைப் போய் சந்திக்க வேண்டும். ஒரு மாதமாக கௌரிதாசனைத் தெடுகிறேன்.
முதல் என்றால் பெருநாள் இப்படியா இருக்கும் புது உடுப்பு என்ன? தின் பண்டங்கள் என்ன? வாழ்வின் மகிழ்வுகள் என்ன? எல்லாம் இந்த முறை அழிந்து போய்விட்டது.
பக்கத்து தமிழ் ஊருக்குள் இருக்கும் கௌரிதாஸன் வீட்டு கொண்டாட்டங்களில் நாமும் எமது வீட்டு கொண்டாட்டங்களில் அவர்களும் ஒன்றாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இம்முறை கௌரிதாசன் இல்லாத பெருநாள் வீடு எங்களுடையது. பலகாரம் சுட கௌரிதாசனின் மனைவி ஷாந்தி இல்லை. என்னவோ போலிருக்கிறது வீடு. கண்ணுக்கு முன்னால் எல்லாம் அகதிகளாகவே இருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இருந்த வாழ்வு உருக்குலைந்து போயுள்ளது. மழைக்காலம் நாங்கள் வீடுகளுக்கு வந்து விட்டோம் ஆனால் தமிழ் ஆட்கள் தான் இன்னும் மரங்களுக்கு கீழே இருக்கின்றனராம்.
இந்த மழையில் கைகுழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறானோ நண்பன். மனது முழக்க கவலைதான் மிஞ்சிக்கிடக்கிறது. அவன் நல்லாய் இருக்க வேணும் என மனது எண்ணிக் கொள்கிறது.
நாளைக்கு பெருநாள் தொழுகை முடிய எனக்குக் கிடைத்த அரிசி சீனி கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டு நண்பனிடம் போகவேண்டும்.
அல்லாஹ_ அக்பர்..... அல்லாஹ_ அக்பர்..... (அல்லாஹ்வே பெரியவன்) முஅத்தினார் இஷாவுக்கு பாங்கு சொல்கிறார்.

Thursday 14 May 2009

எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்

ஒன்பது வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி லண்டன் தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம். எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு வேலைகள். என்னை மிகவும் அசௌகரியப்படுத்தியிருந்தன. ஒன்று சிப்ஸுக்காக உருளைக்கிழங்கு வெட்டுவது. மற்றது பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கஸியர். எத்தனையோ படித்தவர்கள் இந்த வேலைகளில் இருந்து தான் வேறு வேலைகளுக்கு மாறுகிறார்கள். லண்டன் போனவுடன் கிடைக்கும் வேலைகளில் உடனே கிடைப்பது பெற்றோல் ஸ்ரேசனில் தான். ஏனெனில் பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் அதிகமாக தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கும். அதுவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகவே அதில் ஏதோ ஒரு வேலை கிடைக்கும். நண்பர்கள் தெரிந்தவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தரும்படி கேட்டால் எங்காவது பெற்றோல் நிலையங்களில் வேலை கிடைக்கும். அடுத்து நாம் தேடிப்போய் இந்தியாக்காரரிடம் வேலை கேட்க வேண்டும். அவர்கள் ஹிந்தி காரராக இருப்பார். எனக்கு ஹிந்தி தெரியும்

லண்டனில் தீபம் தொலைக்காட்சி ஆரம்பித்துவிட்டதாக அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்படியும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். விண்ணப்பப்படிவத்தை நிரப்பி எனது சர்ட்டிபிக்கட்டுகள், நான் எழுதிய ஆக்கங்கள் எல்லாம் வைத்து அனுப்பியிருந்தேன். நேர்முகம் மற்றும் ஸ்கிறீன் டெஸ்ட் போனபோது மீடியா மனேஜராக இருந்த சபனீதா மனோகர் சொன்னா இந்தளவு சேர்ட்டிபிக்கட்டுகளை தான் பார்க்கவில்லை. அவ்வளவு பெரியகட்டு.
இலங்கையில் இருக்கும் பொழுது பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலிடம் பெற்ற நிறைய சேர்ட்பிக்கட்டுகள். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இரண்டு வருடம் திரு. உருத்திராபதியோடு சேர்ந்து “விடியலை நோக்கி” எனும் சமாதான நிகழ்ச்சி இன்னும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்த அனுபவம். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து காலப்பகுதியில் இருந்து இலக்கிய கவிதா அனுபவம் எல்லாவற்றையும் சேர்த்து களம் ஒன்றுக்காக தேடிக்கொண்டிருந்த போது லண்டனில் “தீபம்” தொலைக்காட்சி ஒரு வரமாகத் தான் கிடைத்திருந்தது.
