Monday, 26 July 2010

பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்



உலகம் முழுவதும் தொடரும் பயங்கரவாதமாகவே ஆண்களின் அடக்குமுறைக்குள் பெண்கள் சிக்கிவிடுவதை காண்கிறோம். எல்லா யுத்த வெறியர்களும் ஆண்களாக இருக்க சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தும், வன்புணர்ச்சி செய்யும் கடத்திக்கொல்லும் அநியாயத்தை பெண்கள்மீது புரியும் ஆண்களை உலகம் முழுவதும் காண்கிறோம். யுத்த வெறியர்களாக ஆண்கள் இருக்கும்பொழுது பெண்களை அநியாயமாக தங்கள் யுத்தக்குள் இழுத்து பழிவாங்கும் ஆண்களைத்தான் எல்லா இடங்களிலும் காண்கிறோம்.இலங்கை, பொஸ்னியா, ஈராக், சூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தற்பொழுது கிர்கிஸ்தான் என்று முழு தேசத்திலும் பெண்கள்மீது வன்முறையை பிரயோகிக்கும் யுத்த வெறியர்களான ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.ஆண்களின் யுத்தப் பசிக்கு முதலில் இரையாவது பெண்களும் குழந்தைகளும்தான். பெண்கள் யுத்தத்தில் எந்த சம்பந்தமும் படாத பட்சத்தில் அவர்களை வன்முறைக்குள் ஆளாக்கி நேரடியாக அவர்கள்மீது அநியாயம் விளைவிக்கும் ஆண்கள் உண்மையில் கொடூரமானவர்கள்தான்.நிராயுதபாணிகளான பெண்களின்மீது ஆயுதம் தரித்த ஆண் நேரடியாக வன்முறை செய்கிறான். இதனை உலகில் கேட்க யாருமே இல்லை. எல்லா ஆட்சிக்கட்டிலும் ஆண் இருந்துகொண்டு தனக்கு தோதுவான சட்டங்களை இயற்றிக்கொண்டு பெண்களின் மீதான வன்முறையை ஏவிவிடுகிறான். யுத்த ஆயுதம் செய்வது ஆண், அணுகுண்டை செய்வது ஆண், துப்பாக்கியை செய்வது அதனை உபயோகிப்பது ஆண் ஆனால் ஏன் சாகிறோம் என்று தெரியாமல் செத்துப் போவது பெண்களும் குழந்தைகளும்.யுத்த பூமியில் அல்லது இன வன்முறையில் முதல் பலி பெண்தான். யுத்த பிரதேசங்களில் பெண் நேரடியாகப் பலிக்கடாவாக்கப்படுகிறாள். உலகில் யுத்தவாதிகள் யாரை எடுத்தாலும் அவர்கள் ஆண்கள்தான். கிட்லரிலிருந்து இன்றைய ஒபாமாவரை எல்லோரும் ஆண்கள்தான். இன்று அமெரிக்கா உலகம் முழுவதும் யுத்தத்தைப் பரப்பிவிட்டு மூள வளங்களைக் கொள்ளையிடுவதில் எவ்வளவு முனைப்போடு இருக்கிறது.தான் விரும்பும் நாடுகளுக்கு தான் விரும்பும் நேரத்தில் இராணுவத்தை அனுப்பி யுத்தம் செய்கிறது. ஆனால் அந்த தேசத்தின் இயல்பு வாழ்க்கை, அந்த கிராம மக்களின் வாழ்வு, கலாசாரம், பண்பாடு, வழிமுறைகள் எல்லாவற்றையும் பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்துவிட்டு வருகிறது.அங்கு அழிந்துபோன பெண்களைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் வந்துவிடுகிறது. பெண்கள் எப்பொழுதும் குழந்தைகளை பிரசவிக்கின்ற இயந்திரங்களாகவே ஆண் வன்முறையாளர்களால் பார்க்கப்படுகின்றனர். பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துக்கொண்டிருக்க ஆண்கள் அந்தக் குழந்தைகளை யுத்தவாதிகளாக ஆக்குகின்றனர். உலகத்துக்கு ஆக்கதாரிகளாகப் பெண்கள் இருக்க அழிக்கிறவர்களாக ஆண்கள் இருக்கின்றனர்.

எல்லா யுத்தங்களையும் எடுத்தால் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை இருக்கிறது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவு அதிகளவில் இடம்பெறுவதற்குக் காரணம் பெண்கள்மீதான கற்பழிப்பை ஆண்கள் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். யுத்தம் இடம்பெறும் உலக நாடுகளில் அதிகளவில் 80 வீதத்தினர் பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களும் சிறுமிகளும் இராணுவத்தினரான ஆண்களால் வன்கொடுமைக்கு உள்ளாவது உலகில் ஒவ்வொரு நிமிடமும் நடந்துகொண்டிருக்கின்ற கொடுமையாகும். கொங்கோவில் இடம்பெற்றபோரில் யுவிரா எனும் இடத்தில் ஒவ்வொரு நாளும் 40 பெண்கள் வீதம் 2002 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமாக ஆய்வு ஒன்று சொல்கிறது. உகண்டாவில் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறையில் 5 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருக்கின்றனர். சியாராலியோன் சண்டையில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஈராக்கில் அமெரிக்கப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தகவல்களின்படி 600 பேர் என்று சொல்லப்படுகிறது. தகவல்களை தெரிவிக்காதவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பொஸ்னியாவில் 1992 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கி;டத்தட்ட 60,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொசோவாவில் சேர்பிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பிள்ளைகளை வேண்டுமென்றே பெறவைத்து காலம்காலமாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள்.போர் நடைபெறும் இடங்களில் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை உண்டு. அரச படைகள் அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் போன்றன போர் பாலியல் குற்றங்களுக்குக் கீழ் வருகின்றது. பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெறும் இந்தக் குற்றங்கள் மனிதாபிமானத்துக்கு எதிராக பார்க்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். உலகின் எந்த மூலையில் என்றாலும் யுத்தம் நடைபெறும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை இராணுவம் அல்லது ஆயுதக் குழுக்கள் செய்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.உலகில் உள்ள பெண்களில் நூற்றுக்கு முப்பது பேர் ஏதாவது ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்பதுதான் கொடுமையாகும்.பெண்களுக்கெதிரான வன்முறை உலகில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றபோதிலும் அதனை பெருமளவுக்குப் பொருட்படுத்தாத தன்மையே காணப்படுகிறது.'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும்பொழுது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை', என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் ஒன்றும் மகிந்த சொல்வதுபோல ஒழுக்கசீலர்களாகவும் வெறுமனே எதிரியுடன் மட்டும் யுத்தம் புரிந்தவர்களாகவும் மட்டும் இல்லை. ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த கொடுமைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் சமூக அந்தஸ்துக்கு அஞ்சி தங்கள் மீதான சிங்கள இராணுவம் செய்த பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்ல அச்சப்படுவதின் காரணமாக இந்த செய்திகள் அமுங்கிப்போகின்றன.இலங்கை இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள்மீது பாலியல் வன்முறையை யுத்தத்தின் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர் என அமெரிக்க ராஜாங்க திணைக்களச் செயலர் கிலாரி கிளின்ரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் புலிகள் இயக்கப் பெண்களையும் வேறு தமிழ்ப் பெண்களையும் கற்பழித்ததாக கிலாரி கிளின்ரன் சொன்னார்.ஆனால் அரசாங்கம் இந்த பாரிய வன்முறைகளை இல்லை என்று வாதிட்டது. சில வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் சில அமைப்புக்கள் இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கின்றன என்று கெகலிய ரம்புக்வெல பொய் சிரிப்போடு இதனை மறுத்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு.இந்திய இராணுவத்தினரும் யுத்தம் நடைபெறும்பொழுது இலங்கையில் தமிழ் பெண்கள் பல நூறு பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். ஒரு சிலரைத் தவிர அவை வெளிவராமலேயே போய்விட்டது. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்களில் ஒன்று திரண்டு வழக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குப் பெரிய சட்டத்தரணிகள், தமிழ் அரசியல்வாதிகள்கூட வழிகாட்டவில்லை எமது பெண்களுக்கு.கொங்கோ நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையாகப் போன இந்திய இராணுவத்தினர் அங்குள்ள பசி பட்டினியோடு இருக்கின்ற பெண்களின்மீதும் சிறுமிகள்மீதும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் இளஞ் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறை புரிந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வெறியர்கள் இந்த வன்கொடுமையை புரிந்துள்ளது தெரியவந்து அவர்கள்மீது விசாரணை நடாத்தப்பட்டது.2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்திய இராணுவத்தைக் குற்றவாளியாகக் கண்டனர்.ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டார். இந்திய சட்டப்படி குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கோரினார். இந்திய இராணுவ அமைச்சர் அன்ரனியும் முழுமையான விசாரணை நடாத்தப்படும் என்றார்.கடந்த மாதம் விசுவமடுப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் இரண்டு குடும்பப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர். இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இராணுவமோ அல்லது கெகலியவோ இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏனெனில் அடையாள அணிவகுப்பில் இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இன்னும் முகாம்களில் இருக்கும் பெண்கள் மீதான வன்முறை தொடருவதாகவே சொல்லப்படுகிறது. பெண்களை ஒரு ஆயுதமாக இன்னும் இராணுவம் பயன்படுத்திக்கொண்டுதான் வருகிறது. சித்திரவதை மூலமாகப் புலிகளுடனான தொடர்புகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்றுவிட்டு பெண்களுக்கு அதிகபட்சமாக கற்பழிப்பு எனும் தண்டனையை கொடுப்பதுதான் பெரும் துன்பமானது.இன்னும் தமிழ்ப் பெண்கள் இராணுவ சித்திரவதைக் கூடங்களில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அல்லது எழுதினால் உடனே இலங்கை அரசின்மீது பழியைப் போடுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுதான். உலக சனத்தொகையில் பெண்கள்தான் அதிகம். அதாவது 53 வீதம். ஆனால் 47 வீதமாகவுள்ள ஆண்களால்தான் பெண்கள் ஆளப்படுகிறார்கள்.

இந்த ஆண்களின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது. ஆம் எல்லாம் இருக்கிறது. ஒபாமா நினைத்தால் இந்த உலகத்தையே அணுகுண்டுபோட்டு அழித்துவிடலாம். மன் மோகன்சிங், திமித்ரி மெத்வேதவ், கிலானி அகமதுன்னியாத், வென்ஜியாபோ என ஆண்களின் உத்தரவுக்காகத்தான் அணுகுண்டுப் பொத்தான்கள் காத்திருக்கின்றன. அழிக்கிறவர்களாக இந்த உலகத்தில் ஆண்கள்தான் இருக்கிறார்கள் பாருங்கள்.பெண்கள் எப்போதும் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படித்தான். ஒரு சமரச நிலமைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலமை பெண்களுக்குத்தான் இருக்கிறது.அக்குறணையில் நான் இருந்தபோது எனது வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் இருந்தது. ஒவ்வொருநாளும் அந்த ஆண் குடித்துவிட்டு வந்து மாலைவேளைகளில் மூர்க்கத்தனமாகத் தாக்குவான். ஆனால் அந்த மனைவி அத்தனை அடிகளையும் வாங்கிவிட்டு மறுநாள் காலை அவனுக்கு சுடு தண்ணீர் வைத்துக் குளிப்பாட்டுவாள். உண்மையில் எனது மனதுக்குள் 16 வருடமாக கிடந்து உழலும் சோகம் இது. ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பெரும்தொகையினர் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கின்றனர். அவர்கள் எல்லாமே இழந்த நிலையில் வெறும் நடைப்பிணமாக திரிகின்றனர். தந்தையை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என்று துன்பம் அனுபவிக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.சிறுநீர் கழிக்கக்கூட ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இந்த உலகில் வழங்கப்படுவதில்லை என்று எனது நண்பி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள்.விதவைப் பெண்கள் மீதான ஆண்களின் பார்வையும் கொடுமையானது. விதவைப் பெண் என்றாலே எப்பொழுதும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தலாம் என்ற ஒரு மனநிலையே ஆண்கள் மத்தியில் இருக்கிறது.எப்பொழுதும் ஆண்கள் பெண்கள்மீதான அடாவடித்தனத்தை அரங்கேற்ற விரும்பியபடியே இருக்கின்றனர்.இங்கே ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு பெற்றுக்கொள்வதைப்போல இலங்கையில் சாத்தியப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்களுடைய சுதந்திரம்பற்றிய தொடர் கவனிப்பில் இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்களை பண ரீதியாக ஆண்களிடம் தேவையற்றவர்களாக்குகின்றனர்.உதாரணமாக பஸ் ஓடுவது பார வாகனங்கள் ஓடுவது மட்டுமல்ல பாரிய கட்டட வேலைகள், என்ஜினியர் வேலைகள் என்று தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.நான் பார்த்த ஒரு விடயம் கல்வி. கல்வியை முழுமையாக கஸ்ரப்பட்டு அடைவதன் மூலம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து பெண்கள் விடுபட்டு விடுகிறார்கள். சுயமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆசிய நாடுகளில், இலங்கையில் பெண்களுக்குக் கல்வி போதாமையுள்ளது. அல்லது மறுக்கப்படுகிறது. அதன் காரணத்தினால் எப்பொழுதும் பெண் தாழ்ந்தே கிடக்கிறாள்.பூமிக்குத் தாய் என்கின்ற ஆண் பெண்களின் மீதான வன்முறைகளை எப்பொழுது கழையப் போகிறான் என்ற கேள்விக்கு அப்பால் பெண்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும்.வன்முறையற்ற உலகத்தில் தான் இது தாச்சதியமாகும். பெண்கள் மீது வன்முறை புரிகின்றவர்களுக்குக் கடும் தண்டனை தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை இல்லாமல் போகும்.

