Thursday, 29 March 2012

லண்டன் உங்களை வரவேற்பதில்லை (மதிப்புரை)

வாழ்வும் நினைவும் விமர்சனமும் புலம்பெயர் தேசங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் தம் சொந்த தேச மக்களுக்கு சொல்லவிரும்பியவை.
இந்திய தமிழர்களும் ஈழத்தமிழர்கள் போல் உலகின் பல நாடுகளிலும் பரவி வாழ்கிறார்கள். என்றாலும் காத்திரமான இலக்கிய படைப்புகளை அவர்களால் தர முடிந்ததில்லை. ஈழத்தமிழர்களால் மட்டுமே இது சாத்தியமானது. இதற்கு முக்கிய காரணம் வாழ்வின் துயரம் படிந்த அனுபவங்கள். இளைய அப்துல்லாஹ் லண்டனில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்.கவிதை,சிறுகதை மற்றும் கட்டுரை நூல்கள் பல எழுதியுள்ளார். தமிழக மற்றும் ஈழத்து பத்திரிகைகளில் தொடர்ந்தும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரின் அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்,கடவுளின் நிலம் ஆகிய கட்டுரை தொகுப்புகளின் தொடர்ச்சியாகவே இந்த நூலையும் கொள்ளலாம். இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ஈழத்திலிருந்து வெளிவரும் தினக்குரலில் வெளிவந்தவை. புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்களின் வாழ்வை தெரிந்து கொள்ளும் முகமாக எழுதப்பட்டவை.இதில் சாதி,மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்று வாழ்வின் அடிப்படை சார்ந்த விசயங்களை பற்றி விமர்சனபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சொந்த மண்ணின் ஏக்கம் மனம் முழுக்க இருக்கும். இளைய அப்துல்லாஹ் லண்டன் அனுபவங்களை எழுதினாலும் ஊர் நினைப்பு அவருக்கு வந்து கொண்டே இருக்கிறது.வீடு எனும் பெருஞ்செல்வம் என்ற கட்டுரையில் இதை அதிகம் பார்க்க முடியும். லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற தலைப்பு எதிர் மறையாகத்தோன்றினாலும் பத்து,இருபது ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் புலம் பெயர்ந்தவர்களுக்கு இருந்த வேலைவாய்ப்பு,வரவேற்பு நிகழ்கால்த்தில் இல்லை என்பதையும் பிரித்தானிய அரசாங்க கொள்கைகளால் அகதிகளுக்கு ஏற்படும் மோசமான விளைவுகளையும் பல அனுபவங்களின் மூலம் உணர்த்துகிறார் கட்டுரையாளர். மூத்த தலைமுறையினரின் இரட்டை மனநிலையையும் இளைய தலைமுறையினரின் சுதந்திர மன நிலையையும் பல கட்டுரைகளில் மனோவியல் பாங்குடன் எழுதியள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் சொந்த மண்ணைப்பற்றிய கவலை கொண்டவர்கள்தான். ஆனாலும் ஈழத்தில் அமைதி திரும்பினாலும் சொந்த மண்ணுக்கு திரும்பும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகளின் அவமதிப்பு செய்திக்கு வழக்கு போட்டு வெற்றி பெற்ற ஈழத்தமிழர் பரமேஸ்வரன் பற்றிய கட்டுரை ஒரு புனைகதைக்கு நிகரானது.இந்தியாவிலோ இலங்கையிலோ நடக்கமுடியாதது.2009 ஆம் ஆண்டு சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது உலகம் முழுக்க தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது லண்டனிலும் போராட்டம் நடந்தது.அதில் பங்கேற்று பல நாட்கள் உண்ணா நோன்பு இருந்தவர் பரமேஸ்வரன்.அவரது உண்ணா நோன்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்ட டெயிலி மெயில்,சண் ஆகிய பெரிய பத்திரிகைகள் மீது தனது அகதி நிலையிலும் கூட வழக்கு தொடர்ந்து 77 500 ஸ்டெர்லிங் பவுண் மான நஸ்ட ஈடாக பெற்றுள்ளார். ஆனால் அப்போது அங்கிருந்த தமிழர்கள் அவருக்கு ஆதரவாக இல்லாமல், வெற்றி பெற்றவுடன் கொண்டாடிய போக்கையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார் இளைய அப்துல்லாஹ். ஈழக்கவிஞரும் போராளியுமான புதுவை இரத்தினதுரை பற்றிய கட்டுரை கண்ணீரை வரவழைப்பது. இளைய அப்துல்லாஹ்விற்கு மிக அருமையான மொழிநடை கை வந்துள்ளது. தமிழக ஈழ எல்லை மீறி உலகின் பல்வேறு இடங்களுக்கு தனது கட்டுரை கதைக்களங்களை இழுத்து சென்றவர் அயலில்(கனடாவில்) வாழும் ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியள்ளது மிகவும் பொருத்தமானது. கடைசியாக ஒன்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஈழப்போர் நடந்தவரை புலம்பெயர் எழுத்துக்களின் முக்கியத்துவம் அதிகம். ஏனென்றால் அவர்களின் துயரம் பெரிது.ஆனால் இப்போது அதை விட ஆயிரம் மடங்கு துயரம் சுமக்கும் முள்ளிவாய்க்காலின் இரத்த சாட்சியாய் வாழும் முகமறியாத மனிதர்களின் வார்த்தைகளுக்காக உலகம் காத்திருக்கிறது. (பவுத்த அய்யனார்-இந்தியா டுடே மார்ச் 14 2012)

நண்பர்கள் கூட்டம்