வானொலியை விடவும் தொலைக்காட்சி உண்மையில் ஒரு அறிவிப்பாளனின் அத்தனை உணர்வுகளையும் அச்சொட்டாய் வெளிக்கொணர்ந்துவிடும். கவலை சந்தோஷம், தடுமாற்றம், தயாரின்மை, எல்லாவற்றையும் முகத்தினூடாக வெளிக்கொணரும் ஒரு சாதனம் தொலைக்காட்சி கமெரா. சில நேரம் கவலையாய் இருக்கும் மனது. ஆனால் நேரடி ஒளிபரப்பின் போது காண்பிக்க முடியாது. சிரித்தபடி “வணக்கம் நேயர்களே” என்று சொல்ல வேண்டும். சில நேரம் தயாரில்லாமல் இருக்கும் மனது ஆனால் எதற்கும் நான் தயார் என்றபடிக்கு “வணக்கம் நேயர்களே!” என்று தயாராக வேண்டும்.
இன்னுமொரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் நண்பனொருவனோடு கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது சொன்னான் அவன் இரண்டு வருடமாக மிகவும் அன்போடு நேசித்த காதலி அவனை விட்டு விட்டுப் போய்விட்டாள். உறவு முறிந்துவிட்டது இரவு ஆனால் காலையில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் மனது அழுது கொண்டேயிருக்கிறது. ஆனால் சிரித்துக் கொண்டு இரண்டு மணிநேர காலை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியைச் செய்தாக வேண்டிய நிலமை அவனுக்கு; செய்தான். உள்ளுக்குள் அழுதபடி வெளியே சிரித்தபடிக்கு.... தொலைக்காட்சியில் இந்த நெருக்கு வாரங்கள் பல அறிவிப்பாளர்களுக்கு அனுபவமாக இருந்திருக்கும். இன்னும் இருக்கும்.

தொலைக்காட்சி நேயர்கள் வானொலி நேயர்களை விட வித்தியாசமான முறையில் இருப்பார்கள். அறிவிப்பாளர் மேல் விருப்பமாயும் இருப்பார்கள். சில வேளை வெறுப்பாயும் இருப்பார்கள். திரையில் வரும் அறிவிப்பாளர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆவல் தொலைக்காட்சி நேயர்களுக்கு உண்டு. அறிவிப்பாளப் பெண்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களைக் கூட தாமும் அணிந்து பார்க்கும் ஆர்வம் கொண்ட பெண் நேயர்கள்களையும் ஷேட், ரை போன்றவற்றை ஆண் அறிவிப்பாளர்கள் அணியும் பொழுது அவதானிக்கும் ஆண், பெண் நேயர்களையும் பார்த்திருக்கிறேன். நான் “தீபம்” தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவனாகவும், காலைக்கதிர் என்ற காலை லண்டன் நேரம் 7.00 மணிமுதல் 9.30 வரை இடம் பெறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமை செய்கிறேன்.

நிகழ்ச்சிக்கு எனக்கு மிகவும் உறுதுணையாகவும் நல்ல ஆலோசனை தருபவராகவும் திரு.மு.நித்தியானந்தனை நான் நன்றியோடு நினைவு கொள்வேன். மாலி நல்ல நண்பர். மு. நித்தியானந்தன் “தீபம்” தொலைக்காட்சிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான் 2001ம் ஆண்டு கறுப்பு ஜுலை தினத்துக்காக அவரின் அனுபவங்களை கேட்கக் கூப்பிட்டு பின்னர் அவர் தீபத்தின் செய்தி ஆசிரியாகச் சேர்ந்தார். பரந்த அறிவியல் அனுபவம், செய்தி அனுபவம் கொண்ட அவர் தீபத்திற்கு கிடைத்தது; பெருமை தீபத்திற்கே. நேரடிச் சந்திப்பு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கானதை இருநூறுக்கும் மேற்பட்டது செய்திருக்கிறேன். பல சுவாரஸ்யமான அனுபவங்கள் வாய்க்கப் பெறுவது நேரடி நிகழ்ச்சிகளில் தான். ஒரு முறை ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கவிஞரை அழைத்திருந்தேன் கவிஞருக்கு கமராவைக் கண்டால் பயம் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்த பின்பு தான் தெரியவந்தது. முன்னோட்டமாக பேசும் பொழுது மிகவும் ஆர்வமாயும் நல்ல பல கருத்துக்களையும் தந்தார். ஆனால் வேளை ஆரம்பிக்கப்பட்டு நேயர்களுக்கும் கவிஞருக்கும் வணக்கம் சொன்னதன் பின்பு கவிஞர் பேசாமல் இருக்கிறார். ஒரு மணி நேர நேரடி நிகழ்ச்சிக்கு கவிஞரை கூலாக்கி ஆசுவாசப்படுத்தி கமராக்களை நிறுத்தாமல் சாதாரண பேச்சுக்கு கொண்டு வந்தேன். அரை மணி நேர நேயர்களின் கேள்வி பதிலோடு அந்தச் சந்திப்பு நிறைவு பெற்றது. கமராமென், எடிட்டர் தடுமாறிப் போனார்கள். அவர்களையும் சமாளித்தோம்.