Tuesday, 20 July 2010

மெலிந்த உடலெனும் மோகம்



சுவிற்சலாந்துக்கு அண்மையில் போனபோது எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கும் போனேன். இவர் எனது நீண்டகால நண்பர். அக்குறணையில் நானும் அவரும் தொண்ணூறுகளில் சுற்றித் திரிந்தோம்.பின்னர் அவரின் விதியும் ஊரெல்லாம் அழைத்துச் சென்றது. எனது விதியும் நாடு நாடாக அழைத்துச் சென்றது. நீண்ட காலத்திற்குப் பிறகு இரண்டு பேரின் குடும்பங்களும் சுவிற்சலாந்தில் சந்தித்து மகிழ்ந்து போனோம்.அவருக்கு ஒரு மகள். வயது ஆறு. நண்பரின் மனைவியின் பிரச்சினை என்னவென்றால், ஆறு வயது மகள் சோறு சாப்பிடுகிறாள் இல்லை என்பது. இது ஒரு பெரிய கவலை அவவுக்கு.'ஏனடி சோறு சாப்பிடுகிறாய் இல்லை' என்றால் சோறு சாப்பிட்டால் குண்டாகி விடுவாளாம். இப்பவே முருங்கைக் காய் மாதிரி இருக்கிறாள். சோறினைத் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டாள். காலையில் சலட், பகலுக்கு சலட், இரவுக்கும் சலட். இப்படி சலட்டை மட்டுமே சாப்பிடும் ஒரு மனிசியாக அவள் மாறிவிட்டாள்.அவள் படிக்கும் பாலர் பாடசாலையில் பிள்ளைகள் கூடிப் பேசும்போது யாரோ சுவிஸ் நாட்டுப் பிள்ளை சொல்லிவிட்டது. சோறு சாப்பிட்டால் உடம்பு குண்டாகிவிடும் என்று.அதனை அப்படியே பிடித்துவைத்துக்கொண்டு அவள் அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனையும் சொல்லி சொல்லி சோறு சாப்பிடாமல் பண்ணிவிடுவாளோ இவள் என்று அம்மாவுக்குக் கவலை.சுவிசுக்குப் போனபோது ஜெனிவாவில் ஒரு பிடி சோறு சாப்பிடவேண்டும் என்று நானும் மனைவியும் கடை கடையாக அலைந்தோம். இது ஜெனிவாவைச் சுற்றிப் பார்க்கப்போனபோது நடந்தது.ஒரு மாதிரி ஒரு மொறொக்கோ காரனின் கெபாப் கடையில் சோறு இருந்தது. பெரிய பெரிய அரிசி எங்கிருந்து இறக்கினார்களோ தெரியாது. வாயில் ஆசையோடு வைத்தால் 'சப்' என்று இருந்தது அந்தச் சோறு.எனக்கெல்லாம் மூன்று நேரத்தில் ஒரு நேரம் சோறு உள்ளிறங்க வேண்டும்.ஊர்க் குத்தரிசியை நினைத்தால் இன்னும் நாவில் நீர் ஊறுகிறது. அதன் மணமும் குணமும் தனி. கொழும்பில் இருக்கும்போது சிறி கதிரேசன் றோட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் சாப்பாட்டுக் கடையில் குத்தரிசி சோறும் மீன் குழம்பும் சாப்பிட்டது இன்னும் ருசி அடி நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.இப்பத்தைய பிள்ளைகள் சோறை வெறுக்கிறார்கள். அளவாக சாப்பிட்டு உடம்பை 'சிக்' என்று வைத்திருப்பதைவிட்டு விட்டு 'டயட்' என்ற பெயரில் உடம்பை பாரமில்லாமல் ஆக்குகிறார்கள். அதனால் பல நோய்கள் அண்டும் ஆபத்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி கவலைப்படாமல் உடலை மெலிய வைப்பதில் மட்டுமே ஆர்வம் கொள்கின்றனர்.மெலிந்த இடை, பெரிய மார்பு, ஒல்லியான உடல்வாகு என்ற நிலமைதான் மேற்குலகில் பெண்கள் மத்தியில் உள்ள வாய்ப்பாடு.ஆனால் எமது ஊர்ப் பிள்ளைகள் இந்த மூன்றையும் அடைவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.இந்திய, இலங்கை ஆண்களுக்கு கொஞ்சம் குண்டான, மார்பு பெருத்த பெண்களைத்தான் பிடிக்கிறது. சினிமாவிலும் பாருங்கள். நமீதா, முன்பு குஷ்பு என்றுதான் ரசிக ஆண்கள் இருக்கிறார்கள்.டயட் டயட் என்று உடலை மெலிய வைப்பது மட்டுமில்லமால் வளரும் இளம் பெண்கள் மிகவும் ஆரோக்கியம் பேணவேண்டும். அதோடு சத்தான உணவும் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் அவர்களின் உடலுக்கு பேரிடர் வந்துவிடும்.
உடம்பும் மெலிந்து இருக்கவேண்டும். ஆனால் சுறு சுறுப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே வைத்தியர்களின் ஆலோசனை.இளைய பெண்களே 17 வயதில் உங்கள் எலும்புகள், தோல், உயரம், வளர்ச்சி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வருகிறது. ஆகவே இந்தக் காலங்களில் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.பெண்களைப் பொறுத்தமட்டில் உடலின் கொழுப்புச் சத்து மிகவும் முக்கியம். அதாவது இனப்பெருக்க உறுப்புக்கள் அமைப்பாக வளர்வதற்கு மிகவும் முக்கியம். இளம் பெண்கள்(நான் சொல்வது 13 முதல் 17,18 வயதுவரையானோர்) மெலிதாக இருக்கவேண்டும் என்பதற்காக சரியான சாப்பாடு சாப்பிடாமல் இருக்கிறார்கள். இது சாதாரண விடயமல்ல. சரயான சாப்பாடு சாப்பிடாமல் விட்டால் முதலில் பூப்பெய்தலில் பிரச்சினை ஆரம்பிக்கும் பிறகு மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும். சரியான சத்துணவுகளை சாப்பிடாமல் விடுவதன் காரணமாக இரும்புச் சத்தும் கல்சியமும் உடம்பில் குறைந்து பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.வளரும் பிள்ளைகளினுடைய ஒவ்வொரு நாள் சக்திக்கும் 2500 கலோரி தேவை. இது குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாச்சத்து ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரிசி அல்லது கோதுமை மாப்பண்டங்கள் நல்லது. இதில் 10 முதல் 12 வயதுடைய பிள்ளைகள் நாளொன்றுக்கு 320 கிராம் வரை சாப்பிடவேண்டும். 13 முதல் 15 வரையான பிள்ளைகள் 350 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். அதற்காக தினமும் தராசு வைத்து நிறுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.ஒரு நாள் அளவு பார்த்தால் தினமும் அந்த அளவு சாப்பிடலாம்தானே. பருப்பு, பயறு வகைகள் தினமும் 70 கிராம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் புரதம் கிடைக்கும்.இறைச்சி, மீன் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய துண்டு அதாவது 60 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். மரக்கறிக்காரர் என்றால் பட்டாணிக்கடலை 50 கிராம் சாப்பிடுங்கள்.கட்டாயம் 10 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் நாளொன்றுக்கு ஒரு லீற்றர் பால் குடிக்கவேண்டும். ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ் பால் குடியுங்கள். அது ஒரு லீற்றர் பாலுக்கு சமனாகிவிடும்.ஒவ்வொரு நாளும் உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
பப்பாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம் தினமும் சாப்பிடுங்கள். இது எங்கள் ஊர்களில் கிடைக்கும். அலட்சியப்படுத்தக்கூடாது. புளிப்புள்ள பழங்கள் சாப்பிடலாம். அதில் விற்றமின் சி கிடைக்கும். ஆகவே உடல் மெலிந்து போக சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவேண்டும். அல்லது நோய் வந்து அதனை மாற்ற முடியாமல் அவதிப்படுவீர்கள்.எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண்மணி. கலியாணம் முடிக்கிற வயது. உடல் மெலிந்து இருக்கவேண்டும் என்பதற்காக காலையில் சாப்பிடமாட்டா. சாப்பிட்டாலும் ஒரே ஒரு பாண் துண்டு. பகலுக்கு சூப் மட்டும் குடிப்பா. அதுவும் கடையில் விற்கின்ற உடனடி சூப் பக்கற்றை வாங்கி வந்து தண்ணியில் சூடாக்கி குடிப்பா. இரவு சாப்பிடுவதில்லை.'நல்லா சாப்பிடு உடம்பு போய்விடும்' என்று எங்கள் ஒபிசில் உள்ளவர்கள் ஒரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவ ஒரு சிரிப்போடு போய்விடுவா. வயிறு உள்ளேபோய் அழகாகத்தான் இருந்தா. ஆனால் வந்தது ஒரு நோய். துவண்டு வழுந்துவிட்டா. அந்த நோயிலிருந்து இன்னமும் மீளவே இல்லை.
வயிற்றில் புண் வந்துவிட்டது. கை நடுக்கம், வாந்தி என்ன உணவை இப்பொழுது சாப்பிட்டாலும் உடனடியாக வயிற்றாலை போய்விடும். ஒரு சிறங்கை மருந்து உட்கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டா இப்பொழுது.
அதோடு இன்டர்நெற்றில் போய் தனக்கு என்ன வருத்தம் என்று வெப் சைட்டுக்களில் தேடி அருக்கிறா. அவ ஏற்கனவே மனது பலவீனம் உடையவா. வெப் சைட்டில் அவவினது வருத்தத்திற்குப் பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் இருக்கிறது என்று எழுதியிருக்கிறதைப் பார்த்துவிட்டு இப்பொழுது மனப் பிரமை பிடித்தவ மாதிரி இருக்கிறா.
'இன்டர்நெற்றில் போய் நோய் அறிகுறிகளைத் தேடுவதை நிறுத்து', என நான் ஏசினேன்
வெப் சைட்டில் பொதுவான அறிகுறிகளும் நோயும்தான் போட்டிருப்பார்கள். அது அப்படியே இருக்கும் என்று உடனடியாக நம்புவது மடத்தனம்.எனது நண்பன் ஒருவனுக்கு இரவுக் காய்ச்சல். தொடர்ச்சியாகவே இருந்தது. இதற்கு இங்கே லண்டனில் வைத்து மருந்து எடுத்தான்.
அவனின் மனிசி வெப்சைட்டில் போய் இரவுக் காய்ச்சல் என்ன நோய் என்று தேடினால் அது கான்சருக்கான அறிகுறி என்று இருந்தது. மனிசி குழம்பி, நண்பர் குழம்பி தனக்கு கான்சர் என்று அழுது இப்படி அல்லாடிக்கொண்டிக்கும்பொழுது குடும்ப வைத்தியர் ஏசி அனுப்பியிருக்கிறார். முதலில் வெப் சைட்டில் நோய் அறிகுறியை வைத்துத் தேடுவதை நிற்பாட்டச் சொல்லி.யாருக்குத்தான் செத்துப்போக விருப்பம். கான்சர் என்று பயந்தவன் தற்போது உசாராகி வேலை செய்கிறான்.லண்டனில் ஒரு பெண்மணி தனது மகன் மெலிந்துபோய் இருக்கிறான் என்று வெப் சைட்டில் போய் தேடி மருந்துகள் வாங்கிக் கொடுத்தா. அவன் இப்பொழுது குண்டாகி குண்டாகிக்கொண்டு வருகிறான். ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்பொழுது அந்தப் பெண் தலையிலடித்துக்கொண்டிருக்கிறா. டொக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள்.மகனின் உடல் பருத்துக்கொண்டே வருகிறது. இது அவனுக்குப் பேராபத்தை விளைவிக்கப்போகிறது. உலகம் முழுவதும் இளம் பெண்கள் மெலிந்த தோற்றமுள்ளவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். அதற்கு சரியான போதுமான உணவு, நடைப்பயிற்சி, தேகப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்கிறார்களில்லை.
வெறுமனே இலகுவான முறை என்று சாப்பாட்டை ஒதுக்குகிறார்கள். இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எமது சிலோன் பெண்கள் கலியாணம் முடிக்கும்வரை எலும்பும் தோலுமாக இருப்பார்கள். மெலிந்து துடி இடையோடு இருப்பார்கள். என்ன, மாயமோ மந்திரமோ கலியாணம் முடிந்து ஒரு பிள்ளை பெற்றவுடன் குண்டாகிப் பருத்து விடுவார்கள். ஆனால் வெள்ளைக்காரர் ஐந்து, ஆறு பிள்ளைகளைப் பெற்றாலும் அதே மெலிவாகத்தான் இருக்கிறார்கள்.உடல் என்பது கைக்குள் வைத்து பாதுகாப்பவேண்டிய பொக்கிசம். அதனை சீரழிய விடக்கூடாது.'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது உடலைப் பொறுத்தவரை பொய்யானதல்ல.

சித்திரவதை உண்மையை உரைக்குமா?


சித்திரவதை – என்ற சொல்லைக் கேட்டதுமே பலருக்கு உயிர் உதறிவிடும். ஏனெனில் இலங்கையில் பலர் அதிலும் தமிழா்கள் பலர் சித்திரவதையை அனுபவித்துள்ளனர். இராணுவத்தினர், பொலிசார், இயக்கப் பெடியன்கள், பெட்டைகள், முதலாளிமார் என்று இந்த சித்திரவதை செய்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வீட்டில் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவிமார் இருக்கின்றனர். மனைவியால் சித்திரவதை செய்யப்படும் கணவர்கள் இருக்கின்றனர். அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த தமிழர் ஒருவரை சந்தித்தேன். அவருக்கு நடந்த சித்திரவதைகளை சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு உடம்பு நடுங்கியது. அதிர்ந்தது. எனது மூளை அதனைக் கிரகிக்கும் சக்தி இல்லாததாக இருந்தது. எனக்கு இவ்வாறு நடந்திருக்குமானால் நான் தாங்கி இருப்பேனா என்று மனம் முழுக்க பதறிக்கொண்டே இருந்தேன்.இப்பொழுதும் அவருக்கு நடந்த சித்திரவதையைப்பற்றி நினைக்கும்போது முள்ளந்தண்டில் சில்லிடுகிறது. வெறுமனே ஒருவருக்கு நடந்த ஏதோ ஒன்றாக என்னால் உணர முடியாமல் இருக்கிறது. எனக்கு அல்லது உங்களுக்கு நடந்த வேதனையாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அவருக்கு உடல் ரீதியான துன்பத்தை அதிக பட்சமாகக்கொடுத்து உண்மையைக் கக்குவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பது என்றுதான் சித்திரவதையை மேற்கொள்கின்ற எல்லோரும் சொல்கின்றனர். கையில் கொலை ஆயுதம் இருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒருவகையில் ஆயுதமற்ற அப்பாவிகள்மீது சித்திரவதையைச் செய்து அந்த வலிய, அழுகுரலை, முனகலை ரசித்துச் சிரிக்கின்றனர். ஒரு மனிதன் வலியில் அவர்கள் சந்தோசத்தைக் காணும் அரக்கர் குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்.இராணுவத்தினர், பொலிசார், இயக்கப்பெடியன்கள், விசாரணையாளர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சித்திரவதை செய்பவர்கள் என்று சொல்ல முடியாது. சித்திரவதை செய்வதை விரும்பாதவர்களும் இருக்கின்றனர். லண்டனில் நான் சந்தித்த தமிழர் படித்தவர். அறிவானவர். சமூக ஆர்வம் கொண்டவர். அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கொழும்பில் வைத்து வெள்ளைவானில் வந்த விசாரணைப் பிரிவினரால் தூக்கிச் செல்லப்பட்டவர். அவர் புலிகளின் முகவராக கொழும்பில் இருந்து செயல்படுகிறார் என்பதுதான் விசாரணையாளருக்கு சந்தேகம்.உண்மையில் இப்படித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் அள்ளிக்கொண்டு போகப்பட்டனர். ஆனால் அவர்களைக் கொலை செய்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்துவிட்டார்கள். வெள்ளைவானில் கொண்டுபோன தமிழர்களின் பிரேதங்களைக் காட்டினாலாவது அவர்களின் பெற்றோர், கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், சகோதரர்கள் அந்தியட்டியை முடித்துவிட்டு செத்துப் போய்விட்டார்கள் என்று நிம்மதியாக இருப்பார்கள். இப்பொழுது இருக்கிறார்களோ? இல்லையோ? என்றுகூடத் தெரியாமல் அவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் சித்திரவதை கொடுமையானது.ஒரு மனிதனை துன்புறுத்துவதினூடாக அவர் சார்ந்த குடும்பத்தை, சமூகத்தை வேதனைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் சித்திரவதைக்காரரின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.அடுத்தது மிகவும் மோசமான அல்லது கேவலமான ஒரு செயலாக பெரு வடிவம் எடுத்திருக்கும் சித்திரவதை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்.பெண்களை துன்புறுத்துவதன் மூலமாக ஒரு சமூகத்தை துன்புறுத்தும் அடையாளமாக சித்திரவதை செய்பவர்கள் சாதிக்க நினைப்பது பெரும் கொடூரம். இந்தவகையில் எமது தமிழ் சமூகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி தீராத வலியை இன்னும் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். சிங்கள இராணுவத்தினரின், பொலிசாரின், இந்தியப் படையின் ஆயுதம் தாங்கிய இயக்கப் பெடியன்களின் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு செத்து அழிந்துபோன பெண்களின் ஆவிகளின் அலறல்கள் இன்னும் எமது வடக்குக் கிழக்குப் வெளிகளில் ஏன் இலங்கை முழுவதிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை உணர முடியாதவர்கள் கடும் மனம் படைத்தவர்கள்.பாலியல் ரீதியான சித்திரவதை மூலம் சமூகத்தில் பெண்களை ஒதுக்கும் ஒரு நடவடிக்கையை சித்திரவதையாளர்கள் மேற்கொள்கின்றனர். 'அவவோ, அவ இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவவாம்' என்ற இழிபழியுடன் முதுமை வரைக்கும் ஏன் சாகும்வரைக்கும் பெண் அந்த சமூகத்தில் வாழவேண்டிய அவலம்தான் இலங்கை முழுவதும் காணக்கிடைக்கிறது.எங்களது தமிழ்க் கிராமங்களில் இவ்வாறான அழி நிலையோடு, கண்ணீரோடு காலத்தைக் கழிக்கும் பெண்கள் உண்மையில் பாவமானவர்கள். உலகம் முழுவதும் இராணுவம் அடர்ந்தோதும் இடங்களில் பெண்கள் ரீதியான சித்திரவதைகள் இந்த நிமிடம்வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைதுசெய்யப்படும் பெண்கள் மீதான, ஆண்கள்மீதான சித்திரவதைகள் அமெரிக்க 'குவாண்டனோமோ' சிறை சித்திரவதையை ஒத்தது. இலங்கை சித்திரவதைக் கூடங்கள் என்றே சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை சோதனை செய்த வைத்தியர்கள் தங்கள் கைப்பட அறிக்கைகள் எழுதியிருக்கின்றனர். மண்டையின் பின்பகுதியில் குண்டூசி போன்ற சிறிய ஆணிகளால் அடித்து மூளையின் சவ்வுகளை சிதைத்தல், மலத்துவாரத்தில் சிறிய பைப்புக்குள் வைத்து முட்கம்பியை உள்ளேவிட்டு பைப்பை இழுத்துவிட்டு முட்கம்பியை தனியே குத வாசல் கிழிந்து வரும்படி இழுத்தல், ஆண் உறுப்பில் படிப்படியாக கூடுதல் மின்சாரம் பாய்ச்சுதல், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுவிட்டு பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பை முகத்தில் கட்டி குதிக்காலில் அடித்தல், பெண் உறுப்பில் காரமான மிளகாய் தூளை அடைத்தல், பெண்ணின் முலைக்காம்பில் மின்சார வயர்களைப் பொருத்துதல் என்று நீழுகின்ற சித்திரவதைகளில் மிகக் கடுமையானது மின்சார அடுப்பில் உயிரோடு ஒருவரைப் போட்டு கொல்லுவதை அடுத்தவர் பார்க்க வைத்தல் என்று சித்திரவதைகளின் கொடூரத்தைக் கண்ணால் கண்டு, தான் அனுபவித்தவற்றை எனக்கு அவர் சொன்னபொழுது அவர் உண்மையில் அழவில்லை. நான் தான் நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். அவர் அனுபவித்தவர். நான் கேட்பவன். இந்த சித்திரவதைகளின் கொடூரம்பற்றி அவர் எத்தனைபேரிடம் விரிவாக சொல்லி இருப்பார்.சித்திரவதை செய்பவரும் ஒரு மனிதர்தானே. அவருக்கு எப்படி சித்திரவதை செய்யும்போது மனிதர்கள் கதறும் ஒலியைக் கேட்டுவிட்டு இரவில் தூக்கம் வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
சித்திரவதை செய்யும் கூடத்தின் பொறுப்பாளர் எப்படி வீட்டில்போய் தனது குழந்தைகளுடன், மனைவியுடன் கொஞ்சி மகிழ்கிறார். எப்படி அவர் மனைவியுடன் சந்தோசமாக உடலுறவில் ஈடுபடுகிறார்? என்ற கேள்விகளை என்னால் தவிர்க்க முடியாமல் உள்ளது. உண்மையில் அவர் மனம் மரத்துப்போன ஒருவராக இருக்கிறாரா?

உலகின் எல்லா நாடுகளிலும் சித்திரவதைக்கென்றே இலங்கையில் இருப்பது போன்ற அதிகாரிகள் இருக்கின்றனர். அகதி கேஸ் வேக்கரான ஒரு நண்பரிடம் திருகோணமலையில் இருந்து ஒரு பெண் அகதியாக தஞ்சம் கோருகின்ற வழக்கோடு இங்கு லண்டன் வந்திருந்தார். அவர் தனது உடலை கேஸ் வேக்கருக்கு காண்பித்தார். பொலிசார் அவரை கைதுசெய்து விசாரணையின்போது கொழும்பில்வைத்து அவளின் உடல் முழுவதும் சிகரட்டால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.தொடை, மார்பகம், வயிறு என்று எல்லா பகுதிகளிலும் ஒரு இடம் விடாமல் சிகரட்டால் சுட்ட தழும்புகள் இருந்திருக்கின்றன அவரது உடலில். அதைவளின் முகத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது இவ்வளவு சித்திரவதை தழும்புகள் அவள் உடலில் இருக்கின்றன என்று. லண்டனில் நான் சந்தித்த (தொடக்கத்தில் குறிப்பிட்ட) அவர் இப்போது எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். அவரின் 34 வயது வாழ்க்கை சித்திரவதையினால் சீரழிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான். மனைவி இருக்கிறார். திருமணமாகி 4 வருடம். எதிர்காலம் சந்தோசமாக இருக்கவேண்டிய காலத்தில் ஆணுறுப்பில் அவர்கள் செய்த சித்திரவதையினால் அவருக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கான வலிமை இல்லாமல் போய்விட்டது.
எண்ணிப் பாருங்கள் அந்த இளம் குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது?
இவ்வளவு மிகக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த அவர் மற்றும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட இளம்பெண் ஆகியோர் புலிகள் இல்லை என்றும் பயங்கரவாதி இல்லை என்றும் பின்னர் சித்திரவதை செய்தவர்களால் விடுவிக்கப்பட்டனர்.கொடூரம் எப்படி நடக்கிறது பாருங்கள். உடலை சிதறி குதறிவிட்டு பிறகு 'சொறி, நீங்கள் குற்றவாளி இல்லை' என்று தைரியமாக எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லும் மனித அரக்கர்களை என்ன என்று சொல்வது? இதில் ஒரு மனிதன் மீதான தவறு எத்தனை பேரின் வாழ்வை பாதித்து சீர்குலைக்கிறது. இனி அவர் மீண்டு வருவதற்கு எத்தனை லட்சம் ரூபாவை செலவழிக்க வேண்டும்? அதனை யார் கொடுப்பார்கள்? சொத்துக்கள் உள்ளவர்கள் இந்தியாவில் போய், வெளிநாடு போய் நோயை குணப்படுத்த முனைகின்றனர். பணம் இல்லாத ஏழை எங்குபோய் சித்திரவதையினால் ஏற்பட்ட நோய்க்கு மருந்து தேடுவான்? எந்தவிதமான மாற்றீடும் இலங்கையில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதில்லை. சித்திரவதை முடிந்தவுடன் அவர்மீது குற்றம் இல்லை என்றால் அவரை தூக்கி ஒரு புதருக்குள் வீசிவிட்டு போய்விடும் நடைமுறைதான் இலங்கையில் இருக்கிறது. சித்திரவதைக்கு உள்ளான இன்னொரு தமிழரைச் சந்தித்தேன். அவருக்கு இலங்கையிலுள்ள சித்திரவதைக்கூடமொன்றில் வைத்து அடித்து முழங்காலை சிதைத்துவிட்டனர். நல்ல திடகாத்திரமாக இருந்தவர் ஊன்றுகோலுடன் வந்தபோது மனைவி அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
இப்பொழுது லண்டன் வந்து அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்தவுடன் மனைவி கொழும்பிலிருந்து உறவு கொண்டாடப் பார்க்கிறா. அவவுக்கும் லண்டன் வரவேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாம். இவரைவிட்டுப் பிரிந்துபோய் வேறொருவருடன் லிவ்-இன்-ரு-கெதர் வாழ்க்கை நடாத்தி வந்தவா இப்பொழுது லண்டனுக்கு வரப்போகிறேன் என்று துரத்திவிட்ட கணவனை நச்சரிக்கிறாவாம்.
சீரழிந்துபோன குடும்ப வாழ்வு, சீரழிந்துபோன சமூக வாழ்வு என்று சித்திரவதைக்கு உட்பட்டவர்கள் படுகின்ற பின் அவஸ்தை சாதாரணமானது அல்ல.
வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு அல்லலுற்ற வாழ்வாக எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வு அலைக்கழிந்துபோய்க் கிடக்கிறது இலங்கையில். யுத்தம் முடிந்துவிட்டது இலங்கையில், ஆனால் சித்திரவதைக் கூடங்கள் இன்னமும் மூடப்படவில்லை. சித்திரவதை செய்யும் அதிகாரிகள் இன்னமும் அந்த வேலையினைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வேதனை, துன்பம், துயரம், வெறுமை மட்டுமே சித்திரவதையினை எதிர்நோக்கிய மனிதரின் எஞ்சிய வாழ்க்கையாக இருக்கிறது. மனிதரின் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான தேசமாக இலங்கை எப்போது மிளிரப் போகிறது. உண்மையில் ஏக்கத்தோடும் மன வலிமையோடும் காத்திருக்கிறோம் சித்திரவதை இல்லாத ஒரு இலங்கையைக் காணுவதற்கு.