தீபம் தொலைக்காட்சி ஐக்கியராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்காவின் ஒரு பகுதி என்றெல்லாம் வியாபித்து இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் எமது நேயர்கள், மிகவும் விரும்பி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள் அவர்களில் சிலர் “கருத்துக்களம்” எனும் மிகவும் சீரியஸான நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அழைப்பினை எடுப்பார்கள் அது நேயர்களும் அந்த அந்த துறை சார்ந்தவர்களும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி. அதில் நேயர்களின் கருத்துக்களோடு சீரியஸான விவாதங்கள் நடைபெறும். ஆனால் மத்திய கிழக்கு நேயர்கள் தொலைபேசி எடுத்துவிட்டு “ஆ... அனஸ் நானா... அஸ்ஸலாமு அலைக்கும்” என்பார்கள் பதில்சொல்லிவிட்டு பேசச் சொன்னால் பேசமாட்டார்கள் “நாங்கள் உங்களோடு கதைப்பதற்காகத்தான் எடுத்தோம் எப்படி சுகமாக இருக்கிறீங்களா” என்று நேரடி ஒளிபரப்பில் கேட்பார்கள். அவர்கள் ஆர்வம் மிகுதி ஆனால் பேசமாட்டார்கள். இது நேரடி ஒளிபரப்பில் வரும். சந்திப்புகளில் பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை செவ்வி கண்டேன். அன்று வந்த தொலைபேசி அழைப்புகளில் தொண்ணூறு வீதமான அழைப்புகளில் பெண்கள். பாண்டிச்சேரி தமிழ் நன்றாக இருக்கும். வாய்நிறையப் பேசுவார்கள். பிரான்ஸில் பாண்டிச்சேரி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மி நாராயணனை தமது உறவினர் போல எண்ணி பேசினார்கள். அவர்களின் ஊர்ப்பற்று அவர்களின் பேச்சில் இருந்து தெரிந்தது.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவினது ஒரு மணிநேரச் சந்திப்பு ஐக்கி இராச்சியம், ஐரோப்பிய நாடுகளில் சிலாகிததுப் பேசப்பட்டது. சந்திப்பு முடிந்தவுடன் மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் பாராட்டிக் கொண்டே இருந்தார். டொமினிக் ஜீவாவின் அனுபவத் தொகுப்பாக அச்சந்திப்பு இருந்தது. ஒளிப்படத்தினூடாக ஒருவர் கதைக்கும் பொழுது நேரே பேசுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் வல்லமை தொலைக்காட்சிக்கும் ஒளிவிம்ப ஊடகங்களுக்கும் உண்டு. அதனால்த் தான் கிராமங்கள் தோறும் இப்பொழுது தொலைக்காட்சி சாதனை படைத்து வருகின்றது. சில தொலைபேசிகள் வரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு எனது பெயரில் நேயர்களுக்கு இன்னும் குழப்பம். “உம்முடைய பெயர் அனஸ் ஆ, அல்லது அனாஸா! அல்லது அனக்ஸா என்று நான் யார் இந்துவா கிறிஸ்தவரா முஸ்லிமா எனும் தோரணையில் இருக்கும் அக்கேள்வி. என்ன சாதி என்றும் அறிய ஆவல்பட்டிருக்கும் தொலைபேசி அது. “நான் அனஸ்” என்று விட்டு வைத்து விடுவேன்.
ஐரோப்பிய நாடுகளில் தொலைக்காட்சிகள் வானொலிகளின் பங்களிப்புகள் மிகவும் முக்கயிமானது தமிழில், தமிழுக்கு.