Monday, 19 July 2010

பயம் எனும் கொடிய நோய்


வாழ்வில் பயப்படாத நாளே கிடையாது நமக்கு. பயம் எங்களை தினமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பயத்தினூடாகவே நாம் வளர்ந்திருக்கிறோம். அச்சம் கொள்ளுதல் என்பது எமது உடலோடு மனதோடு கலந்துவிட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது.எல்லோருக்கும் எங்களைப் பயங்கொள்ள வைத்தே வாழப் பழக்கி விட்டிருக்கின்றனர். எனது பயம் அம்மாவின் பிரம்பில் இருந்து ஆரம்பிக்கிறது.குழப்படி செய்தால் அம்மா அடிப்பா என்கின்ற பயம் ஒரு கொடும் பயமாக தொடர்ந்துகொண்டே வந்தது. பயத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அம்மா என்மீது தன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தா.வாத்திமாரின் பிரம்புகளுக்கு இன்னமும் அச்சம் ஊட்டும் தன்மை இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதிலும் மிகவும் அச்சமூட்டுபவராக தில்லையம்பலம் வாத்தியாரும் அவருடைய பிரம்பும் இருந்துகொண்டே இருந்தது. பயம் மனித உணர்ச்சிகளை மேவி நிற்கக்கூடிய ஒன்று. பயத்தின் ஊடாக எங்கள் எதிரிகள் சாதித்துவிடுபவை ஏராளம்.வலிமையில்லாதவர்களை வலிமையுள்ளவர்கள் எப்பொழுதும் பயம் காட்டியே வைத்திருக்கிறார்கள். ஊரில் உள்ள சண்டியர்கள், கப்பம் வாங்குபவர்கள், தாதாக்கள் எல்லோரும் இந்தப் பயத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளனர்.இயக்கப் பொடியன்களும் ஏ.கே.47 துப்பாக்கிகளை தோளில் போட்டுக்கொண்டு சைக்கிள்களில் சுற்றி வருவார்கள். சிலர் துப்பாக்கியை வெளியில் தெரியக்கூடியவாறும் வைத்திருந்தார்கள். அவற்றை கண்டும் மக்கள் பயப்பட்டனர்.தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களைக் கண்டு பேரச்சம்கொள்ளும் ஒரு நிலமை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. உண்மையில் நான் இந்த நிலமையை 'யாழ்தேவி' புகையிரதத்தில்தான் கண்டிருக்கிறேன்.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரைக்கும் நன்றாக தமிழில் பாட்டுப்பாடி சத்தமாகப் பேசிக்கொண்டு வருகின்ற எத்தனையோ பேர் மதவாச்சி வந்தவுடன் பேசாமல் இருப்பார்கள்.சிங்களவர்களின் ஊர் வந்துவிட்டது என்ற பயம்;.பயத்தில் கருகி உறைந்துபோகின்ற எத்தனையோ மனிதர்களைக் கண்டிருக்கிறேன்.எமது கிராமங்களை சிங்கள இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்து கொண்டுபோகும்போது பயத்தால் உயிர் பதறிப்போகும்.
அப்பாவி மக்களைக் கைதுசெய்து கொண்டுபோய் 'தலையாட்டிகள்' என்ற காட்டிக் கொடுக்கும் தமிழர்களுக்கு முன்னால் நிறுத்தும்பொழுது பயம் ஒன்று வந்துபோகுமே அது சொல்லில் எழுதிவிட முடியாத கொடுமை.தலையாட்டிகளின் முன் நின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு தலையசைவில் அந்த மனிதனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். என்ன பெரிய கொடுமை.
அச்சத்தால் இரத்தம் உறையுமே. அது அங்கு நடக்கும்.இன்னும் ஊர்களில் நிம்மதியாக வாழ முடியாத பயத்தினால்தான் எத்தனையோபேர் வெளிநாடுகளுக்கு ஓடி வருகின்றனர். கொழும்பில் இருந்தால் வெள்ளை வான் தூக்கிவிடுமோ என்ற பயத்தில் லண்டன்வந்த பலரை எனக்குத் தெரியும்.யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது, மட்டக்களப்பில் வாழ முடியாது, கொழும்பில் வாழ முடியாது உயிர் அச்சம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை பத்து லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி கனடா, லண்டன், அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து, நோர்வே, ஜேர்மனி, ஹொலண்ட், பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, டென்மார்க், சுவிட்சலாந்து என்று திக்கு திக்காகப் பிரிந்துபோய்க் கிடக்கிறார்கள். எல்லோரும் சுகபோகமாக வாழவில்லை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கையைவிட்டு ஓடியர்கள்தான் இதில் 99 வீதமானோர். ஒரு வீதம்தான் படிப்புக்காக வந்தவர்கள்.
இலங்கையில் வாழ முடியாத உயிர் பயம் காரணமாக ஒரு தலைமுறைத் தமிழர்களை விரட்டிவிட்டிருக்கிறது யுத்தமும் சிங்கள தேசமும்.மட்டக்களப்பில் ஒரு அரசியல்வாதி மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அச்சப் பேச்சும் இன்னும் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.பொதுமக்களைப் பார்த்து சொல்கிறார் 'அரசாங்கத்துக்கு வாக்களித்தவர் யார், வாக்களிக்காதவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவாராம்'. வாக்குச் சீட்டில் என்ன புகைப்படமா ஒட்டுகிறார்கள்? இது அச்சப்படுத்துகின்ற ஒரு அடாவடித்தனம் இல்லாமல் வேறென்ன?
உண்மையில் உயிர் அச்சம் என்ன என்பதனை நான் உயர்ந்தது 'சுடரொளி' குண்டுவீச்சுக்கு பிறகுதான்.'சுடரொளி' இற்கு ஒரு கட்டுரையை கொடுப்பதற்காக சென்றபொழுது யாரோ இரு இளைஞர்கள் 2 கைக்குண்டை வீசவும் நான் கேற்றடிக்குப் போகவும் நேரம் சரியாக இருந்தது.
எனக்குப் பக்கத்தில் கிரனைட் உருண்டுகொண்டு வந்தது. ஒரு 10 செக்கன்தான் ஓடினேன். அது வெடித்தது. காலில் சிறு காயம். எனக்குப் பக்கத்தில் நின்ற செக்கியூரிட்டி ஜோர்ஜ் ஐயா நெஞ்சு வெடித்து செத்துப்போனார்.அதற்குப் பிறகு பயம் காரணமாக இரவில் எனக்குத் தூக்கமே வருவதில்லை. எங்களது வீட்டுக்கு தகர கேட் போட்டிருந்தோம். அது சும்மா தட்டுப்பட்டால்கூட எழுந்து உட்கார்ந்துவிடுவேன் பயம்.இரவு என்பது எனக்கு அச்சத்திற்குரியதாகவே இருந்தது. சிறிய சத்தங்களும் எனக்குப் பயம்கொள்ளும்படியே இருந்தது. வத்தளையில் இருக்கும்வரை எனக்கு இரவு சந்தோசமானதாக இருந்ததில்லை. லண்டன் வந்த பின்னர்தான் பயமில்லாத நித்திரை வந்தது எனக்கு.இப்படி எத்தனைபேர் இன்னும் உயிர் பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நினைக்கும்போது என்னால் உணர முடிகின்ற பயம் இது.'பயப்படாதீங்கோ. ஒன்றும் நடக்காது'. என்ற ஆறுதல் எல்லாம் எடுபடாது. பயம் என்பது மனதை அறுக்கின்ற ஒரு விடயம். அதனைவிட்டு மீளவேண்டுமானால், ஒரு மனிதன் தனது மன அமைதியின் ஊடாகவே முடியும். ஆனால் தமிழனாக பிறந்துவிட்டு சிங்களவனோடு இந்த அளவுக்கு முரண்பாடுகொண்டுவிட்டு அதனை சுமூகமாகத் தீர்க்காதவரை அச்சம்வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சர்வாதிகாரம் இருக்கும்வரை தமிழர்கள் உயிர்பயம் இல்லாமல் வாழ முடியும் என நான் நினைக்கவில்லை.லண்டனில் நான் சந்தித்த அகதி ஒருவர் அழுதுகொண்டே இருந்தார். 'ஏன்' என்று நான் கேட்டேன்.'பயமா இருக்கு', என்று கூறினார். 'என்னத்துக்கு' என்றேன். 'பொலிஸ் சைரன், அம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலிக்கு', என்றார்.பாருங்கள் அவர் இந்த உலகத்தில் வாழும்வரை பயந்துகொண்டும் அழுதுகொண்டும் இருப்பார். ஏனெனில் இலங்கையில் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டவர்.
லண்டன் வந்தபிறகும் பொலிஸ் காருக்கும் அம்புலன்ஸ் வண்டியின் சத்தத்திற்கும் அச்சப்படுகிறார்.லண்டனில் பொலிஸ் காரும் அம்புலன்ஸ் வண்டியும் ஒரு நாளுக்கு பல தடவைகள் றோட்டால் போய்க்கொண்டிருக்கும். ஆகவே அந்த தமிழரின் நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.அதே உயிர் பயத்தோடு இங்கு வந்த பலர் மனநோய் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். பயத்தின் அடுத்த கட்டம் மனநோய் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடும்.இங்கு டொக்ரர் சசிகாந்த் உடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது யுத்தம் பலரை மனநோயாளியாக்கியிருக்கிறது என்று சொன்னார்.தங்கள் உயிர்களை துப்பாக்கிதாரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பட்டபாடுதான் இந்த மனநோய்க்குக் காரணம் என்றார் அவர்.அத்தோடு ஒரு உதாரணமும் சொன்னார் அவர். நாயொன்று ஒரு மனிதனை கடித்துக் குதறுவதற்காகத் துரத்துகிறது. அப்பொழுது அச்சத்தின் காரணமாக அவன் ஓடுகிறார்.
அது பயம். அந்த நேரம் பயம் காரணமாக மூளையின் தூண்டுதல் காரணமாக சுரக்கின்ற சுரப்புக்கள், மனப் பதட்டம் என்பன நாய் மனிதனைவிட்டுப் போன பிறகு சாதாரண நிலமைக்கு வந்துவிடும். ஆனால் அதே மனப்பதட்டம், சுரப்பிகள் ஒவ்வொரு நாளும் வேலை செய்தால் மனதின் நிலமை என்னவாகும். மனம் சிதைந்துபோகும்.
இப்படியான மனிதர்கள் எத்தனையோபேர் நம்மத்தியில் இருக்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகிவிடுகின்றனர்.இங்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கான மதிப்பு இருக்கிறது. ஒருவரை அச்சப்படுத்துவது கிறிமினல் குற்றமாகும். அதிலும் உயிர் தொடர்பான அச்சம் விடுவது பாரதூரமான குற்றமாகும்.இலங்கையில் உயிர் எடுக்கவென்றே மக்கள் திரியும்போது இந்த உயிர் பாதுகாப்பு உண்மையில் தமக்கான பாதுகாப்பாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.ஆனால் இங்கும் சண்டியர்கள் ஆயுதங்கள், வாள்கள், பொல்லுகளுடன் திரிந்து தமிழர்களை அச்சப்படுத்துபவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.இப்பொழுது பொலிசாரின் கெடுபிடி காரணமாக அவர்கள் கொஞ்சம் அடங்கிப்போய் இருக்கிறார்கள்.
ஊரில் துப்பாக்கிகள், வாள்களோடு பழகியவர்கள் லண்டன் வந்தும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.பொலிசாரின் ஒரு ஒப்பறேசனில் தமிழர்களிடம் பிடிபட்ட ஆயுதங்கள் என லண்டன் தொலைக்காட்சி செய்திகளில் காண்பித்தார்கள்.என்ன நினைக்கிறார்கள் தமிழ் சண்டியர்கள். ஊரில்போல லண்டனிலும் தங்களிடம் பயந்து வாழ வேண்டும். கப்பம் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இங்கு சண்டியன்களாக 18 வயது பொடியன்கள் இருப்பதுதான் கொடுமையான விடயம்.அச்சம் எப்பொழுதும் எம்மை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விடயம்தான்.தைரியம் மட்டுமே அச்சத்தை விரட்டுகின்ற ஒரே ஒரு வழி.
ஆனால் அந்த தைரியத்தையும் மீறி அச்சமூட்டுகின்ற எத்தனை விடயங்கள் மனிதனை துரத்துகின்றன.எத்தனைபேர் உயிர் அச்சத்தினால் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்துபோய் பரதேசிகளாக மாறிவிட்டனர். உண்மையில் பயம் என்பது எம்மை ஒவ்வொரு நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.அதனை வெல்வதற்கான வழிகளைத்தான் ஞானிகள் சொல்கிறார்கள்.இந்த உலக வாழ்வில் பணம், புகழ், பூமி இவற்றை தக்கவைத்துக் கொள்ள மற்றவரை அச்சப்படுத்திக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.தன்னிடம் உள்ளவற்றைப் பறித்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக மற்றவனை இல்லாமலாக்கிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது இலங்கையானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, விதி ஒன்றுதான்.

Saturday, 17 July 2010

கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?


இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை.
கவிஞரை நான் இறுதியாக சமாதான நேரத்தில் 2006 இல் பொற்பதியில் சந்தித்தேன். நீண்ட நேரமாக என்னோடு கதைத்துக்கொண்டு இருந்தார்.
அவரின் பேச்சில் தமிழர் சிங்களவர் மத்தியில் வேலை செய்யவேண்டிய புரிந்துணர்வு பற்றியதாகவே அநேக விடயங்கள் இருந்தன. தனக்கு இருக்கும் சீனி வியாதிபற்றியும் பேசினார். என்னோடு மிகவும் அன்பாகவே இருந்தார். தொடர்ந்து நாங்கள் கதைக்கவேண்டும் என்றும் சொன்னார். என்னோடு பேசிய அன்று புலிகள் தொடர்பாக எதுவுமே பேசவில்லை. 'வெளிச்சம்' சஞ்சிகைக்கு கவிதை அனுப்பச் சொன்னார். இரண்டு கவிதைகள் அனுப்பினேன். இரண்டும் பிரசுரமாகியிருந்தன.
யுத்தத்தின் இறுதிக் காலத்தில் வெளிச்சம் 100 வது இதழில் பிரசுரிப்பதற்கு ஒரு சிறுகதை தரும்படி இங்கே லண்டனில் உள்ள நண்பர் ஒருவரூடாக கேட்டிருந்தார். நான் 'புளியங்குளம்' கதையைக் கொடுத்திருந்தேன். அது பிரசுரமாகியிருந்தது. ஆனால் வெளிச்சம் 100வது சஞ்சிகை யுத்தத்தில் அகப்பட்டு அது வன்னியைவிட்டு வெளியில் வரவில்லை என்பதுதான் சோகம். புதுவையின் 'பூவரசம் வேலிகளும் புலுனிக் குஞ்சுகளும்' கவிதைத் தொகுப்பைப் புரட்டும்போது மனது பாரமாகிக் கிடக்கிறது.
இந்த யுத்தத்தில் ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை இழந்துவிட்டோமோ என்ற கவலை மனதை அழுத்துகிறது. புதுக்கவிதைகள் போர்க்காலக் கவிதைகள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. புதுவையின் கவிதைகள் போராட்டத்தை முன் உந்தித் தள்ளியது. அது மக்கள் மத்தியில் பெரும் பெரும் தாக்கத்தை மன உத்வேகத்தை அளித்தது.
ஆனால் அந்த நல்ல தமிழ்க் கவிஞன் எங்கே இருக்கிறான், உயிருடனோ அல்லது இறந்துவிட்டானோ என்று தெரியாமல் இருப்பதுதான் பெரும் கவலை. புலிகளின் பெரும் புள்ளிகளே அரசின் அரவணைப்பில் இருக்கும்போது ஒரு கவிஞனை காணாமல் ஆக்கியிருப்பது பெரும் கொடுமைதான்.

'இத்தனைக்குப் பின்னும்
கொழும்பும் எமதென்றே
குறிப்பெழுதி
இடையிருந்த எல்லைதகர்த்து
வந்தோம் உங்கள் வாசல்
ஆணியறைந்த காலத்துயர்
மீண்டும் கையிணையும் மகிழ்வில்
அந்தப் பெரும்தெரு ஏறிவந்தோம்
துருப்பிடித்திருந்த கபாடம் திறந்து
தூசி படிந்த தெரு கழுவி
புன்னகை சுமந்தோராய்
ஊறிய நினைவில் வந்தோம் தலைவாசல்
சகோதர உறவுகளுடன்
முகிழ்த்து மலர்வோம் என
நீங்களனுப்பிய அழைப்பிருந்தது நெஞ்சில்
அச்சமில்லையெனும் நம்பிக்கையும்
உலகு உறவுகளால் நிரம்பியதென்ற உணர்வும்
அந்த வாசகத்தின் மேலே ஒளிர்ந்தது.
வரும் வழியெல்லாம் வாகனம் நிறுத்தி
வெள்ளையப்பம், கிரிபத், மாசிச்சம்பல்,
கித்துள்பாணி என
பல காலமுண்ணாப் பலகாரமுண்டோம்.
அனுராதபுரத்தில்
மேலிருந்திறங்கித் தகுமெனச் சொல்லி
அதுவே தருணமென்றுரைத்து
எல்லாள மகாராசனும்
கெமுனு இளவரசனும்
ஒன்றாக நின்று வாழ்த்தியனுப்பினர் வழி
இருளழித்து ஒளி தூவி வந்தன எம் தேர்கள்
பாதி வழி வந்து எதிர்கொண்டன
உம் பல்லக்குகள்,........

என்று தொடரும் புதுவையின் இந்தக் கவிதையை 2003 ஆம் ஆண்டிலி இருந்து எனது பையில் வைத்துக்கொண்டு இன்றுவரை திரிந்துகொண்டிருக்கிறேன் நான். இதுவரை எவரும் 'இத்தனைக்குப் பின்னும்' என்ற புதுவையின் கவிதையைப் போல எழுதவே இல்லை. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி 'ஹிரு' அமைப்பினர் தமிழ்க் கலைக்கூடல் என்ற நிகழ்வை கொழும்பில் புதிய நகரசபை மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தனர். வன்னியிலிருந்து கலைஞர்கள், கவிஞர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்வை 'ஹெல உறுமய' உறுப்பினர்கள் குழப்ப முயன்றனர், முடியவில்லை. இந்த ஒன்றுகூடல் தொடர்பான புதுவையின் பதிவு இந்தக் கவிதை மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்த கொடூர யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் முடிவடைந்த பின்னரும் திரும்பும் இடமெல்லாம் வெறுமையாகவே எல்லாம் இருக்கின்றன.