பிரான்ஸ் இருந்து லண்டனுக்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சொன்னார். “உங்கடை தீபம் பார்த்து மகன் தமிழை விளங்கிக் கொள்கிறான்” இது உண்மையில் நடக்கும் ஒரு சங்கதிதான். வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டு சின்னஞ்சிறுசுகள் புரிந்து கொள்கிறார்கள் ஓரளவுக்கேனும். லண்டனில் இரண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. தமிழக தொலைக்காட்சிகள் எல்லாமே லண்டனுக்கு வருகின்றன.

வானொலிகள் மூன்று செற்றலைட் மூலமானவை ஒன்று பண்பலை மூலமானது. பண்பலை மூலமான “சந்திரோதயம்” வானொலி தீபாவளி தினத்தையொட்டி சீக்கியர்களின் பெருநாளாகிய “வைசாகி” எனும் பெருநாளை முன்னிட்டு ஒலிபரப்பாகும் அலைவரிசைக்கு சொந்தகாரர் ஒரு சீக்கியர். “வைசாகி” பண்பலை வரிசையில் நடாமோகன் நேரம் எடுத்து “சந்திரோதயம்” வானொலி சேவையை நடத்தி வருகிறார். “சன்றைஸ்” வானொலி சிற்றலை மற்றும் செற்றிலைற் மூலமாக கேட்கலாம். ஐ.பி.சி இன்னும் ரி;.பி.ஸி, ஈ.ரீ.பீ.ஸி போன்ற வானொலிகள் லண்டனில் இருந்து ஒலிபரப்பாகின்றன. தீபம், வக்ரோன், இன்னும் சண் தொலைக்காட்சிகள் லண்டனில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒரு செலவு மிகுந்த சேவையாகும். கிட்டத்தட்ட லண்டனில் தீபம் தொலைக்காட்சியின் ஒரு நாள் செலவு ஐயாயிரம் பவுண் வரையாகும். பணக்காரர்கள் இதன் முதலாளிகளாக இருக்கும் பட்ஷத்தில் இதனைச் சாதிக்க முடிகிறது. நான் தயரித்து வழங்கிய “காலைக்கதிர்” நிகழ்ச்சியில் மு.நித்தியானந்தன் செய்யும் “இலக்கிய நேரம்” பகுதியில் காத்திரமான நூல் விமர்சனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரிய நூல்களை மு. நித்தியானந்தன் விமர்சனம் செய்யும் பாணியே தனி அது நேரடி ஒளிபரப்பாக இடம் பெறும். “கருத்துக்களம்” நிகழ்ச்சி இது வெள்ளி தோறும் செய்வேன். புலம் பெயர்நாடுகளில் குடும்பப் பிளவுகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று செய்தேன். அதனை செய்து முடித்து விட்டு ஸ்ரூடியோவை விட்டு வெளியில் வரும் போது ஒரு தொலைபேசி அழைப்பு. “அண்ணா நான் இரண்டு பிள்ளைகளின் தாய்” என்று விட்டு அழ ஆரம்பித்து விட்டா அந்தப் பெண். விசாரித்தேன். தான் வவுனியாவைச் சேர்ந்தவரென்றும். சீதனம் வாங்காமல் தன்னைத் திருமணம் செய்து விட்டு சுவிஸ்-போய் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு கணவனின் அடி, உதை கொடுமை தாங்க முடியாமல் ஒரு நலன்புரி நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தா. புலம் பெயர் நாடுகளில் குடும்பப் பிளவுகள் அதிகமாக காணப்படுகின்றன. சேர்ந்து பேசி அன்பாக இருக்க வாய்ப்பில்லாமல் உழைப்பு, பணம் என்ற தேவைகளுக்குள் சிக்குப்பட்டு தமிழ் குடும்பங்கள் சின்னாபின்னமாகி கிடக்கின்றதை எண்ணும் போது மனது வலிக்கிறது. குடும்பங்கள் தொடர்பான அன்னியோன்யத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் பிரயோசனத்தை தந்தது.

மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் ஒரு முறை சொன்னார். “உங்கள் நிகழ்ச்சி மூலம் ஒரு குடும்பம் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று. நேயர்கள் மத்தியில் ஒரு போக்கு இருக்கிறது தங்களுக்கு பிடிக்காத விடயங்களை உடனே தொலைபேசி மூலமோ அல்லது கடிதமூலமோ தெரிவிப்பார்கள், ஆனால் சிறப்பான நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு சும்மா இருந்து விடுவார்கள். இந்தக் கருத்தை இளையதம்பி தயானந்தா எனது தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் போது குறிப்பிட்டார். இது தொலைக்காட்சி, வானொலி நேயர்கள் எல்லோருக்கும் பொருந்தும். புலம் பெயர் நேயர்கள் பொதுவாக செய்திகளுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 98 வீதமான எனது நேயர்கள் இலங்கைத் தமிழர்களாக இருப்பதனால் இலங்கை பற்றிய செய்திகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தொடர் நாடகங்கள் அவர்களுக்குள் பெண்கள் அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள்.

இலங்கையில் இருந்து வந்த முதியவர்களுக்கு தமிழ் தொலைக்காட்சிகள் பெரும் ஆறுதலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. இங்கென்றால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று அரட்டை செய்வதில் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதில் பொழுதுகழியும். வேப்பங்காற்றுக்குள்ளும் பனங்கூடல் வாசத்துக்குள்ளும் இருந்தவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து மகள் மாரோடும் மொழி புரியாத பேரக்குழந்தைகளோடும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெரியவர்கள் முதியவர்களுக்கு பெரும் ஆறுதல் தொலைக்காட்சிகள் தான். புலம் பெயர் நாடுகளின் பேரன் பேத்திகளைப்பார்க்க என்று வருபவர்கள் வெளியில் நினைத்தவுடன் போக முடியாது மொழிப்பிரச்சனை, பஸ்ஸில் உடனே ஏறிப்போக முடியாது பாதை மாறிவிடும் இப்படியானவர்கள் தொலைக்காட்சிகளோடு தான் காலத்தைக் கடத்த வேண்டியுள்ளது.

தொலைக்காட்சிகள் வருடச்சந்தா அடிப்படையில் தான் இயங்குகின்றன. வருடத்துக்கு 150 ஸ்ரேலிங்பவுண்கள் கட்டி காட் வாங்க வேண்டும். அனேகமாக லண்டனில் இருந்து இயங்கும் தொலைக்காட்சிகளின் கட்டணம் இப்படித்தான். சினிமா, தொடர் நாடகங்கள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்தும்படி சீரியஸான நேயர்கள் கூறுவதுண்டு. இதில் பல சிக்கல்கள் உண்டு. வியாபார நோக்கமில்லாமல் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியாது. விளம்பரங்களை விட சந்தாவை விட அதிகம் செலவுள்ள சமாச்சாரம் இது. பல தரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டியது தொலைக்காட்சிகளின் தேவையாக இருக்கிறது. எனது தொலைக்காட்சிப் பேட்டிகளில் என்னை உலுக்கியது திருகோணமலையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் கதை. திருகோணமலையில் இருந்து ரஷ்யா, உக்ரெயின், கஸகிஸ்தான், போலந்து ஊடாக லண்டன் வந்த கதையைச் சொன்னார். பனி படர்ந்த பாதைஊடாக ஆட்கடத்தும் ஏஜன்சிகள் மூலமாக நடைப்பிணமாய் வந்த கதை அது. வெளிப்புற செய்தி சேகரிப்புக்காக நீதிமன்றதுக்கு கமெராமென் சுரேஸோடு சென்றேன். அங்கு 2 ஆயுள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்களைக் கண்டேன். “அல்பேட்டன்” எனும் இடத்தில் இருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியால் இந்தத் தண்டனை வாசிக்கப்பட்ட போது நீதி மன்றத்தில் இருந்தேன்.

புலம் பெயர்ந்து வந்து கோஷ்டிச்சண்டைகள் கொலை செய்யும் மனப்பாங்கு வளர்ந்து விட்டவர்களாக தமிழ் இளைஞர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் பொலிஸின் கடும் நடவடிக்கை மூலம் லண்டன் பொலிஸ் இவர்களை கட்டுப்படுத்திய பின்பு கொலைகள் குறைந்திருக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியலாளர்கள் லண்டனுக்குத்தான் அதிகமாக வருவார்கள். லண்டன் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பான நகரம். நாம் லண்டனில் இருப்பதனால் வருபவர்களோடு தொடர்பு கொண்டு செவ்விகள் எடுப்பது சுலபமாக இருந்தது. முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, தீடிர் தௌபீக் ஆகியோர் வந்த பொழுது ஒன்றே முக்கால் மணி நேர நேரடி ஒளிபரப்பு செவ்வி செய்தேன். மிகவும் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக இருந்தது. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனேகமான தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான மயக்கமே இருக்கிறது. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்கள் தான் என்று அடம்பிடிக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கலைகலாச்சாரப் பாரம்பரியங்களின் வேற்றுமை. இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகவே பிரகடனப்பட்டிருப்பதை பொது புலம் பெயர் தமிழர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பான காரசாரமான விவாதம் நேரடி ஒளிபரப்பில் இடம் பெற்றது. இதே விவகாரம், முன்னாள் அமைச்சர் அஸ்வர் வந்தபோது தொடர்ந்தது. இலங்கையில் இருந்து வந்த நிகழ்ச்சியான “விழிப்பு” புலம் பெயர் தமிழர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. நாம் “விழிப்பு” நிகழ்ச்சியை தொடர்ந்து வியாழக்கிழமை லண்டன் நேரம் இரவு 8.30 இற்கு ஒளிபரப்பு செய்தோம். எமது நேயர்கள் இலங்கை தொடர்பான சரியான “டொக்கியுமன்ரி” நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் “விழிப்பு” மூலம் பல எதிர்ப்புக்கணைகளும் எம்மை நோக்கிவந்தன. சில விழிப்புகளில் சிங்களப்பகுதி பாடசாலைகள், விடுதலைப்புலிகளால் போரில் கொல்லப்பட்ட காணாமல்போன குடும்பங்களில் உள்ள விதவை மனைவிகள், தாய்மார்களைச் செவ்வி கண்டிருப்பார்கள். இது அங்குள்ள சில பேருக்கு ஒவ்வாமல் இருந்தது. அதனால் இந்நிகழ்ச்சி வேண்டாமென்றார்கள். விகாரைகள், பிக்குமாரைக் காண்பித்தால் சிலபேர் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். “விழிப்பு” எல்லாக்கிராமங்களுக்குள்ளும் நுழைந்து வந்தது. தமிழ்ப்பகுதிகள், எல்லைக்கிராமங்கள், இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் களுத்துறைச் சிறைச்சாலையில் கஷ்டமுறும் தமிழ் கைதிகள் என்று எல்லா தரப்புகளையும் அவர்களின் பிரச்சனைகளையும் வெளிக்கொணர்ந்தது. இலங்கையில் விழிப்பு ஏற்படுத்திய தாக்கத்தைவிட தீபம் தொலைக்காட்சியூடாக புலம் பெயர்நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காத்திரமான அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. “விழிப்பு” முடிவடைந்ததன் பின்பு “உரைகல்” என்றொரு நேரடி ஒளிபரப்பை, நேயகர்களின் கருத்தறியும் நிகழ்ச்சியினைச் செய்தோம் நானும் மு. நித்தியானந்தனும். நேயர்களின் கருத்துக்கள் “விழிப்பு” சம்பந்தமாகவும் அன்றைய நிகழ்ச்சியின் மைக்கருத்து சம்பந்தமானதாகவும் இருக்கும். வலு சுவாரஸ்யமானதும் இன்னும் தகவல் பொருந்திய நிகழ்ச்சியாகவும் அது அமைந்து எல்லாத்தரப்பினரது அபிமானத்தையும் பெற்றிருந்தது. “உரைகல்” பொதுவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் உடல் உளவியல் பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தவிப்பதனை ஆழமாக உணரக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட செய்தியாளர்கள், ஒளிபரப்பாளர்களாகிய எங்களுக்கே அதிகம் உண்டு.