யுத்தத்தின்போது கொல்லப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட சித்திரவதைக்குட்பட்ட ஆயுதம் இல்லாத அப்பாவிகள்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற உணர்வு மட்டுமே சனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்புச் செயலர் போன்றோருக்கு இருக்கிறது. இலங்கை மிகவும் அபாயகரமானதோர் நிலமைக்கும் சர்வாதிகாரத்துள்ளும் போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. தொடர்மாடி வீடுகள், பிச்சைக்காரர்கள், நகர அபிவிருத்தி என எல்லாமே பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்சவுக்கு கீழே போவது எதிர்காலத்தில் ஒரு தனிமனித சர்வாதிகார இராணுவ பின்புலத்திற்குள் இலங்கை முழுமையாக தள்ளப்படப்போகிறதோ என்ற ஒரு பயக்கெடுதி வருகிறது.
ஒவ்வொருவரையும் ஒரு மறைமுகமான இராணுவத்தின் கண் பின் தொடரப் போகிறதா?

இடி அமீன் அப்படித்தான் செய்தார். உகண்டாவை முழு ஊழலுக்கும் அவருடன் சேர்ந்த இராணுவத்தினர் அனுபவித்து மகிழவும் ஆக்கினார். ஒரு கூட்டத்திற்குப் போனால் அங்கு அவரின் கண்ணில்படும் பெரும் பணக்காரர்களை அடுத்தநாள் ஏழையாக்கிவிடுவார். அவரின் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் அழகான பெண்கள் இருந்தால் அன்று இரவு இடி அமீன் படுக்கை அறையில் அந்தப் பெண் இருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அவருடன் இருந்த இராணுவத்தினர் முழு ஒத்தாசை வழங்கினர். அதனால் இராணுவத்தினரும் சுகபோகமாக வாழ்ந்தனர். பிறகு நாடே நலிந்து நாசமாகிப் போய்விட்டது.

நாட்டின் அபிவிருத்தி என்று நாட்டு மக்கள் சந்தோசப்படும்படி அமையவேண்டும். மக்கள் பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கும்படி ஆகக்கூடாது.

வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் மக்கள் சிதறிப்போய் இருக்கின்றனர். வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. சபையை எதிர்க்கும் சக்தியில் ஒரு கொஞ்சத்தையேனும் வன்னி மக்களின் பக்கம் திருப்புவாரேயானால் அங்கு வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கலாம். வன்னிப் பெருநிலம் காடுபத்திப்போய் கிடக்கிறது. மக்கள் இல்லா மயான வெளியாக இருக்கும் பூமிபற்றி யோசிக்கும்போது 1996 ஆம் ஆண்டு வெளிச்சம் சஞ்சிகையில் புதுவை எழுதிய கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.

'நிலவு நேராக தலைக்குமேல் நிற்க
ஓ வென்று இரைகிறது காற்று
தூரத்தே
இரணைமடுக்காடு பனியில் நனைகிறது
பழைய முருகண்டித் தனியன் யானையாய்
அருகில் ஒருவரின்றி நான்
சுற்றமிழந்து எத்தனை நாளாச்சு?
அயல் வீட்டில் குடியிருந்த அவர்களை
எங்கு தேடுவேன்?
சிதறி ஓடியது தெரியும்
பிறகு என்னானார்கள் அவர்கள்?
வாய்க்கால் நீராய்ப் பெருகி வழிந்து
வந்தடைந்தது ஓரிடமல்லவே
திக்கொன்றாய் சிலும்பிப்போனோம்.
மீண்டும் ஊர் புகும் நாளில்
எவரெவர் கூடி உள்நுழைவோமோ?
உயிரோடிணைந்த உறவுகளே!
என் அயலிருந்தோரே!
எங்கே போய்விட்டீர்?
காண ஆசை மிகுதி ஓடி வருக!
இரணைமடுக்காடு அதிரக் கத்தவேண்டும்போல
உள்ளே ஒரு வேட்கை
இன்று பங்குனித் திங்கள்
பொங்கலுக்கென்றே பிறக்கும் நாள்.
உச்சி வெயில் உருக்கிலும்
தார் உருகும் தெருவில் நடப்போம்
காலிற் செருப்பும் இருக்காது.
காவடியும் பாற்செம்பும் சுமந்து
ஊரின் ஓரிருவர் நடப்பர்
உறவெல்லாம் முன்னும் பின்னும் அணிவகுத்து
கோயில் புக மணிச்சத்தம் வரவேற்கும்.
இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்'

வன்னி இடப்பெயர்வு தொடர்பான மிக துல்லியமான புதுவையின் பதிவு இது. பங்குனி மாதம் வன்னி எங்கும் பெரும் குதூகலமாகத்தான் இருக்கும். எங்கள் வாழ்வில் அனுபவித்த நாட்கள் இன்னும் மனதுக்குள் அப்படியே கிடக்கிறது.
முள்ளியவளைக்குப் போனால் எங்களுக்கெல்லாம் மனதுக்கு சந்தோசம் மட்டுமே கிடைக்கும்.
பங்குனி மாதத்தில் எங்கள் வன்னிக் காற்றில்கூட எத்தனை எத்தனை வாசனை. இலுப்பைப்பூ பூக்கும் அற்புதமான காலம். காற்று இலுப்பைப்பூ வாசனையை அள்ளிக்கொண்டு வந்து எங்கள் நாசியில் கொட்டும். இலுப்பைப்பூ மணத்தை உணர்ந்தவர்கள் வன்னி மக்கள். எத்தனை பேருக்கு அதன் வாசனை இன்னும் நாசிக்குள் கிடக்கும்.
பங்குனி மாதத்தில்தான் பனம்பழம் பழுத்து சொரியும். காட்டு ஈச்சம்பழம் பழுத்துக்கிடக்கும். நாவல்பழம், வீரப்பழம், கூழாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் என்று எங்கள் முள்ளியவளை முழுக்க காற்றில் வாசனை வாசனையாகவே இருக்கும். மாம்பழம் பழுத்துச் சொரியும் காலமிது. எங்கள் பாதைகளில் கால்கள் மணலில் புதைய நடந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பங்குனித் திங்கள் காலத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றால் முல்லைத்தீவு, வற்றாப்பளை, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருக்கு பகுதி மக்கள்தான். வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் ஒவ்வொரு பங்குனித் திங்களிலும் களைகட்டும். அப்படியே பங்குனி முடிந்தால் வைகாசிப் பொங்கல் முழுக்க எங்களுக்குக் கொண்டாட்டம்தான். எல்லாம் அழிந்துபோய்விட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதுதான் கொடுமை.

தெற்கைப்போல வடக்கையும் கிழக்கையும் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம். நாங்களும் மனிதர்கள்தானே என்றுதான் சொல்கிறோம்.புதுவை சொன்னதுபோல,

'..இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்'

இரணைமடுக் குளக்கரையில் தனியே புதுவை மட்டும்தான் குந்தியிருந்து உறவுகளைத் தேடுவதுபோல் தெரிகிறது. ஆனால் புதுவையை நாங்கள் தேடுகிறோம். கவிஞனே நீ எங்கு இருக்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா அல்லது இறந்துவிட்டாயா? அல்லது எங்காவது சிறையிலா? அல்லது தனிப்பட்ட முகாமிலா? தெரியவில்லை. ஒரு கவிஞனாக இருந்து புதுவை சாதித்தது அளப்பரியது. புதுவை இயமனுக்கு எழுதிய கவிதை இது.

'காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் 'அப்பு' எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.'


உண்மையில் புதுவையின் உயிர் மீதான துணிச்சல் இப்படி இருந்திருக்கிறது. இறப்பது என்பது வேறு. காணாமல் போவதென்பது பெருங்கொடுமை. புதுவை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் சொல்லவேண்டும். 'விரைவில் முடியாதென் கணக்கு' என்று புதுவை சொன்னது மட்டும் தான் எங்களுக்குத் தென்பாக இருக்கிறது.

ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை அவ்வளவு சீக்கிரம் இழப்பதற்கு எனது மனது தயாராகுதில்லை. ஏனெனில் வன்னியில் நாங்கள் இழந்தது கோடி.

Wednesday, 7 July 2010

பட்டினி எனும் பெருங்கொடுமை


'தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் கோபம் இலேசதானதல்ல. சாப்பாடு இல்லாமல் உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் பசியினால் இறந்துபோகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு. ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5 கோடி பேர் தினமும் பசியினால் துடி துடித்துக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பது பெரும் துன்பம்தான். பசிக்காகவே மனிதன் உழைத்து உழைத்து சேமிக்கிறான். பசி மட்டும் இல்லாவிட்டால் மனிதனின் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கும்.
ஒரு நேர உணவு இல்லாவிட்டால் எப்படி துடி துடித்துப் போகிறோம். பசியும் தாகமும் எங்களை பின் தொடருகின்றவை. அந்த இரண்டும் பூர்த்திசெய்யப்படாத எத்தனைபேர் எங்களின் காலடிக்குள் கிடக்கிறார்கள்.
பசியையும் தாகத்தையும் எங்களுக்கு பூர்த்தி செய்யக் கிடைத்திருப்பதே பெரும் கொடையாகும். மற்றவர்களின் பசியை தீர்க்க நாங்கள் என்ன செய்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகத்தில் 15 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் செத்துப்போகிறார்கள். பசியால் இறந்துபோகின்ற அளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் அரசாங்கங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்கு என்ன செய்கின்றன. இலங்கையில் ஏழைமக்களின், அகதிகளின் வாழ்வை வளம்படுத்த எத்தனை வேலைகள் இருக்க இன்னும் ஏன் களியாட்ட நினைப்பில் இந்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். களியாட்டங்களுக்கும் வெற்றிவிழாக்களுக்கும் செலவழிக்கும் நூறு மில்லியன் ரூபாக்களை ஏன் அகதிகளின் வாழ்வு வளம்பெற செலவழிக்கக்கூடாது. இப்படி ஏன் யோசிக்கிறார்களில்லை.
ஒவ்வொரு அகதிக்கும் ஐந்து லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களின் குடும்பத்தை வாழவைக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியும். ஏன் அழிந்துபோன எல்லாவற்றையும் ஒரு வருடத்தினுள் செழிப்பானதாக்க முடியும். ஆனால் யோசிக்கிறார்களில்லை அரசியல் தலைவர்கள். களியாட்ட விழாக்கள், வேண்டாத விருது விழாக்கள், காலதாமதமான வெற்றிக்களிப்புக்களுக்கு மத்தியில் பட்டினியால் அல்லல்படும் இந்த இலங்கை தேசத்தின் தமிழ் மக்களுக்காகவும் ஒரு தடவை சனாதிபதி சிந்திக்கவேண்டும்.
வீடுகளை அவர்களே கட்டிக்கொள்ளட்டும் என்றுவிட்டு தடியும் தகரமும் கொடுக்கிற சனாதிபதி கொழும்பில் களியாட்ட செலவுகளுக்காக மில்லியன் ரூபாய்களை செலவழிக்க அனுமதிக்கலாமா? ஏன் இந்த ஓர வஞ்சனை?
பசியும் வறுமையும் வன்னியில் பெருங்கொடுமையாக இருக்கிறது. அகதிகளை பார்க்க பணம் இல்லை என்று சொல்லும் ஐ.நா. சபைக்கு தெரியும் ஒரு ஏவுகணை செய்யும் செலவுக்கு உலகம் முழுவதும் உள்ள பசித்த பாடசாலை பிள்ளைகளுக்கு 5 வருடத்துக்கு 3 வேளை உணவு கொடுக்கலாம் என்பது.
ஆனால் ஐ.நா. சபையும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருக்கிறது.
உலகத்தில் எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்றால், உலகம் யுத்தத்திற்கு செலவழிக்கும் பணத்தை இரண்டே இரண்டு நாட்களுக்கு மிச்சப்படுத்தினால் ஒரு கோடி பசித்த சிறுவர்களுக்கும் ஒரு கோடி நோயாளிகளுக்கும் விமோசனம் அளிக்க முடியும்.இந்திய உபகண்டத்தில் மட்டும் நாற்பது வீதமான மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பதனை உணரும்போதுதான் அதன் அருமை விளங்குகிறது. நாம் தினமும் மூன்று வேளை உணவு, நொறுக்கு தீனி, தேநீர், கோப்பி என்று அருந்தி சாப்பிட்டு அலுத்துப் போகிறோம். ஒரு வாய் தண்ணீருக்காக அலைந்து திரியும் மனிதர்களும் எங்களுக்குள்ளேயேதான் இருக்கின்றனர்.
வன்னியில் யுத்த நேரத்தில் புலிகளின் பகுதிகளில் இருந்த மக்கள் இன்னும் பசியின் கொடுமையைப் பற்றி சொல்வார்கள். உணவுத் தடை இருந்த நேரம் இலை, குழைகளை சாப்பிட்டு மிருகங்களைப்போல வாழ்ந்தவர்களையும் எனக்குத் தெரியும். சக மனிதர்களின் பசியைப் போக்கவேண்டும் என்ற அறிவுரை எல்லா இடங்களிலும் கிலாகித்துச் சொல்லப்படுகிறது.
போசாக்கான உணவு இல்லாமையால் உலகில் செத்துப்போகிறவர்களின் தொகை, பட்டினியால் உலகில் வருடாவருடம் செத்துப்போகிறவர்களின் தொகை மூன்று கோடி பேர் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. தினமும் எந்தவொரு நிமிடத்திலும் சுருண்டு விழுந்து பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்.
உலகில் சனத்தொகை அதிகரித்து அதிகரித்து செல்ல உணவுத் தேவையும் அதிகரித்து செல்கிறது. ஆனால் உணவு உற்பத்தி நிலங்களை பெரும் பண முதலைகள் ஆக்கிரமித்து கோடிக்கணக்கான பணம் பண்ணும் பெரிய பெரிய நிறுவனங்களை அமைக்கிறார்கள்.ஒரு பெரும் நிறுவனம் அமைக்கும் இடம், அதனை சுற்றிய நீர் நிலைகள் அழிவு, பூமி நச்சுத்தன்மையாதல் எல்லாம் சேர்த்து பேரழிவு ஏற்பட்டு நிலம் நஞ்சாகி உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மனிதன் பட்டினியை நோக்கி தள்ளப்படுகிறான்.உலகில் பட்டினிக்குள்ளாக்கப்பட்டவர்கள் கொதித்து எழும் காலம் விரைவில் வரும் என்று அறிவாளிகள் சொல்கின்றனர். பட்டினிக் கொடுமை தாங்க முடியாமல் ஏழைகளுக்கும் பணக்காரனுக்குமான சண்டை வரும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.இது இந்தியாவில் இருந்துதான் தொடங்கும் என்கின்றனர் அவர்கள். அத்தோடு இந்தியாவில் தண்ணீருக்கான யுத்தமும் இனிவருங்காலங்களில் ஏற்படும் என்ற அச்ச நிலமை காணப்படுகிறது. மாநிலங்களுக்குள் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சினை பெரும் சண்டையில் போய் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையைப் பொறுத்தமட்டில் வடக்குக் கிழக்கு மக்கள் பெரும் போசாக்குப் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கின்றனர். இரண்டு கோடி மக்கள் கொண்ட வளமான நாடான இலங்கையில் அரசியல்வாதிகளின் ஊழல் கொடுமையினால் ஒரு கோடி பேர் மட்டும் போசாக்கான சாப்பாட்டை சாப்பிட ஒரு கோடி பேர் போசாக்கில்லாத உணவை சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதற்குப் பெரிதொரு உதாரணம் தேவையில்லை.நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட பக்கத்தில் எத்தனைபேர் சாப்பிட வழியில்லாமல் உழலுகிறார்கள் என கொழும்பின் றெஸ்ரோண்ட் வெளியே பார்த்தால் தெரியும். வேறெங்கும் போகவேண்டியதில்லை.இலங்கையில் எவ்வளவு வளமான பூமி இருக்கிறது. என்னதான் விளையாது எங்கள் மண்ணில். நெல், பயறு, கரும்பு, புரதப் பயிர்கள் எல்லாம் வளரும். பயன்தரும். ஆனால் அரசாங்க எம். பி. மார்கள் தங்கள் பையை நிரப்புவதில் மட்டும் குறிக்கோளாகக் கொண்டால் எப்படி நாட்டை வளமாக்குவது? எப்படி நாட்டை செழிப்பாக்குவது? யுத்தம் யுத்தம் என்றார்கள். அதுதான் முடிந்து தொலைந்துவிட்டதே. இனியாவது ஒவ்வொரு இலங்கையரும் செல்வச் செழிப்புள்ளவராக மாற்ற முடியும். உங்களுக்கு தெரியுமா? எமது இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் நிறை குறைவாகப் பிறக்கின்றன. நாங்கள் வயிறு புடைக்க உண்ணும்போது இந்தக் குழந்தைகளை நினைக்க வேண்டும்.தானங்களில் மிகச் சிறந்தது பசியைப் போக்கும் அன்ன தானம். இதனை ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டும். தங்களது சாப்பாட்டு நேரம் ஒருவருக்காவது ஒரு பிடி உணவு கொடுத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சிலா இன்னமும் இருக்கின்றனர்.
லண்டவில் இந்துக் கோவில்களில் அநேகமாகப் பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் சாப்பாடு இருக்கும். யார் வேண்டுமானாலும் போய் பசியாறலாம்.ஆனால் இங்குள்ள சீக்கிய குருத்துவாராவில் றொட்டியும் சாதமும் கறியும் எப்போது போனாலும் இருக்கும். இது உண்மையில் பெரிய விசயம்தான். ஏனெனில் இங்கு லண்டனில் வேலை இல்லாத கஸ்டப்பட்ட இளைஞர்கள் நிறையப் பேர் உணவுக்குக்கூட வழியில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் பசியாற நல்ல விசயம் இது. எப்போது போனாலும் முகம் கோணாமல் எவ்வளவும் குருத்துவாராவில் சாப்பிட்டுவிட்டு வர முடியும். ஆனால் ஒரு விடயம். வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. விருந்தினர்களை எப்பொழுதும் சீக்கிய குருத்துவாராக்கள் வரவேற்கின்றன. அது எந்த இனம், மதம் என்று பார்ப்பதில்லை.'செல் விருந்தோம்பி வரு விருந்து' பார்த்து இருக்கும் அவை. எங்கள் காலத்தில் அதாவது 35 வருடங்களுக்கு முன்னர் எங்கள் வன்னிப் பிரதேசத்தில் யாரும் பசியால் செத்தது என்று வரலாறு இல்லை. எப்பொழுதும் வீட்டுக்குள் நெல் மூட்டை அடுக்கி வைத்திருப்பார்கள் வன்னி மக்கள். மரக்கறி தோட்டத்தில் விளையும். எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் பிச்சை என்று வெளி ஊர்களில் இருந்து வந்தாலும் வயிறாற சாப்பிட்டுவிட்டுத்தான் எங்கள் ஊர்களிலிருந்து போவார்கள்.ஆனால் இப்பொழுது எமது ஊர் மக்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்க யாருமில்லை. யுத்த வெற்றியைகொண்டாடும் எல்லோரும் உணவு கொடுக்கும் எண்ணமே இல்லாமல் அலைகிறார்கள். பசியை போக்கும் வழியை கண்டு பிடியுங்கள் அமைச்சர்மார்களே!. நீங்கள் அறுசுவை உணவை புசிக்கும்போது அந்த மக்களையும் ஒரு கணம் நினையுங்கள் என்று உங்கள் மனச்சாட்சிக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் எடை குறைவுப் பிரச்சினையை வளர்ந்த பின்பு எதிர் நோக்குகின்றனர். நாட்டின் உற்பத்தி வளர்ந்துவிட்டது என்று சொல்லும் அரசாங்கம் தன் நாட்டில் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் மனிதர்களை கொஞ்சம் பார்க்கவேண்டும்.
புள்ளி விபரங்கள் எப்பொழுதும் மக்களின் பசியைப் போக்கமாட்டாது. முந்தி என்றால் எமதூர் ஆலயங்களில் எல்லாம் அன்னதானம் செய்வார்கள். ஒட்டுசுட்டான் தான்தோன்றியீசுவரர் கோயிலில் எத்தனையோ முறை அன்னதானம் சாப்பிட்டிருக்கிறேன். அன்னதான சோறும் கறியும் ஆகா என்ன ருசியாக இருக்கும். நாங்கள் பசியோடுதான் சாப்பிட்டோம். ஆனால் உணவுக்குப் பஞ்சம் என்று எங்கள் கிராமத்தில் யாருக்கும் இருந்ததில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத வேற்றூரிலிருந்து வருகிறவர்கள் அந்த அன்னதானத்தில் பசியாறிப் போயிருக்கிறார்கள் மனநிறைவோடு. இதுதானே அன்னதானத்தின் மகிமை.
உலகின் பெரிய நாடுகள் உணவு நெருக்கடியைப் போக்க உச்சி மாநாடுகளை நடத்துகின்றன. பசியால் அவதிப்படும் மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்குத் தீர்வு காண்பதற்கு இந்த உச்சி மாநாடுகள் எந்தத் தீர்வையும் முன்வைக்காமல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூடி கலைந்துபோகின்றன. 1996 ஆம் ஆண்டு ஒரு மாநாடு. பிறகு 2002 இல் இன்னொரு மாநாடு. எல்லாம் உலக உணவு நெருக்கடியைக் குறைக்கிறோம் என்றுதான் சொல்லி நடைபெற்றன. ஆனால் முடிவு ஒன்றுமே இல்லை.
இன்று இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதே 102 கோடி மக்கள் உலகில் பசியோடு தூங்கப்போகின்றனர். இது தினமும் நடக்கும் ஒரு விசயமாக இருக்கிறது. உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருந்தாலும் வளர்ந்த நாடுகள் ஏழைகளுக்கு உணவை வழங்குவதில்லை என ஐ.நா. பொதுச் செயலாளருடைய பேச்சாளர் மரி ஒகாபே முன்னர் ஒரு முறை சொல்லி கவலைப்பட்டார்.
ஏழை நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 20 கோடி சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த சிறார்களில் 90 வீதமானோர் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கின்றனர். அத்தனைக்கும் ஆபிரிக்காவில்தான் தங்கமும் இரத்தினக்கல்லும் தோண்டி எடுக்கப்படுகின்றன. உலகின் பணக்கார நாடுகளாக இருக்கவேண்டிய ஆபிரிக்காவை யுத்தம் மூலமும் குழுச் சண்டை மூலமும் கெடுத்து நாசமாக்கிவிட்டு அந்த நாடுகளின் பெற்றோலை, தங்கத்தை, இரத்தினக்கல்லை தோண்டி எடுத்துக்கொண்டு வரும் வெள்ளைக்காரர்கள் அந்த மக்களை பசியால் வாடவிட்டால் எழுந்து நடக்கக்கூட மாட்டார்களே கேள்வி கேட்க மாட்டார்களே என்றுதான் இதனை செய்கிறார்கள்.
உலக உணவு உச்சி மாநாடுகளில் முன்வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் செவிமடுப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் 4400 கோடி டொலர் உணவு உற்பத்திக்கு தேவை என்பதை உலக உணவுத்திட்டம் வலியுறுத்தினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
உலக உணவு மாநாட்டில் 2009 ஆம் ஆண்டு புனித பாப்பரசர் ஆற்றிய உரையை கொஞ்சம் பாருங்கள்.
'நம்மைப் படைத்த கடவுளிடம் பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவர் கோடிக்கணக்கான மக்களை பற்றாக்குறையில் தவிக்கவும் விடவில்லை. மனிதன் தான் விரும்புவதை, தனக்கு நன்மை தரக்கூடியதை அடைய முடியாதளவுக்கு இவ்வுலகில் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதனின் சுயநலமே இன்றைய பசி, பட்டினிச் சாவுகளுக்குக் காரணம்'.
புனித பார்பரசரின் வார்த்தை எவ்வளவு சத்தியமானது.
சுய நலத்திலும் ஊழலிலும் மலிந்துபோயிருக்கின்ற மனிதனே மற்றைய மனிதனை இவ்வுலகில் பட்டினியால் கொல்கிறான்.

வீடு எனும் பெரும் செல்வம்


கலியாணம் முடித்து 3 வருடங்களாகியும் லண்டனில் ஒரு வீடில்லையே என ஏங்கிக்கொண்டிருந்த எனது நண்பருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு புதுவீடு கிடைத்துவிட்டது.
நேற்றுத்தான் அவர்களின் புதுவீடு புகுந்த நாள். அவர்கள் இருவரும் மிகுந்த பிரயாசப்பட்டு உழைப்பவர்கள். கஸ்ரப்பட்டு பணம் சேர்த்தார்கள். லண்டனில் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்ரப்பட்டு உழைத்தாலும் நினைத்த உடனேயே ஒரு வீடு வாங்க முடியாது.
லண்டனில் ஒரு வீடு வைத்திருப்பது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. ஆனால் வைத்திருந்தால் பெருமைதான்.
புது வீட்டுக்கு தனக்கு முதல் நாள் வந்த கடிதமே வீட்டு மோர்கேஜ் கட்டவும் என்பதான ஞாபகமூட்டல் கடிதம்தான் என்று சொன்னார் அவர்.
நண்பரின் மனைவியின் சொந்தக்காரர்களும் கொஞ்சம் உதவி ஒத்தாசை செய்ய இந்த புதிய வீடு சாத்தியமாகியிருக்கிறது அவர்களுக்கு.
அந்த புதிய வீட்டில் அவரின் மகன் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. சின்னவன் என்னோடு பாசம் அதிகம். 'வாப்பா' என்றுதான் என்னைக் கூப்பிடுவான் எனது பிள்ளைகள் கூப்பிடுவது மாதிரி. இன ஒற்றுமைக்கு மூன்று வயது கிறிஸ்தவரான அலனும் நானும்தான் உதாரணம்.
நாற்பத்தைந்து வருடமாக ஒரு சொந்த வீட்டில் வாழக் கிடைக்கவில்லையே என நினைத்துப் பார்க்கிறேன். நான் வாழ்ந்த வீடுகள் ஒவ்வொன்றும் நினைவில் பசுமையாய் நின்றுகொண்டுதான் இருக்கின்றன.
நான் பிறந்தவுடன் கொண்டுவந்து வளத்தியது முள்ளியவளை ஜி.பி. எஸ் இற்கு முன்னால் இருந்த எங்கள் பாட்டனார் வீட்டில். அதில்தான் கொஞ்ச காலம் வளர்ந்தேன்.
அந்த மண்ணின் வாசமும் காற்றின் பலாப்பழ வாசமும் எனது நாசிக்குள் இருந்து இன்னும் மணக்கிறது.
அங்கிருந்து இடம்பெயர்ந்து அம்மய்யாவும் அம்மம்மாவும் ஒட்டுசுட்டான் புளியங்குளத்திற்கு வந்தவுடன் அங்கு காடு வெட்டி மண்சுவரினால் ஒரு வீடு கட்டினார்கள். அங்குதான் தகப்பனில்லாத நானும் தங்கச்சியும் அம்மாவும் வளர்ந்தோம்.
எங்கள் பழையதும் எனக்குப் புத்தி தெரிந்த காலத்தில் இருந்த முதல் மண் சுவரும் கிடுகு செத்தையுமான வீடு இன்னும் என் மனதுக்குள் நிற்கிறது. அந்த வீட்டில் சாமான் வைக்க அலுமாரியே இருந்ததில்லை. உடுப்புக்களை கயிற்றுக் கொடியில்தான் போட்டிருப்பா அம்மா. அதில் இருந்துதான் பள்ளிக்கூடத்திற்கு உடுப்பு எடுத்துப்போட்டுக்கொண்டு போவோம். அந்தக் காலத்தில் அயன் பண்ணிய உடுப்பு வேணுமென்றெல்லாம் கவலைப்படவில்லை நாங்கள். அந்த மண் வீட்டில் இருந்த பொருட்களை கைவிரலில் எண்ணிவிடலாம். எவ்வளவு இலகுவான செலவு குறைந்த வாழ்க்கை வாழலாம். வாழ்ந்தோம்.
உலகம் வளர வளர தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க செலவு கூடி கடனாளியாகி செத்துப் போகின்ற மனிதர்களை எண்ணிப்பார்க்க கஸ்டமாக இருக்கிறது.
தேவைக்கதிகமான பொருட்களோடு எத்தனை வீடுகள் வீணாகக் கிடக்கின்றன. எங்களது மூன்றாவது வீடு ஒரு கல்வீடு. அது இன்னும் சில இடிபாடுகளுடன் கிடக்கிறது புளியங்குளத்தில்.
அதனை அம்மய்யா தனது உழைப்பால் கட்டி முடித்தார். அந்தக் கிராமத்தில் ஒரு கல்வீட்டில் இருப்பது என்பது அந்தக் காலத்தில் எழுபதுகளில் பெருமைதான். கூளாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலைதான் எங்கள் ஊர்களின் வீடுகளுக்கு எல்லாம் கல்லும் ஓடும் தந்த அமுத சுரபி.
அங்கு தினமும் கல்லும் ஓடும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். கூளாமுறிப்பு மண்ணின் வளம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பேசுவார்கள். உறுதியான கல்லுக்கும் ஓடுக்கும் சிறந்த மண் அது.
எங்கள் மூன்றாவது வீட்டுக்கு நீண்டகாலமாக முன் கதவு பூட்டப்படாமலே இருந்தது. கதவு வாங்கிப் பூட்ட காசு இல்லாமல் சாக்குப் போட்டு மறைத்து வைத்திருந்தார் அம்மய்யா. அதற்குப் பிறகு உறுதியான முதிரை மரக்கதவு ஒன்று வந்தது. அது மழைக்காலங்களில் உப்பிப் பருத்து இருக்கும். அண்ட பூட்ட முடியாது. வெயில்காலங்களில் சுருங்கி இருக்கும். பூட்டலாம். எங்கள் கல்வீட்டில் நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு என்றே ஒரு அறை இருந்தது. அதில் 12 மாதங்களும் நெற்செல்வம் நிறைந்திருக்கும்.
நெல் இருப்பதனால் அந்துப் பூச்சியும் எலியும் எங்கள் வீடுகளில் எங்களோடு வாழும். அதனை தவிர்க்க முடியாமல்தான் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீடுகளும் இருந்தன.
இப்பொழுது நினைத்தாலும் யோசிக்கிறேன். இரண்டு அறைகள் எங்கள் வீட்டில் இருந்தன. இரண்டு அறைகளுக்கும் யன்னல் கிடையாது. எப்பொழுதும் இரண்டு அறைகளும் இருட்டாகவே இருக்கும். எங்கள் வீட்டுக்கு ஒரு நாளும் மின்சாரம் இருந்ததே கிடையாது.
அந்த இரண்டு அறைகளிலும் விளைபொருட்களே இருக்கும். நிலக்கடலை, மிளகாய், வெங்காயம் என்று அறைகளில் வைத்துவிட்டு முன் விறாந்தையில் பாயைப்போட்டு படுத்து எழும்பி எங்கள் எங்கள் வேலையைப் பார்த்தோம் அன்று. ஏதோ வீடு கட்டியது விளைபொருட்கள் வைப்பதற்காகத்தான் போலிருக்கிறது. அம்மய்யா உயிருடன் இல்லை. இருந்தால் இப்பொழுது கேட்டிருக்கலாம். ஏன் எங்களுக்கு அறைகள் தரவில்லை என்று.
என்னதான் வீடு கட்டினாலும் வீட்டுக்கு வெளியே காற்றோட்டத்தில் சாக்குக் கட்டிலைப் போட்டுப் படுக்கும் சுகமே தனிதான்.
எமது வீட்டுக்கு வெளியே ஒரு குடத்தடி இருக்கும். குடத்தடிக்குக் கிட்ட ஒரு மாதுளை மரம், எலுமிச்சை மரம் இருக்கும். அவை இரண்டில் எலுமிச்சைதான் நன்றாக காய்க்கும். மாதுளை மரம் காய்த்திருக்கிறது. ஆனால் நான் மாதுளம்பழம் என்று ஆசையாகத் தின்றது முதன் முதலாக தமிழ்நாட்டிற்குப் போனபோதுதான்.
எமது மாதுளை மரம் எப்பொழுதும் ஒரு பெரிய முற்றிய பழத்தைத் தந்ததே இல்லை.
எமது புளியங்குளம் வீடு றோட்டோரத்தில் இருந்தது. எப்பொழுதும் கிராமத்தில் கிழக்கு வாசல் வைத்த வீடுதான் கட்டுவார்கள். சூரிய வெளிச்சம் உதித்தவுடன் வாசலுக்கு அடிக்கவேண்டும் என்றும் அதுதான் அபிவிருத்தி, செல்வம் வரும் என்றும் கிராம மக்கள் நம்புவார்கள். எமது வீடும் கிழக்குவாசல் வீடுதான்.
கடைசிவரை சோறு, தண்ணிக்கு கஸ்டப்படாமல்தான் நாழ்ந்தோம் நாம். இந்த மூன்றாவது வீட்டோடு எனது வாழ்க்கை ஒரு இடத்தில் தங்குவதான எல்லா விதிகளையும் கடந்துவிட்டது. அதற்குப் பிறகு ஊர் ஊராக அலைந்து திரியும்படி விதி எனக்குப் பணித்துவிட்டது.
உடுப்பிட்டியில் ஒரு வீடு. பின்னர் திக்கத்தில் ஒரு வீடு. பிறகு உடுத்துறையில் ஒரு வீடு, பிறகு திருகோணமலையில் ஒரு கடை என்று எனது தங்க முடியாத தூரத்தின் பயணங்கள் கடந்துபோயின.
கலியாணம் முடித்த பிறகு வீடு ஒன்று கட்டாயம் வேண்டும். மனைவியும் நானும் வாழ்வதற்கு. வீடு எப்படி எல்லாம் இருக்கவேண்டுமோ அந்த வரையறைகளோடு எங்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை. முதலில் முப்பது வருடம் பழமையான ஒரு வீடு கிடைத்தது. புதிதாக திருமணம் முடித்து மனைவியை ஒரு வீட்டில்வைத்து காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பு வந்ததன் பிறகு கிடைத்த முதல் வீடு இது.
இந்த வீட்டுக்கும் யன்னல் இல்லை. ஒரேயொரு அறை. மண்வீடு. அந்த வீட்டில் வாழ்ந்ததை நினைத்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது லண்டனிலிருந்து இதனை எழுதும்போது.
வீட்டின் கூரை பழைய ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. உடைந்த கூரையால் மழை வீட்டுக்குள் எல்லா நேரமும் வரும். மழைத்தண்ணீரைத் தடுப்பதற்கு பொலித்தீன் பையினால் இழுத்துக்கடிட்டியிருப்போம். அந்த பொலித்தீன் பையிலும் நீர் நிறைந்திருக்கும்.
ஒரேயொரு பல்ப் மட்டும் எங்களுக்கு வயர் இழுத்துத் தந்திருந்தார்கள். மலசலகூடம் எங்களுக்கும் எங்களுக்குப் பக்கத்தில் கல் வீட்டில் இருந்த அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் மிகுந்த சிரமமான ஒரு குழிதான் இருந்தது.
எங்கள் மண்வீட்டு அறைக்குப் பக்கத்தில் ஆடு கட்டும் அறை இருந்தது. ஒரு அறையில் ஆடுகளும் மறு அறையில் நாங்களும் இருந்து இரண்டு வருடங்கள் கழித்தோம். அங்குதான் எனது மூத்த மகள் வளர்ந்தாள்.
எல்லாம் சகித்துக்கொள்ளும் மனைவியின் மனம்தான் பெரிது.
அதற்குப் பிறகு ஒன்பதாவது வாடகைவீடு கிடைத்தது. அது பரவாயில்லை. இன்னொரு வீட்டோடு ஒட்டியதுதான். ஒரு அறை, ஒரு குசினி வீடு. பத்தாவது வீடும் அக்குறணையில்தான். வாடகையும், சும்மாவுமாக வீடுகளில் இருந்துகொண்டிருந்தோம். பதினோராவது வீட்டில் இருந்துதான் நான் லண்டன் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு லண்டனில் வாடகைக்கு அறை தேடுவது என்றால் பல பல அளவுகளில் சேர்ந்திருத்தலோ அல்லது தனித்திருத்தலோ என்ற நிலமையில் வாடகையின் பெறுமதி இருக்கும்.
1998 இல் ஒரு அறை 40 பவுண்களுக்கு இருந்தது. இது சாப்பாடு இல்லாமல். இப்பொழுது 2010 இல் ஒரு அறை 100 பவுண் சாப்பாடு இல்லாமல்.
லண்டனில் ஈஸ்ட்வரம், இல்பேட், ஸ்ரட்போட், ஹவுன்ஸ்லோ என்று ஒவ்வொரு இடத்திலும் அறைகள் மாறி மாறி வாழ்ந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஒரு அறையில் 4 பேர் தங்கிக்கொண்டு சிலோனில் இருந்து வந்த காசை ஏஜென்சிக்குக் கொடுக்கும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஊரில் அக்காவை, தங்கச்சியை சீதனம் கொடுத்துக் கட்டிக்கொடுக்க ஆலாய்ப்பறக்கும் எத்தனையோ இளைஞர்கள் ஒரு நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கிறார்கள்.
மனைவியின் விருப்பத்தில் 13 வது வாடகை வீட்டுக்குப் பிறகு ஒரு சொந்த வீடு கட்டினோம். 2004 இல்தான் அந்த கைங்கரியம் கைகூடியது. முதன்முதலில் ஒரு சொந்த வீடு எமக்கானது என்ற மனநிலையே பெரிய நிம்மதியைத் தரும்.
அதனை நான் எனது வத்தளை வீட்டில் இருக்கும்போது உணர்ந்தேன். எங்கள் வீடு மனைவியின் விருப்பத்தின் பெயரில் பார்த்துப் பார்த்துக் கட்டியது.
எனக்கு வீடு தொடர்பான அக்கறை எப்பொழுதும் இருக்கும்.
வீடு மனிதர்களுடைய உணர்வு சார்ந்த ஒரு விடயம். வீட்டுக்குப் போனால் சில வீடுகள் எமக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். போன உடனேயே பிடித்துப்போய்விடும். சில வீடுகளுக்கு ஏன் போனோம் என்று வெறுப்பு வந்துவிடும்.
மனைவிக்குத் தெரிந்தவர்கள் என்று ஜேர்மனியில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தோம். போன நேரத்திலிருந்து அந்த வீடு எங்களுடன் ஒட்டவேயில்லை. ஏதோ அந்நியப்பட்டது மாதிரி அந்த வீடு இருந்தது. அத்தோடு அந்த வீட்டு மனிசி துப்புரவு கூடின மனிசி. நாங்கள் யாரும் டொய்லட்டுக்குப் போனால் வாசலுக்கு 'மொப்' பிறசுடன் வந்துவிடும். அவ்வளவு துப்புரவு. அதுவும் பெரிய அசௌகரியமாக இருந்தது.
அந்த வீட்டின் வைபறேசன் எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. எனது மனைவிக்குத் தலையிடி, காய்ச்சல், உதடுவீக்கம் எல்லாம் அங்குநின்ற ஒரு இரவில் வந்துவிட்டது. அடுத்தநாள் அந்த வீட்டிலிருந்து எப்பொழுது கிளம்புவோம் என்றிருந்தது.
அந்த வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன் எல்லா வருத்தமும் போய்விட்டது.
சில வீடுகள் மனதோடு ஒட்டிவிடும். வீடுகள் எமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நாங்கள் தெரிவு செய்யும் பெயிண்ட் கலர், எங்கள் வீட்டிலிருக்கும் ஓவியங்கள், திரைச்சீலை எல்லாம் எமது மனதைக் கண்டுபிடிக்க உதவும் சாதனங்கள்தான்.
எமது வத்தளை வீட்டைப்பார்த்து ஆசைப்படாதவர்கள் இல்லை. ஒன்றுமே இல்லை ஆனால் என்னவோ எல்லாம் இருப்பதுபோல ஆசைப்படுவார்கள். ஒரு சின்ன இடத்தில் அவ்வளவு பெரிய வீடு எப்படி வந்தது? எல்லோரும் சொல்வார்கள் உங்கள் மனம்தான்.
வீட்டில் அது அது அந்த இடத்தில் இருக்கவேண்டும். ஒரு வீட்டை ஒரு கிழமை பராமரிக்காமல் விட்டுப் பாருங்கள். தூசி அடைந்து சுடுகாடாகிவிடும். மனிதக் கைகள் வீட்டை எப்பொழுதும் பராமரித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இங்கு லண்டனில் பேராசைக்காக மற்றவரைப்போல வீடு வாங்கவேண்டும் என்று அவாப்பட்டு மோர்கேஜ் கட்டமுடியாமல் துன்பப்பட்டு சாகிறவர்கள் ஏராளம். தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிற துன்பம் இது.
லண்டனில் எங்கள் சிறிய வாடகை வீட்டுக்கு எப்பொழுதும் யாரும் வந்தாலும் அவர்களின் மனதோடு எங்கள் வீடு ஒட்டிப் போகும். ஏனோ தெரியாது. உங்கள் வீடு அழகாக இருக்கிறது என்றுதான் வருகிறவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். ஒரு வாரமும் ஆட்கள் வராத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. இந்த வீட்டின் வைபறேசன் நன்றாகத்தான் இருக்கிறது.
நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.
'செல்விருந்தோம்பி வருவிருந்தை' பார்த்திருக்கிறது மனிசி. நான் உண்மையில் கொடுத்துவைத்தவன்தான்.

Tuesday, 6 July 2010

அச்சம் மிகுந்த விமானப் பயணம்



இப்போது விமானப் பயணம் என்பது பெரும் வில்லங்கமாகவே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏயார் போட்டுக்குப் போவது ஏதோ பாதுகாப்பு மிகுந்த ஆமி காம்புக்கு போவது போலவே இருக்கிறது.
நவீன ஆயுதம் தாங்கிய பொலிசார் எப்பொழுதும் சுட்டு விடுவார்களோ என்ற பயத்தோடுதான் டிக்கட் கவுண்டர், விசா கவுண்டரில் நிற்கவேண்டி இருக்கிறது.
விமான நிலையத்தில் எந்த மகிழ்ச்சியும் எங்கும் இல்லை.விமானத்தில் ஏறி உட்கார்ந்தததன் பின்பும் யாராவது குண்டு வைத்திருக்கிறேன் என்று மிரட்டி விடுவார்களோ என்ற அச்ச உணர்வே மேலோங்கி இருக்கிறது.எங்களது நாட்டு ஏயார்போட்டுகளை விட ஐரோப்பிய, அமெரிக்கா ஸ்கன்டினேவிய நாடுகளின் ஏயார்போட்டுகள் அச்சம் மிகுந்தவையாக இருக்கின்றன. விமானப் பயணத்தை விட கப்பல் பயணம் நல்லது என்று எனது நண்பன் ஒருவன் சொன்னான்.ஆனால் கப்பலில் எத்தனை நாட்கள் என்று பயணிப்பது? எங்கும் உயிர் பயம் மிகுந்தே காணப்படுகிறது.
தீவிரவாதிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்வோரின் குறி ஆயுதம் தாங்காத ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களைக் கொண்ட அப்பாவிப் பொதுமக்கள்; மீது திரும்பியிருப்பது மிகவும் வெறுக்கத்தக்கது.
போர் செய்பவர்களும் ஆயுதம் தாங்கிய எதிரிகளை விட்டுவிட்டு கொத்துக் கொத்தாக குண்டுகளை எறிந்து அப்பாவிகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல விமானத்தில் பயணம்செய்யும் அப்பாவிகளைக் கொல்வதில் தீவிரவாதிகள் குறியாக இருக்கும் பொழுது கொல்லப்படுவது பொதுமக்கள்தான்.
யுத்தம், தீவிரவாதம் எதிலுமே சம்பந்தப்படாத பொதுமக்களை தமது கொலைக்களமாக்கியிருக்கும் யுத்ததாரிகள் மிகவும் கொடியவர்களாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவும் தனது வேவு பார்க்கும் முறை தோல்வியடைந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது. தீவிரவாதிகள் பொதுமக்கள் போல விமானத்தில் ஏறி வெடிபொருட்களைச் சர்வ சாதாரணமாக எடுத்து வந்து வெடிக்க வைக்கிறார்கள்.
அவசரமான பயணம், பொழுது போக்கு, வியாபாரம் என்று பயணிக்கும் மக்களோடு மக்களாக அவர்களைக் குறிவைத்துக் கொண்டு மரணமே நோக்கமாகக்கொண்டு கொலையுணர்வுடன் பயணிக்கும் மனிதரை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விமான நிலைய செக்கியூரிட்டிகள், ஸ்கான் கமெராக்கள் எல்லாம் வழிபிதுங்கி நிற்கின்றன.
யார் கொலையாளி என்பதுதான் பெரும் சங்கடம்.
விமானத்தில் 300 பேர் இருந்தால் அவ்வளவு பேரையும் நடுவானில் வைத்து துவம்சம் செய்ய ஒரே ஒரு கொலையாளி போதும் என்பதுதான் தீவிரவாதிகளின் கொள்கை. ஆனால் செத்துப் போவது 300 பேர், நினைக்கவே நெஞ்சு பதறிப் போகிறது.
வாழ்வை வாழ ஆசைப்படும் மனிதன் எப்பொழுதும் கொலை செய்யப்பட்டு விடுவோம் எனும் அச்சமே அவனை மனநோயாளி ஆக்கிவிடும்.கொலை செய்யும் எண்ணம் எப்படி இந்த இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி வருகிறது என்பது பெரும் கேள்வியாக, விடைகாண முடியாத கேள்விகளாக இருக்கின்றன.
அதுவும் முஸ்லீம் இளைஞர்களை இவ்வாறு தற்கொலைத் தாக்குதலுக்குத் தூண்டும் காரணிகள் என்ன?
2001ஆம் ஆண்டில் இருந்து வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
செப்ரெம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் என்ற ஒரு பெரும் தீவிரவாத மனிதர் தொடர்பான கருத்தாடல்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் பொழுது அவர்தான் ஒட்டு மொத்த முஸ்லீம் இளைஞர்களையும் இயக்குகிறாரா என்ற கேள்விதான் அமெரிக்க உளவுத்துறை, பிரித்தானிய உளவுத்துறையின் மிகப் பெரிய வினா. அதற்கு விடை கடந்த பத்தாண்டுகளில் கிடைக்கவில்லை.
முதலில் ஏழை இளைஞர்கள், வேலை இல்லாத இளைஞர்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாதம் பொய்யாகி விட்டது. கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடும் இளைஞர்கள் எல்லோருமே இங்கிலாந்தில், அமெரிக்காவில் படித்தவர்கள். நல்லவேலை செய்து கைநிறையச் சம்பாதிக்கக்கூடியவர்கள்.
காசுக்காரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். ஆகவே இந்த இளைஞர்கள் எப்படி ஏனையவர்களைக் கொன்று தாங்களும் தற்கொலைசெய்யும் அளவிற்கு துணிகிறார்கள் என்றால் எல்லோரும் கையைக் காட்டுவது இஸ்லாம் மார்க்கம் மீதுதான். அது ஏன்?
இங்கே லண்டனில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அது மட்டுமல்ல. வெள்ளிக்கிழமை ஜிம்மா பிரசங்கத்தில் தீவிரவாதத்திற்கு இளைஞர்களைத் தூண்டும் பிரசாரங்களைப் பள்ளிவாசல் மௌலவிமார் செய்கிறார்களா என்று பிரித்தானிய உளவாளிகள் பள்ளிவாசல்களில் முஸ்லீம்களைப் போல அல்லது முஸ்லீம்களையே வைத்து கண் கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கிறார்கள்.
ஒற்றுமையே மிகந்த சிறந்த வழிகாட்டியான இஸ்லாம் மார்க்கம் மீது பழிபோடத் தக்க தீவரவாதத் தாக்குதலை இஸ்லாத்தின் பெயரால் செய்யும் தீவிரவாதிகள் உலகில் முஸ்லீம்களுக்குள்ள எல்லா மரியாதையையும் உரிந்து விட்டார்கள்.
ஒரு மனிதரைக் கொலைசெய்யும் எந்த உத்தரவையும் புனித குர் ஆன் எங்கும் வழங்கவில்லை.
ஆனால் முஸ்லீம்களின் நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்க என்று சொல்லப்படும் இந்தத் தற்கொலைத் தாக்குதல்களும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். இதனை மட்டுமே சர்வதேச ஆங்கில ஊடகங்கள் முதன்மைப் படுத்துகின்றன.
வெள்ளைக்காரர் மத்தியில் கைதுசெய்யப்படும் முஸ்லீம் இளைஞர்களை வைத்து ஒட்டு மொத்த முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களுக்கு எதிரானவர்களாக காட்ட, முஸ்லீம்கள் அனைவரும் எதிரிகளே என்ற மனப்பாங்கு தினம் தினம் அதிகரித்து வருகிறது.
ஈராக் மீதான தாக்குதல்கள், பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் இப்பொழுது யெமன் மீதான் தாக்குதல்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதும் மேற்குலகை அழிக்க நினைக்கும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் என்றே ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.
பலஸ்தீனம் என்றொரு நாடு இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் கங்கணம் கட்டிநிற்கிறது. ஹமாஸ் மீதான கொடும் தாக்குதல்கள் அதனை நிரூபிப்பதைப் போல இருக்கிறது.
ஈரான் மீதும் தாக்குதல் தொடுத்து ஈரானைத் துவம்சம் செய்துவிடவேண்டும் என்று அமெரிக்கா உறுமிக்கொண்டிருக்கிறது.
முஸ்லீம்களின் மீதான தாக்குதல்களுக்கு இஸ்லாம் மதத்தின் மீதான தாக்குதல்களாகவும் முஸ்லீம்கள் எப்பொழுதும் ஆபத்தானவர்களாகவும் காட்ட என்னென்ன வழிகளைச் செய்யவேண்டுமோ அத்தனை வழிகளையும் அமெரிக்காவும் அதன் சார்பு ஊடகங்களும் முயற்சி செய்கின்றன.
ஈரான் மீதான் தாக்குதல் தொடுக்க ஈராக் நாட்டிற்கு சதாம் குசைனுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களைக் கொடுத்த அமெரிக்கா, ரசியா மீது குடைச்சல் கொடுத்த தலிபான்களுக்கு ஆயுதம் கொடுத்த அமெரிக்கா இப்போது அவையெல்லாம் தம்மீது திரும்பிவிட அந்த விடயத்தையே மறந்துவிட்டு திருப்பித்தாக்கும் விடயத்தினை ஊடகங்கள் மறந்தும் சொல்லவதில்லை.
எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதுதான் பேசுபொருளாக நிறைந்து கிடக்கிறது.
மதரசாக்கள் என்கின்ற அரபுக் கல்லூரிகள் பயங்கரவாதிகளை உருவாக்கும் இடங்களாக பார்க்கும் ஒரு நிலைமை உருவாகி இருக்கிறது. தாடி வைத்தவர், தலைப்பாகை அணிந்தவர், ஜிப்பா போட்டவர் என்றால் அவர் அடிப்படை முஸ்லீம் என்றும் அவரால் ஆபத்து வரும் என்றும் அஞ்சும் நிலைமை பிரித்தானியா போன்ற இடங்களில் இருக்கிறது.
பக்கத்து வீட்டில் தாடி வைத்து, பள்ளிவாசலோடு அதிகமான தொடர்புடைய முஸ்லீம் ஒருவர் இருந்தால் அண்டை வீட்டாரான வெள்ளைக்காரர் பயப்படும் அளவுக்கு ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துகின்றன.
றோட்டில் தாடிவைத்த, தலைப்பாகை கட்டி ஜிப்பா போட்ட ஒரு முஸ்லீம் கார் ஓட்டிப் போனால் பொலிஸ்கார் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து நோட்டமிடுகிறது. அவர் ஏதாவது பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுவிடுவாரோ எனும் பயங்கரம்தான்.
மனிதர் மீதான் நம்பிக்கையீனம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து, நடை உடை பாவனையினை வைத்து ஒருவரின் மதத்தை வைத்து பெயரை வைத்து அச்சமடையத் தொடங்கிவிட்ட உலகம் பேராபத்தானது.
முகமட் எனும் பெயர் மேற்குலகில் அச்சம் தரக்கூடிய பெயராக வெளிப்படையாகவே இருக்கிறது.
இதில் முகமட் எனும் பெயருடையவரை விமானத்தில் ஏற்றுவதற்கு ஒன்றுக்கு மூன்றுதடவை யோசிக்கிறார்கள் விமானக் கம்பனிகள்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யெமன், மத்திய கிழக்கு நாடுகள் என்று முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் இருந்து ஒவ்வொருவரையும் 'பொடி ஸ்கானிங்' (Body scanning) மெசினுக்குள்ளால்தான் ஒவ்வொரு விமான நிலையத்தில் இருந்தும் அமெரிக்காவிற்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கடும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இது ஒரு இனம் மீதான பகிரங்கமான உளவியல் தாக்குதல். ஏழை, பணக்காரன், பிஸ்னஸ்காரன் என்றில்லாமல் எல்லோர் மீதான நடவடிக்கை இது. முஸ்லீம்கள் மனதளவில் துவண்டு போய் இருக்கிறார்கள்.
ஏற்கனவே பல கெடுபிடி விமான நிலையங்களில்: இப்பொழுது இதுவேறு வந்திருக்கிறது.
தற்கொலை என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஹராமான ஒன்றாகும். அது எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியே.கொலை செய்வது என்பது மிகப்பெரிய பாவம். ஆனால் இந்த இரண்டு எண்ணங்களையும் இளைஞர்கள் மத்தியில் விதைத்து அவர்களைத் திசைதிருப்பும் எல்லோரும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவர்கள், தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
என்னைப் போல அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.அடுத்த வாரம் நான் ஜேர்மனிக்குப் போகவேண்டும். மனிசி இப்பவே யோசிக்கத் தொடங்கிவிட்டது. போய் விட்டு வரும் வரை நிச்சயமில்லை. என்ன உலகமிது.

Monday, 5 July 2010

லண்டன் வரை தொடரும் மாமியார் சண்டை




எங்களுடைய தமிழ் மாமிமார்களுக்கு ஒரு திமிர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறது. மாமியாருக்கும் மருமகளுக்குமிடையிலான சண்டையை யார் தொடக்கினார்களோ அது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்தவாரம் லண்டனில் எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். அங்கு இருந்த தமிழ் மாமி தனது மருமகளோடு முறைத்துக்கொண்டே இருந்தா. அவ போன மாதம்தான் மகனின் ஸ்பொன்சரில் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தா.

இங்கு லண்டனிலிருந்து ஒருவரை ஸ்பொன்சர் பண்ணி எடுப்பதென்றால் அவ்வளவு லேசான விடயமல்ல. வங்கியில் போதுமான பணம் இருக்கவேண்டும், தொழில் வருமானம் காட்டவேண்டும், வீடு சம்பந்தமான ஆவணங்கள் கவுன்சிலில் உறுதிப்பாட்டுடன் காட்டவேண்டும், ஸ்பொன்சர் பண்ணுறவர் இலங்கையிலிருந்து அழைத்து தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்களை எல்லாம் சரியாக செய்வார்களா என்று உறுதிப்படுத்தும்படியான எல்லா எழுத்துமூலமான ஆவணங்களும் சரியானது என சென்னையில் உள்ள விசா ஒபிசருக்கு துல்லியமாக புரியவேண்டும்.

(சிலோன் விசா கோரிக்கைகள் எல்லாம் இப்பொழுது சென்னையிலுள்ள பிரித்தானியத் தூதுவராலயத்திற்குத்தானே போகின்றன. பின்னை சிலோனிலுள்ள பிரித்தானியத் தூதுவரை கொடும்பாவி கட்டி எரிப்பீர்கள். டேவிட் மிலிபாண்டை வெள்ளைப்புலி என்பீர்கள். இத்தனைக்கும் தூதுவராலயத்தையும் வைத்துக்கொண்டு இந்தக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ள அவர்கள் என்ன குப்பனா, சுப்பனா?) அதுதான் விசா சம்பந்தப்பட்ட என்னவென்றாலும் வி.எப். எஸ் உடன் தொடர்புகொள்ளுங்கள். ஒன்றுக்கும் பிரித்தானிய தூதரகத்திற்கு வராதீர்கள் என்கிறார்கள். அது கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

முந்தி என்றால் விசா றிஞக்ட் பண்ணினால் கொழும்பு தூதுவராலயத்திற்கு போன் பண்ணியாவது கேட்கலாம். இப்ப வாய்மூடி இருக்கவேண்டியதுதான். ஒரு வார்த்தை யாரோடும் பேச முடியாது. அம்மம்மா ஒரு பழமொழி சொல்லுவா. வாய்க்கொழுப்பு சீலையால போகுது. அதுதான் இது. அப்பவும் விசா ஒபிசர் ஒரு கொன்சவேட்டிவ் கட்சிக்காரராக இருந்தால் வெளிநாட்டுக்காரர் ஏன் லண்டன் போகினம் என்று ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கலாம். விசாவை றிஞக்ட் பண்ணலாம். அவ்வளவு நெருக்குவாரங்களுக்குப் பிறகுதான் லண்டன் விசா கிடைக்கிறது.

மாமி ஒருவாறு லண்டன் வந்ததால், மாமி நினைக்கிறா மருமகள் தனது மகனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறா என்று. அந்த வீட்டில் நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். கணவரும் மனைவியும் நல்ல ஒற்றுமை. லண்டனில் இப்படி ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியான விசயம்தான். கணவன் வேலைக்குப் போக மனைவி வீட்டில்தான் இருக்கிறா. மனைவி பிள்ளைகளின் பணிவிடைகள், கணவனின் பணிவிடைகள் என்று பிசியாக இருக்கிறா. கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால்தான் இங்கு காலம் தள்ள முடியும். ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் கணவர் அவர். மனைவியும் கணவனின் சம்பாத்தியத்தில் அழகாக குடும்பம் கொண்டுபோகிறா. கணவனை அதுவேண்டும், இது வேண்டும் என்று நச்சரிப்பது இல்லை.

இங்கு லண்டனில் பக்கத்து வீட்டுக்காரர் என்ன வைத்திருக்கிறாரோ அதுவேண்டும் என அடம் பிடிக்கும் மனைவிமார்கள் மத்தியில், அதற்காக மூன்று வேலை செய்யும் கணவன்மார்கள் மத்தியில், இந்தக் குடும்பம் எனக்கு எப்பொழுதும் அபூர்வமாகவே தெரியும்.

கணவன் மனைவியின் சொல்லை மீறி எதையும் செய்வதில்லை. மனைவியிடம் கேட்டுத்தான் எதனையும் செய்வார். அதனால் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக ஓடுகிறது. இதுதான் மட்டக்களப்பிலிருந்து வந்த மாமிக்குப் பொறுக்கமாட்டன் என்கிறது. நான் அங்கு போன நேரத்திலிருந்து மாமி காலில் சுடு தண்ணி ஊத்துப்பட்ட மாதிரி ஏதோ துடித்துக்கொண்டிருந்தா. மருமகளைப் பார்த்து முறைத்தவண்ணமே இருந்தா.

நான் மாமிதானே. மகனைப் பெற்றுக்கொடுத்த நான்தானே என்னும் ஒருவகைத் திமிர் எங்களுடைய தமிழ் மாமிகளுக்குக் காலங் காலமாக இருந்து வருகிறது. இது தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு பரம்பரை வியாதி. தமிழ் நாட்டில் மாமி மருமகள் சண்டை பத்திரிகை தலைப்பு செய்திகளாக இன்னும் வெளிவருவதை நாம் காண்கிறோம். மகன் என்னும் வைரத்தை மருமகளிடம் கொடுத்ததற்காக காலம் காலமாக மருமகள் தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்றதொரு மனோபாவம் மாமியார்களிடம் இருக்கிறது.

இங்கு லண்டனில் ஒரு மாமியார் இப்படித்தான் ஊரிலிருந்து வந்தவா. வந்த நாள் முதல் ஒரே வீட்டில் கெடுபிடி. ஊரிலிருந்து வந்த நாளிலிருந்து மருமகளுக்கு ஒரே தொல்லை. அதை அங்க வை, இதை இங்கை வை என்று ஊரில் உள்ள வீட்டில் சட்டம் போடுவது போல இங்கையும் வந்த இடத்தில் சட்டம் போட்டா மாமி.

மருமகள் வேலைக்குப் போறவா. மாமியின் கெடுபிடி தாங்க முடியாமல் கணவன் வேலைக்குப் போன பிறகு அவ வேலைக்கு லீவு போட்டுவிட்டு மாமியை உட்காரவைத்து நல்ல பேச்சுக்கொடுத்தா. இவ்வளவு காலம் பொறுத்துக்கொண்டிருந்த மருமகள் அன்று சன்னதம் கொண்டுவிட்டா. இங்குள்ள விசா நிலவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி நன்றாக ஏசிவிட்டு கடைசியாக இதுக்குப் பிறகு வாயைத் திறந்தால் பொலிசை கூப்பிட்டு பிடிச்சுக் கொடுத்துவிட்டு விசாவையும் கான்சல்பண்ணி ஊருக்கு பெட்டி கட்டிவிடுவேன் என்று நல்ல மிரட்டல். அதுக்குப் பிறகு மாமி சாப்பாட்டுக்குத் தவிர வாயைத் திறப்பதில்லை.

மருமகளை மகளாக நினைக்கும் மாமிமார்கள் இருக்கிறார்கள். ஆனால் மருமகளின் மனநிலையைப் புரிந்துகொண்ட மாமிமார்கள் தமிழ் சமூகத்தில் குறைவு.

ஆனால் இங்கு புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு மாமியார் கொடுமை என்பது தெரியாது. அப்படி யாராவது ஒரே ஏசிக்கொண்டிருந்தால் 999 இற்கு அடித்து உளவியல் ரீதியாக என்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றால் பொலிஸ் வந்து உடனே அள்ளிக்கொண்டுபோய்விடும்.

கொலண்டில் ஒரு சாமத்திய வீட்டுக்குப் போயிருந்தேன். அது அந்த வீட்டில் நடக்கும் முதலாவது பிள்ளையின் சாமத்தியவீடு. மாமா, மாமியை ஊரிலிருந்து அழைத்திருந்தார் புருஷன். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வசதியாக வாழ்ந்தவர்கள். மகன் ஹொலண்ட் வந்து இப்போது சுமாரான ஒரு வாழ்க்கை வாழுகிறார்.

மகன் இங்குவந்து தங்களிலும் சாதிகுறைந்த ஒரு பெண்ணை காதலித்து கலியாணம் முடித்துவிட்டது பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனை இவ்வளவு செலவழித்து இங்கு வந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். மருமகளையோ அல்லது மருமகளின் வீட்டுக்காரரையோ ஒரு துளிகூட மதிக்கவில்லை. அத்தனைக்கும் மருமகளின் வீட்டில் அவள் சமைத்துப்போடுவதை சாப்பிட்டுவிட்டு அவளுக்கே பேசுகின்ற கூட்டமாக இருந்தது அது.

ஊரிலிருந்து வந்த நாள் முதல் மருமகளை மட்டந்தட்டிப் பேசுவதில்தான் நாட்களைக் கழித்தார் மாமி. சீதனம் இல்லாத இடத்தில் எடுத்தது, சாதி குறைந்த இடத்தில் கலியாணம் செய்தது என்று ஒரே புறுபுறுத்துக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்ல, சாமத்தியவீட்டுக்கு வருகிறவர் போகிறவர்கள் எல்லோரிடத்திலும் மருமகளைப்பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தா. இவ்வளவுக்கும் அந்த மருமகளை எல்லோருக்கும் தெரியும் அவ நல்லவா என்று.

இப்படி அவ மருமகளை குறை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மருமகளின் நண்பி ஒருத்தி அவள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறவள்.

மாமி மருமகளைப்பற்றி அவவிடமும் குறையாகப் பேசினா. உடனே சாமத்திய வீட்டுக்கு வந்த எல்லோரையும் கூப்பிட்டு சத்தம்போட்டு சொன்னாள். மாமி இங்கை வந்து மருமகளை அடக்கப்பார்க்கிறா. வயதுபோயும் உந்தக் கிழவிக்கு இன்னும் புத்தி இல்லாமல் முட்டாள் தனமாக இருக்கு. எல்லாரும் கேளுங்கோ என்று சத்தம்போட்டு சொல்ல ஊர்விட்டு ஊர் வந்து சண்டை பிடிக்கிறா. இப்பவே ஹொலண்ட் பொலிசுக்கு போன் பண்ணுங்கோ. இந்த மனிசியை பிடிச்சுக்கொடுங்கோ என்று கத்திவிட்டாள்.

மாமி மானபங்கப்படுத்தப்பட்ட உணர்வோடு பிறகு மருமகளைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வாய் திறக்கவில்லை. மூன்று மாதம் இருக்க வந்தவா, 15 நாளிலேயே வீட்டைவிட்டு ஊருக்குப் பிளேன் ஏறிப்போய்விட்டா.

சீதனம் வாங்குவது, மருமகள்களை அடக்குவது என்று தொடருகின்ற மாமியார் அடக்குமுறைப் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மாமிகள்தான் தன்னுடைய மகளைப்போல் மருமகளையும் பார்ப்பார்கள்.

எனக்குத் தெரிந்த இன்னொரு மாமி இருக்கிறா. அவவுக்கு மருமகள் என்றாலே பிடிக்காது. மூத்த மருமகளை கலியாணம் முடித்து மகள் வீட்டுக்கு மருமகளை அழைத்துவந்த முதல் நாளில் இருந்தே கெடுபிடியை ஆரம்பித்தா. ஒரே வேலை. சும்மா இருக்க மருமகளை விடவில்லை. அதை செய். இதை செய் என்று ஒரே ஆய்க்கினை. சும்மா ஒரு நிமிஷமும் இருக்க விடமாட்டா. அந்தப் பிரச்சினையில் மகன் தாயைவிட்டு தனியே வீடு எடுத்துப் போய்விட்டார்.

ஏழையாக இருந்த மகன் உழைத்து மருமகளின் சேமிப்பால் நன்றாக வளர்ந்து ஓரளவு பணம் வந்துவிட்டது. மாமி தனக்கு செய்த 10 வருட கொடுமையை நினைத்து மருமகள் இப்பொழுது மாமியோடு ஒட்டுறவு குறைவு. கதைத்தால் மட்டும் ஆ.. மாமி, எப்படி இருக்கிறீர்கள், சுகமா? அவ்வளவுதான்.

மாமிக்குத் தெரியாது மருமகள் வசதியாக மாறுவா என்று. இத்தனைக்கும் மருமகள் கொடுமைக்காரி இல்லை. மாமி போட்டு துன்புறுத்தியதால் மருமகள் இப்படி மாறிவிட்டார். அதன் பிறகு அந்த மாமிக்கு இரண்டு மருமகள்மார் வந்தார்கள். அவர்கள் மாமியை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இத்தனைக்கும் அந்த மாமி இரண்டு மருமகள்களையும் தன்னோடு வைத்திருப்பதற்கு வீடு கட்டினா. ஆனால் மாமியின் சட்டாம்பித்தனம் அந்த இரண்டு மருமகளிடமும் எடுபடவில்லை. மகன்மார் உழைத்து தன்னிடம் தரவேண்டும் என்று எதிர்பார்ககிறா. இது இந்தக் காலத்தில் நடக்கும் காரியமா?

மகன்மார் உழைத்து மனைவியிடம் தானே கொடுப்பார்கள். அதுதானே முறை. எப்படி மாமியிடம் கொடுப்பது? இதுதான் அந்த மாமிக்கு பெரும் பிரச்சினையாக மாறி இப்ப தனிமைப்பட்டுத்தப்பட்டுக் கிடக்கிறா.

அவவுக்கு மருமகனும் ஒத்து வராது, மருமகளும் ஒத்து வராது. அப்படிப்பட்ட மாமா மாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

லண்டனில் எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு மாமி ஒவ்வொரு நாளும் மருமகளை நச்சரித்த வண்ணம்தான் இருப்பா. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மருமகள் குசினிக்குள் வைத்து 'நொய் நொய்' என்று சத்தம் போட கன்னத்தைப் பொத்தி ஓங்கி ஒரு அறை. இனிமேல் கத்தினா அல்லது இதை வெளியில் சொன்னால் பொலிசீல் பிடித்துக் கொடுத்துவிடுவேன். ஒரு மிரட்டல். அவ்வளவுதான் மாமி இப்பொழுது அந்த வீட்டுக்குப் போனால் பிள்ளைப்பூச்சி போல, இருக்கிறாவா அல்லது இல்லயா எனக்கூடத் தெரியாமல் இருக்கிறது.

மருமகள் என்னிடம், என்னாலும் எத்தனை காலத்தக்கென்று பொறுத்துக்கொள்வது என்று சொன்னா.

ஊரில் உள்ள மாமிமார்கள், மருமகள் மகன் அல்லது மகள் மருமகன் சண்டையில் தலைபோட்டு நியாயம் சொல்லப் போகிறேன் என்று முட்டாள்தனமாகக் குடும்பத்தைப் பிரித்து விடுவார்கள்.

மாமி மார்கள் இப்பொழுதும் விடாப் பிடியாக மருமகள் தனது வேலைக்காரி என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். அல்லது அவர்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள். முந்தி என்றால் மாமி வீட்டின் ராசாத்தி மாதிரி எல்லா அதிகாரங்களையும் சாவிக் கொத்தாக்கி இடுப்பில் சொருகியபடி வலம் வருவா.

ஆனால் இந்ததத் தொழிநுட்ப யுகத்தில் மாமி மார்கள் மாறவேண்டும். அல்லது மாற்றப்படுவார்கள்.

மாமியின் வீடுதான் நிம்மதியான வீடு என்று சொல்லி மருமகள்மார் மாமியின் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த மாமி மார்கள்தான் சிறந்த மாமிமார்கள். இல்லை என்று அடம்பிடிக்கும் மாமிமார்களை விட்டு விட்டு புறம்தள்ளியபடிக்கு மருமகள்மார் போய்க்கொண்டே இருக்கிறார்கள். கடைசி காலத்தில் நோய் வாய்ப்படுகிற நேரம் ஒரு மருமகளையாவது பக்கத்தில் இருக்கவைக்க பாசத்தோடு மாமி மார்கள் முயற்சிக்க வேண்டும். அல்லது சும்மா கஸ்டப்பட்டுச் சாகவேண்டிவரும். மாமிமார்களே கவனமாக இருங்கள்.

Saturday, 5 September 2009

முஸ்லிமாயிருத்தல்

உண்மைத்தன்மை குறித்து பல நேரங்களில் சிந்திக்கிறேன். எவ்வாறு உண்மையாளனாகக் காட்டிக் கொள்வது, எப்படி மற்றவர்களுக்கு அதனை விளங்க வைப்பது. உண்மையில் நான் நல்லவன். என்னிடம் கெட்ட எண்ணங்கள் இல்லை. தீவிரவாதம் தொடர்பாகவோ அல்லது குண்டு வெடித்தல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவனோ அல்லது அப்படியான சிந்தனைகளிலோ நான் இல்லை என்று எப்படி அவர்களுக்கு விளங்கப்படுத்துவது?
அண்மையில் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்த ஒரு இரவுப் பொழுது நேரம் இரவு 11.50. நித்திரை, உடல் களைப்பு, பிரயாண சோர்வு, ஸ்ரண்டட் எயார் போட்டில் இருந்து எனது இடத்துக்கு ரக்ஸி பிடித்துப் போவதென்றால் அறுபது பவுன் செலவழிக்க வேண்டும். அவ்வளவு பணத்தைச் செலவழிக்க எனது மனைவி இப்பொழுதெல்லாம் அனுமதி தருவதில்லை. எல்லாம் கிறடிட் கிறஞ் செய்த மாயம்.
ஐரோப்பா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு வேறு வரிசை; எங்களைப்போல வெளிநாட்டு அன்னியருக்கு வேறு வரிசை. எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த இமிகிறேசன் அதிகாரி சீல் குத்திவிட்டார்.
ஆனால் பக்கத்தில் நின்ற சி.ஐ.டி.யோ யாரோ, பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஒரு ரூமுக்குள் இருத்திவைத்துக் கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்விகளில் பாஸ்போர்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகாரி என்னிடம் கண்டதெல்லாம் நான் ஒரு முஸ்லிமாக இருப்பதுமட்டும்தான். ஐரோப்பாவில் பிறந்த முஸ்லிமோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிமோ என்ற பாகுபாடு இல்லாமல் ‘முஸ்லிம்கள் என்றால் சந்தேகி’ என்ற ஒரு நிலைமை ஐரோப்பாவில் தோன்றிவருவது தெளிவாகத் தெரிகிறது.
எங்கே இருக்கிறீர்கள்? இங்கு முஸ்லீம் இளைஞர்கள் எப்படி? உங்களது பக்கத்து வீட்டுக்காரர் யார்? உங்களது மனநிலையில் வெள்ளைக்காரர் எப்படி? உங்களுக்கு இந்த நாடு பிடித்திருக்கிறதா? ஏதேனும் வெறுப்பு இருக்கிறதா இங்கு? என்று அந்த ஒஃபிஸர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உரையாடல். எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. நடுச்சாமத்தில் என்னை வைத்திருந்து என்ன கேள்வி?
முஸ்லீம்கள் என்றாலே குண்டு வைத்து விடுவார்களோ எனும் சந்தேகத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக பயப்படுகிறார்கள். அப்படி சில சம்பவங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய அதீத பற்று போன்ற விடயங்கள் இங்குள்ள மீடியாக்களில் அடிக்கடி பாவிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய இளைஞனை தாடி, தலைப்பாகை, ஜிப்பா, பைஜாமா தோற்றத்தில் கண்டால் பொலிஸில் இருந்து இமிகிறேஸன் ஒஃபிஸர் வரை மிரண்டு போகிறார்கள். இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக-ஐரோப்பாவில்-இருக்கிறது.
உண்மையில் இது பின்லேடன் என்ற நபரை முன்னிறுத்தியதான ஒரு தோற்றப்பாடான அச்சமாகும். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சூத்திரதாரி என்று சந்தேகிக்கும் பின்லேடன் தாடி, ஜிப்பா, தலைப்பாகை கட்டி இருக்கிறார் என்பதற்காக அந்த உடை ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனை என்ன வென்று சொல்ல.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் அல்லது மதரஸா பிள்ளைகள் பயன்படுத்தும் ரூமால் அல்லது பெரிய ஸ்காஃப் ஏதோ பயங்கரவாதத்தின்அடையாளம் போல ஒரு மருட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்துவந்த ஒருவர் எனது நண்பனுக்கு அந்த ஸ்காஃபை கொடுத்தார். குளிருக்கு கழுத்தில் சுற்றிக் கொள்ளச் சொல்லி. ஆனால் அந்தத் தமிழ் நண்பர் எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். அவர் என்னிடம் தரும்போது சொன்னார் ‘என்னத்துக்கு சும்மா வம்பு’. உண்மையில் அவர் தமிழர். இந்த விறைக்குளிருக்கு கழுத்தில் கட்டுவதற்கே பயப்படுகிறார் அந்த ஸ்காபை. அதாவது மனப்பயம் சந்து இடமெங்கும் வியாபித்துள்ளது விளங்குகிறது.
அண்மையில் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த ஸ்காஃபை கட்டியிருந்த ஒரு பாடகி பயங்கரவாதத்தின் சின்னத்தை அணிந்திருக்கிறார் என்று ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகி பிரிட்டனிலும் பெரும் செய்தியாக வந்தது.
என் பாஸ்போர்ட்டை திருப்பித்தந்த அந்த ஒஃபிஸர் சொன்னார், ‘இது ஒரு சாதாரணமான விசாரிப்புதான், குறை விளங்க வேண்டாம்’. இங்கே குறை விளங்குவதற்கு அப்பால் ஒரு முஸ்லிம் ஆளை ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் பிரச்சினை. மும்பைத் தாக்குதலின்போதும் இது தெளிவாகவே தெரிந்தது. இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதான் எல்லா டெலிவிசன், பேப்பர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ அல்லது இந்துத் தீவிரவாதி என்றோ அல்லது பௌத்த தீவிரவாதி, யூத தீவிரவாதி என்று எந்த ஊடகங்களும் குறிப்பிட்டு சொல்வதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதி என்பது ஒரு சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்க்கிற சொல். அதுதான் இப்பொழுது உலகமெங்கும் நடக்கிறது.
ஒரு பொதுமகன் எவ்வாறு உண்மையானவன் என்பதனை பொலிஸிடமும் இமிக்கிறேசன்காரரிடமும் நிரூபிக்கிறது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது ஐரோப்பாவில்.
ஐரோப்பாவில் இருக்கின்ற அனேகமான முஸ்லிம்களின் பூர்வீகம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் என்றுதான் இருக்கின்றன. அவர்களின் பூர்வீக நாடுகளில் எல்லாமே யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் யாராவது ஒரு சொந்தக்காரன் ஒரு தொடுசலாக இருப்பான். அதனால் இவருக்கும் ஒரு தொடுசல் வர சாத்தியம் இருக்கிறது. அப்படித்தான் பலர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால் மதத்தைச் சொல்லி ஒரு முழுச் சமூகத்தை விரல் சுட்டி பயங்கரவாதிகள் என்று சொல்வது தினம் தினம் அதிகரித்துச் செல்கின்ற ஒரு விடயமாக மாறிவருகிறது ஐரோப்பாவில்.
ஒபாமாகூட முஸ்லிம் ஆட்கள் கூப்பிட்ட ஒரு விருந்துக்கும் இதுவரை போகவில்லை. காரணத்தையும்அவர் சொல்லவில்லை.

குடும்ப வைத்தியருக்கான 2009 விருது

From left : Mrs. Nagina Khan - senior receptionist , Rt Hon. John Mc Donnell MP (Guest of honour), Dr Shashikanth , Dr Carol Cooper , Mrs. Marie Boulter - Practice nurse and Miss Shayrun Begum - Practice Administrator

இந்த ஆண்டுக்கான சிறந்த குடும்ப வைத்தியருக்கான விருதினை எனது நண்பரும் தீபம் தொலைக்காட்சியில் வைத்திய ஆலோசனை வழங்கி வருபவருமான டொக்டர் ஷசிகாந்த் பெற்றுள்ளார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

Monday, 17 August 2009

செயற்கை விந்துகள் துள்ளும் உலகம்

ஒரு மாதிரியாக செயற்கையான விந்தணுக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சமூகம், குடும்பம், ஆண் பெண் உறவு, உடலுறவு எல்லாவற்றிற்கும் பெரும் சவாலாக அமையப் போகும் ஒன்று என்று இப்பொழுதே குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

யுலை 9ஆம் திகதி லண்டனில் இருந்து வெளிவரும் ‘சன்’ பேப்பரில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். ஆதாம் ஏவாள் இருவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள். ஏவாளை ஆதாம் கூப்பிடுகிறார். ‘நீ தேவையில்லை ஆதாம்’ என்றபடிக்கு செயற்கை விந்து டப்பாவை கையில் பிடித்தபடிக்கு ஏவாள் நிற்கிறாள்.

ஏற்கனவே சிங்கிள் மம், சிங்கிள் பாதர் என்று சிந்திக்கத் தொடங்கிய வெளிநாட்டு சமூக அமைப்புக்குள் உடலுறவில்லாத செயற்கை கருத்தரிப்பு அறிமுகமாகி டெஸ்ட் ட்யூப் பேபி என்று வந்து, அதற்கும் ஆணின் உயிருள்ள விந்தினை வயிற்றில் சுமந்து பிள்ளை பெற்றவர்கள் இப்பொழுது ஆண்களின் விந்தே தேவையில்லை எனும் அளவிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

முந்தி ஜீன்களை எடுத்து ஆடு செய்யப்போய் வத்திக்கான் திருச்சபை அல்லலோலகல்லோலப்பட்டதன் பிறகு இப்பொழுது ஒருத்தருக்கும் சொல்லாமல் ஆய்வுக் கூடங்களில் விஞ்ஞானிகள் மறு உருவங்கள் மறு வடிவங்கள் என்று ஒரு செல்லில் இருந்து மறு செல்லுக்கு என்று உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த உருவாக்கம் உலக நியதிகளோடு ஒத்துப்போக மாட்டாது என்று திருச்சபைகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது ‘சிங்கிள் மம்’ போன்றவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தங்களது கருப்பைக் குடத்துக்குள் இனம் தெரியாத ஆணின் விந்தை வாங்கி அடைகாக்கத் தேவையில்லை.
இயந்திரங்கள் செய்த விந்தை எடுத்து வைத்துக்கொண்டு பிள்ளை பெத்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரின் விந்து என்று அல்லாடவும் தேவையில்லை.

அந்தரங்கங்கள், அருமையான உடலுறவு எனும் இன்பம் என்பவையெல்லாவற்றையும் மறுதலிக்கும் ஒரு சமூகம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
செயற்கை விந்தணுவின் மூலம் முழுமையான ஒரு பிரசவத்தை எந்தக் குறையுமில்லாமல் செய்விக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உடலுறவின் மூலமான தொந்தரவுகள் இல்லை என்றும், ஒருவருக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து வாழவேண்டுமென்ற வாழ்வை விரும்பாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்த திங்கட்கிழமை காலை எங்கள் அலுவலகத்தில் இருந்த இருபது வயது பெண்மணி மிகவும் குதூகலமாக இருந்தாள். ‘இனி ஆண்களின் துணை தேவையில்லை’ என்றாள். ‘என்னத்துக்கு’ என்றுகேட்டேன். பிள்ளை பெறுவதற்கு என்றாள். ‘அப்போ செக்ஸுக்கு’ என்று கேட்டேன். அதற்கு மழுப்பினாள். ‘செக்ஸுக்கு ஆண்கள் வேண்டும். ஆனால் கருத்தரிப்பிற்கு செயற்கை விந்தா?’ என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை.
லண்டனில் ‘பிக்கட்லி சேக்கஸ்’ எனும் இடம்தான் விபச்சாரிகளுக்கு பேர் போன இடம். இடம் ஊத்தை. அந்த இடத்தில் போய் சுத்தினாலே தெரியும், தம்பி செக்ஸ் செய்யும் பெண்களிடத்துதான் வந்திருக்கிறார் என்று.
எனக்கு எல்லாவற்றையும் இந்த இரண்டு கண்களால் பார்த்து உணரவேண்டும் என்ற அவா இருக்கிறது. ஒரு நாள் அங்கு போனேன். சுற்றிவர செக்ஸ் சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது.
முதன் முதல் பார்க்கும்போது உண்மையில் அது ஒரு அதிசயம்தான். போய்ப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும். அங்கே மக்கள் வந்து தங்களுக்கான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு போவதை கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன், வாங்கும் பொருட்களை. வளைந்து கொடுக்கும் ஆண்குறிகள் பல வடிவங்களில் பல சைஸ்களில் இருக்கின்றன. பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்து வைத்திருக்கிறார்கள். அதனை வாங்குகிற பெண்கள் பல வயதினர். பிளாஸ்டிக்கால் செய்த, காற்று ஊதிப் பெண்ணாக்கிவிட்டு அதனோடு உடலுறவு கொள்ளத்தக்க பெண்ணுருவங்கள். உயிரற்றவை அவை. ஆனால் தனியே இருக்கும் ஆண்கள் அதனை வாங்கிப் போகிறார்கள் என்றார் விற்பனைப் பெண்மணி. காலையில் எழும்பி மூஞ்சையை நீட்டிப் பிடிக்காது, புறுபுறுக்காது, நகை நட்டு, சாறி, மூக்குமின்னி கேக்காது, சாப்பாடு குடிப்பு தேவையில்லை, உறங்காது இரவு முழுக்க பகல் முழுக்க விழித்திருக்கும் அந்த பிளாஸ்டிக் பெண்மணி. எனவே அது இலகு என்று வாங்கிப் போகிறார்கள் என்றாள் அவள். எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடிய ‘வாய்’ போன்ற பொருட்கள், யோனி போன்ற பொருட்கள், முலையைக் கௌவிப் பிடிக்கக்கூடியதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியதுமான பொருட்கள் செக்ஸ் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பொருட்கள், மேகஸின்கள், புத்தகங்கள், படங்கள், ஆண்,பெண் நிர்வாணப் படங்கள் வீடியோக்கள், சீடிகள், பாட்டுகள் என்ற எப்பொழுதும் வியாபாரம் நடக்கும் கடைகள் அவை.

லெஸ்பியன், கே எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல சோடி சோடியாகவும் ஆண்கள் பெண்களும் இந்தக் கடைகளுக்கு வருகிறார்கள்.
உடலுறவின் நிலைகளை மாற்றி மாற்றி துய்த்துணர இப்போதைய தலைமுறை பழகிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஒரு மனிதனின் செல்லை எடுத்து அதேபோல ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்பொழுது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு இந்து நாடென்று உணரப்படுகின்ற இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேச்சு அடிபடுகிறது.
ஓரினச் சேர்க்கை பற்றி அதன் மன உணர்வுகள் பற்றி அப்படி இல்லாத என்னைப் போன்றவர்கள் முழுமையாக தெரிவிக்க முடியாது. ஆனால் அடிமனதின் உணர்வுகளில் எதிர்ப்பின் மீதான கவர்ச்சியின்மை உணர்ச்சியின்மை பற்றி ஒரு ‘கே’யுடன் உரையாடி இருக்கிறேன். அழகான ஆணைக் கண்டால் அவரோடு உடலுறவு கொள்ளத் தூண்டும் எண்ணங்கள் தனக்கு வரும் என்று சொன்னார்.
ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான அழகான பெண்ணைக் கண்டால் எல்லாம் துடிப்பது போல; ஒருபால் உறவுக்காரருக்கு அது இருக்குமாம் ஒத்த பாலினைக் கண்டால்.
வெளிநாடுகளில் ஒரு பால் சேர்க்கைக்காரர்கள் ஒன்றாக இருந்து வாழ்கிறார்கள். ஆனால் ஆண் ஒருபால் உறவுக்காரர்களின் பின் வழி மூலமான உடலுறவால் எயிட்ஸ் போன்ற பேராபத்து தொடர்பான அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது. எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் உறவு கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வீதியில் இறங்கிக் குதூகலித்த ஆட்களின் தொகை பிரமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கையிலும் ஒரு பாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களவாகவே தங்கள் சோடிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாக அவர்களும் சிந்திக்கிறார்கள். கூடித் திருமணம் முடித்து வாழ்வது என்பது ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஒரு விசயமேயில்லை.
இங்கு சுரங்க ரயில், பஸ்களில் ஆண் ஆண், பெண்பெண் சோடிகள் கட்டிப் பிடித்து உதட்டு முத்தம் எல்லாம் கொடுத்து சந்தோசமாக பயணம் செய்வார்கள். எங்களுக்கு அதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.
எனது சின்ன மகள் கூட சொல்வான் அவை லெஸ்பியன் என்று. சில விசயங்கள் ஆரம்பத்தில்தான் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்.
இலங்கையில் எங்கள் கிராமங்களில்கூட ஆண்கள் சின்னப் பையன்களோடு உடலுறவு கொள்வது நடந்திருக்கிறது. அது ஒருவகை உணர்வுகளின் வெளிப்பாடுதான். அவர்கள் ஆண்களோடுதான் சாகும்வரை உடலுறவு கொள்வார்கள் என்றில்லை. வளர்ந்தபிறகு கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகள் பெத்து இருப்பார்கள். அது ஒரு கவர்ச்சி மட்டும்தான்.
ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மறுபாலில் வெறுப்புள்ளவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் முடித்து உடலுறவு கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது அதீத வளர்ச்சி, தொழில் நுட்பத் தாக்கம், துய்த்து எல்லாவற்றையும் அனுபவித்துவிடத் துடிக்கும் மனம் என்ற விடயங்களால் அன்பு, ஆதரவு என்பன எல்லாம் சிதறிப் போகின்றன. பிரபலங்களுக்கு எல்லாம் இது பெரிய தலையிடிதான். எங்களுக்கு முன்னால்இருக்கும் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று பிள்ளைகள். ‘ஜாக்ஸனைப்போல ஒரு சிறந்த அப்பாவை உலகத்தில் நாங்கள் காணவில்லை’ என்று மனமுருகி பிரேதத்துக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருக்க ஜாக்சனின் மனைவி ஒரு அறிக்கை விடுகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் ஜாக்ஸனுக்குப் பிறந்தது அல்ல. தான் ஜாக்ஸனின் டொக்டரோடு உடலுறவில் ஈடுபட்டுத்தான் பிறந்தது என்று.
பிள்ளைகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். தந்தை செத்தபிறகுகூட அந்தப் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுகிறார்களில்லை. இந்தப் பொறிபோதும் மீடியாக்களுக்கு. அந்தப் பிள்ளைகளை வேதனைப்படுத்துவதற்கு.

உண்மையில் உடலுறவின் தாத்பரியம், லிமிட் என்று எதனையும் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்பொழுது செயற்கை விந்துகளும் ஊர்ந்து ஊர்ந்து வந்துவிட்டன.
எல்லாம் செயற்கையாகவே போகப்போகிறதா என்று அச்சப்படத்தேவையில்லை என்கிறாள் மனைவி. ஏனெனில் மனம் முழுக்க காதலுடன் செய்யும் உடலுறவுக்கு நிகரில்லை. அந்த இன்பத்துக்கும் ஈடில்லை.

Sunday, 16 August 2009

அவருக்கு மட்டுமான சூரியன்

நவஜோதி அகஸ்தியரின் மகள் என்பது மட்டும் கவிதைகளை எழுதுவதற்கான அடையாளம் இல்லை. நவஜோதிக்குள் இருக்கும் ஒரு கவிதைக்குரல்தான் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’. அவரது முதலாவது கவிதைகளின் தொகுப்பு இது.
வரலாறும் அனுபவமும் எப்பொழுதும் பண்பட்ட ஆக்க இலக்கியவாதிகளைத் தரும். ‘தீபம்’தொலைக்காட்சியின் இலக்கிய நேரம் பகுதிக்கு ஆர்வமுடன் அவர் எழுதிய கவிதைகள் சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு நான் ‘விஷவல்’சேர்த்து அழகு படுத்தியிருந்தேன். மனப்பதிவுகள் மனஅதிர்வுகள் வெளிப்பாடுகள் இவரது கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதைகளுக்கு என்ன வரையறை கொடுப்பது என்பது பலவாறாக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன்று.
எல்லாக் கைகளையும் தட்டிவிட்டு அகல விரித்துக் கொண்டு ‘புதுக்கவிதை தனது ஆழத்தைப் பதித்து ஆண்டுகள் பல.
எமது ஆழ் மனதுக்குள் சிக்காராக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைப்பாகைக் கவிஞன் எல்லாவற்றையும் 39 வயதுக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டான். அவனைவிட வேறு யார் உளர். (பாரதி பிறந்த நாள் - 1882 – டிசம்பர் 11. இவ்வுலகை விட்டுப் போன நாள் 1921- செப்டம்பர் 12.)
இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துவிட்டுப்போன கவிதைகளால் மட்டுமே அவன் உலகம் முடியும் வரை வாழுகிறான்.
‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு முறையும் பெண்கள் எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். எனது செவ்வியொன்றில் பிராங்போட் ரஞ்சனி சொன்னது இன்னும் மனதுக்குள் இருக்கிறது. “பெண்கள் ஆண்கள் என்று என்ன? இரண்டும் சாப்பிடுவது ஒரே மாதிரி குடிப்பது ஒரே மாதிரி சுவாசிப்பது ஒரே மாதிரி பேசுவது ஒரே மாதிரி சிரிப்பது ஒரே மாதிரி கேட்பது ஒரே மாதிரி பின்னரென்ன வேறுபாடு மேல் எண்ணம் ஆண் என்பது” .
“எழுத்துக்கள் என்ன செய்துவிடப் போகின்றன. எவ்வளவு எழுதினோம் எழுதுகிறோம் ஆனால் சமூகம் மாறுகிறதா? என்று எனது பத்திரிகையாளரான எனது நண்பி ஒருத்தி கேட்டாள். “தொடர்ந்து செய்யுங்கள் எங்காவது ஒரு அதிர்வு ஏற்படும் சிலவேளை உங்கள் பார்வை படாத இடத்தில் கூட அது நிகழலாம்”என்றேன்.

கவிதைகளை தொகுப்புக்காக தெரிவு செய்வது எப்படி என்பதில் படைப்பாளிகளின் தைரியம் எந்த மட்டில் இருக்கவேண்டும் எனப்படுவது மிகவும் குழப்பகரமானதாவே இருக்கிறது. பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் படைப்புக்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பிற்கு எடுபடுமா என்ற அச்சம் இருக்கிறது.
தெரிவு என்பது என்ன? வெளிவந்த கவிதைகள் தானே இவை. எல்லாவற்றையும் தொகுப்பில் சேர்க்கலாமே என்பதுதான் நவஜோதியின் அபிப்பிராயமாக இருந்தது.
பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும்போது அழகாக இருக்கும் கவிதைகள் தொகுப்பில் வரும்போது அழகாக இல்லாமல் போகின்றதா? அல்லது என்ன?
கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து அவரவர்க்கும் ஒவ்வொரு தேவையும் ரசனையும் வெளிப்பாடும் இருக்கிறது.
நவஜோதியின் கவிதைகள் உணர்வுகளின் வடிகாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதனை உணருகிறேன்..
மன நெருடல்கள் கவிதைகளாகவோ சிறுகதையாகவோ வேறு ஏதாவதாகவோ வடிகாலாய் மொழியாய் பிரிக்கப்படும்போது ஒரு ஆறுதல் வரத்தான் செய்யும். அந்த ஆறுதல்தான்.

‘நானும் உன்னுடன் வந்திருக்கலாமேஎன நினைத்தேன்எவ்வளவு தூரம் வந்தாலும்ஓர் இடத்தில் பிரியத்தானே வேண்டும்அந்த இனிய அனுபவத்தைநெஞ்சில் தேக்கிக் கொண்டேன்புகையிரதம் போய்க் கொண்டிருந்தது.
(உனக்கு நினைவிருக்கிறதா)

ஒரு தேர்ந்த வாசகன் கவிதைகளுக்குள் தன்னை உட்புகுத்தி அதன் இடைவெளிகளை நெருக்கிக் கொண்டு ஐக்கியமாகும்போது கவிதை வெற்றியடைந்து விடுகிறது.
சில வேளைகளில் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்தாளரின் தன்னுணர்வால் மட்டும் வெளிப்படும்போது அது வாசகனுக்கு சலிப்பைக்கூடத் தந்துவிடும். அதற்காக எதை எழுதலாம் எதை எழுதாமல் விடலாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தரப்படக்கூடாது.
மனத்தின் பாடுகளை கவிதையாக்கி பார்ப்பதுதானே கவிஞனின் வேலை.
உண்மையில் உறவுகள் எமது பூமி தாய் நிலம் பார்க்கும் அவலங்கள் இவைகளை கவிதைகளாக வெளிப்படுத்தும் அற்புதம் கவிஞர்களுக்கு மட்டுமே வாய்த்தது.
எத்தனையோ உணர்வுகளை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்வுகள் இருக்கும் எழுதத் தெரியாது. எத்தனை பேர் மற்றவர்களை ஆகர்ஷிக்கிறார்கள்.
எண்ணிப் பார்த்தால் லட்சக் கணக்கான மனிதர்களுக்குள் ஒரு கவிஞர் உட்கார்ந்திருப்பார். உண்மையில் கவிஞன் ஒரு அற்புதம் தானே.

நெகிழும், மிதக்கும், வேதனைப்படுத்தும், எம்பிக் குதிக்கும் உணர்வுகளை கவிதைகளால் வடிய விடுவது ஒரு ஆசுவசிப்புத்தான்.

பகலில் தேவையில்லாமல்தேய்ந்து விட்டேன்
இரவின் அமைதியை தேடுகிறேன்நிம்மதியை;
இரவின் கருப்பைக்குள் தேடுகிறேன்.நினைத்துப் பார்க்கிறேன்.
வியர்த்தம் தெரிகிறது.போர் கடுமையாக இருந்தபோதுகையில் வரும் வெற்றியின் இனிமைஇஎன்னுள் பிறை தெரிகிறது நான் பிறை கண்டவள் நிலாக் கண்டவள் அல்ல... (இதயத்தின் தவிப்பு)

இது நவஜோதியின் ஆசுவாசிப்பு.


பெரும்பாலான கவிதைகளில் தனிமை மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதும் சில புள்ளிகளை மட்டும் சுற்றி வருவதும் வாசகனுக்கு சலிப்பைத் தரலாம். மொழியின் போதாமை தொக்கி நிற்பதனை குறிப்பிடாமல் செல்ல முடியவில்லை. எனக்கு. ஆழமான வாசிப்பு இன்னும் உள்வாங்குதல் மொழியை செழுமை செய்தல் போன்றவற்றை நவஜோதிக்கு சொல்லக்கூடிய ஒன்று எனலாம்.

கவிதைகளோடு வாசம் செய்வதும் கவிதைகளோடு சயனிப்பதும் எவ்வளவு சுகமானது.லண்டனில் ஒரு நல்ல கவிதை சொல்பவர் கிடைத்திருக்கிறார். அவர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
கவிஞருக்குள் இருக்கும் இரக்கம், அன்பு, மற்றவரை கனம் பண்ணுதல்,விருந்தோம்பல் என்ற எல்லாப் பண்புகளும் நவஜோதியில் இருக்கின்றன.. ஜோகரட்னத்திலும் அது மிகையாகவே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.
free counters

நண்பர்கள் கூட்டம்