புலம் பெயர்வாழ்வின் தனிமை, பணப் பிரச்சனை, கடினமான உழைப்பு, இலங்கையில் உள்ள உறவினர்களின் பணம் தொடர்பான நச்சரிப்பு, ஊரில் திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண் சகோதரங்களின் சீதனம் பற்றிய கவலை, வயது வந்தும் உழைத்துக்கொண்டே இருப்பது திருமணம் முடியாமல், இதற்கும் மேலாக குளிர் ஒத்துக்கொள்ளாத சீதோஷ்ணநிலை அதனால் வாதம் இடுப்புவலி, மூட்டுப்பிடிப்பு, அத்தோடு சமர் காலங்களில் வரும் “ஹேபீபவர்” என்கின்ற சுவாச நோய் போன்றவையும் ஒவ்வாமையும், மொழிச்சிக்கல், அடுத்தவர் உறவினராக இருந்தாலும் அவர்களைக் கவனிக்க மற்றவர்களுக்கு நேரமின்மை, பத்துப் பன்னிரண்டு வருடமிருந்தாலும் அன்னிய நாட்டு மொழிகள் மூளைக்குள் நுழையாமை இதனால் தொடர்பாடல் அற்றுப்போதல், குடும்பத்தில் அன்பு இன்மை, கணவன் மனைவியிடையே ஒரு அன்னியோன்யம் வளராமை, எப்பொழுதும் கணவன் மனைவிமத்தியில் சண்டை, இருந்து பேச நேரமின்மை, பிள்ளைகள் அன்னிய கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டே போகும் அவஸ்த்தை, பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் பதினைந்து பதினாறு வயதில் ஒரு துணையைத் தேடிக்கொண்டு சுற்றுவது செக்ஸ் போன்ற செயல்களில் பிள்ளைகள் ஈடுபடுவது, மனத்தளர்வு, இவைகளை யோசித்து யோசித்தே நோயாளர்களாகிப் போன தமிழர்களை அதிகம் காணுவது என்னைப் போன்றவர்களே! அதனால் தொலைக்காட்சிகளில் நடைபெறும் டொக்டர்மாரின் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் சாத்திரம், காண்டம்பார்த்தல், மனநோய் நிபுணர்கள், சாமிமார்களின் நிகழ்ச்சிகளுக்கும் வரும் தொலைபேசி நேயர்களின் எண்ணிக்கை அதிகம். சின்னப்பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள்வரை ஆர்வமுடன் “யார்” நாடகத்தைப் பார்த்தார்கள். அது வலு சோக்கான திகில் நாடகம். அதில் புதிரை அவிழ்ப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. “யார்” நாடகத்தின் முக்கால் மணிநேரமும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் குறைந்த ஆட்கள் ஈடுபாட்டோடு வேலை செய்யும் இடமாக “தீபம்” கலையகம் இருக்கும். ஒரு இரண்டரை மணிநேர நேரடி ஒளிபரப்பை மூன்று பேர் செய்திருக்கிறோம் என்றால் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையவர்கள் நம்ப மாட்டார்கள். ஸ்ரூடியோவில் நான் எடிட்டிங் பகுதியில் ஒருவர். என்கோடிங் பகுதியில் ஒருவர். இப்பொழுது வேறு வேறு தமிழ் டிவி ஸ்ரூடியோவுக்கு போகும் போது வேலை செய்பவர்களின் தொகையைப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் ஸ்ரீ, நிரஞ்சன், அமுதன், பாபு, கபாலிபாபு, ராஜா, ரூபன், சுரேஸ், முத்து பாலு ஆகிய தொழில்நுட்பக்கலைஞர்களின் அசாத்திய துணிவும் நம்பிக்கையுமே நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முழு உறுதுணை. இவர்கள் கண்ணாடித் திரைக்கு அப்பால் நின்று உழைப்பவர்கள் இவர்கள் தான் உலகம் முழுக்க என்னைப் போன்றவர்களை பிரகாசிக்கச் செய்பவர்கள். எந்தப் பிரச்சனையுமில்லாமல் இப்பொழுதும் “தீபம்” தொலைக்காட்சியில் வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ந்து போகிறேன். நண்பர்கள் எல்லோரும் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். 36 பேர் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது மீடியாவில் பிரச்சனை ஒற்றுமை பற்றி சொல்லாமல் செல்லமுடியாதுள்ளது. பல தொலைக்காட்சி நிலையங்களில் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் ஒருவரைப்பற்றி முதலாளிமார், மேலிட உத்தியோகத்தரிடம் போய் கோள் சொல்வதுமாக இருக்கும நிலையினைப்பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பள உயர்வை கம்பனி செய்தது. அதைப்பார்த்து.

சம்பளத்தை பொறாமைப்படுபவர் கொடுப்பதில்லை. கம்பனி கொடுக்கிறது. இவர் ஏன் பொறாமைப்படுகிறார்? இது இலங்கையில்... பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் என்று வேலை செய்யும் சக நண்பர்களாகவே பார்க்கிறார்களில்லை. ஏதோ எதிரிகள் போலவே பார்க்கிறார்கள். ஒருவருடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறார்களில்லை. அவமதிக்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் பண்பை, பாராட்டும் மனோ பாவத்தை உண்மையாய் மனதால் மனதோடு பேசும் பக்குவத்தை இந்தப் பொறாமை வாதிகள் எல்லாம் ஐரோப்பியரிடம் கற்க வேண்டும். மனம் திறந்து பாராட்டுவார்கள். லஞ்சம் தெரியாத, பொறாமை தெரியாத அடுத்தவனின் சுதந்திரத்தில் கை வைக்காத மற்றவரை மதிக்கத் தெரிந்த நல்ல மனிதர்களோடு பழகியிருக்கிறேன். இங்கு சிலர் வந்து சிலரைப் பற்றி குறை கூறும் பொழுது நான் அதனைக்கேட்பதில்லை. உண்மையில் தன்னைப்பற்றி தன் கருமங்களைப்பற்றி அதன் செய்நேர்த்தி பற்றி சிந்திக்கத் தொடங்கினால் மற்றவர்கள் பற்றியதெல்லாம் விலகிவிடும். அதுதான் சரியும் கூட. ஒரு எழுத்தாளனாக 1985இல் சிந்தாமணி பத்திரிகையில் எழுதத்தொடங்கி அறிவிப்புத்துறை எனது உதிரத்தோடு உதிரமாக சின்னவயதினிலேயே என்னுள் ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். “மைக்” கைக் கண்டால் ஆசை. சிரட்டையை வாழை மரத்தில் கட்டிவிட்டு சணலில் வயர் செய்து ஒரு தடியில் கட்டிவிட்டு “எனவுன்ஸ்” செய்து பார்த்த எனது கிராமத்து வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் வாழை மரங்களை என் வளர்ச்சியின் பின்பு தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சண்டிக்கட்டோடு மட்டையில் “குளல்” செய்து திரிந்தது. ஆனந்தனோடு(ஆமி சுட்டு செத்துப்போனான்) சேர்ந்து கங்காதரனும்(ஜேர்மனியில் ஒரு சர்க்கரை வியாதிக்காரனாக நல்ல மனிதனாகஇருக்கிறான்) நானும் யாருக்கும் மைக்கை கொடுக்காமல் அம்மா மறித்தாலும் கேட்காமல் வீடியோ படம் காட்டும் இடத்துக்கு “எனவுன்ஸ்” செய்தது. பள்ளிக்சுட லொத்தர் கொட்டகையில் “முதலாம் பரிசு சைக்கிள்” என்று சொல்லி அறிவிப்பு செய்தது... பள்ளிக்கூட மேடைகளில் இராசநாயகத்தோடு சேர்ந்து அவன் ஈழத்துச்சதனாயும் நான் அறிவிப்புச் செய்பவனாகவும் சேர்ந்து செய்த மகிழ்ச்சிகள். இராசநாயகம் நன்றாக நாய், பூனை, குருவி, நாய் கடிபடுவது எல்லாம் கத்துவான் மாணவர் சங்க கூட்டங்களில் பாட்டுக்கு பாட்டு செய்தது. தில்லையம்பலம் வாத்தியாருக்குப்பயந்து பயந்து பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் “எனவுன்ஸ்” பண்ணியது. அம்மய்யா ஏச ஏச ''யுனிக்'' ரேடியோ ஒன்றை நாய்குட்டி காவியது போல இடுப்பில் அணைத்துக்கொண்டு திரிந்தது. மகாலிங்கம் சேரின் உதவியோடு பேச்சுப் போட்டியில் “கூட்டுறவுக் கொள்கைகளும் நடைமுறைகளும்” எனும் தலைப்பில் பேசி மாவட்ட மட்டத்தில் பரிசு வாங்கியது.... அரபிக் கல்லூரி விழாக்களில் கவிதை வாசித்தது. மாணவர் மலர் நிகழ்ச்சியில் கனக சபாபதி நாகேஸ்வரன் முல்லைத்தீவில் வைத்து கேட்ட போது எனது இலட்சியம் கே.எஸ்.ராஜா போல வரவேண்டும் என்றது. பின்னர் அறிவிப்பாளர் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் முதலாமிடங்கள்பல பெற்றது. ஜனாப்.பி.எச். அப்துல்ஹமீட் வானொலிக்கு வரச்சொன்னது. 1997-1998களில் இலங்கை வானொலியில் “விடியலை நோக்கி” நிகழ்ச்சி செய்வதற்கு வி.என்.மதியழகன், உருத்திராபதி ஆகியோர் ஊக்கம் தந்தது. அதே காலங்களில் நூரணியா ஹஸன், ஹரீஸ்ஹஜி, முனவர் ஹாஜி தந்த நிகழ்ச்சிகளும் ஊக்கங்களும்...
பின்னர் 2000-ஓகஸ்ட் 07ம் திகதி தீபம் தொலைக்காட்சியில் இணைந்தது.
பிரமித்துப்போகிறேன் என்னுள் நானே.
free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive