Wednesday, 27 May 2009

தாலியால் நின்று போன திருமணம்


ங்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளை தாலியை கட்டுவோமா வேண்டாமா என்றுயோசிக்கிறார். தனக்கு தாலி கட்ட விரும்பமில்லை. கொஞ்சம் பெரியார் கொள்கைகளோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர். ஆனால், பெண் வீட்டுக்காரர் மாப்பிள்ளை லண்டன் என்றவுடன் சம்மதித்துவிட்டனர். பெண்ணுக்கு தாலி கட்டுவதுதானே மரபு. அதுதானே முறை என்று மாப்பிள்ளையின் வீட்டுக்காரர் அக்கம் பக்கத்துகாரர் ஒரே பிடியாய் பிடிக்கினம். ஆனால், மாப்பிள்ளையோ அது பெண்ணடிமைத்தனம் என்கிறார்.தாலி கட்டினால் புருசன் சாகும்வரை கழற்றக்கூடாது என்றுதான் ஊரில் வழக்கமிருக்கிறது. கழுத்திலை லேசான சங்கிலி போடுகிறவர்களும் கழுத்திலை பாரத்தை விரும்பாதவர்களும் இப்ப உள்ள பிள்ளைகளில் வேலைக்கு போகிறவர்களும் தாலியைக் கழட்டி வீட்டில் வைத்து விட்டே வருகிறவர்களை பார்க்கிறேன்.
புருசன் மரணமானபிறகு தாலியைத் தொடர்ந்து போட்டிருக்கிற ஒரு பெண்மணியையும் இங்கே கண்டிருக்கிறேன். அவ சொல்கிறா புருசன் இருக்கும் பொழுது மட்டும் ஆர் போடச் சொன்னவை? இது வேறுமாதிரியான எதிர்ப்பு.
1954 களிலே தமிழ் நாட்டில் தாலி தொடர்பான ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கிறது. தமிழர்களிடத்தில் இந்த தாலி தொடர்பான வழக்கம் ஏதும் இல்லை என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. பெரியார் தமிழகத்தில் தாலி இல்லாத பல திருமணங்களை நடத்தி வைத்தார்.
1968ம் ஆண்டு அண்ணாத்துரை காலத்தில் தமிழகத்திலே நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் தாலி இல்லாத கல்யாணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ் நாட்டிலே இது செல்லுபடியாகும்.
பெண்கள் விடயத்தில் ஆண்கள் செய்யும் அடிமைத்தன சாட்சியங்களுள் ஒன்று தாலி என்றே பெண்ணியவாதிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு பெண்விடுதலை தொடர்பாக பேசுகிறோமோ அதுபோல தாலிக்கும் மெட்டிக்கும் விடுலை வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
கணவர் இறந்தவுடன் கைவளையல்களை உடைத்து தாலியை அறுத்து குங்குமத்தை அழித்து என்று ஒரு பெண்ணுக்கு நடக்கிற கொடுமை தாங்கொணாதது எனவே இவையெல்லாம் இருந்தால் தானே அவளை அவ்வாறு செய்ய வேண்டும். தாலி அணியாவிட்டால் அறுக்கத் தேவையில்லையே என்று கேட்கும் பெண்களின் கேள்விகளும் சரியே.

உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர புதல்வற் பயந்த சிதலை அவ்வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி கற்பினின் வழா அ.
நற்பல உதவி பெற்றோன் பெட்டும் பிணைய அக! என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி, பல் இருங்கதுப்பின் நெல்லொரு தயங்கவதுவை நல் மணம் கழிந்த பின்றை

இந்த அக நானூற்று பாடலில் வருகின்ற திருமணக் காட்சியில் எங்குமே தாலி குறிப்பிடப்படவில்லையே. பிறகென்ன தாலி என்று அடம்பிடிக்கிறார் மாப்பிள்ளை. தாலி எங்கேயிருந்து தமிழர் வாழ்வில் புகுந்து இவ்வளவு பிரச்சினைகளையும் எழுப்புகிறது ஆண்டவனே!

தாலியால் ஒரு கல்யாணமே நின்று போனது எனக்குத் தெரியும். பெண் இங்கே புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு தங்கம் என்றாலே அலர்ஜி. அவள் ஒருவனை காதலித்தாள் பின்னர் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கல்யாணம் செய்ய சம்மதித்தாள். ஆனால், நோதாலி என்று சொல்லிவிட்டாள். பெற்றோர் பணக்காரர் தங்களது படாடோபங்களை இங்கு வெளிநாடுகளில் காட்டுவதற்கு கோவில்குளம், சாமத்தியவீடு, கல்யாண வீடு என்று அலைந்து திரிவார்கள். ஆனால் இங்குள்ள பிள்ளைகள் அப்படியில்லை. தாங்கள் எது நினைத்ததோ அதனைத்தான் செய்வார்கள். மற்றவர்களைப் பற்றி மிகவும் பார்க்க, கேட்க மாட்டார்கள்.

பிள்ளை சொல்லிவிட்டது தங்கம் எதுவுமே வேண்டாம். தாலி உட்பட ஆனால், பெற்றோர் தாலி கட்டாமல் என்ன கல்யாணம் என்று சொல்லி வாக்குவாதப்பட கல்யாணம் நின்று போனது. பின்னர் அந்தப் பெடியனும் பெட்டையும் லிவ் இன்டு கெதர் வாழ்க்கை வாழுகினம். அவர்களைத் தடுக்க முடியாது. அப்பிடித் தடுத்தால் அது இங்கே லண்டனில் கோட்டு கேஸ் என்று பெரிய பிரச்சினையாகிவிடும். தாலி ஒரு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் சிலருக்கு அது சுகம். பலருக்கு அது சுமையாகிக் கிடக்கிறது.

புன்னியாமீன்

நூறு புத்தகங்களை எழுதி விட்டார். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆசிரியர் என்பதற்கு அப்பால் அவர் இதுவரை 240 எழுத்தாளர்களின் முழு விபரங்களைத் தொகுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு எல்லா எழுத்தாளர்களும் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
எனக்கு 2005ம் ஆண்டு ஒரு சிவப்பு படிவம் ஒன்று அனுப்பி வைத்தார் புன்னியாமீன். அதில் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதனைப் பார்த்தவுடன் அலுப்புத்தட்டியது. நிறைய விவரங்கள். அது இது என்று அதிகம். அப்படியே வைத்துவிட்டேன்.ஆனால், ஏதோ ஒரு எண்ணத்தில் இங்கு செல்வராஜா லண்டனில் வைத்துத் தந்த ஒரு படிவத்தை பொறுமையாக உட்கார்ந்து எழுதிக் கொடுத்தேன். (தினக்குரலில் ஞாயிறு இதழில் வந்தது)அது இப்பொழுது தொகுதி 09இல் வந்திருக்கிறது. அதனைத் திறந்து பார்த்த பொழுதுதான் உண்மையில் புன்னியாமீனின் பெரும் சேவை எனக்குத் தெரிந்தது.தமிழ் எழுத்தாளர்களின் விபரத்தை முழுமையாகப் பதிவு செய்த புன்னியவான் அவர்.
எல்லா விபரங்களையும் மிகத் தெளிவாக தொகுத்திருக்கிறார். இது எல்லா நூலகங்களுக்கும் போகிறது. எல்லோரும் பார்ப்பர். அட இத்தனை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்களா இலங்கையில் என்று மூக்கில் விரலை வைப்பர். அது மட்டுமல்ல, மற்றவர்களைப் போல இல்லாமல் தெந்தட்டமான குறிப்புகள் இல்லாமல் விலாவாரியான குறிப்புகள் விபரங்களை சேகரித்து பதிப்பித்து இருக்கிறீர்கள். ஒரு சிறந்த தமிழ்ப் பணி செய்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் வன்னியில் தரமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் நிச்சயம் பதியப்பட வேண்டியவர்கள்.
கலாபூசணமே உங்களுக்கு மௌத்துக்குப் பிறகும் பேசப்படும் விடயம் இது. கை குலுக்கல்கள் உங்களுக்கு

இந்து திருமணம் தொடர்பான அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Betty LaDuke அவருக்கு நன்றி

Sunday, 17 May 2009

(கவிதை) பிணங்களோடே வாழ்தல்

கருங்காக்கைகள் தொண்டை
அடைத்துப்போய் கிடக்கின்றன.
எத்தனை பிரேதங்களுக்கென்று
ஒப்பாரி வைப்பது
பிரேதம் செய்கிறது தேசம்.
தெருவில் வீட்டில்மதா கோவிலில்
பள்ளிவாசலில்
சூழ்ந்து கொண்டுள்ளபிரேதங்களின் குவியலில்
இடறுப்படுகின்றன காக்கைகள்


குஞ்சுகள் தொடர்பில் கவனமற்று
ஒற்றை வெளி மதிலில்
உட்கார்ந்து கொண்டேஅகவுகின்றன காக்கைகள்
புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய
பெண்ணுடலின் யோனிக்குள்
குண்டு வைத்து தகர்த்துப்போகிறான்ஒருவன்.

‘கேலி கேலி’யாக வெட்டிய
குழந்தையைகயிறில் தொங்கவிட்டுபோகிறான் மற்றொருவன்
வாய்க்குள் துப்பாக்கிவைத்து
சன்னம் பாய்ச்சி சிரிக்கிறான்இன்னொருவன்

பிரேதம்.வெட்டுதல் கூறுபோடுதல் எரித்தல் குதறுதல் புணர்தல் என்றெல்லாம்செய்து விட்டுஇறுதியில் பிரேதம் செய்கிறான்
தமிழிச்சிகள் தங்கள் யோனிகளைபாதுகாப்பு செய்யுங்கள்.
அல்லது அவர்களது குறிகளைஅறுப்பதற்கு கத்தி வைத்துக்கொண்டேபடுத்திருங்கள்
சிங்களச்சிப்பாய் அதோ வருகிறான் குறியோடு
கருங்காகங்கள் தொண்டைஅடைத்துப்போய்
அடுத்த திக்கு போகின்றன.
* கேலி கேலி - துண்டு துண்டாக (சிங்களச்சொல்) -


அஞ்சலி சு வில்வரத்தினம்

கவிஞர் சு. வில்வரத்தினம்
(1950 – 2006)
7.8.1950 இல் புங்குடுதீவு எனும் கிராமத்தில் பிறந்த கவிஞர் சு. வில்வரத்தினம் 2006.12.09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பில் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார். மரணிக்கும் போது அவருக்கு வயது 56.

வில்வரத்தினத்தின் வீட்டுக்கு போவதென்றால் எனது மகளுக்கும் மகனுக்கும் மிகவிருப்பம். அவரது திருகோணமலை மட்டிக்களி வீட்டுக்கு, திருகோணமலைக்கு போகும் நேரங்களில் நாம் போவோம்.

வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டு வேப்பமர நிழலில் உட்கார்ந்து அவரது அழகான குரலில் தனது இசைப்பாக்களை பாடும் பொழுது நாம் மகிழ்ந்து போவோம்.
இன்னும் எனது காதுக்குள் பூமியம்மா பூமியம்மா உன் புன்னகையை எங்கொளிச்சாய்?. நீசிரிக்க வயல்களெல்லாம் நீறுபூத்துக் கிடக்குதம்மா... என்று வில்வரத்தினம் பாடியது கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அகங்களும் முகம்களும் (1985), காலத்துயர் (1995), காற்றுவழிக்கிராமம் (1995), நெற்றிமண் (2000), என்ற தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2000 வரை எழுதிய கவிதைகளையும் இணைத்து -உயிர்த்தெழும் காலத்திற்காக 2001 மே இல் வெளிவந்தது.
1970இல் ஜீவாவின் மல்லிகை சஞ்சிகையில் எழுதத் தொடங்கியவர் வில்வரத்தினம்.
1989ஆம் ஆண்டு அவரது வீடு எரியூட்டப்பட்ட போது பல கவிதைகள் எரிந்து சாம்பராகியுள்ளன. இதனை மிகவும் கவலையோடு தெரிவிப்பார்.
காற்றுவழிக்கிராமம் -தனது ஊரின் அழிவு தொடர்பான சோகமான வடுக்களை சுமந்து அவர் எழுதிய கவிதைகள். ஒவ்வொரு தமிழ் கிராமத்தையும் இராணுவம் அழித்துப் போட்டு போனபின்பு இப்படித்தான் இருக்கும்.
முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம் பாத்திங்களோடு தேய்படும் வளையல் ஒலி ஆச்சி, அப்பு, அம்மோயென அன்பொழுகும் குரல்கள் ஒன்றையுமே காணோம்! என வில்வரத்தினம் எழுதினார்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையே தீர்வு என்று இறுதிவரை சொன்னவர் அவர்.
முஸ்லிம் மக்கள் புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட போது,

''எப்படி முடிந்தது என்னால் - தொழுகை வடுப்பூத்த நெத்திப்பொட்டில் சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் \ அவர்களை பிறந்த மண்ணினின்றும் துரத்தி\ என்னை நானே காயப்படுத்திக் கொள்ள\ என்று ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக நின்று தானாக ஒலித்தவர்.

இறுதிவரை வாசிப்பை கைவிடாதவர், யர்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் தனது இரத்தத்தை தானமாக கொடுத்த போது கிடைத்த அரசு நிவாரணப் பணத்தில் சி.என் அண்ணாத்துரையின் ~ரங்கோன் ராதா முதலான நூல்களை வாங்கி வாசிக்கும் அளவுக்கு வாசிப்பின் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். வில்வரத்தினம் அவர் தான் எழுதிய எல்லா கவிதைகளையும் நினைவில் பதித்து வைத்திருந்தார். அவரின் ஞாபக சக்தியை எண்ணி வியந்து இருக்கின்றேன்.
மு.பொ.வின் ''மார்கழி குமரி'' நீலாவணனின் ''ஓவண்டிக்காரா''போன்ற பாடல்களை வில்வரத்தினம் பாடக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் பல சந்தர்ப்பங்களில்.
இயக்கங்களாலும் இராணுவம், கடற்படையிலும் 18.10.1992இல் யாழ்ப்பாணத்தின் தீவுகள் சிறைப்பிக்கப்படுவதற்கு முதல் நாள் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை ஊருக்கு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் அவரும் சென்றார்.
ஆனால் இறுதிவரை அவரின் நம்பிக்கை கைகூடவில்லை. போர் எதிர்ப்பு பாடல்களிலும் கவிதைகளிலும் கருத்துக்களிலும் போராட்டச் சூழலின் எதிர் நல்விளைவுகளை கண்டார் சு. வில்வரத்தினம்.
36 வருடங்கள் ஓயாமல் எழுதிய கவிஞரின் பேனா உறங்கிவிட்டது.
ஆன்மீக நாட்டம் மீதூரப்பெற்றவர் சு. வில்வரத்தினம். தனது குருதேவராக ஸ்ரீ நந்த கோபாலகிரி அவர்களை வரித்துக் கொண்டவர். ''உயிர்த் தெழும் காலத்திற்காக''எனும் தனது பெரும் கவிதைத் தொகுப்பை தனது குருவுக்கு சமர்ப்பணம் செய்தார் இப்படி.

''உன்னைச் சரண் அடைந்தேன்
ஓம் குரு தேவா
உயிர்த் தெழுகின்ற காலத்திற்காக
என்னைத் தருவதெனினும்
இசைவேன் இஃது உனக்காக''

எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல நண்பராக, ஒரு சிறந்த கவிஞராக தனது மனைவிக்கு நல்ல கணவராக, ரட்ஷகிக்கும் சசி பவனுக்கும் மிக நல்ல அப்பாவாக வாழ்ந்த வில்வரத்தினம் இல்லாதது பெரும் துக்கமாகவும் கவலையாகவும இருக்கிறது எனது மனதில்.

Friday, 15 May 2009

சிறுகதை- ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்


முன்னுரை ஒன்றுக்கு பிறகு வாசிப்போம்

இதில் வரும் ஜின்கள் எனும் விடயதானம் முஸ்லிம்களுக்கு தெரியும். ஏனைய அன்பர்களுக்காக கொஞ்சம் சொல்ல வேண்டும்.
ஜின்கள் அல்லாஹ்வின் படைப்பு என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. அவை கூட்டம் குடும்பத்தோடு வாழ்கின்றன. மனைவி பிள்ளைகள் இருக்கின்றன. இந்த உலகில் மனிதர் ஜின்களைப் பார்க்க முடியாது. ஆனால் ஜின்களுக்கு மனிதர்களைப் பார்க்க முடியும். மறுமை நாளில் இது மாறி இருக்கும். ஜின்களுக்கு மனிதர்களை பார்க்க முடியாது. இவை அரூபமானவை. இவைகளை ஆவிகள் என்றோ பேய்கள் என்றோ சொல்ல முடியாது. தனிப் பெரும் படைப்பு என்றுதான் இப்போதைக்கு சொல்லலாம். விளக்கம் பெரிது. இவை சில மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. ஜின் ஓட்டி காக்காவை ஆவி ஒட்டிக்காக்கா என்று ஒரு விளக்கத்திற்கு சொல்லிக் கொள்ளலாம்.

Bபத்வா – சபிப்பு
ஒழு – அங்க சுத்தி செய்தல்
ஹவுள் - பள்ளிவாசலில் இருக்கும் நீர்த்தடாகம்
ஸப் - தொழுகை வரிசை
பாங்கு – தொழுக்கான அழைப்பு
மஃரிபு – பின் அந்தி தொழுகை
மையத்து - பிரேதம்
சஹன் சாப்பாடு – ஒரு பாத்திரத்தில் சேர்ந்துண்ணல்
மதரஸா – அரபு கல்லூரி
ஜூம்மா கொதுபா - வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை
நூஹ் - ஈஸா, மூஸா, தாவூத் - இறை தூதர்கள்
கியாமத் - இறுதிநாள்
மௌலவி – மார்க்க அறிஞர்
சஹர்- அதிகாலை
ஹிஜ்ரத்- புலம்பெயர்வு

ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்

ளைய அப்துல்லாஹ்

பஸ்ஸில் இருந்து இறங்கிய பொழுது அழுகை அழுகையாக வந்தது. இது நான் பிறந்து வளர்ந்த ஊரா. இப்படி இருக்கிறதே. எல்லாம் இடிந்து. வீடுகள் இடிந்து, பள்ளிவாசல் இடிந்து, பாடசாலைகள் இடிந்து மரங்கள் ஷெல் அடிபட்டு பாறிப் போய், இறங்கு துறை அழிந்து, கடற்கரை எல்லாம் பாழடைந்து போய் படகுகள் எல்லாம் காணாமல் போய் வலை, வாழ்க்கை எல்லாம் அழிந்து போன கிராமமாக கிடந்தது எனது ஊர்.
நான் குர்ஆன் ஓதிய பள்ளி வாசல் ஷெல் அடிபட்டு சிதிலமாக கிடந்தது. இங்கு தான் எனது நிக்காஹ்வும் நடந்தது. முகப்பு தீராந்திகள் முறிந்து போய் கிடந்தன.

மூத்தம்மா பாதையால் நடந்து வருகின்றா. மூத்தம்மா என்றால் எங்களுக்கு உயிர். மூத்தம்மா தான் இந்த ஊரில் முது கிழவி. எமது ஊரைப்பற்றிய அத்தனை அறிவும் மூத்தம்மாவுக்கு உண்டு.
“என்னடா பாரூக் கந்தளாவுக்கு போனியே அங்கை ஏதேனும் குடுக்கிறாங்களா?” நிவாரணம் தொடர்பாகவே எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்ற காலம் இது.
“இல்லை மூத்தம்மா எல்லாம் வாறாங்க போறாங்க எதுவும் இல்லையாம் கையை விரிக்கிறாங்க.”
“நாசமாப் போவாங்க” மூத்தம்மா ஆகாயத்தை நோக்கி கையை ஏந்தி ''பத்வா ''செய்கிறா. “இது கியாமத்து நாளடா மோனை. எங்கை பாத்தாலும் கொலை, கொள்ளை, பறிப்புயெண்டு மனிசன் வாழ ஏலாம கிடக்குடா பாருக். உன்னர பொஞ்சாதி புள்ளைகளை நெனைச்சாத்தான் வவுறு பத்திக் கொண்டு வருகுதடா.”
மூத்தம்மா என்னை கவலைப்படுத்துகிறா. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். மனம் முழக்க விம்மலும் கேவலும் மட்டுமே மிஞ்சி கிடக்கிறது.
எங்களது ஊருக்கு மேலால் நெருப்பு கோளங்களாக ஷெல்கள், விர்...விர்.... என்று நூற்றுக்கணக்காக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. அதிகாலை 2.30 இலிருந்து கர்ண கடூரமான சத்தமும் சிதறலும் தான். அதிகாலையில் கொஞ்சம் வெளியில் வந்த பொழுது தான் தெரிந்தது புதிதாக துப்பாக்கிகள் முளைத்திருந்தன. ஒன்றாக இரண்டாhக பலவாக நூறாக..... அப்பொழுததான் தெரிந்தது நாம் துப்பாக்கிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கிறோம்.

யா அல்லாஹ் இதென்ன சோதனை.
மனைவியும் குழந்தைகளும் எனது காலுக்கு அடியில் குழறிக் கொண்டிருந்தனர். கைக்குழந்தைக்கு பால் கரைக்க மனைவி குசினிக்குள் போனா கூடவே பிள்ளைகளும்.
“சல்மா” என்று கூப்பிட்டு ஒலி மறையும் முன்பாக ~டொமீh; எனது வீட்டுக் குசினிக்குள் எனது செல்வங்கள் மூன்றும் சல்மாவும் கருகி எரிந்து சாம்பலாகி அழிந்து போய்.....
யா! அல்லாஹ் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
நினைவு திரும்பி விழித்த போது ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.
ஷெல்களின் சிதறல்கள் எல்லாம் ஊர் முழுக்க பரவி கிடந்தன. அம்மா கிடந்த மீன் பிடிக் கிராமம் இப்பொழுது கந்தகப் பூமியாய் கிடக்கிறது.

டுர்......டுர்......டுர்...... நன்றாக படித்துக் கொண்டிருந்த ஹனீபா இப்பொழுது கொஞ்ச நாளாக றோட்டு றோட்டாக வாகனம் ஒட்டிக் கொண்டு திரிகிறான். இரவு பகலாக
“ஹனீபா”
“என்ன?”
“எங்கை போறாய்”
“சொர்க்கத்துக்கு” ஹனீபாவுக்கு மூளை பிசகி விட்டது. ஷெல் அடித்த நாளில் இருந்து ஹனீபாவுக்கு மூளை குழம்பி விட்டது.
“நான் போகப் போறன்.”
“எங்கை”
“சொர்க்கத்துக்கு”
வாழ்வின் இழப்புகளை ஒட்டு மொத்தமாக அனுபவித்துப் போய் இருக்கிறோம். அல்லாஹ் ஏன் இப்படிச் சோதிக்கிறான்.
அழுது அழுது கண்கள் வற்றி விட்ட மனிதர்கள் தான் வீதிகள் எங்கும் நடந்து போகின்றனர்.
செழிப்போடு தான் ஒரு மாதம் முன்பு இருந்தது எமது கிராமம்.
சரூக் நானாவின் தேத்தண்ணிக் கடையில் ஒரு பானையில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. சீனிக்கு பதில் கருப்பட்டிதான் கடையில் இருக்கிறது. ஒருமாதம் அகதிகளாக போய்விட்டு வந்தபின்பு வீடுகளில் ஒரு சாமானும் இல்லை. எல்லாத்தையும் களவெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் கள்வர்கள்.

அஸருக்கான அதான் லவுஸ்பீக்கர் இல்லாமல் மோதினார் சொல்கிறார். லவுஸ்பீக்கர் பள்ளிவாசலின் கூரையில் சல்லடையாய்க் கிடக்கிறது. இறைவனின் மாளிகையைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒழு எடுப்பதற்கு ஹவுள் இல்லை. பக்கத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அள்ளி ஒழு எடுக்கும் போதே மனது அடைக்கிறது.
என்னிடம் ஒரே ஒரு ஷேட்டும் ஒரே ஒரு சாறமும் மாத்திரமே இருக்கிறது. வீடு இருந்த இடம் தெரியவில்லை. பள்ளிவாசல் ஹஸரத் இன்னும் அகதியாய்ப் போனவர் திரும்பவில்லை ஊருக்கு. மீளவும் அகதி ஆகிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. ஒழு எடுத்துவிட்டு பள்ளியின் ஓரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு பக்கம் சுவர் இடிந்து போயே கிடக்கிறது. நேற்றுத்தான் பள்ளியை கூட்டித் துப்புரவாக்கி மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
ஒரு கனதியோடுதான் ஸப்பில் நிற்கிறேன். தலை சுற்றுகிறது. நோன்பு முழு நோன்பு. சஹருக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. பட்டினி நோன்பு.

*********************************
ஊர் முழுக்க எல்லோரும் மனப்பாரத்தோடுதான் நடந்து திரிகின்றனர். வாழ்வு பற்றிய கேள்வி எல்லோர் மனங்களிலும் நிறைந்து கிடக்கிறது. எல்லோரும் நடைப்பிணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. முகம் முழுக்க சோகத்தை சுமந்து கொண்டுதான் எல்லோரும் இருக்கின்றனர்.
வீடுகள் இடிந்து போனவர்கள், வீடுகளுக்கு முன்னால் உட்கார்ந்து தாம் உண்டு உறங்கி ஆறுதல்பட்ட வீடுகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஷெ;லடிபட்டு வீடுகளில் நான்கு சுவர்களில் இரண்டு சிதறுபட்டவர்கள் தமது வீடுகளுக்குள் போய் உடைந்த சுவர்களை தட்டி கல்லுகளையும் மண்ணையும் சீமெந்து தூள்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பெண்கள் அழுது அழுது கொண்டிருந்தனர். வயதான கிழவிகள் வானத்தை பார்த்து அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டும் இந்த அழிவுக்கு காரணமானவர்களை சபித்துக் கொண்டும் இருந்தனர்.
சிறுவர்கள் உடைந்து சிதறித் தெறித்த ஷெல் துண்டங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அதனை பழைய இருப்புக்காரன் வரும் பொழுது கொடுக்கலாம் என்று ஒரு கிழவர் சொல்லியிருந்தார். காற்று வாக்கில் எல்லா இடங்களிலும் சிறுவர்கள் காதில் இந்த சங்கதி பரவிட்டிருந்தது. எல்லா சிறுவர்களும் இப்பொழுது ஷெல் துண்டுகளை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு கதையும் அடிபட்டது. இதரை வாழை மரத்தில் ஷெல் விழுந்திருந்தால் அது தங்கமாகி இருக்கும் என்பது தான் அது. அப்படி எதுவும் ஆகியிருக்குமோ இல்லையோ என்பதற்கு முதல் இதரை வாழை மரத்தை தேடி பெரியவர்களும் சிறுவர்களும் அலையத் தொடங்கிவிட்டனர்.
இடிந்து போன வீடுகளுக்கு சன்மானம் தருவதாக ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள் ஆனால் எவ்வளவு என்பதில் இன்னும் தீர்க்கமான முடிவு இல்லை.
தொடர்ந்தும் கர்ண கடூரமாக கிழக்கு பகுதியில் ஷெல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இரண்டு பகுதியினரும் சண்டைபோடும் சத்தம்தான் அது.
“எங்களை அல்லாஹ் காப்பற்றிவிட்டான்” என்று தேனீர் கடைநானா சொன்னார். அவர் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் பள்ளி வாசலுக்கு முன்னால் தான் அவரது கடை. பாங்கு சத்தம் காதில் விழுவதே போதும். அல்லாஹ் மறுமை நாளில் சொர்க்கம் தந்திடுவான் என்பது அவரது இறுதி நம்பிக்கை. அல்லாஹ் மனசைத்தான் பார்க்கிறான் என்பார். தொழ மாட்டார்.
விதம் விதமான இரும்பு துண்டுகள் ஊரெங்கும் சிதறிக் கிடந்தன. இரண்டு காபிர்களுக்கு இடையிலான சண்டையில் இடையில் அகப்பட்டுப் போனோமே என்ற வடு ஊர் முஸ்லிம்களின் முகத்தில் அப்பியே இருக்கிறது.
மஃரிபுக்கான அதான் கேட்கிறது. மோதினார் பாங்கு சொல்லி முடித்த பின்பு தான் நோன்பு திறப்பார். நோன்பு திறக்க பள்ளி வாசலுக்கு போக வேண்டும். இப்பொழுதுதான் இடிந்த ஷீட் துண்டுகள் கல்லுகள் சுவரின் மீதிகள் எல்லாவற்றையும் பள்ளித் தலைவர் கொஞ்ச ஆட்களோடு வந்து துப்புரவாக்கிப் போட்டு போனார்.
நோன்பு திறக்கிறதுக்கு ஈச்சம்பழம் மட்டும் பள்ளியில் இருக்கிறது. வழமைபோல கஞ்சி இந்த முறை காய்ச்சவில்லை. எல்லோரும் ஓட்டாண்டி, எல்லோரும் ஏழைகள் எங்கே கஞ்சி காய்ச்சுவது. உயிர் இருப்பதே பெரிய விடயம்.
பள்ளித் தலைவரின் மகளுக்கு ஷெல் தெறித்து விழுந்து கால் ஒன்று எரிந்து விட்டது. பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில் நோயாளியாகி படுக்கையில் இருக்கிறார். மகன் ஒருவரை அகதியாக போன போது கினாந்திமுனை மலைக்கு அடியில் வைத்து அவர்கள் செக் பண்ணியபோது பிடித்து வைத்திருந்தார்கள் பின்னர் வந்து விழுந்த ஷெல்லோடு அவர்கள் ஓடிவிட மகன் தப்பிட்டான்.

****************************

யாரோ நகர்ப்புறத்தில் இருந்து கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கிறார்களாம். கெண்டர் வாகனம் ஒன்று இடிந்த பள்ளி வாசலுக்கு முன்னால் வந்து நின்றது. “அஸ்ஸலாமு அலைக்கும்” தொப்பி போட்ட தடிப்பமான இரண்டு பேர் ஸலாம் சொல்லிகின்றனர். “வ அலைக்குமுஸ்ஸலாம்” எங்கள் கண்கள் கலங்கி இருந்தன. கென்டரில் வந்த டிறைவருக்கு பக்கத்தில் சீற்றில் இருந்தவர் கீழே இறங்கினார். மற்ற மூன்று பேரும் அவருக்கு கொடுத்த மரியாதையில் அவர் ஒரு பணக்காரர் தோரணையில் இருந்தார்.
கையில் ஒரு என்வலப் கட்டு வைத்திருந்தார். ‘கென்டர்’ நிறைய ஷொப்பிங் பையில் கட்டிய பொருட்கள் இருந்தன.
பணக்காரர் சலாம் சொன்னார். பள்ளி வாசலுக்கு தொழ வந்தவர்களுக்கு சலாம் சொல்லி ஒரு ஷொப்பிங் பை பொதியும் ஒரு என்வலப்பு கவரும் கொடுத்தார். வாங்கியவர்கள் அவரை நன்றியோடும் அல்லாஹ்வுக்கு நன்றியும் செலுத்தினர்.
இதற்கிடையில் ஒரு இருபது பேர்தான் ஆரம்பத்தில் இருந்தனர் பின்னர் பத்து பத்தாக பதினொன்று பன்னிரண்டாக நூறு பேர் வரை சேர்ந்து விட்டனர். எல்லோருக்கும் பணக்காரர் கொடுத்தார். அதில் நின்றவர்களில் பலர், முதன் முதலாக கைநீட்டி வாங்கியவர்களும் இருந்தனர்.
அகதித் தனம் அவ்வாறு செய்துவிட்டது. பிறகு தான் கேள்விப்பட்டேன் ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் முன்னால் ஒவ்வொரு கென்டர் வாகனத்தில் நகரில் உள்ள பணக்காரர்கள் அகதிகளுக்கு உதவி செய்ய வந்திருக்கிறார்களாம். அவர்கள் நல்லாயிருக்க வேணும்.
கஞ்சி நானா தனது போலியோ காலோடு ஓட முடியாமல் ஊரில் இருந்து விட்டார்.
கஞ்சி நானாவின் கைருசிதான் ருசி. நோன்பு நேரத்தில் நினைத்தாலும் அவரது கஞ்சியின் மணமும் ருசியும் குணமும் சுவையும் அடிநாக்கில் தொட்டு நிற்கும். நிற்கிறது.
கஞ்சி நானாவின் பாசிப்பயறு கஞ்சி, அவல் கஞ்சி ஊரில் வலு பிரபல்யம். அவருக்கு ஓட முடியாது. ஒரு கால் சூம்பிப் போய் இருந்தது. அதனால் அவர் பக்கத்து ஊருக்கு அகதியாக வரவில்லை. மனைவியும் மகன்மார் இரண்டு பேரும் அவரை விட்டுவிட்டு அகோர யுத்தம் நடந்த போது ஊரைவிட்டு ஓடி அகதியாகிவிட்டனர். கஞ்சி நானா அவரது வீட்டில் தான் இருந்தார். அவர் இருந்த போது மூன்று நாட்களாக பட்டினிதான். மூன்றாவது நாள் தான் ஆமிக்காரர் அவருக்கு பிஸ்கட்டும் தண்ணியும் சொக்லட்டும் கொடுத்தார்களாம். கஞ்சி நானா அசரவில்லை. வெடித்துச் சிதறிய ஷெல்கள் பற்றி கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் திரும்பிவந்த பொழுது கண்ணீரோடு வரவேற்க அவரால் முடிந்தது. தன்னை அந்தரிக்கவிட்டுவிட்டு போய் விட்டார்களே என்று அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. அன்போடு தான் இருந்தார். ஆனால் மனைவிக்கும் மகன்மாருக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வு பிடுங்கித் தின்றது. அங்கிருந்து வந்த ஷெல் ஒன்று நேராக கஞ்சி நானாவின் கஞ்சி வண்டில் மீது விழுந்து வெடித்து சிதறி வண்டிலை சின்னாபின்னமாக்கியதுதான் அவரால் தாங்க முடியாமல் இருக்கிறது. அவரின் ஒரே மூலதனம் இரண்டு பானைகளும் பத்து பெரிய கிளாஸ்களும் ஒரு லாம்பெண்ணை அடுப்பும் அந்த வண்டிலும் தான்.
அந்த கஞ்சி வண்டில்தான் குடும்பத்துக்கே சோறு போடுகிறது. ஆனால் அது சிதைக்கப்பட்டது. அவருக்கு தாங்க முடியாமல் இருந்தது. அதைத் தவிர தான் தனிய யுத்தத்தின் நேரம் இருந்தது பற்றி கவலை இல்லை.
கென்டரில் வந்த பணக்காரர் போலியோ காலால் கெந்திக் கெந்தி வந்த கஞ்சி நானாவுக்கு இரண்டு பைகளும் இரண்டு என்வலப்பும் கொடுத்தார். யாருக்கும் அதில் கோபமோ ஆட்சேபனையோ இருக்கவில்லை.

************************

நஷ்டஈடு கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கழிசான் ஷேட் போட்டிருந்தவர்கள் கூட்டினார்கள். மௌத்தாப்போனவைக்கு பதினைந்தாயிரம் தருகிறோம் என்றார்கள் சபை குழம்பி விட்டது. பிறகு ஒரு லட்சம் என்றார்கள் பிறகு ஆட்களே வரவில்லை சும்மா இருந்த எங்கள் வாழ்வை அழித்துவிட்டார்கள்
ஒரு ரீ விக்காரர்கள் சந்தியில் வந்து ஊர் சனத்தைப் பிடித்து என்ன நடந்தது என்று கேட்கிறார்கள் என்ன நடந்தது என்ற ஒரு கேள்வி போதும் முழு கஷ்டத்தையும் சொல்லிக் கொண்டு போக “ஓதலுமில்லை படிப்புமில்லை எங்கடை உம்மாவும் வெளிநாட்டிலை. ஷெல் வந்து விழுந்து எங்கடை வீடெல்லாம் உடைஞ்சு போச்சு....” பன்னிரண்டு வயது பெண்பிள்ளை உடைந்து உடைந்து அழுகிறது. ரி.வி. மைக்கில்.
மூத்தம்மா கண்ணை இடுக்கி பார்த்துக் கொண்டு வருகிறா. அவவுக்கும் இருந்த ஒரு மனையும் அழிந்து போய்விட்டது.
எனது மனைவியை அவதான் வளர்த்தெடுத்தா. மனைவியின் உம்மாவும் வாப்பாவும் இறந்ததன் பின்பு மூத்தம்மாவின் பொறுப்பில் வலு பக்குவமாக மனைவி வளர்ந்தா. இப்பொழுது தான் வளர்த்த பிள்ளை ஷெல்லில் சிதறிவிட்டது.
அந்த கவலைலயை தீர்க்க முடியாமல் மூத்தம்மா அழுது திரிகின்றா. இரவில் படுக்கும் போதும் நித்திரையில் உழறுகின்றா. தூக்கம் வராமல் அழுது மாய்கின்றா மூத்தம்மா.
செழிப்பாய் இருந்த ஊருக்கு கண்ணூறு பட்டுப் போய்விட்டது போல எல்லாமே அழிபாடுகள் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறது. மக்கள் பஸ்களில் இருந்து வந்து மூட்டை முடிச்சுகளோடு இறங்குகின்றனர். வரும் வழியெங்கும் புழுத்த மணம் மணக்கிறது.
மையத்துகள் தான் கிடக்கின்றனவோ அல்லது ஷெல்லடிபட்ட ஆடு மாடுகளின் நாற்றமோ தெரியாது. வாழ்விழந்து போனவர்கள் நோன்பை பிடித்துக் கொண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டு கேவி கேவி அழுகின்றனர். குருவி சேகரிச்சது போல சேகரிச்சு கட்டிய வீடு அடிபட்டு உடைபட்டும் போய்கிடப்பதை எப்படித்தான் தாங்க முடியும்? எத்தனை பெண்கள பாலைவன வெயிலில் வறுபட்டு உழைத்த பணத்தில் கட்டிய வீடுகள் வீட்டுச் சாமான்கள் எல்லாம் அழிந்து போயின. பெண்கள் தான் அதிகமாக அழுதுக் கொண்டிருந்தனர். கிராம உத்தியோகத்தர் கையில் குறிப்பு புத்தகம் பேனாவோடு வந்து யார் யாரெல்லாம் தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள் என்று குறித்து பெயர்களையும் விலாசத்தையும் ஆட்களின் எண்ணிக்கையும் எழுதிக் கொண்டார். அவர் வெள்ளைசாரமும் வெள்ளை ஷேட்டும் வெள்ளை தொப்பியும் போட்டுக் கொண்டிருந்தார். ஹஜ்ஜூக்கு போய் வந்தவர் காசுக்காரர். அவரின் ஒரு தொகை நகையும் பணமும் களவு போய்விட்டதாக சொன்னார். ஊரில் இருந்த வங்கிகள் எல்லாம் துப்புரவு பண்ணப்பட்டிருந்தன.
நோன்பு காலத்தில் அலைந்து திரிய முடியவில்லை வெயில் கொழுத்தியது. சாப்பாடு கிடைப்பதே அருமையாக இருந்தது. தனவந்தர்கள் உதவி செய்தார்கள். ஸகாத் பணம் ஒரு தொகை வந்தது ஊருக்கு. அரபிகளிடம் அகதிகளுக்கு என்று இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் வாங்கிய பணத்தில் ஒரு கொஞ்சமும் ஊருக்கு வந்தது.

************************

இப்பொழுது ஜின்களின் சலசலப்பு ஊரில் இருப்பதாக ஜின் ஓட்டி காக்கா பேசிக் கொண்டது கேட்டது. முதல் என்றால் ஜின்கள் உப்புக்கடல் தாண்டி வர வலு பிரயத்தனப்பட்டது தானாம். ஆனால் இப்பொழுது ஜின்கள் ஷெல் அடிபட்ட பூமியில் வந்து குடும்பத்தோடு இருக்கின்றனவாம்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் தூதுவராக நபிகளார் இருக்கிறார்கள். ஜின்களில் சூது வாதுள்ளவையும் இருக்கின்றன. அவைகள் இரவில் வந்து மரங்களை உலுப்புகின்றன. எப்பொழுதும் இரவில் ஆயத்துல் குர்ஸியை எல்லோரும் ஓதும்படி ஜின் ஓட்டி காக்கா சொன்னார். ஜின் பிடித்தால் போக்குவதற்கு சாமான் வாங்க வேண்டும் அதற்கு பணமுமில்லை பொருளுமில்லை. ஜின் ஓட்டி காக்கா நல்ல ஒரு செலவில்லாத வழியை காட்டித் தந்தார் அதுதான் ஆயத்தில் குர்ஸி (குர்ஆன் வசனம்)
இரவு ஜின்கள் பல வந்து தனது வீட்டுக்கு கல்லாலும் மண்ணாலும் எறிந்தனவாம். தான் அதுகளை வாலாயப்படுத்தி விட்டாராம் என்று கூறினார். சில ஜின்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததை தான் கண்டதாகவும் ஜின் ஓட்டி காக்கா சொன்னார்.
வாழ்க்கை இப்பொழுது மனிதன் ஜின் போலவும் ஜின் மனிதன் போலவும் இருந்தால் எப்படி இருக்கும் காபிர்களின் கண்களில் மறைந்து கொள்ளலாம் யாருக்கும் தெரியாமல் வாழலாம். ஆனால் குடும்பம் பிள்ளை குட்டி சாப்பாடு குடிப்பு என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எவ்வளவு வசதியாய் இருக்கும். துப்பாக்கி கொண்டு வருபவர்களை அடையாளம் காணலாம். கடத்திக் கொண்டு போக வரும் ‘சுது’ வாகனக்காரரை கண்டு கொள்ளலாம். உண்மையில் ஜின் வாழ்க்கையே மிகச் சிறந்தது இப்பொழுது எமது ஊரிலும் நாட்டிலும்.
ஜின்கள் வலு குழப்படி பண்ணுவதாக காக்கா சொன்னார். கொஞ்ச நாள் பாழடைந்து போன ஊருக்குள் இனி மனிதர்கள் வர மாட்டார்கள் என்று ஜின்கள் வந்து விட்டனவாக்கும். பல இடங்களில் ஷெல் அடிபட்ட செத்த மையத்துகளை புதைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு போய் விட்டோம். எல்லாமே சிதறிப் போய்விட்டன. பொதுவாக அகதியாகப் போகும் பொழுது மையத்தைப் பற்றி பார்க்க முடியாமல் தான் போனது. வாழ்வின் அவலங்களை சுமந்து கொண்டு ஊரைத் துறந்து போகும் பொழுது என்னத்தை செய்வது.
ஜின்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வாழுமாம். அவைகள் கூட ஒற்றுமையாக இருக்கும் என்றுதான் மதரஸாவில் ஓதும் போது ஹஸரத் சொல்லித் தந்தவர்.
ஜின்கள் அதிகமாக இரவில் தான் நடமாடுமாம். அவைகளின் மன நிலையை ஜின் ஓட்டி நானாவுக்கும் சரியாக தெரியாதாம். ஆனால் அவர்களில் தொழுகை நோன்பு, ஹஜ் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
குர்ஆனை திரிபுற ஓதிக் கற்றவர்களும் ஜின்களில் இருக்கிறார்களாம். ஆனால் அவை இப்பொழுது எமது ஊருக்குள் குடிகொண்டு பிராணனை வாங்குகின்றன.
தீய குணமுடைய ஜின்களால் தான் பிரச்சினை மனிதருக்கு. நல்லவர்களால் பிரச்சினை இல்லை. அவர்களிலும் தீய குணமுடையவர்கள் இருக்கிறார்கள்.

****************************

இன்னும் ஒரு கிழமை இருக்கிறது நோன்பு முடிய திங்கட்கிழமை பெருநாள். இது ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை. பொதுவாகவே இப்பொழுது ஜூம்மாத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் வீட்டில் இருந்து கொண்டு வரும் பாய்களை போட்டு தொழுவார்கள். ஜூம்மாத் தொழுகைக்கு நோன்பு காலங்களில் இவ்வளவு சனம் வரும். அவ்வளவு சனமும் இந்த ஊரில் தான் இருக்கின்றன ஆனால், சும்மா நேரங்களில் பள்ளி வாசலுக்கு மக்கள் வருவது மிகவும் குறைவு. அழிவு ஏற்பட்டதன் பின்பு அல்லாஹ்வின் பக்கம் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். அனேகமானவர்கள் நோன்பு நோற்கிறார்கள். அனேகமானவர்கள் தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முன்பு என்றால் நோன்பு காலங்கள் ஏதோ பெண்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டது போல இருக்கும். 8ஆண்கள் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. சிலர் நோன்பு காலங்களில் மதுகூட அருந்துகிறவர்கள் இருந்தார்கள். ஆனால் அழிவு மக்களை தெய்வத்தின்பால் திருப்பிவிட்டது. அழிவுகள் தான் பக்திக்கு மூலதனமாகவே இருக்கின்றன.
இது நூஹ் நபி ஈஸா, மூஸா, தாவூத் நபிகள் காலத்தில் இருந்தே இருக்கின்றன. இந்த வருஷம் தான் நிறைய பேர் எமது ஊரில் நோன்போடு திரிகின்றனர். வெயில் வறுத்து எடுக்கிறது.
பக்கீர் மார் சஹருக்கு எழுப்பியவுடன் ரபான் ஓசைக்கு சிறுவர்களும் பெரியவர்களும் எழும்பி விடுகின்றனர். நபிகளாரின் பெருமைகளை பைத்தாக பக்கீர்மார் ஓதுவார்கள் இரவில். சில பக்கீர்மாருக்கு ஒரே பாடல்கள் தான் தெரியும் சிலர் வருஷா வருஷம் பாடல்களை மாற்றுவார்கள். அவர்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே அமைந்திருக்கும் பொதுவாகவே றேடியோவில் பிரபல்யமான ஈ.எம். ஹனிபாவின் “அல்லாஹ்வை நாம் தொழுதால்.....” காயல்பட்டணம் ஷேக் மொஹமட்டின் “ஈச்சமரத்தில் இன்பச் சோலையில்.........” பாடலைப் பாட எல்லோரும் மறக்க மாட்டார்கள். ஆனால் பக்கிர் பாவாமார் இரவில் தூங்குவது இல்லை. இரவு இரண்டு மணிக்கு ரபான் ஓசை ஊரில் கேட்கும். அவ்வளவு நேரத்தோடு சஹர் செய்தால் பகல் முழுக்க கிடக்க ஏலுமே. ஆனால் பாவா ஊரெல்லாம் பாட்டுப்பாட வேண்டும். ஊரெல்லாம் எழுப்ப வேண்டும். அவரின் வேலை அவரோடு. எங்கள் வேலை எங்களோடு... வாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அல்லவா!
ஈஸா நபி நாற்பது நாள் நோன்பு நோற்றவராம். ஆனால் எங்களுக்கு முப்பது தான் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று மௌலவி கொத்துபாவில் சொன்னார்.
அழிவுகள் பற்றியும் அவை எல்லாம் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவது பற்றியும் மௌலவி பயான் செய்தார். இப்பொழுது எல்லாம் மௌலவியின் பயானுக்கிடையில் அழுகை அதிகமாக இருக்கிறது. ஷெல் வீச்சில் அவரது வீடு சேதமானது காரணமாய் இருக்கலாம். அல்லது அவரது உம்மா கொல்லப்பட்டது காரணமாய் இருக்கலாம். மௌலவி பிம்பரில் நின்று அழுதால் முன்னால் இருக்கும் பொதுமக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
எங்கள் ஒவ்வொருவரின் இழப்பின் மீதும் நாங்களும் விம்மி விம்மி அழுவோம். இழப்புகள் அழவைக்கின்றன. ஜூம்மா பிரசங்கங்கள் இப்பொழுது எல்லாம் கண்ணீரோடுதான் கலக்கின்றன. மௌலவி சொல்வார் “எல்லாம் அல்லாஹ்வின் சோதனை” என்று, அல்லாஹ்வின் சோதனை என்ன வடிவிலும் வருமாம்.
தண்ணீரில் அழிவு வந்தது. அதுவும் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்றாம். இந்த சுனாமி பேரழிவில் இருந்து நாம் மீண்டும் வரும் பொழுது திடீரென்று போர் அழிவு எம்மை சூழ்ந்து கொண்டது. எங்கு போவது? மௌலவி அழிவுகளின் பல வடுக்களை சொன்னார். இது கியாமத்து நாளுக்கு அண்மித்து விட்டதாக சொன்னார்.
உலக முடிவு நாளின் போது இப்படித் தானாம் செருப்பு அணியக்கூடிய வசதியில்லாதவன் ஆட்சியதிகாரத்துக்கு வருவானாம். பெண்கள் ஒட்டகத்திமில் போல கொண்டை கட்டுவார்களாம், முஸ்லிம்கள் சஹன் சாப்பிட அழைப்பது போல காபிர்கள் வாங்கோ வாங்கோ முஸ்லிம்களை அழிப்போம் என்று ஒன்றுகூடுவார்களாம். கொலையும் கொள்ளையும் விபச்சாரமும் ஊரில் அதிகரிக்குமாம். ஏமாற்று சுத்துமாத்து விளம்பரம் தேடுதல் எல்லாம் கூடுமாம். ஏன் கொலை செய்யப்படுகின்றான் என்று இறப்பவனுக்கும் ஏன் கொல்கிறோம் என்று கொல்பவனுக்கும் தெரியாதாம்.
ஏழைகள் திடீரென்று மாடி வீடுகள் கட்டுவார்களாம். பொழுது திடீரென்று போய்விடுமாம் இப்பொழுதான் காலை வந்தது போல இருக்குமாம் மாலை நேரம் வந்துவிடுமாம். பொழுதுகள் குறைந்து விடுமாம். காபிர்கள் அடர்ந்தேறுவார்களாம். பசி, பஞ்சம் தலைவிரித்தாடுமாம். அழிவின் போது கெட்டவர்களை அல்லாஹ் அழிப்பானாம். ஆனால் அதில் இருக்கும் நல்லவர்களும் இந்த அல்லாஹ்வின் அழிவுக்குள் மாட்டுப்பட்டு மாண்டு போவார்களாம். எனினும் கியாமத்து நாளில் அவர்கள் நல்லவர்களின் கூட்டத்தோடு எழுப்பப்படுவார்களாம். மௌலவி கியாமத் மறுமை நாள் பற்றியே அதிகமாக இப்பொழுது பயான் (பேச்சு) செய்வார். எப்போதும் அவரின் முகம் வெளிறிப்போய் இருக்கும். மறுமையை பயந்தவர் போலவே காணப்படுவர். மற்றவர்களுக்கு பயப்படும்படி சொல்லுவார். ஈஸா நபி வெகு விரைவில் வந்து விடுவார் என்றும் அவர் முஸ்லிம்களை காப்பாற்றுவார் என்றும் சொல்லுவார். ஈஸா நபிக்கும் காபிர்களுக்கும் யுத்தம் நடைபெறுவதை அழகாக ஹதீஸில் உள்ளது போல விபரிப்பார்.

********************************
நாளைக்கு எங்களுக்கு பெருநாள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து போய் இருக்கிறோம். எங்களைப் போலத்தான் தமிழ் மக்களும் அனாதையாய் அகதிகளாய் வாழ்வழிந்து போய் அகதி முகாம்களில் கிடந்துலைகிறார்கள். எனது நல்ல நண்பன் கௌரிதாசன் எங்கிருக்கிறான் என்று தேட வேண்டும். அவனைப் போய் சந்திக்க வேண்டும். ஒரு மாதமாக கௌரிதாசனைத் தெடுகிறேன்.
முதல் என்றால் பெருநாள் இப்படியா இருக்கும் புது உடுப்பு என்ன? தின் பண்டங்கள் என்ன? வாழ்வின் மகிழ்வுகள் என்ன? எல்லாம் இந்த முறை அழிந்து போய்விட்டது.
பக்கத்து தமிழ் ஊருக்குள் இருக்கும் கௌரிதாஸன் வீட்டு கொண்டாட்டங்களில் நாமும் எமது வீட்டு கொண்டாட்டங்களில் அவர்களும் ஒன்றாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இம்முறை கௌரிதாசன் இல்லாத பெருநாள் வீடு எங்களுடையது. பலகாரம் சுட கௌரிதாசனின் மனைவி ஷாந்தி இல்லை. என்னவோ போலிருக்கிறது வீடு. கண்ணுக்கு முன்னால் எல்லாம் அகதிகளாகவே இருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இருந்த வாழ்வு உருக்குலைந்து போயுள்ளது. மழைக்காலம் நாங்கள் வீடுகளுக்கு வந்து விட்டோம் ஆனால் தமிழ் ஆட்கள் தான் இன்னும் மரங்களுக்கு கீழே இருக்கின்றனராம்.
இந்த மழையில் கைகுழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறானோ நண்பன். மனது முழக்க கவலைதான் மிஞ்சிக்கிடக்கிறது. அவன் நல்லாய் இருக்க வேணும் என மனது எண்ணிக் கொள்கிறது.
நாளைக்கு பெருநாள் தொழுகை முடிய எனக்குக் கிடைத்த அரிசி சீனி கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டு நண்பனிடம் போகவேண்டும்.
அல்லாஹ_ அக்பர்..... அல்லாஹ_ அக்பர்..... (அல்லாஹ்வே பெரியவன்) முஅத்தினார் இஷாவுக்கு பாங்கு சொல்கிறார்.

Thursday, 14 May 2009

எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்

ஒன்பது வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி லண்டன் தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம். எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு வேலைகள். என்னை மிகவும் அசௌகரியப்படுத்தியிருந்தன. ஒன்று சிப்ஸுக்காக உருளைக்கிழங்கு வெட்டுவது. மற்றது பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கஸியர். எத்தனையோ படித்தவர்கள் இந்த வேலைகளில் இருந்து தான் வேறு வேலைகளுக்கு மாறுகிறார்கள். லண்டன் போனவுடன் கிடைக்கும் வேலைகளில் உடனே கிடைப்பது பெற்றோல் ஸ்ரேசனில் தான். ஏனெனில் பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் அதிகமாக தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கும். அதுவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகவே அதில் ஏதோ ஒரு வேலை கிடைக்கும். நண்பர்கள் தெரிந்தவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தரும்படி கேட்டால் எங்காவது பெற்றோல் நிலையங்களில் வேலை கிடைக்கும். அடுத்து நாம் தேடிப்போய் இந்தியாக்காரரிடம் வேலை கேட்க வேண்டும். அவர்கள் ஹிந்தி காரராக இருப்பார். எனக்கு ஹிந்தி தெரியும்

லண்டனில் தீபம் தொலைக்காட்சி ஆரம்பித்துவிட்டதாக அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்படியும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். விண்ணப்பப்படிவத்தை நிரப்பி எனது சர்ட்டிபிக்கட்டுகள், நான் எழுதிய ஆக்கங்கள் எல்லாம் வைத்து அனுப்பியிருந்தேன். நேர்முகம் மற்றும் ஸ்கிறீன் டெஸ்ட் போனபோது மீடியா மனேஜராக இருந்த சபனீதா மனோகர் சொன்னா இந்தளவு சேர்ட்டிபிக்கட்டுகளை தான் பார்க்கவில்லை. அவ்வளவு பெரியகட்டு.
இலங்கையில் இருக்கும் பொழுது பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலிடம் பெற்ற நிறைய சேர்ட்பிக்கட்டுகள். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இரண்டு வருடம் திரு. உருத்திராபதியோடு சேர்ந்து “விடியலை நோக்கி” எனும் சமாதான நிகழ்ச்சி இன்னும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்த அனுபவம். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து காலப்பகுதியில் இருந்து இலக்கிய கவிதா அனுபவம் எல்லாவற்றையும் சேர்த்து களம் ஒன்றுக்காக தேடிக்கொண்டிருந்த போது லண்டனில் “தீபம்” தொலைக்காட்சி ஒரு வரமாகத் தான் கிடைத்திருந்தது.
வானொலியை விடவும் தொலைக்காட்சி உண்மையில் ஒரு அறிவிப்பாளனின் அத்தனை உணர்வுகளையும் அச்சொட்டாய் வெளிக்கொணர்ந்துவிடும். கவலை சந்தோஷம், தடுமாற்றம், தயாரின்மை, எல்லாவற்றையும் முகத்தினூடாக வெளிக்கொணரும் ஒரு சாதனம் தொலைக்காட்சி கமெரா. சில நேரம் கவலையாய் இருக்கும் மனது. ஆனால் நேரடி ஒளிபரப்பின் போது காண்பிக்க முடியாது. சிரித்தபடி “வணக்கம் நேயர்களே” என்று சொல்ல வேண்டும். சில நேரம் தயாரில்லாமல் இருக்கும் மனது ஆனால் எதற்கும் நான் தயார் என்றபடிக்கு “வணக்கம் நேயர்களே!” என்று தயாராக வேண்டும்.
இன்னுமொரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் நண்பனொருவனோடு கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது சொன்னான் அவன் இரண்டு வருடமாக மிகவும் அன்போடு நேசித்த காதலி அவனை விட்டு விட்டுப் போய்விட்டாள். உறவு முறிந்துவிட்டது இரவு ஆனால் காலையில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் மனது அழுது கொண்டேயிருக்கிறது. ஆனால் சிரித்துக் கொண்டு இரண்டு மணிநேர காலை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியைச் செய்தாக வேண்டிய நிலமை அவனுக்கு; செய்தான். உள்ளுக்குள் அழுதபடி வெளியே சிரித்தபடிக்கு.... தொலைக்காட்சியில் இந்த நெருக்கு வாரங்கள் பல அறிவிப்பாளர்களுக்கு அனுபவமாக இருந்திருக்கும். இன்னும் இருக்கும்.

தொலைக்காட்சி நேயர்கள் வானொலி நேயர்களை விட வித்தியாசமான முறையில் இருப்பார்கள். அறிவிப்பாளர் மேல் விருப்பமாயும் இருப்பார்கள். சில வேளை வெறுப்பாயும் இருப்பார்கள். திரையில் வரும் அறிவிப்பாளர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆவல் தொலைக்காட்சி நேயர்களுக்கு உண்டு. அறிவிப்பாளப் பெண்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களைக் கூட தாமும் அணிந்து பார்க்கும் ஆர்வம் கொண்ட பெண் நேயர்கள்களையும் ஷேட், ரை போன்றவற்றை ஆண் அறிவிப்பாளர்கள் அணியும் பொழுது அவதானிக்கும் ஆண், பெண் நேயர்களையும் பார்த்திருக்கிறேன். நான் “தீபம்” தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவனாகவும், காலைக்கதிர் என்ற காலை லண்டன் நேரம் 7.00 மணிமுதல் 9.30 வரை இடம் பெறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமை செய்கிறேன்.

நிகழ்ச்சிக்கு எனக்கு மிகவும் உறுதுணையாகவும் நல்ல ஆலோசனை தருபவராகவும் திரு.மு.நித்தியானந்தனை நான் நன்றியோடு நினைவு கொள்வேன். மாலி நல்ல நண்பர். மு. நித்தியானந்தன் “தீபம்” தொலைக்காட்சிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான் 2001ம் ஆண்டு கறுப்பு ஜுலை தினத்துக்காக அவரின் அனுபவங்களை கேட்கக் கூப்பிட்டு பின்னர் அவர் தீபத்தின் செய்தி ஆசிரியாகச் சேர்ந்தார். பரந்த அறிவியல் அனுபவம், செய்தி அனுபவம் கொண்ட அவர் தீபத்திற்கு கிடைத்தது; பெருமை தீபத்திற்கே. நேரடிச் சந்திப்பு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கானதை இருநூறுக்கும் மேற்பட்டது செய்திருக்கிறேன். பல சுவாரஸ்யமான அனுபவங்கள் வாய்க்கப் பெறுவது நேரடி நிகழ்ச்சிகளில் தான். ஒரு முறை ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கவிஞரை அழைத்திருந்தேன் கவிஞருக்கு கமராவைக் கண்டால் பயம் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்த பின்பு தான் தெரியவந்தது. முன்னோட்டமாக பேசும் பொழுது மிகவும் ஆர்வமாயும் நல்ல பல கருத்துக்களையும் தந்தார். ஆனால் வேளை ஆரம்பிக்கப்பட்டு நேயர்களுக்கும் கவிஞருக்கும் வணக்கம் சொன்னதன் பின்பு கவிஞர் பேசாமல் இருக்கிறார். ஒரு மணி நேர நேரடி நிகழ்ச்சிக்கு கவிஞரை கூலாக்கி ஆசுவாசப்படுத்தி கமராக்களை நிறுத்தாமல் சாதாரண பேச்சுக்கு கொண்டு வந்தேன். அரை மணி நேர நேயர்களின் கேள்வி பதிலோடு அந்தச் சந்திப்பு நிறைவு பெற்றது. கமராமென், எடிட்டர் தடுமாறிப் போனார்கள். அவர்களையும் சமாளித்தோம்.

தீபம் தொலைக்காட்சி ஐக்கியராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்காவின் ஒரு பகுதி என்றெல்லாம் வியாபித்து இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் எமது நேயர்கள், மிகவும் விரும்பி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள் அவர்களில் சிலர் “கருத்துக்களம்” எனும் மிகவும் சீரியஸான நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அழைப்பினை எடுப்பார்கள் அது நேயர்களும் அந்த அந்த துறை சார்ந்தவர்களும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி. அதில் நேயர்களின் கருத்துக்களோடு சீரியஸான விவாதங்கள் நடைபெறும். ஆனால் மத்திய கிழக்கு நேயர்கள் தொலைபேசி எடுத்துவிட்டு “ஆ... அனஸ் நானா... அஸ்ஸலாமு அலைக்கும்” என்பார்கள் பதில்சொல்லிவிட்டு பேசச் சொன்னால் பேசமாட்டார்கள் “நாங்கள் உங்களோடு கதைப்பதற்காகத்தான் எடுத்தோம் எப்படி சுகமாக இருக்கிறீங்களா” என்று நேரடி ஒளிபரப்பில் கேட்பார்கள். அவர்கள் ஆர்வம் மிகுதி ஆனால் பேசமாட்டார்கள். இது நேரடி ஒளிபரப்பில் வரும். சந்திப்புகளில் பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை செவ்வி கண்டேன். அன்று வந்த தொலைபேசி அழைப்புகளில் தொண்ணூறு வீதமான அழைப்புகளில் பெண்கள். பாண்டிச்சேரி தமிழ் நன்றாக இருக்கும். வாய்நிறையப் பேசுவார்கள். பிரான்ஸில் பாண்டிச்சேரி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மி நாராயணனை தமது உறவினர் போல எண்ணி பேசினார்கள். அவர்களின் ஊர்ப்பற்று அவர்களின் பேச்சில் இருந்து தெரிந்தது.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவினது ஒரு மணிநேரச் சந்திப்பு ஐக்கி இராச்சியம், ஐரோப்பிய நாடுகளில் சிலாகிததுப் பேசப்பட்டது. சந்திப்பு முடிந்தவுடன் மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் பாராட்டிக் கொண்டே இருந்தார். டொமினிக் ஜீவாவின் அனுபவத் தொகுப்பாக அச்சந்திப்பு இருந்தது. ஒளிப்படத்தினூடாக ஒருவர் கதைக்கும் பொழுது நேரே பேசுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் வல்லமை தொலைக்காட்சிக்கும் ஒளிவிம்ப ஊடகங்களுக்கும் உண்டு. அதனால்த் தான் கிராமங்கள் தோறும் இப்பொழுது தொலைக்காட்சி சாதனை படைத்து வருகின்றது. சில தொலைபேசிகள் வரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு எனது பெயரில் நேயர்களுக்கு இன்னும் குழப்பம். “உம்முடைய பெயர் அனஸ் ஆ, அல்லது அனாஸா! அல்லது அனக்ஸா என்று நான் யார் இந்துவா கிறிஸ்தவரா முஸ்லிமா எனும் தோரணையில் இருக்கும் அக்கேள்வி. என்ன சாதி என்றும் அறிய ஆவல்பட்டிருக்கும் தொலைபேசி அது. “நான் அனஸ்” என்று விட்டு வைத்து விடுவேன்.
ஐரோப்பிய நாடுகளில் தொலைக்காட்சிகள் வானொலிகளின் பங்களிப்புகள் மிகவும் முக்கயிமானது தமிழில், தமிழுக்கு.
பிரான்ஸ் இருந்து லண்டனுக்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சொன்னார். “உங்கடை தீபம் பார்த்து மகன் தமிழை விளங்கிக் கொள்கிறான்” இது உண்மையில் நடக்கும் ஒரு சங்கதிதான். வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டு சின்னஞ்சிறுசுகள் புரிந்து கொள்கிறார்கள் ஓரளவுக்கேனும். லண்டனில் இரண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. தமிழக தொலைக்காட்சிகள் எல்லாமே லண்டனுக்கு வருகின்றன.

வானொலிகள் மூன்று செற்றலைட் மூலமானவை ஒன்று பண்பலை மூலமானது. பண்பலை மூலமான “சந்திரோதயம்” வானொலி தீபாவளி தினத்தையொட்டி சீக்கியர்களின் பெருநாளாகிய “வைசாகி” எனும் பெருநாளை முன்னிட்டு ஒலிபரப்பாகும் அலைவரிசைக்கு சொந்தகாரர் ஒரு சீக்கியர். “வைசாகி” பண்பலை வரிசையில் நடாமோகன் நேரம் எடுத்து “சந்திரோதயம்” வானொலி சேவையை நடத்தி வருகிறார். “சன்றைஸ்” வானொலி சிற்றலை மற்றும் செற்றிலைற் மூலமாக கேட்கலாம். ஐ.பி.சி இன்னும் ரி;.பி.ஸி, ஈ.ரீ.பீ.ஸி போன்ற வானொலிகள் லண்டனில் இருந்து ஒலிபரப்பாகின்றன. தீபம், வக்ரோன், இன்னும் சண் தொலைக்காட்சிகள் லண்டனில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒரு செலவு மிகுந்த சேவையாகும். கிட்டத்தட்ட லண்டனில் தீபம் தொலைக்காட்சியின் ஒரு நாள் செலவு ஐயாயிரம் பவுண் வரையாகும். பணக்காரர்கள் இதன் முதலாளிகளாக இருக்கும் பட்ஷத்தில் இதனைச் சாதிக்க முடிகிறது. நான் தயரித்து வழங்கிய “காலைக்கதிர்” நிகழ்ச்சியில் மு.நித்தியானந்தன் செய்யும் “இலக்கிய நேரம்” பகுதியில் காத்திரமான நூல் விமர்சனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரிய நூல்களை மு. நித்தியானந்தன் விமர்சனம் செய்யும் பாணியே தனி அது நேரடி ஒளிபரப்பாக இடம் பெறும். “கருத்துக்களம்” நிகழ்ச்சி இது வெள்ளி தோறும் செய்வேன். புலம் பெயர்நாடுகளில் குடும்பப் பிளவுகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று செய்தேன். அதனை செய்து முடித்து விட்டு ஸ்ரூடியோவை விட்டு வெளியில் வரும் போது ஒரு தொலைபேசி அழைப்பு. “அண்ணா நான் இரண்டு பிள்ளைகளின் தாய்” என்று விட்டு அழ ஆரம்பித்து விட்டா அந்தப் பெண். விசாரித்தேன். தான் வவுனியாவைச் சேர்ந்தவரென்றும். சீதனம் வாங்காமல் தன்னைத் திருமணம் செய்து விட்டு சுவிஸ்-போய் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு கணவனின் அடி, உதை கொடுமை தாங்க முடியாமல் ஒரு நலன்புரி நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தா. புலம் பெயர் நாடுகளில் குடும்பப் பிளவுகள் அதிகமாக காணப்படுகின்றன. சேர்ந்து பேசி அன்பாக இருக்க வாய்ப்பில்லாமல் உழைப்பு, பணம் என்ற தேவைகளுக்குள் சிக்குப்பட்டு தமிழ் குடும்பங்கள் சின்னாபின்னமாகி கிடக்கின்றதை எண்ணும் போது மனது வலிக்கிறது. குடும்பங்கள் தொடர்பான அன்னியோன்யத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் பிரயோசனத்தை தந்தது.

மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் ஒரு முறை சொன்னார். “உங்கள் நிகழ்ச்சி மூலம் ஒரு குடும்பம் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று. நேயர்கள் மத்தியில் ஒரு போக்கு இருக்கிறது தங்களுக்கு பிடிக்காத விடயங்களை உடனே தொலைபேசி மூலமோ அல்லது கடிதமூலமோ தெரிவிப்பார்கள், ஆனால் சிறப்பான நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு சும்மா இருந்து விடுவார்கள். இந்தக் கருத்தை இளையதம்பி தயானந்தா எனது தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் போது குறிப்பிட்டார். இது தொலைக்காட்சி, வானொலி நேயர்கள் எல்லோருக்கும் பொருந்தும். புலம் பெயர் நேயர்கள் பொதுவாக செய்திகளுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 98 வீதமான எனது நேயர்கள் இலங்கைத் தமிழர்களாக இருப்பதனால் இலங்கை பற்றிய செய்திகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தொடர் நாடகங்கள் அவர்களுக்குள் பெண்கள் அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள்.

இலங்கையில் இருந்து வந்த முதியவர்களுக்கு தமிழ் தொலைக்காட்சிகள் பெரும் ஆறுதலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. இங்கென்றால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று அரட்டை செய்வதில் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதில் பொழுதுகழியும். வேப்பங்காற்றுக்குள்ளும் பனங்கூடல் வாசத்துக்குள்ளும் இருந்தவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து மகள் மாரோடும் மொழி புரியாத பேரக்குழந்தைகளோடும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெரியவர்கள் முதியவர்களுக்கு பெரும் ஆறுதல் தொலைக்காட்சிகள் தான். புலம் பெயர் நாடுகளின் பேரன் பேத்திகளைப்பார்க்க என்று வருபவர்கள் வெளியில் நினைத்தவுடன் போக முடியாது மொழிப்பிரச்சனை, பஸ்ஸில் உடனே ஏறிப்போக முடியாது பாதை மாறிவிடும் இப்படியானவர்கள் தொலைக்காட்சிகளோடு தான் காலத்தைக் கடத்த வேண்டியுள்ளது.

தொலைக்காட்சிகள் வருடச்சந்தா அடிப்படையில் தான் இயங்குகின்றன. வருடத்துக்கு 150 ஸ்ரேலிங்பவுண்கள் கட்டி காட் வாங்க வேண்டும். அனேகமாக லண்டனில் இருந்து இயங்கும் தொலைக்காட்சிகளின் கட்டணம் இப்படித்தான். சினிமா, தொடர் நாடகங்கள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்தும்படி சீரியஸான நேயர்கள் கூறுவதுண்டு. இதில் பல சிக்கல்கள் உண்டு. வியாபார நோக்கமில்லாமல் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியாது. விளம்பரங்களை விட சந்தாவை விட அதிகம் செலவுள்ள சமாச்சாரம் இது. பல தரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டியது தொலைக்காட்சிகளின் தேவையாக இருக்கிறது. எனது தொலைக்காட்சிப் பேட்டிகளில் என்னை உலுக்கியது திருகோணமலையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் கதை. திருகோணமலையில் இருந்து ரஷ்யா, உக்ரெயின், கஸகிஸ்தான், போலந்து ஊடாக லண்டன் வந்த கதையைச் சொன்னார். பனி படர்ந்த பாதைஊடாக ஆட்கடத்தும் ஏஜன்சிகள் மூலமாக நடைப்பிணமாய் வந்த கதை அது. வெளிப்புற செய்தி சேகரிப்புக்காக நீதிமன்றதுக்கு கமெராமென் சுரேஸோடு சென்றேன். அங்கு 2 ஆயுள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்களைக் கண்டேன். “அல்பேட்டன்” எனும் இடத்தில் இருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியால் இந்தத் தண்டனை வாசிக்கப்பட்ட போது நீதி மன்றத்தில் இருந்தேன்.

புலம் பெயர்ந்து வந்து கோஷ்டிச்சண்டைகள் கொலை செய்யும் மனப்பாங்கு வளர்ந்து விட்டவர்களாக தமிழ் இளைஞர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் பொலிஸின் கடும் நடவடிக்கை மூலம் லண்டன் பொலிஸ் இவர்களை கட்டுப்படுத்திய பின்பு கொலைகள் குறைந்திருக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியலாளர்கள் லண்டனுக்குத்தான் அதிகமாக வருவார்கள். லண்டன் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பான நகரம். நாம் லண்டனில் இருப்பதனால் வருபவர்களோடு தொடர்பு கொண்டு செவ்விகள் எடுப்பது சுலபமாக இருந்தது. முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, தீடிர் தௌபீக் ஆகியோர் வந்த பொழுது ஒன்றே முக்கால் மணி நேர நேரடி ஒளிபரப்பு செவ்வி செய்தேன். மிகவும் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக இருந்தது. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனேகமான தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான மயக்கமே இருக்கிறது. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்கள் தான் என்று அடம்பிடிக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கலைகலாச்சாரப் பாரம்பரியங்களின் வேற்றுமை. இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகவே பிரகடனப்பட்டிருப்பதை பொது புலம் பெயர் தமிழர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பான காரசாரமான விவாதம் நேரடி ஒளிபரப்பில் இடம் பெற்றது. இதே விவகாரம், முன்னாள் அமைச்சர் அஸ்வர் வந்தபோது தொடர்ந்தது. இலங்கையில் இருந்து வந்த நிகழ்ச்சியான “விழிப்பு” புலம் பெயர் தமிழர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. நாம் “விழிப்பு” நிகழ்ச்சியை தொடர்ந்து வியாழக்கிழமை லண்டன் நேரம் இரவு 8.30 இற்கு ஒளிபரப்பு செய்தோம். எமது நேயர்கள் இலங்கை தொடர்பான சரியான “டொக்கியுமன்ரி” நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் “விழிப்பு” மூலம் பல எதிர்ப்புக்கணைகளும் எம்மை நோக்கிவந்தன. சில விழிப்புகளில் சிங்களப்பகுதி பாடசாலைகள், விடுதலைப்புலிகளால் போரில் கொல்லப்பட்ட காணாமல்போன குடும்பங்களில் உள்ள விதவை மனைவிகள், தாய்மார்களைச் செவ்வி கண்டிருப்பார்கள். இது அங்குள்ள சில பேருக்கு ஒவ்வாமல் இருந்தது. அதனால் இந்நிகழ்ச்சி வேண்டாமென்றார்கள். விகாரைகள், பிக்குமாரைக் காண்பித்தால் சிலபேர் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். “விழிப்பு” எல்லாக்கிராமங்களுக்குள்ளும் நுழைந்து வந்தது. தமிழ்ப்பகுதிகள், எல்லைக்கிராமங்கள், இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் களுத்துறைச் சிறைச்சாலையில் கஷ்டமுறும் தமிழ் கைதிகள் என்று எல்லா தரப்புகளையும் அவர்களின் பிரச்சனைகளையும் வெளிக்கொணர்ந்தது. இலங்கையில் விழிப்பு ஏற்படுத்திய தாக்கத்தைவிட தீபம் தொலைக்காட்சியூடாக புலம் பெயர்நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காத்திரமான அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. “விழிப்பு” முடிவடைந்ததன் பின்பு “உரைகல்” என்றொரு நேரடி ஒளிபரப்பை, நேயகர்களின் கருத்தறியும் நிகழ்ச்சியினைச் செய்தோம் நானும் மு. நித்தியானந்தனும். நேயர்களின் கருத்துக்கள் “விழிப்பு” சம்பந்தமாகவும் அன்றைய நிகழ்ச்சியின் மைக்கருத்து சம்பந்தமானதாகவும் இருக்கும். வலு சுவாரஸ்யமானதும் இன்னும் தகவல் பொருந்திய நிகழ்ச்சியாகவும் அது அமைந்து எல்லாத்தரப்பினரது அபிமானத்தையும் பெற்றிருந்தது. “உரைகல்” பொதுவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் உடல் உளவியல் பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தவிப்பதனை ஆழமாக உணரக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட செய்தியாளர்கள், ஒளிபரப்பாளர்களாகிய எங்களுக்கே அதிகம் உண்டு.

புலம் பெயர்வாழ்வின் தனிமை, பணப் பிரச்சனை, கடினமான உழைப்பு, இலங்கையில் உள்ள உறவினர்களின் பணம் தொடர்பான நச்சரிப்பு, ஊரில் திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண் சகோதரங்களின் சீதனம் பற்றிய கவலை, வயது வந்தும் உழைத்துக்கொண்டே இருப்பது திருமணம் முடியாமல், இதற்கும் மேலாக குளிர் ஒத்துக்கொள்ளாத சீதோஷ்ணநிலை அதனால் வாதம் இடுப்புவலி, மூட்டுப்பிடிப்பு, அத்தோடு சமர் காலங்களில் வரும் “ஹேபீபவர்” என்கின்ற சுவாச நோய் போன்றவையும் ஒவ்வாமையும், மொழிச்சிக்கல், அடுத்தவர் உறவினராக இருந்தாலும் அவர்களைக் கவனிக்க மற்றவர்களுக்கு நேரமின்மை, பத்துப் பன்னிரண்டு வருடமிருந்தாலும் அன்னிய நாட்டு மொழிகள் மூளைக்குள் நுழையாமை இதனால் தொடர்பாடல் அற்றுப்போதல், குடும்பத்தில் அன்பு இன்மை, கணவன் மனைவியிடையே ஒரு அன்னியோன்யம் வளராமை, எப்பொழுதும் கணவன் மனைவிமத்தியில் சண்டை, இருந்து பேச நேரமின்மை, பிள்ளைகள் அன்னிய கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டே போகும் அவஸ்த்தை, பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் பதினைந்து பதினாறு வயதில் ஒரு துணையைத் தேடிக்கொண்டு சுற்றுவது செக்ஸ் போன்ற செயல்களில் பிள்ளைகள் ஈடுபடுவது, மனத்தளர்வு, இவைகளை யோசித்து யோசித்தே நோயாளர்களாகிப் போன தமிழர்களை அதிகம் காணுவது என்னைப் போன்றவர்களே! அதனால் தொலைக்காட்சிகளில் நடைபெறும் டொக்டர்மாரின் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் சாத்திரம், காண்டம்பார்த்தல், மனநோய் நிபுணர்கள், சாமிமார்களின் நிகழ்ச்சிகளுக்கும் வரும் தொலைபேசி நேயர்களின் எண்ணிக்கை அதிகம். சின்னப்பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள்வரை ஆர்வமுடன் “யார்” நாடகத்தைப் பார்த்தார்கள். அது வலு சோக்கான திகில் நாடகம். அதில் புதிரை அவிழ்ப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. “யார்” நாடகத்தின் முக்கால் மணிநேரமும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் குறைந்த ஆட்கள் ஈடுபாட்டோடு வேலை செய்யும் இடமாக “தீபம்” கலையகம் இருக்கும். ஒரு இரண்டரை மணிநேர நேரடி ஒளிபரப்பை மூன்று பேர் செய்திருக்கிறோம் என்றால் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையவர்கள் நம்ப மாட்டார்கள். ஸ்ரூடியோவில் நான் எடிட்டிங் பகுதியில் ஒருவர். என்கோடிங் பகுதியில் ஒருவர். இப்பொழுது வேறு வேறு தமிழ் டிவி ஸ்ரூடியோவுக்கு போகும் போது வேலை செய்பவர்களின் தொகையைப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் ஸ்ரீ, நிரஞ்சன், அமுதன், பாபு, கபாலிபாபு, ராஜா, ரூபன், சுரேஸ், முத்து பாலு ஆகிய தொழில்நுட்பக்கலைஞர்களின் அசாத்திய துணிவும் நம்பிக்கையுமே நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முழு உறுதுணை. இவர்கள் கண்ணாடித் திரைக்கு அப்பால் நின்று உழைப்பவர்கள் இவர்கள் தான் உலகம் முழுக்க என்னைப் போன்றவர்களை பிரகாசிக்கச் செய்பவர்கள். எந்தப் பிரச்சனையுமில்லாமல் இப்பொழுதும் “தீபம்” தொலைக்காட்சியில் வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ந்து போகிறேன். நண்பர்கள் எல்லோரும் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். 36 பேர் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது மீடியாவில் பிரச்சனை ஒற்றுமை பற்றி சொல்லாமல் செல்லமுடியாதுள்ளது. பல தொலைக்காட்சி நிலையங்களில் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் ஒருவரைப்பற்றி முதலாளிமார், மேலிட உத்தியோகத்தரிடம் போய் கோள் சொல்வதுமாக இருக்கும நிலையினைப்பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பள உயர்வை கம்பனி செய்தது. அதைப்பார்த்து.

சம்பளத்தை பொறாமைப்படுபவர் கொடுப்பதில்லை. கம்பனி கொடுக்கிறது. இவர் ஏன் பொறாமைப்படுகிறார்? இது இலங்கையில்... பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் என்று வேலை செய்யும் சக நண்பர்களாகவே பார்க்கிறார்களில்லை. ஏதோ எதிரிகள் போலவே பார்க்கிறார்கள். ஒருவருடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறார்களில்லை. அவமதிக்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் பண்பை, பாராட்டும் மனோ பாவத்தை உண்மையாய் மனதால் மனதோடு பேசும் பக்குவத்தை இந்தப் பொறாமை வாதிகள் எல்லாம் ஐரோப்பியரிடம் கற்க வேண்டும். மனம் திறந்து பாராட்டுவார்கள். லஞ்சம் தெரியாத, பொறாமை தெரியாத அடுத்தவனின் சுதந்திரத்தில் கை வைக்காத மற்றவரை மதிக்கத் தெரிந்த நல்ல மனிதர்களோடு பழகியிருக்கிறேன். இங்கு சிலர் வந்து சிலரைப் பற்றி குறை கூறும் பொழுது நான் அதனைக்கேட்பதில்லை. உண்மையில் தன்னைப்பற்றி தன் கருமங்களைப்பற்றி அதன் செய்நேர்த்தி பற்றி சிந்திக்கத் தொடங்கினால் மற்றவர்கள் பற்றியதெல்லாம் விலகிவிடும். அதுதான் சரியும் கூட. ஒரு எழுத்தாளனாக 1985இல் சிந்தாமணி பத்திரிகையில் எழுதத்தொடங்கி அறிவிப்புத்துறை எனது உதிரத்தோடு உதிரமாக சின்னவயதினிலேயே என்னுள் ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். “மைக்” கைக் கண்டால் ஆசை. சிரட்டையை வாழை மரத்தில் கட்டிவிட்டு சணலில் வயர் செய்து ஒரு தடியில் கட்டிவிட்டு “எனவுன்ஸ்” செய்து பார்த்த எனது கிராமத்து வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் வாழை மரங்களை என் வளர்ச்சியின் பின்பு தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சண்டிக்கட்டோடு மட்டையில் “குளல்” செய்து திரிந்தது. ஆனந்தனோடு(ஆமி சுட்டு செத்துப்போனான்) சேர்ந்து கங்காதரனும்(ஜேர்மனியில் ஒரு சர்க்கரை வியாதிக்காரனாக நல்ல மனிதனாகஇருக்கிறான்) நானும் யாருக்கும் மைக்கை கொடுக்காமல் அம்மா மறித்தாலும் கேட்காமல் வீடியோ படம் காட்டும் இடத்துக்கு “எனவுன்ஸ்” செய்தது. பள்ளிக்சுட லொத்தர் கொட்டகையில் “முதலாம் பரிசு சைக்கிள்” என்று சொல்லி அறிவிப்பு செய்தது... பள்ளிக்கூட மேடைகளில் இராசநாயகத்தோடு சேர்ந்து அவன் ஈழத்துச்சதனாயும் நான் அறிவிப்புச் செய்பவனாகவும் சேர்ந்து செய்த மகிழ்ச்சிகள். இராசநாயகம் நன்றாக நாய், பூனை, குருவி, நாய் கடிபடுவது எல்லாம் கத்துவான் மாணவர் சங்க கூட்டங்களில் பாட்டுக்கு பாட்டு செய்தது. தில்லையம்பலம் வாத்தியாருக்குப்பயந்து பயந்து பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் “எனவுன்ஸ்” பண்ணியது. அம்மய்யா ஏச ஏச ''யுனிக்'' ரேடியோ ஒன்றை நாய்குட்டி காவியது போல இடுப்பில் அணைத்துக்கொண்டு திரிந்தது. மகாலிங்கம் சேரின் உதவியோடு பேச்சுப் போட்டியில் “கூட்டுறவுக் கொள்கைகளும் நடைமுறைகளும்” எனும் தலைப்பில் பேசி மாவட்ட மட்டத்தில் பரிசு வாங்கியது.... அரபிக் கல்லூரி விழாக்களில் கவிதை வாசித்தது. மாணவர் மலர் நிகழ்ச்சியில் கனக சபாபதி நாகேஸ்வரன் முல்லைத்தீவில் வைத்து கேட்ட போது எனது இலட்சியம் கே.எஸ்.ராஜா போல வரவேண்டும் என்றது. பின்னர் அறிவிப்பாளர் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் முதலாமிடங்கள்பல பெற்றது. ஜனாப்.பி.எச். அப்துல்ஹமீட் வானொலிக்கு வரச்சொன்னது. 1997-1998களில் இலங்கை வானொலியில் “விடியலை நோக்கி” நிகழ்ச்சி செய்வதற்கு வி.என்.மதியழகன், உருத்திராபதி ஆகியோர் ஊக்கம் தந்தது. அதே காலங்களில் நூரணியா ஹஸன், ஹரீஸ்ஹஜி, முனவர் ஹாஜி தந்த நிகழ்ச்சிகளும் ஊக்கங்களும்...
பின்னர் 2000-ஓகஸ்ட் 07ம் திகதி தீபம் தொலைக்காட்சியில் இணைந்தது.
பிரமித்துப்போகிறேன் என்னுள் நானே.

Tuesday, 12 May 2009

கண்ணீரை தின்பவர்கள்


கண்ணீரைச் தின்பவர்கள்
பிரேதங்களை அடுக்கி வைத்துவிட்டு பிரேதங்களுடனேயே வாழ்கிறார்கள் என்னுடைய மக்கள்.வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் வெறும் ஒரு நூல் இடைவெளியில் தான் எனது மக்கள் வன்னியில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். வாழ்வு தொடர்பான அனுபவத்துக்கு அப்பால்மரணம் தொடர்பாகவே இரவு பகலாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மரணம் அவ்வளவு நெருக்கமாக ஒவ்வொரு நொடியில் உரசிக் கொண்டு போகிறது.

பால்மா வாங்க நின்றவர்கள், கஞ்சி கடாரத்துக்கு முன்னால் வரிசையாக நின்றவர்கள், மரத்துக்கு கீழே இருந்தவர்கள், வைத்தியசாலையில் படுத்திருந்தவர்கள், போனவர்கள், வந்தவர்கள், கர்ப்பிணிகள், குஞ்சு குருமான்கள் என்று எல்லோரையும் மரணம் அள்ளிக் கொண்டு போகிறது. தினம் தினம் மரணம் மட்டும் தான்.
தாகத்தால் மரணித்தவர்கள், பட்டினியால் மரணித்தவர்கள், நோயால் மரணித்தவர்கள், அதிர்ச்சியால் மரணித்தவர்கள், கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் சிசு கூட கொல்லப்பட்டு கிடக்கிறது.

எமது உயிரான கண்களுக்கு முன்னால் வன்னியில் மக்கள் தினம் தினம் அடித்து கொல்லப்படுகின்றனர். கால்கள் இரண்டும் முழங்காலோடு பிய்ந்து போன சிதைந்து போன இரத்தமும் சதையுமாக தொங்குகின்ற இளைஞர்களின், பெண்களின், ஆண்களின் சிறுவர்களின் உடலங்களை பார்த்து பார்த்து எனக்கு மன அழுத்தம் உண்டாகிவிட்டது. என்னைப் போல இன்னும் எத்தனையோ பேருக்கு அப்படித்தான் இருக்கிறது.

நீங்கள் இலங்கையில் இருந்து கொண்டு பார்க்க தடுக்கப்பட்ட பல காட்சிகள் இங்கே லண்டனில் அடுத்த நாளே பார்க்கிறோம். இதயத்தை கசக்கி பிழிகிற காட்சிகள் அவை. காசாவில் நடந்ததை உங்களுக்கு டி.வி.யில் பார்க்கக்கூடியதாக செய்திகள் இருந்திருக்கும். ஆனால் வன்னியில் நடப்பதை கொழும்பில் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறீர்கள். நாங்கள் பார்க்கிறோம்.
ஒரு முள்ளு குத்தி விட்டாலோ அல்லது ஒரு கல்லடிபட்டாலோ என்னவாய் துடித்து போகிறோம். உயிரோடு இருக்கும் மனிதரின் முழங்காலில் சிதைந்து போன பிய்ந்து போன தசைகளை மாட்டிறைச்சியை கத்தியால் வெட்டுவது போல வெட்டி எடுத்து மிகுதி காலை வீல்புறோவில் போட்டு குப்பையோடு குப்பையாக எடுத்து போகிறார்கள். என்ன கொடூரம் இது தமிழனுக்கு.
கஞ்சியை மட்டும் காய்ச்சி குடிக்கிறார்கள். நல்ல தண்ணீர் கிடைக்காத உப்புக் கடலோரம் ஒரு லட்சம் பேர் வறண்டு போய் கிடக்கின்றனர்.
எல்லோரும் இந்த மக்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறோம். கூட்டம் கூட்டமாக கொத்து கொத்தாக பிரேதங்களை தான் வன்னி மண் ஒவ்வொரு நாளும் கண்டு கொண்டு இருக்கிறது.

அங்கிருந்து உயிர் தப்பி போகலாம் என்று இந்தியாவுக்கு அண்மையில் போன 21 பேரில் வழி மாறி ஆந்திராவுக்கு போய் அடைந்திருக்கிறார்கள் 11 பேர். 10 பேர் போன வழியில் கடலுக்குள் சாப்பாடில்லாமல் செத்துப் போய்விட்டார்கள் என்று செத்துப் போனவர்களை தனது கையால் ஒவ்வொருவராக கடலில் போட்டு விட்டு வந்த இளைஞர் சொல்கிறார்.
பசியில் கதறி கதறி செத்துப் போனார்கள் அவர்கள் என்று அவர் சொன்னார்.
வன்னியில் காயம்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் ஏதுமில்லை என்று முள்ளிவாய்க்கால் வைத்தியர் சண்முகராஜா சொல்கிறார்.


புண்ணை சுத்தமாக கழுவுவதற்கு ஒரு வகையான தொற்று நீக்கிகளும் இல்லை புண்கள் எல்லாம் சீழ் பிடித்து முழு உடம்பும் கிருமி தொற்றாகி இறந்து போகிறார்கள். கர்ப்பிணிகள் வயிற்றில் குழந்தைகளோடு செத்து போய்கிடக்கிறார்கள். பிரேதங்கள் அடக்கம் செய்ய முடியாமல் வீதிகளில் கிடக்கின்றன. அவை அழுகி மணக்கின்றன. உயிரோடு இருப்பவர்களின் காயங்கள் அழுகி மணக்கின்றன. கற்பனை செய்து பாருங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு மனித கூட்டம் கண்ணுக்கு முன்னால் செத்து போய்க் கொண்டிருக்கிறது எனது மண்ணில்.
வன்னிக்குள் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்காக பரிதாபப்படும் சர்வதேசம் அந்த மக்களுக்கான எதிர்காலத்திற்காக என்ன செய்யப் போகிறது?
தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியாவிலும் ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா என்று தொடர் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசாங்கம் தனக்கு ஒரு உறுதிமொழி வழங்கியது என்று 24ஆவது நாள் சைமன் ஹியூஸ் எம்.பி. பழரசம் கொடுக்க குடித்து முடித்து விட்டு சொன்னார். ஆனால் அவரின் தியாகம் அளப்பரியது. ஒருநாள் விரதம் இருக்கவே ஆலாய் பறக்கும் ஆட்கள் மத்தியில் தொடர்ச்சியாக அகிம்சை முறையில் இப்போதைய அரசாங்கங்களை அடிபணிய வைக்கலாம் என்ற துணிவு அசாத்திய துணிவுதான்.

ஆனால் பிரித்தானிய அரசாங்கம் என்ன சொன்னது தமிழர்களை காப்பாற்றுமா? இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமா? அல்லது என்ன இழவைத்தான் சொன்னது? என்று வாய் திறக்கிறார் இல்லை பரமேஸ்வரன்.
ஆனால் உண்ணாவிரதத்துக்கு பலன் கிடைத்து விட்டது என்கிறார்.

இப்பொழுது இங்கு லண்டனில் இன்னும் நான்கு இளைஞர்கள் சாகும் வரையில் சாப்பிடமாமல் இருக்கப் போகிறோம் என்று பரமேஸ்வரன் மாதிரி மே முதலாம் திகதியில் இருந்து ஆரம்பித்து இருக்கின்றனர். இப்பொழுது உண்ணாவிரதங்களுக்கு அப்பால் மக்களின் மரணங்களை எவ்வாறு தடுக்க முடியும் என்பது தான் பாரிய பிரச்சினையாகிவிட்டது. பிரபாகரனை பிடிக்கும் வரை யுத்தம் நடைபெறும் என்று கோதாபய, மகிந்த, கெஹலிய, அனுர பிரியதர்சன யாப்பா, ரத்னசிறி என்று எல்லோருக்குமே ஒருமித்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

யுத்த நிறுத்தம் என்பது ஒரு தற்கொலைக்கு சமம் என்று இராணுவம் எண்ணுகிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருக்கும் லட்சம் மக்களின் நிலைமை என்ன? நினைக்கும் போதே தலை வெடிக்கிறது.
உண்மையில் பிரபாகரனை பிடித்து அல்லது பொட்டு அம்மானை பிடித்து இந்தியாவிடம் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருக்கிறார். கொடுத்தால் அதற்கு பிறகு யுத்தம் என்று ஒன்று இல்லாமலே ஆகி விடுமா? பிரபாகரன் பிடிபட்டால் பிறகு யுத்தம் முடிந்து விட்டது என்று அரசாங்கம் அறிவித்தல் விடுமா? என்ற கேள்விகளுக்கு யாராலும் ஆம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு சிக்கல் எங்களுக்கு முன்னால் இருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்கள் இந்த அகதி முகாம்களில் இருந்து தத்தளிப்பது. இப்பொழுது தரம் பிரிக்கும் நடவடிக்கை இடம் பெறுகிறது. எதிர்காலம் மிகவும் அச்சம் மிகுந்ததாக இருக்கிறது. அது மாபெரிய இருண்டகாலமாகவே கண் முன்னால் விரிந்து போய் கிடக்கிறது.

இலங்கை என்ற ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையும் நாட்டில் எந்த இடத்துக்கும் போகலாம், வரலாம், சொத்து வாங்கலாம், விற்கலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமற்றுப் போய் வன்மம் வேரூன்றி அதனை அறுக்க முடியாமல் இருக்கிறது.
அமெரிக்கா சொல்கிறது இராணுவ தீர்வு இன்னும் தமிழர் சிங்களவர் ஒற்றுமையை பாதிக்கும் என்று.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஜப்பான், இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகள் இலங்கையில் இராணுவ தீர்வு தான் சரி என்கின்றன.
எது சரி, எது பிழை என்று அவர்கள் வாதாடிக் கொண்டிருக்க ஒன்றும் அறியாத அப்பாவிகள் தினம் தினம் நூற்றுக் கணக்கில் மிருகங்களை போல போன போன இடத்தில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக மகா ஜனங்களே! இறக்கும் மனித உயிர்களை காப்பாற்றுங்கள்! உடல் ஊனமுற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு மருந்து கொண்டு வாருங்கள்! பசியோடு இருக்கும் அந்த மக்களுக்கு ஒரு வயிற்றுக்கு சோறு போடுங்கள்! தயவு செய்து உங்கள் எல்லா அரசியலையும் புறத்தே வைத்துவிட்டு.

Sunday, 10 May 2009

கவிதை ருசி

ருசிஅட்டைக்குத்தெரியும்
என் ரத்தத்தின் ருசி
கண்ணுக்கெட்டும்வரை காடுகள்
காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது
மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன்
பாம்புகளின் கொட்டாவி
சில் வண்டுகளின் மூச்சு
தேளின் சுவாசம்
யானையின் மணம்
குழுமாட்டின்வாடை
மான் மரை சருகுகள் பூக்கள்
மூலிகை பச்சிலை ஆறு பனி
எல்லாம் கலந்த கலவை காட்டின் மணம்
இத்தனை மணங்களையும்
பிரிக்கஉணர் கொம்புகள் இல்லை என் மூக்கிடம்
ஒன்றான சுவாசத்தை உள்ளிளுக்கும்
ஒற்றை உணர்வோடு திரிகிறேன்
இயலாமையின் வடிவத்தோடு
பூமியின் அத்திவாரம் காடு
'ஆபத்தானவை காடு ' என்று எழுதிவைத்தவனை சபித்தேன்.
என் மனதோடு சேர்ந்து
நடுக்காட்டுக்குள்செல்பவர்கள் எவரோ வாருங்கள்!
ஒரு நண்பனைப்போல காடு.
பயப்படுவதற்கு மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்
மனிதனைத்தவிர வேறு எதுவுமே அச்சமடைவதைக்கண்டதுண்டா ?
காலில் இரத்தம் வருகிறது
ஒரு பாம்பு எனது இரத்தத்தை
தனது நாக்கால் சுவைத்தது..
காடு எவ்வளவு அழகானது.

Saturday, 9 May 2009

கவிதை

சாபக்கேடு

எரியும் தணலிடையுன்ஊனுருகிப் போனது
உன் பால் பீச்சி
என் முகம் நிறையும்உன் சிரிப்பு.
உன் பெரிய முலையிடுக்கில்
முகம் புதைத்தழுவேன்
கோதி மடிமீதுஉச்சி மோர்ந்து....
சோர்வென்பது என்னம்மா?

துப்பாக்கி தொட்டிறக்கி
அநீதி பற்றி எப்போதும்ஓதிக் கொண்டிருப்பாய்....
என்னலைச்சல் மீதுஉனக்கும் சுமை.
உன்மீது
எனக்குக் கோபமே வராத
அந்த ஒரு மணி நேர இரவில்....

என் வேதனைக்கு ஈரலிப்பு வந்து விடுகிறது
பொதும்பிய துவாலையின்வழிஉருகி
எரியிடைவளரும் தீயெனஉன் பூமுகம்...!

அம்மா!எப்பிறவியில்அநியாயம் இழைத்தேன்?
இழிந்து உருக்குலைந்து
சிதிலமாகிப் போனஉன் மார்பையும்
முகத்தையும்உடலையும்
முதலைப்பால இடிமதகினிலிருந்து
அள்ளி அணைத்துக் கொண்டு
கதறி அழுவதானபொழுதை அடைந்தேன்.
காற்றில் வரும்துர்வாடை மறந்து....

கவிதை

மறதி
மறதி எப்பொழுதும்
மனிதனை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது
மறதிக்கு மருந்து தேடி ஆலாய்ப்பறக்கிறார்கள்
அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால்

ஒவ்வொரு மனிதனும்
தினமும் உயிர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்
மறதி
ஞாபங்களை தன்னுள்ளே
புதைத்து வைத்திருக்கும் வேதாந்தி
சில நேரம் எல்லாவற்றையும்
இடம் தெரியாமல் கிளறி விடும்
எதனை ஞாபகப்படுத்த வேண்டுமோ
அதனை அது மறக்கடித்துவிடும்

மறப்பதற்கு முன்னாலும்
ஞாபகம் கொள்ளுதற்கு முன்னாலும்
மறக்கச் சொல்பவர்களுக்கே

சிலவை கனவாக வந்து வாட்டி விடும்
பத்திரிகைக் காரனுக்கு மறதி வராதாம்
ஏனெனில்
அவனது மறதிக் கலங்கள்
எப்பொழுதோ மாண்டு விடுமாம்.
எல்லாம் எப்பொழுதும்
மறக்கச் சொல்லி அடிக்கடி சொல்கிறார்கள்
மறக்காமல் விட்டால் அடிக்கிறார்கள்
இருட்டில் மறதி சிலருக்கு ஒரு வரப்பிரசாதம்
நிறத்தைக் கூட மறந்து விடுகிறார்கள்
சில வேளை
இது தான் என்று
ஞாபகப் படுத்தினால் தவிர
சிலவற்றை மறந்து விடுவதென்பது இயலாது
எனக்கு முன்னும் பின்னும்
மறதியைக் கூட்டிக் கொண்டே நடக்கின்றேன்.
மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல


Friday, 8 May 2009

கவிதை

துடிப்பு

அறைகளுக்கு நடுவே
மூச்சடங்கி இருப்பது உயிர்
கண்களுக்குத்தெரியாத
உணர்வுகளினூடு இழைவது
சில முரண்களுக்குள்ளும்
சில சுவாத்தியங்களினூடும்

இணைத்து இணைத்து
இன்னும்இளைத்து விடாத ஒன்று
தானாக பிரிந்து விடத்துடிப்பதும்
வாழுகின்ற போது
ஒரு துளி இன்பத்தையும்
பருகிவிட எத்தனிக்கும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கிராகதர்கள்
ஒரு கூட்டமாய்
உயிர் பறிக்க அலைவதும்
கனைப்பதும்
எந்த இடத்தில் ஜனித்ததோ
அதே இடத்தில் பறிப்புமாம்
உயிர் பற்றி அம்மம்மமாவின் கூற்று இது.

சில காட்டிற்கு நடுவில்
சில ஆகாயத்தில்சில தற்கொலையால்
சில பெரிய மனிதரால்
கத்தியால் துப்பாக்கியால்
கோடரியால்
நெருப்பால் சதியால்
விரக்தியால் பொதுமென்றாகி
தானாகி
ஆனாலும் வாழத்துடிக்கிறது
கண நேரமெனினும்உயிர்..

Thursday, 7 May 2009

படம் சொன்ன கதை


எங்கள் வன்னி குஞ்சுகள் எந்தக்காலத்தில் பனீச்சம்பழத்தை தின்றார்கள்

சிறுகதை - லண்டன் அகதி

லண்டன்அகதி

இளைய அப்துல்லாஹ்

லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது.

இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள்.
ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது.
வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு.

மழை மாதிரி இருக்கும் வெயில் வரும். வெயில் மாதிரி இருக்கும், மழை வந்துவிடும்.
மனம் முழுக்க மிகவும் புழுக்கமாக இருக்கிறது. ஸ்ரெயின்ஸ் றோட்டில் ஒரு ரெட்டைத் தட்டு பஸ்போகிறது. முன் சீற்றில் இருக்கும் ஒரு பிள்ளை மேல் தட்டு பஸ்ஸை தான் ஓட்டுகிறதாக பாவனை செய்கிறது. டிக்ஸனுக்கும் அஸ்டாவுக்கும் பக்கத்தில் உள்ள முடுக்கில் ஒரு ஹோம்லெஸ் பிச்சை கேட்கிறார்.
அவரை பொதுவாக ஆட்கள் கவனிக்காமல் போகிறார்கள். அவர் ஹோம்லெஸ் ஆனதற்கு அவர்தான் காரணம் என்று போவோர் வருவோர் நினைக்கிறார்கள். அவர் உசாராக வேலை செய்திருந்தால் அவர் வயதான காலத்தில் நாயோடு ஏன் பிச்சை கேட்க வேண்டும் அரசாங்கம் அவருக்கு காசு கொடுக்குமே என்பதே மக்களின் மனங்களில் உள்ள கேள்வி.

பொதுவாகவே மணித்தியாலம் மணித்தியாலமாய் உழைத்து சேர்க்கும் ஒவ்வொரு பவுண்ஸ்களுமே மிகவும் பெறுமதி வாய்ந்தவை. அதனை வேறுயாருக்கும் இனாமாக கொடுக்க வெள்ளைக்காரர் தயாராக இல்லை. உடலுழைப்பு இல்லாமல் இங்கு ஒரு பென்ஸ் கூட கிடைக்காது.வாழ்வு இங்கே வித்தியாசமானது.

ஒரு ஃபோன் லொக் உடைக்கும் கடையின் முன்பு சிறுவர்கள் கூடி நின்றார்கள்.
லண்டனில் எல்லோர் கையிலும் போன் இருக்கிறது. எஸ்.எம்.எஸ். அனுப்புவது மலிவு. ஸ்கூல் பிள்ளைகள் எல்லாரும் ஃபோன் வைத்திருக்கினம்.
எனது ஃபோன் எனது கையில் இருக்கிறது. 30 பவுண்ட்க்கு சண்டே மார்க்கட்டில் வாங்கியது.
அதுதான் லண்டனில் உள்ள மிகக் குறைந்த விலையுள்ள ஃபோன் ஆக இருக்கும். ஏதும் அந்தரம் ஆபத்துக்கு ஒரு ஃபோன் வேண்டுமென்று ரூமில் உள்ளவர்கள் சொல்ல வாங்கியது 30 பவுணை இலங்கை காசுக்கு கூட்டிப்பார்த்தால் ஆறாயிரம் ரூபா. ஆறாயிரம் ரூபாவுக்கு இலங்கையில் ஒரு புதுப் ஃபோன் வாங்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
லண்டனில் ஃபோன் பாவிப்பதும் செலவுதான். போன ஆரம்பத்தில் எல்லா பவுண்ஸ்களுக்கும் ரூபாயை கணக்குப் பார்த்து பழகி விட்டது.


ஒரு கோப்பி 200 ரூபாய் முடிவெட்ட குறைந்தது 2000 ரூபாய் ஒரு நேரம் ரேக் எவே சாப்பாடு 800 ரூபாய் என்று. ஆனால் பெற்றோல் ஸ்டேஸனில் வேலைக்குப் போனாப் பிறகு கொஞ்சம் மாறிவிட்டது எல்லாம். இரவு வேலைஏனெனில் ஆசைப்பட்டது எல்லாம் அனேகமாக பெற்றோல் ஸ்டேசனில் எடுத்து தின்னலாம். லண்டனில் உள்ள அனேகமான சொக்கலேட் வகைகள் குளிர் பானங்கள் என்று பெற்றோல் ஸ்டேஸனில் இருக்கும். மனேஜர் சாப்பிடுவது குடிப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டார். நல்ல மனிதர் தேவன் அண்ணை அவர்தான் மனேஜர்.


**************************


அவனும் அகதியாகத்தானே வந்தான். 83 இல் வந்து இப்ப பாஸ் போட் கிடைத்திருக்கிறது. எனக்கு இன்னும் பாஸ் போட் கிடைக்கவில்லை. எனக்கு பிரிட்டிஷ் பாஸ்போட் கிடைத்து விடும் என்று ஸ்ரீ நினைக்கிறான்?
எனது நண்பன் எப்பொழுது துரோகியாகவும் கீழ்த்தரமானவனாகவும் மாறினான். உண்மையில் எனது மனம் அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகிறது. இந்த வேதனை வேறு யாருக்காகவும் நான் படவில்லை. எவ்வளவு அன்னியோன்யமாக நன்றாக பழகியவனுக்கு ஏன் உந்தக் குணம் வந்தது. எங்கேயிருந்து தேவையில்லாத பொறாமை வந்தது. அப்படி வரக்கூடிய பொறாமை என இந்த ஆறு வருடத்திலையும் எதுவுமே தெரியவில்லையே. அவன் தனது நெஞ்சுக்குள் நயவஞ்சகத் தனத்தை மூடி மூடி வைத்திருந்தானா? ஏன் அப்படி மூடி வைத்துவிட்டு சிரித்து சிரித்து பேசினான். நல்லவனாகத் தானே இருந்தான். எப்படி கெட்டகுணம் வந்தது. கேவலமான குணத்தை அவன் ஏற்கனவே கொண்டிருந்தது தெரியாமல் இருந்ததே எனக்கு. அவனோடு நான் பழகியது நான் செய்த பெருந்தவறோ. அவனால் எனக்கோ என்னால அவனுக்கோ எந்த நஷ்டமும் ஆகப்போவதில்லையே. ஒரு ரூபா நஷ்டம் ஆகப் போவதில்லையே. எனது வேலையை எனக்கு மிக விருப்பமான வேலையை முதலாளியிடம் சொல்லி பறித்து விட்டானே. மாதம் அழகாக சம்பளம் பெற்று வந்த வேலையை பறிக்க கங்கணம் கட்டி நிற்கிறானே. இத்தனைக்கும் கொம்பனியில் வேலை செய்கிற முப்பத்திரெண்டு பேருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். முதலாளி சொல்லும் எல்லா வேலையையும் நான் கேட்டு செய்வேன். என்ன சொன்னாலும் நான் தட்ட மாட்டேன். இரவு பகலாக செய்திருக்கிறேன்.ஸ்ரீயும் நானும் சுமார் ஆறு வருஷங்கள் பழகியிருக்கிறோம். ஏன் இப்படி என்மீது பொறாமை கொள்கிறான். ஏன் வேலையை என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறான். அவனுக்கும் எனக்கும் வேலையில் எந்த முரண்பாடும் இல்லை. இந்த ஆறு வருஷத்தில் எந்த மோதலும் வந்ததே இல்லை. ஆனாலும் ஏன் எனக்கு அப்படி செய்கிறான். என்னைப் பழிவாங்க அவனுக்கு ஒரு காரணத்தையும் கூற முடியாது. அவன் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. சில வேளை கவலையாக இருக்கிறது. சிலவேளை அவனது சட்டையைப் பிடித்து உலுப்பி ஏன் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் முதலாளியிடம் சொல்கிறாய் என்று சொல்ல வேண்டும் கேட்க வேண்டும் போலிருக்கிறது.


அர்த்தமில்லாத பதவிகள் சிலரை அப்படி ஆக்கிவிடுமாக்கும் அதுதான் அவனுக்கும் நடந்திருக்கிறது. அவன் ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்கிறான். தனக்கு இல்லாத ஒன்றை தனக்கானது என்றும் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்றும் தான் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்றும் நினைக்கிறான்.

முதலாளி தந்திரமானவர். ''நீர்தான் பார்த்துக் கொள்ளும் உமது பொறுப்புத்தான் '' என்று சும்மா சொல்லுவார். இப்படி பலர் பொறுப்பாக இருந்தவர்கள் போய்விட்டார்கள்.
கஜன், நிரஞ்சன் அபலன் என்று பலருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் ஒரு சாதாரணமான வீடியோ கமராக் காரனாக இருந்தவன். கலியாண வீடு சாமத்திய வீடு என்று அலைந்தவனுக்கு ஒரு ரி.வி ஸ்டேஸனில் எடிட்டர்களுக்கு சுப்பவஸியர் என்பது பெரும் பதவி என்று நினைத்திருக்கிறான்.
அதுவும் எனது பிரபல்யமும் அவனுக்கு பிடிக்கவில்லையோ ஏன் என்னை மட்டும் குறிவைக்கிறான்.
அவன் எடிட்டர் மாருக்கு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறான். உண்மையில் புரியவில்லை அவனைப் பற்றி. அவனுக்கு அந்தத் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஏற்கனவே பொறுப்பாக இருந்த அமலன் சின்னப்பெடியன் உவன் எங்களுக்கு வேலை சொல்லுறதோ என்று அமலனுக்கு கீழே இருந்த போது ஆத்திரப்பட்டவன் இப்பொழுது அதே தவறை அதே நாட்டாமைத் தனத்தை இவன் செய்கிறான்.

பழைய காலத்து சுருட்டுக்கடை முதலாளிமார் போல வேலை வாங்கப்பார்கிறான் லண்டனில்.
அவனோடு வேலை செய்கிறவர்கள் எல்லாம் அவனை பிய்த்துக் கொடுத்தால் தின்று விடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
எவ்வளவு அழகாக மற்றவர்களுக்கு உதாரணமாக அவனை சொல்லுவேன். அவன் வீட்டில் வேலைகளை திட்டமிட்டு செய்வான். நல்ல உழைப்பாளி. எப்பொழுது இவனுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி வந்தது என்பது தான் மர்மமாக இருக்கிறது.

ஸ்டுடியோவில் அவனோடு எவ்வளவு குதூகலமாக ஓடி ஆடி மிகவும் மகிழ்வாக விளையாடி இருக்கிறோம். எத்தனை சந்தோசமான மாலைகள் கழிந்திருக்கின்றன. அதெல்லாம் பொய்யான பொறாமையின் மன நோயாளியாக அவனை நான் காண்கிறேன். உண்மையில் இவர்கள் ஆபத்தானவர்கள்.
அவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.

இப்படித்தான் இரண்டு சந்தர்ப்பங்களில் நான் எனது வாழ்க்கையில் ஆத்திரம் மீறி அடித்திருக்கிறேன். ஒருவன் இருந்தான். என்னிலும் பல வயது குறைந்தவன். அவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். அவன் டொக்டர் கோவூர் எழுதிய புத்தகங்களையே அதிகமாக படித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு சுற்றி இருக்கும் யாரிலும் நம்பிக்கை இல்லை. எல்லோரும் தனக்கு எதிரிகளாகவே இருப்பார்கள் தன்னைத் தவிர என்று நினைத்துக் கொண்டேயிருப்பான்.
இதுதான் அவனின் பிரச்சினை. ஆனாலும் இந்தப் பிரச்சினை தனக்கு இருக்கிறது என்பதனை அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். என்னை அவனுடைய முன்னேற்றத்தை கெடுக்க வந்ததாகவே நினைத்தான். தொடர்ந்தும் எனக்கு ரோச்சர் தந்தான். நான் அவனின் ரோச்சரால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அவன் மற்றவருக்கு ரோச்சர் செய்வதன் மூலம் தன்னை நிலைநிறுத்த யோசிக்கும் மனநிலை உள்ளவன். உண்மையில் அவன் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனும் ஒரு அகதியாகவே இருந்தான்.


ஸ்ரீயும் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இதுவேறு வகை. மற்றவர்களின் முன்னேற்றங்களை தடுப்பது மற்றவர்களுக்கு முதலாளி ஏசினால் அதனைப் பார்த்து சிரித்து சந்தோஷப்படுவது, மற்றவர்களின் துக்கங்களில் மகிழும் மனச்சிதைவு அவனுக்கு இத்தனைக்கும் அவன் வீட்டில் நானும் என் வீட்டில் அவனும் உணவுண்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறோம். இப்போது சும்மா எதற்கும் லாயக்கற்ற பதவி என்பதனால் அதன் மாயையில் அவன் என்னை வேலையில் இருந்து வெட்டப் பார்க்கிறான். ஆனால் அது அவனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல. மனம் முழுக்க பாரமாக இருந்தது இன்று பாரத்தை இழக்க பியர் குடிக்க வேண்டும்.

****************************

அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட செய்தியோடு சுரேஷ் வந்தான். பிரித்தானிய இமிக்கிரேஷன் என்ன நினைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் ஏன் நிராகரிக்கிறார்கள். ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது மறை பொருளாகவே இருக்கிறது.
உண்மையில் இலங்கையில் ஆபத்து உள்ளவர், உயிருக்கு அச்சமுள்ளவர், வாழ முடியாதவர், இயக்கங்களாலும் ஆமியாலும் சுடப்பட்டு விடுபவர் என்று இருப்பவர்கள் பல பேர். ஆதாரங்களை காட்டினாலும் நிராகரித்து விடுவார்கள்.
சிலருக்கு ஒன்றுமே இருக்காது வழக்குக்கு முறைப்பாடு அழகாக சோடிக்கப்பட்டதாக இருக்கும் ஆனால் பிரித்தானிய நீதவானுக்கு அது பிடித்திருக்கும். எல்லாத்தையும் தோண்டிப் பார்க்க முடியாது தானே.
சுரேஷ் பியர் குடிக்க வேண்டும் என்று கேட்டான். நான் வேலை செய்கிறேன். சுரேசும் பெற்றோல் ஸ்ரேஸன் ஒன்றில் ஏழு வருஷமாக வேலை செய்கிறான். அவன் லண்டன்வந்த காசை உழைத்து கட்டிவிட்டான். அவனுக்கு பொறுப்புகள் அதிகம்.

முதலில் பல நண்பர்களோடு நானும் சுரேசும் ஒன்றாக இருந்து விட்டு பின்னர் நாங்கள் மட்டும் தனி ரூமுக்கு வந்து விட்டோம்.
கரைச்சல் இல்லாதவன். இன்றைக்கும் கவலையாக இருக்கிறான். நாங்கள் ஹொட்றிங்ஸ் எடுக்கிறதில்லை. பியர் தான் அதுவும் ஒரே இல்லை.

பனி ஊசியாக குத்துகிறது. பனி பொழிகிறது. கட்டிகட்டியாய் விழுகிறது. நாளைக்கு வேலை லீவு எனவே இன்று சந்தோஷம் இன்று பியர் குடிக்கலாம். நல்லா நித்திரை கொள்ளலாம். ஒரு படம் பார்க்கலாம்.
எதுக்கும் மூட் இல்லை சுரேசுக்கு பியர் குடிப்பதை தவிர.
அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் இனி கையெழுத்திடப் போக வேண்டும். கையெழுத்து வைப்பது என்பது ஒரு பேரவலம் லண்டனில்.
சிலருக்கு மாதத்துக்கு ஒருமுறை சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, சிலருக்கு கிழமைக்கு ஒரு முறை, சிலருக்கு தினமும்.
இந்த கையெழுத்து வைக்கும் வேலை என்பது அகதிகளை பாடாய்படுத்தும் பயக்கடுதியான வேலை.


கையெழுத்து வைக்கப் போன இடத்தில் எத்தனையோ பேரை தூக்கி சிலோனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதுதான் நெஞ்சிடி. எப்போ திருப்பி அனுப்புவதற்கு பிடித்து வைக்கப்போகிறார்கள் என்பதே தெரியாமல் கையெழுத்து வைக்கும் இடத்துக்கு போவதே ஒருவகை மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். ஒரே ட்ரென்ஸன் ஆன வேலை அது. நெஞ்சம் படபடத்துக் கொண்டே இருக்கும் எல்லோருக்கும். கையெழுத்து வைக்கப் போனால் அந்த ஒஃபிஸ் கவுண்டரில் அனேகமாக குஜராத்தி, பஞ்சாபிகள் தான் வேலை பார்க்கிறார்கள்.

அவர்கள் ஏதோ எமது தலைவிதியை தாமே தீர்மானிப்பவர்கள் போல நடந்து கொள்வார்கள். அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லாம் எமது நாட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் என்றோ நாமும் இரக்கப்பட வேண்டியவர் என்றோ நடந்து கொள்ள மாட்டார்கள்.

முழு பிரித்தானிய இமிக்கிறேஷனும் அவர்கள் கையில் இருப்பது போலவே இருப்பார்கள். அவர்களின் கெடுபிடி தாங்க முடியாது அவ்வளவு அட்டகாசம்.
ஹவுன்ஸ்லோவுக்கு அண்மையில் இருக்கும் கையெழுத்திடும் இடம் ஸ்ரெயின்ஸ் றோட்டில் இருக்கிறது. ஹவுண்ஸ்லோவில் இருந்து இரண்டு பவுண் பஸ் தூரம்.


வெகு தொலைவில் கிழமைக்கு ஒரு தரம் வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
அகதிகள் சிலருக்கு ஒருமுறை கையெழுத்திடப் போகாவிட்டாலும் வேலை அனுமதியை ரத்து செய்து விடுவார்கள். கவுண்டரில் இருக்கும் ஒரு ஒஃபிஸருக்கு வேலை அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது இது பெரிய அனியாயமாகும்.

ஏனெனில் அரச உதவியும் இல்லாமல் வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பைத்தியக்காரத்தனத்தை கொணடு வந்துவிடும். லண்டனில் அகதிகளுக்கான கொடுமை இது.
நேரம் மாலை ஆறு மணி. குளிர்காலத்தில் நாலு மணிக்கே இருண்டுவிடும் லண்டன். குளிர் உடலை குத்துகிறது. எப்படியாவது வெளியில் போக வேண்டும். மழை தூறிக் கொண்டிருந்தது திடீரென்று அது நின்றுவிட்டது. இப்பொழுது சின்னச் சின்ன பஞ்சுத் துண்டுகள் போல பனி பொழிகிறது. றோட்டில் கார்களின் மேல் பனிப் பஞ்சுகள் விழுந்து கொண்டிருக்கின்றன. வர வர கூடும் போல இருக்கிறது.

***********************

பக்கத்து வீட்டு பெஞ்சமின் தனது நாயைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு வருகிறா. பிரான்சில் மூன்று நாய் கடித்து ஒரு நாய் வளர்த்த மனிசி செத்த கதையை பெஞ்சமினுக்கு நேற்றுத்தான் சொன்னேன்.
தனது நாய் அப்படி செய்யாதென்றும் தனது தாய் குட்டியிலேயே தன்னோடு வந்து விட்டதாகவும் ஒரு கன்றுக்குட்டி அளவுக்கு வளர்ந்து விட்டதால் அதன் குணம் மாறாது என்றும் சொன்னா.
இருந்தும் கடிக்கும் வாக்கு இருப்பதாகவும் அதன் வாய்க்கு சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பூட்டு போட்டு வைத்திருக்கும் படியும் சொன்னேன்.
அவ அதில் உடன்படவில்லை. தன்னை அது கொஞ்சவும் கொட்டாவி விடவும் மெதுவாக அது குலைக்கவும் தனது கால்களை செல்லமாக கடிக்கவும் பூட்டு போட்டால் அது என்ன செய்யும் என்றும் அதன் சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னா.
சுதந்திரத்தை விடவும் உங்களின் முகம், உயிர் முக்கியம் என்பதனை பிரான்ஸ் நாய்கள் எசமானியின் முகத்தையே முதலில் கடித்ததை சொன்னேன்.
நாய் விடயமாக வெகு ஆழமாக நான் சொன்னது பெஞ்சமினின் அடி மனதில் பதிந்து போய் இருக்கிறது. என்னைக் காணும் போதெல்லாம் பெஞ்சமின் இப்பொழுது தன் மீது அக்கறை கொண்ட ஒருவரைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பை சிரிக்கிறா. முந்தியென்றால் அப்படி இல்லை. நாய் என்னைப் பார்ப்பது முறைப்பது போல இருக்கிறது.

சுரேஷ் கவலை தோய்ந்த முகத்தோடு ஜக்கட்டை போட்டுக் கொண்டு வந்தான். அவனது ஜக்கட் எப்பொழுதும் புகை மணம் உடையதாக இருக்கும் றை கிளினுக்கு போட்டு எடடா என்றாலும் கேட்க மாட்டான். அந்த மணம் அவனுக்கு பழகிவிட்டது. எனக்கு பிடிக்காதது.
பஞ்சாபியின் கடை திறந்திருக்கிறது. லண்டனில் பஞ்சாபிகள், குஜராத்திகள், இலங்கையர், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள் என்று கூட்டம் கூட்டமாக வாழுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பை கொடுக்கிறது.
சுரேஷ் மூஞ்சையை தொங்கப் போட்டுக் கொண்டே பாதையில் வருகிறான். மல்பறோ லைட் சிகரட் ஒன்றை வாங்கி பத்த வைத்தேன் குளிருக்கு இதமாக இருந்தது.

லண்டன் வருகிறோம் என்று விட்டு ஹரோ, ஹவுன்ஸ்லோ ஈஸ்ட்ஹம், அல்பேட்டன் பக்கம் போய் பார்க்கும் முதலாவதாக போகிறவர்கள் லண்டன் ஊத்தையாய் இருக்கிறது என்று சொல்வார்கள். வீதியில் குப்பை இருக்கும். பஞ்சாபிகளும், இலங்கையரும், குஜராத்திகளும் தமது குப்பைகளை பக்குவமாக குப்பைத் தொட்டியில் போடுகிறவர்கள் குறைவு. அதுதான் ஹவுன்ஸ்லோ கவுன்ஸில் குப்பையை றோட்டில் போட்டால் 50 பவுண்ஸ் தண்டம் கட்ட வேண்டும் என்ற சட்டத்தை போன ஜனவரியில் இருந்து கொண்டு வந்திருக்கிறது.
சுரேஷ் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற கவலையில் இருந்தான். இப்ப இருக்கும் சூழ் நிலையில் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்று யோசித்துப்பார்த்து விட்டுச் சொன்னான்.

மாவீரர் உரைக்கு பிறகும் பித்தளைச் சந்தி குண்டு வெடிப்புக்கு பிறகும் அகதிகளுக்கு ஒரு தைரியம் வந்திருக்கிறது திருப்பி நாட்டுக்கு அனுப்பமாட்டார்கள் என்பது தான் அது.
லண்டனில் காசு சேர்க்கிறவையிட்டையும் எங்கை தம்பி அடிபாடுகளை காணவில்லை என்று தான் எல்லோரும் கேட்டு ஐம்பது பவுணோ நூறு பவுணோ கொடுக்கிறது வழக்கமாகவே இருந்தது. இருக்கிறது.
அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் கரைச்சல் இல்லாமல் இருக்க வேணுமெண்டால் ஈழத்தில் அடிபாடு இருக்க வேண்டுமென்டுதான் அகதிகள் எப்போதும் நினைக்கினம். அது உண்மையானதும் கூட.


''கய்ஸாஹே எப்படி இருக்கிறாய்?''
''டீக் கூன்'' (நல்லாய் இருக்கிறேன்.) பஞ்சாபி, ஹிந்தியில் என்னிடம் விசாரித்தார்.

நாய், பூனை போன்ற பிராணிகளுடன் கடைக்குள் வரவேண்டாம்என்று பஞ்சாபி போட் போட்டிருக்கிறார். உவர் என்ன இரக்கமில்லாதவர் போல என்று சில வெள்ளைக்காரர் முகம் சுளிப்பதுண்டு. ஆனால் பாணில் சாப்பாட்டு சாமான்களில் உணவுப் பொருட்களில் மிருக சாதிகள் வாயை வைத்து விட்டால் வாற மனிசரும் வரமாட்டார்கள்.


''கோமதை மச்சாங்''திரும்பியபோது ஜயலத் நின்று கொண்டிருந்தான்.
ஜெயலத்துக்கும் ஒரு மாதம் முதல் தான் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டிருந்தது. ஹவுன்ஸ்லோவில் இருக்கிறான். நன்றாக தமிழ் பேசுவான். ஒரு சன்விச் கொம்பனியில் பாணுக்கு உள் சாமான்கள் வைக்கும் வேலையில் இருக்கிறான். கொழும்பில் ஹுனுப்பிட்டியில் இருக்கிறான். எங்களோடு நல்ல சினேகிதம்.
ஜெயலத் ஆமியில் இருந்ததாகவும் புலிகளின் ஏரியாவில் வேலை செய்து ஓடி வந்ததாகவும் அதனால் தனக்கு உயிர் அச்சம் இருப்பதாகவும் அகதி கேஸ் செய்திருந்தான்.
ஆனால் இமிக்கிரேஷன் காரருக்கு இப்ப இலங்கை அத்துப்படி. சிங்களவன் உனக்கு ஹுனுப்பிட்டியில் இல்லாவிடில் வேறு எங்காவது வாழலாம் என்று கேஸை றிஜக்ட் பண்ணி விட்டார்கள். ஜெயலத் ஊருக்கு போக எமர்ஜன்ஸி பாஸ் போட்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறான்.

சுரேஷ் பன்னிரண்டு ஸ்ரெல்லா பியர் கானை எடுத்து சொப்பிங் பையில் போட்டு கொடுக்க பஞ்சாபி எண்ணிப் பார்த்து காசை வாங்கினார்.
''கல் மிலேன்கே'' (நாளை சந்திப்போம்). கடையை விட்டு வெளியில் வரும் போதும் சுரேஷ் தலையை கவிழ்ந்தபடியே வந்தான் சோகமாகவே.
ஜெயலத்தையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு போனோம். கடையில் வாங்கிய கபாப் இருந்தது அதனை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கி எடுத்தான் ஜெயலத். ஜெயலத் அடிக்கடி வீட்டுக்கு வருவான்.

ஹீற்றரை கொஞ்சம் கூட்டி வைத்துக் கொண்டு ஜன்னல் சீலையை விலத்தினால் வெளியில் முழுக்க பனி பொழிகிறது. கண்ணாடி முழுக்க ஈரம். ஹீற்றர் இதமாக இருந்தது.
குளிருக்கு பியர் இதமாக இருந்தது. ஒரு ஸ்ரெல்லா இறங்கிய பின்னர்தான் சுரேஷ் சாதாரண நிலைமைக்கு வந்தான்.

''கேஸை அப்பீல் பண்ணலாமா?''

''ஏற்கனவே உறுதி இல்லாமல் போயிட்டுது''
''அப்ப என்னடா செய்றது?ஊரிலையும் இருக்கேலாது இங்கையும் இருக்கேலாட்டி என்ன செய்யுறதுகளவாய் எத்தனை காலத்துக்கு ஒழிச்சுக் கொண்டு இருக்கிறது''
அகதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு கவலைகள், கேள்விகள், வாழ்வின் எதிர்பார்ப்புகள், இயலாமைகள் இருக்கும்.
இமிக்கிறெஷன் காரர்களும் நிராகரிப்பு என்ற ஒரு லெட்டரோடு எல்லாத்தையும் முடித்து விடுவார்கள். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருப்பார்கள் அகதிகள்.

********************
வெளியில் பொலிஸ் சைரன் கேட்டது. ஜன்னல் சீலையை விலக்கிப் பார்த்தேன். மூன்று கார்களும் இரண்டு வானும் நிறைய பொலிஸ்காரர்கள். நேராக சாந்தன் வீட்டுக்கு போய் கதவைத் தட்டுகிறார்கள். அப்பொழுதுதான் சாந்தன் வந்திருந்தான். போன கிழமைதான் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கியிருந்தான் சாந்தனுக்கு பத்தொன்பது வயதுதான்.
கிறடிட் காட் செய்கிறவன் சாந்தன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனை ஒரு பிஸ்னஸ் போல செய்கிறான் அவனிடம் மெசினும் இருக்கிறது கிறடிட் காட் செய்ய. அது ஒரு கையடக்கமான சாமான். லப்டொப்பில் எல்லாமே செய்யலாம். பொலிஸ் கன காலமாக முகர்ந்து முகர்ந்து பிடித்துவிட்டது. சாந்தனின் வீட்டை சுற்றி மஞ்சள் நாடாவை கட்டி விட்டார்கள். பெரிய வீடு முழுவீட்டையும் சோதிக்க ஆறு நாய்கள் சகிதம் வந்து இறங்கிவிட்டனர். ஆண், பெண் மெற்றோ பொலிற்றன் பொலிஸார்.

கள்ள கிறடிட் காட் செய்து பெரிய பணக்காரர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை ஏ.ரி.எம். மெசின் மூலமாக உருவுவது. டிக்ஸன், ஆர்கோஸ், போன்ற இடங்களில் பெரிய பெரிய எலக்ரோனிக் சாமான் வாங்கி விற்பது,

கொலை, கொள்ளை என்று கிறிமினல் வேலை செய்வதனால் தான்
இலங்கையில் உண்மையான கொலை மிரட்டல் உள்ளவர்களையும், இங்கிலாந்தும் ஏனைய நாடுகளும் அகதிகளாக உள்ளே எடுக்கிறார்களில்லை.

உயிருக்கு பயந்து வந்தவன் இங்கு கிறிமினல் ஆகிவிடுகிறான். சட்டத்தில் உள்ள மனிதருக்கான உரிமையை துஷ்பிரயோகம் செய்கிறான்கள்.
சோதனை நடக்கிறது எல்லா நாய்களும் சாந்தனின் வீட்டுக்குள் முகர்ந்து முகர்ந்து திரிகின்றன. கொம்பியூட்டர், கிரடிட் காட்டுகள் பல நூறு எடுத்துவிட்டார்கள். மெசின், தூள், கள்ளமாக வாங்கிய பொருட்கள் எல்லாவற்றையும் பொலித்தினில் சுற்றுகிறார்கள். நாய்கள் ஆறும் தொடர்ந்து முகர்ந்து முகர்ந்து கொண்டே வீடு முழுக்க பரபரப்பாக ஓடி ஓடி வருகின்றன. நாய்கள் மூசும் சத்தம் இங்கு கேட்கிறது.
தெருவே பரபரப்பாகிவிட்டது. அக்கம் பக்கம் இருந்த வீட்டுக்காரர்கள் எல்லோரும் இப்பொழுது சாந்தனின் வீட்டுக்கு முன்னால் கூடி விட்டார்கள். நாங்கள் முதலே போய்விட்டோம்.


''புளடி கிரிமினல்ஸ்''என்று ஒரு வெள்ளை ஏசுகிறது.

''ஃபக்கிங் ரமிள்ஸ்'' என்று இன்னொன்று சொல்கிறது. இப்படியே எமது இனத்தையும் சாதியையும் சொல்லி ஏசுகிறார்கள்.
சாந்தனுக்கு விலங்கு போட்டாச்சு சாந்தனின் இரண்டு கூட்டாளிகளையும் ஆம்பிளை பொலிஸார் வீட்டுக்கு வெளியே அழைத்து வருகின்றனர். சாந்தனின் மனைவியையும் தங்கச்சியையும் குழ்தையையும் பெண் பொலிஸார் அழைத்து வருகின்றனர்.

வீட்டுக்கு பின்னால் உள்ள கதவு, சைற் கதவு எல்லாவற்றையும் பொலிஸ் சீல் வைக்கிறது. முன் கதவையும் சீல் வைத்து மூடிவிட்டு காருக்கும் ரயருக்கு லொக் போட்டு மூடி விட்டார்கள்.
எல்லா தெருவாசிகளும் திட்டுகிறார்கள்.

இந்த அகதிகளால் எங்களுக்கும் நிம்மதியில்லை. எங்களுடைய நாட்டை கொள்ளையடிக்க வந்த மூதேசிகள். இவன்களை எல்லாம் நாட்டை விட்டு முதலில் துரத்த வேண்டும் எவனுக்குமே நாட்டுக்குள் வர விடக்கூடாது. எவனுக்குமே இரக்கம் காட்டக் கூடாது. எங்களின் இரக்க குணத்தை இவன்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எங்கடை நிம்மதியையும் இவன்கள் பறிக்கிறான்கள். இந்த முறை தேர்தலிலை இவன்களை பற்றி கட்சிகளிடம் சொல்ல வேண்டும். இவன்களை எந்த அகதியாக இருந்தாலும் உள்ளே எடுக்காத கட்சிக்குத் தான் எங்கடை வாக்கு.
எல்லா பத்திரிகைகளிலும் இவன்களைப் பற்றி எழுத வேண்டும். எல்லா ரீ.விக்களிலும் இவன்களைப் பற்றி டொக்கியூமன்றி போட வேண்டும். கிரிமினல்ஸ் எங்கட பணத்தை எங்கட நாட்டில் இருந்து கொண்டே கொள்ளையடிக்கிறான்கள்.
எல்லோரும் ஆத்திரப்படுகிறார்கள். சாந்தனையும் குடும்பத்தையும் மற்றவர்களையும் பொலிஸ் வானில் ஏற்றும் பொழுது ஊரே வெறுப்பாய் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அவன் இருந்த அந்தத் தெருவில் தாங்கள் இருந்தோமென்ற வெறுப்பு வெள்ளைக்காரருக்கு இருந்தது தெரிந்தது.
வானில் ஏறிப் போக முதல் பொலிஸ் நாயொன்று எமது வீட்டையும் அண்ணார்ந்து பார்த்தது. நாஙகளும் சிலோன் காரர் என்று மோப்பம் பிடித்து விட்டதாக்கும் என்று ஜெயலத் சொன்னான்.

எல்லோரும் ஒவ்வொரு கதையாக கதைத்துக் கொண்டு வீட்டுக்குள் போகிறார்கள். எங்களையும் பார்த்து ஒருவகை வெறுப்பாக முகத்தை சுளிக்கிறார்கள். பெஞ்சமின் மட்டும் எங்களோடு வந்து கதைக்கிறா. எல்லா சிலோன் காரரும் அப்படி இல்லைத்தானே. சந்தன்(பெஞ்சமின் சாந்தனை சந்தன் என்றுதான் சொல்லுவா) எப்பொழுதும் கிறிமினல் வேலைத்தான் செய்வான். அவனை இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவதானிக்கிறேன். உவன் உப்படித்தான் என்று ஹவுன்ஸ்லோ பெற்றோல் ஸ்டேஸன் மனேஜர் நாதன் சொன்னவர். சந்தனை பொலிஸ் பிடித்தது சரி என்று சொன்னா பெஞ்சமின்.

மக்கள் கலைந்து போகிறார்கள். பொலிஸ் நாயை கண்டு விட்டு ஏனைய வளர்ப்பு நாய்கள் குலைக்கத் தொடங்கியது. இப்பொழுது நின்று விட்டது. பொலிஸ் நாய்கள் ஒன்றுமே வாயைத் திறக்கவில்லை. அவையளுக்கு பயிற்சி அப்படிப் போல.

சுரேஷ் வீட்டுக்கு வந்து மீண்டும் ஒரு பியர் குடித்தபடி தனது எதிர்காலத்தை பற்றி என்னிடமும் ஜெயலத்திடமும் சொன்னான். ஜெயலத் ஒரு முடிவில் இருக்கிறான் ஊர் போக.
சுரேஷ் சென்னான் தன்னால் இப்ப போக முடியாது. அங்கே இரண்டு தங்கச்சிகளை கரை சேர்க்க வேணும் ஒரு வீட்டை கட்டவேணும், அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேணும், வாதம் வந்த அப்பாவை நல்லபடியாக அவரின் இறுதி காலத்தில் பார்க்க வேணும், தம்பியை எப்படியாவது லண்டனுக்கு எடுக்க வேணும்.

இவ்வளவு வேணும் களோடு சுரேஷ் இருக்கிறான்.
சுரேஷுக்கு கொஞ்சம் மப்பு ஏறி விட்டது. சாப்பிடச் சொன்னேன். ரெடிமேட் பராட்டாவும் கபாப்பும் இருக்கிறது. வேண்டாம் என்று விடடான். கதிரையில் சாய்ந்தவன் நித்திரையாகிவிட்டான்.

''மங் யன்னங் மச்சான்''ஜெயலத்தும் போகிறான். நாலைக்கு வேலை இல்லை சுகமாக நித்திரை கொள்ளலாம். கதவை மூடி லைற்றை ஓஃப் செய்தேன்.
சடார் என்றொரு கல் எனது வீட்டின் கூரையில் விழுந்தது. கதவைத் திறந்து லைற்றைப் போட்டேன் இரண்டு வெள்ளைக்கார சிறுவர்கள் கல்லை எறிந்து விட்டு ஓடுகிறார்கள்.

Tuesday, 5 May 2009

எங்களது வீடுகளைத் தாருங்கள்

எனக்கு மனம் மிகவும் அந்தரமாகவும் கவலையாகவும் இருக்கிறது. பட்டினியால் சாப்பாடில்லாமல் ஆமிக்காரர் கொடுக்கும் சோற்றுப்பார்சலை இரண்டு கைகளாலும் பிச்சை எடுப்பது போல் கெஞ்சிவாங்கும் போது வயித்தைப் பத்தி எரிகிறது எனக்கு. வன்னி மக்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.

வன்னி மண் முழுக்க ஓடித் திரிந்த காலம் எனக்கு மனம் முழுக்க வியாபித்து இருக்கிறது. நான் பிறந்த மண் அது. நான் அள்ளித்தின்ற மண் அது. நான் படித்த பூமி அது. எனது உறவினர்கள் வாழ்ந்து இறந்த பூமி அது.ஒட்டுசுட்டானுக்கு பாடசாலைக்கு கால்நடையாகவே நடந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மைல்கள் எனது பாதம் பட்ட பூமி அது. பத்து வருடம் பாடசாலைக் காலங்களில் எப்பவுமே எனக்கு பஸ்ஸில் பள்ளிக்கூடம் போன ஞாபகமில்லை. நடைதான்.

உண்மையில் நாங்கள், மக்கள் எப்பொழுதுமே தமிழீழம் கேட்கவில்லை. நிம்மதியாக வாழ்ந்த மக்கள் நாங்கள். விவசாயிகள் அன்றன்டாடம் உழைத்து வாழ்ந்த மக்கள் நாங்கள். யுத்தம் ஒவ்வொருவரையும் சின்னாபின்னப்படுத்தி சிதைத்து சிதிலமாகிப்போட்டு விட்டது. ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் யுத்தப் பேரினவாதிகள்.

வன்னியில் கமக்காரர் வீட்டில் நெல்லு மூடைகள் பன்னிரண்டு மாதமும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் பசியோடு இருந்தவர்கள் யாருமில்லை. பிச்சைக்காரர்கள் இல்லை. எமது ஊரில் வெளியூர்களில் இருந்து பிச்சைக்காரர்கள் வந்தாலும் ஊரை விட்டு போகும்போது ஒரு மூடை நெல்லாவது அரிசியாவது கொண்டு போவார்கள். ஒரு வீட்டுக்கு வந்து சாப்பாட்டுக்கு அரிசி இல்லை என்று கேட்டால் குறைஞ்சது இரண்டு பால் சுண்டு அரிசியாவது கொடுப்பார்கள். என் அம்மா எத்தனையோமுறை அவ்வாறு கொடுத்திருப்பதனை பார்த்திருக்கிறேன். அந்த இரண்டு சுண்டு அரிசி அரைக் கொத்து அளவாகும்.

எங்களது புளியங்குளத்தில் ஆடுமாடோடு பெரும் வயல் நில புலங்களோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா செத்துப் போனார்களோ தெரியாது. நான் எங்கு போய் தேடுவேன் எனது கிராமத்து மக்களை.அங்கிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு புலிகள் துரத்தியபோது பக்கத்து வீட்டு தமிழர்களெல்லாம் மனம் வெடித்து அழுதது இன்னும் ஞாபகமாய் இருக்கிறது.

மாங்குளம், கரிபட்டமுறிப்பு, மணவாளன் பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், மானுருவி, கருவேலன் கண்டல், முள்ளியவளை, தண்ணீர் ஊற்று, நீராவிப்பிட்டி,நெடுங்கேணி, சம்மளங்குளம் என்று குட்டிக் குட்டி கிராமங்களில் அழகான குழந்தை குட்டிகளோடு நன்றாக வாழ்ந்த மக்கள்.யுத்தம் என்ற சனியன் ஏன் வன்னிக்குள் புகுந்ததோதெரியாது. சிவனே என்று கிடந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டிப் போட்டார்கள். எல்லாருமாக சேர்ந்து விரட்டி விட்டார்கள். விரட்ட வைத்து விட்டார்கள். இனி அந்த செல்வம் கொழித்த பூமியை எங்களுக்கு சிங்களவர்கள் தருவார்களா? எங்கள் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க விடுவார்களா?

எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த செல்லையா அண்ணர் செத்துப் போய்விட்டார் என்று இங்கு தனது அப்பாவின் செத்தவீட்டை ,லண்டனில் அவரது மகன் தனது வீட்டில் நடத்துகிறான்.பிரேதம் இல்லாமல் செத்த வீடு நடத்தும் சமூகமாக எமது சமூகம் அவலமாகிப் போய்விட்டது.

செல்லையாண்ணை நல்ல மனிதர். 28 வருடத்துக்கு முன்பு பார்த்த மனிதர் அவர். ஊரை விட்டு வெளிக்கிட்ட போது நான் சின்னப்பொடியன். சோலி சுறட்டுக்கு போகாத நல்ல மனிதர் செல்லையா அண்ணர். குளக்கட்டோடு எட்டு ஏக்கர் வயல் காணி அவருக்கிருக்கிறது.ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கண்கொண்டு பார்க்க முடியாது அவ்வளவு செழிப்பு, எங்களுக்கு 5 ஏக்கர் நெல்வயல். அந்த ஏரியா முழுவதும் றோட்டோரமாக நெல் செழித்து நிற்கும்.

இதற்கிடையில் செல்லையா அண்ணரின் வயலுக்குள் குளக்கட்டோடு சேர்த்து ஒரு வயல் பிள்ளையார் இருக்கும். அதில் ஒன்றுமில்லை ஒரு கல்தான். தமிழன் கல்லிலே தெய்வத்தை கண்டவனல்லவா.அந்த வயல் பிள்ளையாருக்கு நிறமணிபோட்டு பொங்கல் வைப்பார்கள். அந்த எமது புளியங்குளம் கிராமத்துக்கே அந்த பிள்ளையாருக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஏனெனில், சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லோரும் அங்கு வந்து பொங்குவார்கள். நிறமணி போடுவார்கள். என்னையொத்த வயதுக்காரர் எல்லாம் அங்கு சங்கு ஊதுகிற சத்தம் கேட்டால் போதும் வெறும் மேலோடு கட்டிய சாரத்தை சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க ஓடிவந்து விடுவோம்.பிள்ளையாரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொங்கலும் வாழைப்பழமும் மோதகமும் வடையும் வாழை இலையில் வைத்து நிறைய நிறைய எந்த வஞ்சகமம் இல்லாமல் தருவார் செல்லையா அண்ணர்.பெரும் செல்வாக்கான மனிதர் இருந்தும் சேட் போடமாட்டார். நாலுமுழ வேட்டியும் சால்வையும்தான்.

அந்த நல்ல மனிதர் ஊர் பேர் தெரியாத புதுமாத்தளன் பகுதியில் போய் அந்த உப்புக்காத்தில் கிடந்து பசியால் பட்டினியால் வாடி கடைசியில் செல்லடிபட்டு செத்துப் போனார். என்ன கொடுமை இது. அந்த மனிதனை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. இப்படி இன்னும் எத்தனை பேர் செத்துப் போனார்களோ பசியால் பட்டினியால்?

எனது விவரணங்களுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அங்கிருந்து அகதிகளாக வருகின்ற இலட்சக்கணக்கான மக்களை தொலைக்காட்சியில் காட்டும்போது தொலைபேசியில் கூப்பிட்டு மக்கள் சொல்கிறார்கள் இங்கு தயவுசெய்து அந்தக் காட்சிகளை திருப்பித் திருப்பி போடுங்கள். ஏனெனில், எங்கடை சொந்தக்காரர்கள் யாராவது வருகினமோ என்று பார்ப்பதற்கு என மக்கள் சொல்லும் பொழுது எனக்கு நெஞ்சு வெடித்து போகிறது.

இரவில் நித்திரை வருகுதில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சாரிசாரியாக எல்லோரும் அந்த மண்ணை விட்டு விட்டு வந்து விட்டார்கள். எத்தனை ஆயிரம் பேரை காவு கொடுத்து விட்டோம்.தமிழீழத்தைப் பெறுங்கள் என்று சொல்லி விட்டு அரசியல் தலைவர்கள் போய் சேர்ந்து விட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை கொடுத்து விட்டோமா? இப்பொழுது அடுத்தது என்ன? எத்தனை நாளைக்கு இந்த அகதி முகாம்களில் வாழ்க்கை! வைத்திருக்கபோகிறார்கள் ஆமிக்காரர்? ஒரு பெண்மணி வவுனியா அகதி முகாமில் இருந்து தொலைபேசியில் இங்கு லண்டனுக்கு உறவினர்களோடு பேசும் பொழுதும் பெண்கள் பெரும் கஷ்டப்படுவதாக சொல்லி அழுதிருக்கிறார்.மாதவிடார் காலங்களில் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும் அந்த காலங்களில் பாவிக்கின்ற சுகாதார துவாய் போன்றவை அதிகமாகத் தேவைப்படுவதாகவும் பல நாட்களாக குளிக்க தண்ணியில்லையென்றும் சொல்லி கவலைப் பட்டிருக்கிறார். அகதி முகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். யுத்த நேரங்களில் பிள்ளைகளை பெத்து காவு கொடுத்து, பின்னர் கணவனை இழந்து விதவையாகி, பிறகு அகதி முகாம்களில் அல்லல்பட்டு என்று தமிழ் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லிமாளாதவை. இந்த கடும் இறுதி யுத்தத்தில் செத்துப்போன பெற்றோரின் பிள்ளைகள் எல்லாம் அனாதைகளாகி விட்டனர். அவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள். எந்த உத்தரவாதமும் தரமாட்டார்களாம் யாரும்.

வன்னி மக்களை அவர்களின் சொந்த பூமியில் இருந்து ஓட ஓட விரட்டியாகிவிட்டது. அடுத்தது என்ன?வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் குரலாக ஒட்டுமொத்த வேண்டுதலாக இருப்பது இதுதான். தயவுசெய்து பறித்தெடுத்த எங்கள் வீடுகளை திருப்பித் தாருங்கள். கஞ்சியோ கூழோ எங்கள் முற்றத்தில் இருந்து குடித்துவிட்டு செத்துப்போகிறோம்.


இளைய அப்துல்லாஹ்

பிணம் செய்யும் தேசம்

பிணம் செய்யும் தேசம்

இளைய அப்துல்லாஹ்

ஒப்பாரி வைப்பதற்கும்
பெண்கள் இல்லாமல்சிதறிக்கிடக்கின்றனவே பிரேதங்கள்.
எந்த மதிப்பும் இல்லாமல்..

மூத்த பிள்ளை கொள்ளி வைக்க வேண்டுமென்று
ஆசைப்பட்ட அம்மாவின் பிரேதத்தை
யாரோ வந்து எரித்து விட்டு போகிறார்கள்..

வயிறூதி வீங்கி வெடித்து
நிர்வாணமாய் நிணம் வடிக்கும் பிரேதங்கள்..

ஊர் கூடி பாடை கட்டி
மேளமடித்து
ஒப்பாரி வைத்து
சுண்ணமிடித்து
சுடலை போய்
என்றெல்லாம் இல்லாமல்

ட்றைக்டர் பெட்டியில் ஏற்றி மூடி
குழி வெட்டி டிப்பறால் கொட்டி
மண்ணை இழுத்து மூடி……
பிரேதங்கள்புதைக்கப்படகின்றன
வேறென்ன முடியும்

சங்கைக்குரியனவாக இருக்கும்ஒருவர் இறந்தால்
ஊரே இறந்து போனால்….

நாய்களும் நரிகளும் முகர்ந்து பார்க்கின்றன பிரேதங்களை
ஊர் நெடுக பிரேதங்கள்

மண்மூடி மரங்களில் என்றெங்கும் பிரேதங்கள்
எந்த மரணத்தை மதிப்பது

பெண்கள் ஆண்கள் குழந்தைகள்எல்லாவற்றையும் குமித்து வைத்திருக்கிறார்கள்
பிரேதங்களில் பிரிக்க முடியுமா?
சாதியை மதத்தை
ஆணா பெண்ணா என்றேஅறிய முடியவில்லை
பிணக்காடாய் கிடக்கிறது எங்கள் தேசம்..

பெண்ணாய் பிறந்ததாலோ


என் கணவனின் உயிரை வழியனுப்ப யாருமில்லையய்யா ஐயோ !

அப்பாவின் மரணம்

அப்பாவின் மரணம்

இளைய அப்துல்லாஹ்

“என்ரை அப்பாவை மூடாதேங்கோ! என்ரை அப்பாவை மூட வேண்டாம். என்ரை அப்பா எனக்கு வேணும். என்ரை அப்பாவை மூடாதேங்கோ. என்ரை அப்பாவை கொண்டு போகப் போகினம். என்ரை அப்பாவை கொண்டு போக வேண்டாம் எண்டு சொல்லுங்கோ என்ரை அப்பாவை மூடப்போகினம். அவர் வேணும். அவர் இல்லாமல் எங்களாலை வாழ முடியுமே. அப்பா வேணும். அம்மா அவையிட்டை சொல்லுங்கோ அப்பாவை கொண்டு போக வேண்டாமெண்டு அப்பா.... என்ரை அப்பா....” இடுகாட்டுக்கு கொண்டுபோகப் போகினம் அப்பாவை. செத்த வீட்டில் இன்னும் அக்கா அழுது கொண்டிருக்கிறா. ஃபாதர் வந்து கடைசியில் ஓதவேண்டிய பைபிள் வசனம் எல்லாம் ஓதி முடிஞ்சு போச்சு அக்கா அழுது கொண்டேயிருக்கிறா. அக்காவும் அப்பாவும் உயிர். ரெண்டு பேரும் எப்பவும் ஒண்டாகவே இருப்பினம். கதைப்பினம். அக்காவை அப்பா தன்ரை மகளாக இல்லாமல் ஒரு நல்ல நண்பியாகவே பார்த்திருக்கிறார். அக்கா நல்ல கெட்டிக்காரி. எல்லாத்திலையும் கெட்டிக்காரி. படிப்பிலை. நாட்டுக் கூத்திலை நாடகத்திலை, பேச்சிலை, கவிதை எழுதுறதிலை, எல்லாதிலையும்.

அக்கா அப்பாவை பாத்து பாத்து வளந்தவா, விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறா. அப்பாவை நாங்கள் எப்பவும் பிரேதமாக நினைச்சுப் பாத்ததில்லை. அப்பாவை உயிருடன் இல்லாமல் நினைச்சுப் பாக்க எங்களுக்கு முடியாமல் இருந்தது.

மற்ற அப்பாக்கள் மிகவும் கடுமையானவர்கள் எண்டெல்லாம் சொல்லுறவையைப்பற்றி கேள்விப்பட்டனாங்கள். ஆனால் எங்கடை அப்பா அப்பிடி இல்லை.
இப்ப அப்பா பிரேதமாக கிடக்கிறார். எங்களுக்கு இப்படி ஒண்டு வருமெண்டு, அப்பாவை இப்பிடி பாப்பம் எண்டு நான் கனவிலையும் காணல்லை. நேற்று வரைக்கும் நல்லாத் தானே இருந்தவர். வருத்த துன்பம் எண்டு அவருக்கு ஒன்டும் வந்ததில்லை. ஆஜானுபாகுவான தோற்றம் எண்டு சொல்லுவினமே அதை அப்பாவிலை தான் பாத்தனாங்கள். அப்பிடி ஒரு கம்பீரம். அப்பா திடீரெண்டு சவப் பெட்டிக்குள்ளை வந்து படுத்த மாதிரிக்கிடக்குது.
அப்பா எழும்பி வாங்கோ வீட்டுக்குப் போய் நாட்டுக்கூத்து பழகுவம் எண்டு சொல்ல வேணும் போல கிடக்கு. பிரேதம் எல்லாம் பொய்போல கிடக்கு. அக்கா, அம்மா, பக்கத்து வீட்டு கனகா அன்ரி, எங்கடை மாமா எல்லாரும் அழுகினம். நிறையப் பேர் அழுதால் இவையெல்லாம் அப்பாவோடு மிகவும் அன்பு செலுத்தியிருக்கினம் எண்டு தானே அர்த்தம். உண்மையில் அப்பா நல்லவர்தான். சந்தேகமில்லை. அக்காவுக்கு அப்பா போனது பெருங்கவலையாகத்தான் இருக்கு.எங்களுக்கு என்ன செய்யுறதெண்டு விளங்கவில்லை.

அம்மா பேயறைஞ்சவா போல கிடக்கிறா. பெட்டியை மூடி சுடு காட்டுக்கு அப்பாவை கொண்டு போகப் போகினம். மூடுறதுக்கு கறுப்பு கோட் போட்டவை வருகினம். அவையள் எந்தவித முக உணர்ச்சியும் இல்லாமல் இயங்குகினம். அவையளுக்கு எப்பிடி உணர்ச்சி வரும். அப்பா எங்களுக்குத்தானே அவையளுக்கில்லையே. அப்பா எங்கடை அப்பா தானே அவையளின்ரை அப்பா இல்லையே. அப்பா எங்கடை அன்புக்குரியவர் தானே பிரேதம் கொண்டு போறவையின்ரை அன்புக்குரியவர் இல்லையே. ஆனால் அப்பாவை அவையளுக்கு தெரிஞ்சிருந்தால் அப்பாவோடு பழகியிருந்தால் அப்பாவோடு ஒண்டா இருந்து சாப்பிட்டிருந்தால் அப்பாவோடு வேலை செய்திருந்தால் அப்பாவிட்டை நாட்டுக்கூத்து பழகி இருந்தால் இப்ப சும்மா இப்பிடி இருந்திருக்க மாட்டினம் அவையளும் அழுதிருப்பினம்.
கறுப்பு கோட் போட்டவையிலை மூண்டு பேர் அப்பாவை சுத்தி போட்டிருந்த பூக்களை பூ வாஸ்களை, பூ செண்டுகளை, மலர் வளையங்களை எடுத்துக் கொண்டு பொகினம். போய் காருக்குள்ளை வைக்கினம். அப்பாவை தூக்க ஆயத்தமாகினம். வெப்புசாரம் மனசுக்குள் வெடிக்கிறது.அக்கா ஓ வெண்டு கத்துறா.

“என்ரை ஐயா! என்ரை ஐயா என்ரை ஐ.....” அம்மா கேவுறா. இனி எல்லாம் முடிஞ்சு போச்சுது மண்ணுக்குள்ளை போகப் போகுது. அப்பாவை கொண்டு போய் மண்ணுக்குள்ளை புதைக்கப் போகினம். இனி புதைக்கத்தானே வேணும். ஆனால் அப்பாவை அப்படியே வீட்டிலை கொண்டு போய் வைச்சாலும் அப்பா வோடை நாங்கள் இருப்பம். எண்டு தான் எனக்கு மனசுக்கு படுகிறது. ஏனெண்டால் அப்பா பிரேதமாக வீட்டிலை கிடந்தாலும் நாங்கள் எல்லாரும் அப்பாவிலை அன்பு செலுத்துவோம். அப்பா எங்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அவ்வளவு அன்பாக நேசித்தவர்.
எனவே தான் எனக்கு அப்படி நினைக்குது. அது சரியாகவும் இருக்கலாம். எனக்கு கண்ணீர் மாலை மாலையா கொட்டுகிறது. கண்ணீர் மட்டும் கண்ணாலை வராட்டில் இருதயம் வெடிச்சுப் போடுமாக்கும். அப்பாவை நினைச்சால் கண்ணீihத் தவிர வேறையொண்டும் இப்ப எங்களிட்டை இல்லை.

“என்ரை ஐயாவை கொண்டு போகாதேங்கோ. அம்பது வருஷம் வாழ்ந்தவரை கொண்டு போறீங்களே. என்ரை ஐயா என்னை பாத்து ஒரு முறைப்பு முறைச்சிருப்பாரே. என்னைப்பாத்து ஒரு கடுஞ்சொல் சொல்லியிருப்பாரே. என்னை எப்பவும் தன்ரை தோழிலை சுமந்தவரெல்லோ. என்ன கஷ்டம் வந்தாலும் தான் அதை சுமந்து கொண்டு எனக்கு கூட தெரியாமல் வாழ்ந்தவரெல்லோ என்ரை ஐயா. அவரை பிரிக்காதேங்கோ. என்னை விட்டுப் பிரிக்காதேங்கோ. அவர் எங்களுக்கு வேணும். கொண்டு போகாதேங்கோ அவர் இல்லாமல் எப்படி நாங்கள் இனி வாழுறது. ஐயா... என்ரை ஐயா... ஐயாவை தூக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ! தம்பி மோனை ஐயாவை கொண்டுபொய் மண்ணிலை போடாதேங்கோ. ஐயா குப்பைக்குள்ளை கிடந்த என்னை கோபுரத்திலை கொண்டு வந்து வைச்சவர். ஏழையாய் இருந்த என்னை தன்ரை கையிலை ஏந்தி கொண்டாடினவர். நான் அவர் இல்லாமல் இருந்ததில்லையே!. ஒருநாளும் என்ரை ஐயாவை விட்டுட்டு நான் சாப்பிட்டதில்லை. ஐயா எனக்காக காத்திருப்பார். ஐயாவுக்காக நான் காத்திருப்பேன். என்ரை ஐயாவை என்ன விட்டு பிரிக்காதேங்கோ ஐயா சாகேல்லை. அவர் போக முதல் நான் போயிருக்கலாமே. ஐயோ நெஞ்சு வெடிச்சிடும் போல கிடக்கு. நான் சாகவேணும். இப்ப சாக வேணும். ஐயாவோடை போகவேணும். உண்மையாய் ஐயா இல்லாமல் நான் இந்த உலகத்திலை வாழ முடியாது. என்ர நெஞ்செல்லாம் அடைக்குது பொடி. ஐயா இல்லாமல் உன்னாலை இருக்கேலுமாடா என்னாலை முடியாது... முடியாது... முடியாது.....”

தொண்டையிலை இருந்து வார்த்தைகள் இல்லாமல் அம்மா கேவுறா. தொண்டை தண்ணி வத்தி போட்டுது அம்மாவுக்கு. அம்மா நேற்று காலையில் இருந்து அழுது கொண்டே இருக்கிறா. அம்மா இப்பவரைக்கும் பத்து பதினைஞ்சு தரம் மயங்கி விழுந்திட்டா.

அப்பா முற்போக்கானவர். மக்களை நேசித்தவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். அப்பா யாரையும் இழிவாக பேசினதே கிடையாது. யாருக்கும் அவன் எண்டு சொன்னதே கிடையாது. அதனாலை நாங்களும் யாருக்கும் அவன் எண்டு சொல்லுறது இல்லை. நல்ல மனிதனின் உறைவிடமாக, நல்ல பழக்க வழக்கங்களின் உறைவிடமாக இருந்தவர்.

அப்பா அம்மாவை அம்மா எண்டும். அம்மா அப்பாவை அப்பா எண்டும் கூப்பிடுவார்கள். அந்த அழைப்பிலேயே அன்பு கனிந்து கொண்டிருக்கும்.
நானும் அண்ணையும், அக்காவும் இந்த அன்பிலே திளைத்திருப்போம். அப்பாவும் அம்மாவும் எப்பொழுதும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பா ஒரு கவிஞ்ஞராக எழுத்தாளராக நாட்டுக் கூத்து கலைஞராக இருந்தார்.

ஏ9 பாதை மூடப்பட்டது அங்கு சனங்கள் கஷ்டப்படுவது போன்ற விஷயங்கள் அப்பாவை அதிகமாக கவலைப்பட வைத்தன. அப்பா கடைசி காலத்தில் தன்ரை பிரேதம் யாழ்ப்பாணத்தில் ஊரில் உள்ள தனது தாயாரின் வீட்டில் வைத்து எடுக்க வேணும் எண்டுதான் ஆசைப்பட்டார். ஆனால் ஏ9 திறக்கப்படாமலேயே அப்பா எங்களை விட்டுவிட்டு செத்துப் போனார்.
கொஞ்சம் பேர் தான் ஐயாவின்ரை செத்த வீட்டுக்கு வந்திருக்கினம். பேப்பரிலை செய்தியை பார்த்தவை தான் வந்திருக்கினம். அவையளிலை கன பேருக்கு செய்தி போயிருக்காது. மட்டக்களப்பு, யாழ்ப்பபாணம் எண்டு எல்லா இடங்களுக்கும் இப்ப பேப்பர் போகாததாலை செய்தி போயிருக்காது. ரேடியோவும் எங்கடை ஆக்கள் இருக்கிற இடங்களில் வேலை செய்றதுக்கு கரண்டும் இல்லை. பற்றறியும் இல்லை. காசும் இல்லை இனி எப்பிடி செய்தி போகும். அப்பாட்டை படிச்ச பிள்ளைகள் பெரிய ஆக்கள் எல்லாருக்கும் செய்தி போக வழியில்லை அதுதான் யோசனையாய் கிடக்கு.
அப்பா படிப்பிக்கும் போது பாக்க வேணுமே. மற்ற வகுப்பிலை பாடம் இல்லாமல் இருந்தால் அவையளும் வந்து அப்பாடை பாடத்திலை இருந்திடுவினம்.


எத்தனையோ வகுப்புகளிலை அடி மாஸ்டர் மார் வரக்கூடாது எண்டு பிள்ளையள் நேத்தி வைச்சிருப்பினம். வைரவருக்கு இளைக்கட்டுவினம். உப்படித்தான் தில்லையம்பலம் வாத்தியார் வரக்கூடாது எண்டு பாலை மரத்தடி வைரவருக்கு கற்பூரம் கொழுத்த நேத்தி வைச்சனாங்கள் நானும் ரூபனும் ஸ்ரீயும் உண்மையிலை நேத்தி பலிச்சு தில்லையம்பலத்தாருக்கு பொக்குளிப்பான் வந்திட்டுது. நாப்பது ஐம்பது நாட்கள் எங்களுக்கு கொண்டாட்டம் தான். குசி தான். சுதந்திரப் பறவைகளாய் திரிந்தோம்.
தில்லையம்பலத்தார் ஆங்கிலம் எடுத்தவர். அடி மன்னன் கன்னம் பழுக்கும். கன்னத்திலை தான் சளார் சளார் எண்டு அறைவார். அவரின்ரை வியூகம் தெரிஞ்சதன் பிறகு அவர் அடிக்க ரெடியானால் கன்னத்தை பொத்திக் கொள்ள பழகினோம் நாங்கள். ஆங்கிலம் எடுப்பார். ஆனால் அவர் நினைச்சுக் கொண்டிருப்பார் உவங்களுக்கெங்கே இங்கிலீஸ் தெரியப் போகுது உவங்களுக்குகெங்கே விளங்கப் போகுது எண்டு தான் வகுப்பு எடுப்பார்.
அவருக்கே எங்களுக்கு விளங்க வைக்க வேணும் எண்ட நினைப்பே இல்லை. பிறகு எப்படி எங்களுக்கு அவரின்ரை படிப்பித்தல் ஏறும். அப்படியே ஆங்கிலத்தை அவர் விளங்காமலே நாசமாக்கி போட்டார். உப்படி எத்தினை வாத்திமார். ஆனால் அப்பாவின்ரை கிளாஸ் வலு கலாதியாய் இருக்கும். கம்பராமாயனம் எண்டால் முழு அசோகவனமும் சீதையும் திரிசடையும் அரக்கரும் அரக்கியரும் அப்படியே எங்களுக்கு முன்னால் நிற்பார்கள். சுந்தரகாண்டம் வலு சுவையாக இருக்கும்.


சீதா எலியவில் அசோகவனத்தில் நாங்கள் இருப்பது போலவும் அடர்ந்த மரங்களுக்குள் அழகான சோலையின் தென்றல் வீசுவது போலவும் மரங்கள், புள்ளினங்கள், மான்கள், குரங்குகள், கீரிப்பிள்ளைகள்; எல்லாம் ஊசாடுவது போலவும் அப்பாவின் வர்ணனைகள் இருக்கும். நான் அப்பாவின் பள்ளிக்கூடத்தில் தான் படித்தேன்.

அப்பா கவலைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் ஆனால் இரண்டு கவலைகள் அவரை தொடர்ந்தும் வாட்டிக் கொண்டு வந்தன. ஒண்டு எங்களுடைய அண்ணா சின்ன வயதிலை செத்துப்போனது. மற்றது அக்காவின்ரை பொம்பிள பிள்ளை குழந்தையிலை செத்து போனது.
இந்த விசயத்தை அப்பாவாலை மறக்கவே முடியாமல் போய்விட்டது. அப்பா இப்ப பிரேதமாக கிடக்கிற நேரம் உது எல்லாம் எனக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு வருகுது. அவரின்ரை மூத்த மகன் எங்கடை அண்ணா செத்த போது அப்பா அப்படியே உடைந்து போய்விட்டார். அவர் அண்ணாவின் செத்த வீட்டில் வைத்து சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நான் தூக்கி வளத்த தோளிலை இன்னும் பாரம் இறங்கவேயில்லை போய் சேந்திட்டான் என்ரை மகன் எண்டு அப்பா குழறினார். அப்பா எல்லாரிலையும் அளவு கடந்த அன்பு வைச்சிருந்தார் அண்ணா செத்ததோடை உடைந்து பேனார்.

அக்காவின்ரை பிள்ளை ஆறு வயசிலை செத்தது அப்பாவால் தாங்க முடியாத ஒண்டாக இருந்தது. மிகச் சிறந்த என்ரை குழந்தை செத்துப் போச்சுது எண்டு அப்பா அழுதவர். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தவர். எங்கடை கூட்டுக் குடும்பம் அதில் இருந்து பிரிந்து போக ஆருமே விரும்பேல்லை. அப்பாவின்ரை மடிக்குள்ளை தான் மாயா எப்பவும் இருப்பாள். மாயா செத்துப் போனதை அப்பா தனது ஈரல்குலையே அறுந்து போய்விட்டதைப் போல அழுதார். விம்மினார். துடித்துத்தான் போனார். மாயாவும் அப்பா வெண்டுதான் அப்பாவை கூப்பிடுவாள். அவளின் அன்பில் அப்பா திளைத்துப் போய் இருப்பார். சோறு தீத்தவேணுமா அப்பா. மருந்து குடிக்க வேணுமா அப்பா, சட்டை போட வேணுமா அப்பா, தலை இழுத்துகட்ட வேணுமா அப்பாஇ தூக்க வேணுமா அப்பா, நித்திரைக்கு போகவேணுமா அப்பா. அப்பா இல்லாமல் மாயா இல்லை. மாயா இல்லாமல் அப்பா இல்லை. அப்படி ஆகிவிட்டது. அவர்கள் உறவு மாயாவை பிரிந்ததன் பின்னர் ஒரு மாதம் மட்டிலை அப்பா உண்ணாமல் குடிக்காமல் இருந்தார் முழுக்க உடைஞ்சு போனார்.

மாயா பற்றிய கற்பனையில் அவளின் நினைவுகளோடு தான் அப்பா வாழ்ந்தார். அவளின் பூப்போட்ட சட்டைகள், அவள் ட்றிங்ஸ் குடிக்கும் கோப்பை, மாயாவின் அழகான கலர் மூக்குக் கண்ணாடி, மாயாவின் கீச்சிடும் சப்பாத்து, மாயாவின் மொண்டசூரி பை, மாயாவின் சிரிப்பு சத்தம், மாயாவின் மொழி என்று அப்பா அவளின் நினைவுகளில் இருந்து கடைசி வரை விடுபடவேயில்லை. அவ்வளவு அன்பு அவர்.


அன்புள்ள மனிதர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உயிரோடு அப்பா அன்பின் உருவமாகவே எங்களுக்கு முன்னால் சதையும் ரத்தமுமாக இருந்தார். அன்பு அவரின் இரத்தத்தில் ஊறியிருந்த ஒன்று. எல்லோருக்கும் நல்லவராகவும் எல்லோர் மீதும் அன்பு செலுத்துபவராகவும் அவர் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களோடும் வரும் விருந்தாளிகளோடும் உறவினர்களோடும் அன்பின் உருவமாகவே அவர் இருந்தார். இயல்பாகவே இந்த குணங்கள் அவரில் இருந்தன.
எங்களுக்கு அன்பு மீது அக்கறையும் அவதானிப்பும் அப்பாவினால் தான் வந்தது.


அண்ணாவின் மரணத்தின் பின்பும் அப்பாவின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. ஒருருநாள் ஈஸி செயாரில் படுத்துக்கிடந்தவரைப் பார்த்தேன். இரண்டு கண்களின் கடைசி ஓரங்களிலும் கண்ணீர் வெகுநேரமாக வடிந்து கொண்டிருந்தது.

மனதின் கவலைகள் எல்லாம் கண்ணீராக ஓடிக்கொண்டிருந்தது. நான் அப்பாவை குழப்பவில்லை. அப்பா அழுமட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரின் வடிகாலாக அது அமைந்திருக்குமாக்கும். மௌனமாக அவர் அழுதார். அப்பா அப்படித்தான் அழுவார்.

ஒருவர் அப்பாவிடம் கடன் வாங்கி விட்டார். எழுபத்தைந்தாயிரம் ரூபாய். இது பெரிய காசு அப்பாவை பொறுத்த வரையிலும். ஏனெனில் அப்பா பக்கத்து வீட்டுக்காரரின் இக்கட்டுக்கு தனது சேமிப்பு புத்தகத்தில் இருந்தே அதை எடுத்துக் கொடுத்துவிட்டார். வாங்கியவருக்கோ கொடுக்க வசதி இல்லாமல் கிடந்து கஷ்டப்பட்டார். அப்பாவிடம் தவணைக்கு மேல் தவணை கேட்டார்.
வாங்கியவரும் கடன் சுமை தொடர்பாக கவலைப்படுவதாக இருந்தார். அவரின் கஷ்டங்களுக்கு மத்தியில் அப்பாவின் நிலைமையும் அதனை தேவைப்படுவதாக இருந்தது. அதனால் தனது மனைவியின் தாலிக் கொடியை அடைவு வைத்து விட்டுக் கடன் பணத்தை தந்தாh வாங்கியவர்;. ஆனால் விசயம் கேள்விப்பட்டவுடன் அப்பா அவரின் மனைவியின் தாலிக் கொடியை மீட்டு வந்து கொடுத்து விட்டு நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு உதவி செய்வது என்ரை கடமை என்று சொல்லிவிட்டு கடனை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

ஒருநாள் ஏனப்பா அப்படி செய்த நீங்கள் எண்டு கேட்டேன். ஒரு முறை தான் ஒரு முஸ்லிம் கலண்டரை பார்த்த தாகவும் அதில் நபிகளாரின் பொன்மொழி ஒன்று இருந்ததாகவும் சொல்லி அந்தப் பொன் மொழியை சொன்னார்.
“மறுமை நாளின் கஷ்டங்களில் இருந்து இறைவன் தம்மை காப்பாற்ற வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறாரோ! அவர் தம்மிடம் கடன் வாங்கி அதனை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவருக்கு கடனை திருப்பித் தரும் (தவணை காலத்தை) நீட்டித் தரட்டும். அல்லது (முடிந்தால்) அவரின் கடனை (திரும்பப் பெறாமல்) விட்டு விடட்டும”; என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். அதனால்த் தான் என்றார். உண்மையில் அப்பாவைப் போல் அதிசயமான நல்ல மனிதரை நான் பார்த்ததேயில்லை.அவர் ஒரு நல்லவராகவும் புதிரானவராகவும் இருந்தார்.
எல்லா மார்க்க அறிவும் அப்பாவுக்கு பூரணமாக இருந்தது. அப்பாவின் அறிவுக்கு எல்லையை தேடுகிறேன்.

இண்டைக்கு அப்பாவின்ரை செத்த வீட்டுக்கு வந்த கடன் வாங்கியவர் ஒரு பையிலை அப்பாவிட்ட வாங்கின கடன் எழுபத்தையாயிரத்தையும் இன்னும் இருபத்தையாயிரம் சேர்த்து எல்லாமாக ஒருலட்சத்தை போட்டு அப்பாவின்ரை பிரேதத்தின்ரை காலடியிலை வைச்சு குழறின குழறுவையை பாத்து பக்கத்திலை நிண்டவை எல்லாரும் கலங்கிப் போட்டினம். நான் சொன்னேன் “வேண்டாமண்ணை அப்பாவே வேண்டாமெண்டு போட்டார் எங்களுக்கு வேண்டாமண்ணை” என்றேன். அவர் சொன்னார் “உன்ரை அப்பா தெய்வமடா மோனை. ஏனென்டால் மனிசருக்கு உந்த குணம் இல்லையடா, வராது.”

அப்பாவின் செத்த வீட்டுக்கு கொஞ்சப்பேர் தான் வந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சினையால் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஆக்கள் யாருமே வரவில்லை. யாழ்ப்பாணத்திலை அப்பா செத்திருந்தால் சனம் சனமா ஆயிரக் கணக்கிலை வந்து சொரிஞ்சிருக்கும்.

இனி வீட்டிலை அப்பா இருக்க மாட்டார் அவரின் முழு புகைப்படம் இருக்கும். அதன் கழுத்தில் மாலை இருக்கும். அப்பாவின் நினைவுகளை சுமந்து மட்டுமே இருப்போம். அப்பாவின் பேச்சு இருக்கும். அப்பாவை நினைச்சு அம்மா அழுவா, அக்கா அழுவா நான் அழுவேன். என்ரை அக்காவின்ரை பிள்ளைகள் அழும். நினைவுகள் வீட்டை சூழ்ந்து போய்கிடக்கும்.

அப்பா ஒவ்வொரு பிள்ளைகளையும் எவ்வளவு அக்கறையோடு கவனிச்சவர். நினைக்கும் பொழுது நாங்கள் அப்படி இருப்பபமோ எண்ட கேள்வி வருகிறது. ஆனால் இருக்க வேணும்.

அக்கா ஒருத்தரை ஏ-எல் படிக்கிற நேரம் விரும்பீட்டா. காதல் விசயங்களில் அம்மா கொஞ்சம் கறாராகவே இருப்பா. பக்கத்து வீட்டுக்கார பிள்ளையள் காதலிச்சால் கூட அம்மா அருவருப்பா. அம்மாவின்ரை அக்கா காதலிச்சு ஒருத்தரை கலியாணம் முடிக்கப் போறனெண்டு ஒத்தைக் காலிலை நிண்டிருக்கிறா. சரி ஆர் பொடியன் பாப்பம் எண்டு அம்மப்பா விசாரிச்சால் பொடியன் பக்கம் சாதியிலை கொஞ்சம் குறைவு எண்டு தெரிஞ்சு போச்சுது.
அம்பப்பா பெரீசா சாதி பாக்காட்டிலும் அவரின்ரை இனம் சனம் விடுமே. அது பெரிய சண்டையாகி பொடிச்சி அவரைத் தான் கட்டினா கட்டுவன் எண்டு அடம்பிடிக்க அம்மப்பாவும் அம்மம்மாவும் வேண்டாமெண்ட ஒருநாள் இரவு எல்லாரும் நித்திரையாயினாப் பிறகு வீட்டு தீராந்தியிலை அம்மம்மாவின்ரை சீலையை போடடு சுருக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டா.
அதுக்குப் பிறகு அம்மாவுக்கு காதல் எண்டால் கண்ணிலை காட்டேலாது பயம்.

அக்கா காதலித்தாவே தவிர எந்த வாக்கையும் காதலனுக்கு கொடுக்கவில்லை. உங்களோடை தான் வாழக்கை கலியாணம் எல்லாம். ஆனால் என்ரை அப்பாவும் அம்மாவும் ஓம் சொல்ல வேணும் எண்டு உறுதியாக சொல்லிப் போட்டா. வலு உறுதியா அதிலை அக்காவுக்கு எந்த உறுதியும் குலையேல்லை. ஏனெண்டால் கலியாணத்தை விட காதலனை விட அப்பா உயர்ந்தவர். அவர் உள்ளம் உயர்ந்தது. அதனை உடைத்து விட்டு அவரை கலங்க வைத்து விட்டுப் போட்டு கலியாணம் மூலம் அவரை அந்தரிக்க வைக்க அக்கா எப்பவும் துணியவில்லை துணிய மாட்டா. அந்தளவிற்கு அப்பாவை அக்காவும் அக்காவை அப்பாவும் நேசிச்சவை.
எங்கள் ஒவ்வொருவர் மீதும் அப்பா பிரத்தியேக நேசம் கொண்டிருப்பதாகவே தெரியும். அதுதான் அப்பாவின் வடிவு. ஒருநாள் என்ரை காதுக்குள்ளை சக்கரப்பாண்டியன் நுழைஞ்சிட்டுது. அப்பா ஏதோ தன்ரை காதுக்குள்ளை நுழைஞ்சது மாதிரி காணப்பட்டார். அவ்வளவு வலியையும் தனதாக்கி காணப்பட்டார். இது ஆருக்கு ஏலும்.

ஒருநாள் பக்த்து ஊர் கள்ளர் ரெண்டு பேர் எங்கடை யாழ்ப்பாண வீட்டுக்குள்ளை நுழைஞ்சிட்டினம் களவெடுக்க. அப்பா நல்லா தூங்குவார்.
அம்மா அம்மம்மாவீட்டுக்கு போய்விட்டா. நாhனும் அப்பாவும் தான் வீட்டிலை, அக்காவும் அண்ணாவும் அம்மம்மா வீட்டுக்கு அம்மாவோடை போயிட்டினம்.
கள்ளர் சத்தம் போடாமல் அலுமாரியை திறந்து, அங்கை என்ன புதையலை கிடந்தது. ஏதோ இருக்கிறது எல்லாத்தையும் பெரிய சாக்கிலை போட்டுக் கட்டிக் கொண்டு நாங்கள் படுத்திருந்த ரூமுக்குள்ளை வந்திட்டினம்.
அப்பாவும் நானும் நல்ல நித்திரை. வீட்டு மூலைக் குள்ளை கிடந்த சருவச் சட்டியிலை ஒரு கள்ளனின் கால் தட்டுப்பட்டுட்டுது. அது “கிணிங் கிணிங’; எண்டு சத்தம் போட அப்பாவும் நானும் முழிச்சிட்டம். பேந்தென்ன. லைற்றைப் போட்டால் கள்ளர் ரெண்டுபேரும் நிற்கினம்.

அவையளின்ரை பெயர் அந்த சுற்று வட்டாரத்துக்கே பிரபல்யம். அவை பேர் போன கள்ளர். எத்தனை முறை எண்டு கணக்கிலாத முறை கோட்டும் மறியலும் எண்டு போட்டு வந்தவை. பார்க்க சாது மாதிரி இருப்பினம். ஆனால் பெருங் கள்ளர். களவெடுத்து திண்டு அவையளுக்கு அதை விடமுடியாமல் இருக்குது. சட்டத்தாலை, கோட்டாலை, பொலிஸாலை இந்த இரண்டு கள்ளரையும் ஒண்டும் செய்யேலாமல் போயிட்டுது.
லைட் வெளிச்சத்திலை அவையள் கூனி குறுகி போயிட்டினம். ரெண்டு பேரின்ரை இடுப்பு பெல்ட்டிலையும் கிறிஸ் கத்தி இருந்தது. எனக்கு கள்ளர் எண்டு கேள்விப்பட்டாலே பயம். ஏனென்டால் அவையள் இரவிலை தானே திரிவினம். இரவு எண்டாலே யாருக்குத் தான் பயமில்லை.
அப்பா பயப்படவில்லை. அப்பாவின் கண்கள் தீட்சண்யமானவை கள்ளர் காடர் எண்டில்லாமல் எல்லாரையும் வசீகரிக்கும்.

“தம்பியவை ஏன் களவெடுக்கிறியள்.”
“ஐயோ மாஸ்டர் இது உங்கடை வீடெண்டு தெரியாமல் போயிட்டுது. எங்களுக்கு தெரியாது மாஸ்டர் இது உங்கடை வீடு எண்டு. யாருக்கும் சொல்லீடாதேங்கோ மாஸ்டர். நீங்கள் எவ்வளவு நல்லவர் உங்கடை வீட்டிலை போய் நாங்கள் களவெடுக்க வந்திட்டமே. மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாஸ்டர்”
எண்டு சொல்லி வந்தகள்ளர் ரெண்டு பேரும் அப்பாவின்ரை கைகளைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டினம்.

அப்பா பெரிய மனிசன் தானே அவையளை மன்னிச்சு “உதிலை இருங்கோ” எண்டு சொல்லிக் போட்டு குசினிக்குள்ளை அடுப்பு மூட்டி கேற்றில்லை தண்ணீர் கொதிக்க வைச்சு தேத்தண்ணி போட்டு ரெண்டு கருப்பட்டிக் குட்டானும் தேத்தணியும் அழகான கிளாசிலை கொண்டு வந்து கொடுத்தார்.
“நாங்கள் கள்ளர் களவெடுக்க வந்தனாங்கள.; எங்களுக்கு தேத்தண்ணி தாறிங்களே மாஸ்டர்”

ரெண்டு பேரும் அழுதார்கள். யார் செய்வார்கள் இப்படி அப்பாவைத் தவிர. ஆனால் கள்ளருக்கும் சங்கோஜம். அப்பாவின்ரை வீட்டிலை களவெடுக்க வந்திட்டமே எண்டு. கவலை வேறு.

அப்பா தேத்தண்ணியும் கொடுத்து இனிமேல் களவெடுக்கக் கூடாது எண்டு அந்த சாமத்திலை உபதேசமும் பண்ணினார். உண்மையில் ஒவ்வொருவரும் ஒருவேலை தேடுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுவினம் தெரியுமா?. பணக்காரர் எப்படி சும்மா வானத்திலை இருந்து வருகினமே. அவையின் ஒண்டை ஐஞ்சாக்கி பத்தாக்கி நூறாக்கி அதை வளமா பெருக்கிறதிலை எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பினம் தெரியுமே. பணக் காரரிலை நாங்கள் பொறாமைப்படக்கூடாது தெரியுமோ. எந்தக் கஷ்டமும் இல்லாமல் பணம் வராது.

அடுத்தது நீங்கள் களவெடுக்கிறது ஒவ்வொரு சாமானும் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பொம்பிளையள் சேகரித்த சாமான்கள். இதாலை நீங்கள் சாப்பிட்டால் அது நெருப்பை சாப்பிடுவதற்கு சமன் தெரியுதோ.
ஏன் இப்பிடி நெருப்பை தின்னுறீங்கள். ஆண்டவன் உங்களுக்கு எவ்வளவு அழகான கை கால்களைத் தந்திருக்கிறார். அதைக் கொண்டு ஏன் உழைச்சுச் சாப்பிடக் கூடாது.

இரவில் உபதேசம் நடக்கிறது கள்ளருக்கு. நான் பக்கத்தில் இருக்கிறேன். அப்பாவுக்கு முன்னால் நிலத்தில் பணிய இரண்டு கள்ளர்களும் இருக்கினம்.
கள்ளர்கள் இருவரும் அழுகினம். கண்களால் பொலு பொலுவென்று கண்ணீர்; கொட்டுகிறது. மனம் கரைந்து விட்டது. அப்பா கரைத்துவிட்டார். அப்பாவுக்கு அந்த வல்லமையும் சக்தியும் இருக்கிறது. நல்லவராக்கும் வல்லமை. சக்தி.
அப்ப நாங்கள் போறம் மாஸ்டர். கையெடுத்துக் கும்பிட்டார்கள். அப்பா சொன்னார் கொஞ்சம் பொறுங்கோ வீட்டுக்குள் போய் அப்பாவின் கழிசான் பொக்கட்டில் இருந்து இருநூறு ரூபாக்களை கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் நூறு ரூபா வீதம் கொடுத்தார். கள்வர்கள் இருவரும் விம்மி அழுத்தனர். அப்பாவின் காலைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு விம்மினர். அழுதனர். அப்பா ரெண்டு பேரையும் அன்போடு அணைச்சுக் கொண்டார். நாளைக்கு பகலைக்கு வாங்கோ உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் எண்டு சொல்லி அனுப்பினார். அழுத கண்களோடை அவையள் போனது மனதுக்குள்ளை எனக்கு இன்னும் நிக்குது.
சொன்னது போல அடுத்த நாள் நல்ல மனிதராய் அவையள் வந்தினம். அப்பா என்ன சொன்னார் தெரியுமா.

எங்கடை தோட்டம் ஐஞ்சேக்கர். அதிலை ஒரு ஏக்கரிலை நீங்கள் ரெண்டு பேரும் மிளகாய் கண்டு நடுறியள். இண்டைக்கே வேலை ஆரம்பிக்க வேணும். எண்டு இரண்டு முதலை மார்க் மண்வெட்டியைக் கொடுத்தார். இரண்டு பேரின்ரை கைகளிலும.; அதனை ஏதோ செங்கோலை வாங்குவது போல் வலு பவ்வியமாக வாங்கினார்கள் அவர்கள்;.
அப்பா எல்லையை காட்டினார். எனக்கு குத்தகை தரவேணும் எண்டு அப்பா சொன்னார். சிரித்தபடி உண்மையாக சொன்னார்.
கடைசியாக ஒருதரம் முகத்தை பார்க்க எல்லாரும் முண்டியடிக்கினம். அம்மா வீறிட்டு அழுகிறா. அப்பாவின் உடலின் மிது விழுந்த குழறுகின்றா அக்கா கேவி கேவி அழுது ஐயோ... ஐயோ... ஐயோ.... என்றபடி மயக்கமாகி தரையிலை விழுகின்றா.

நான் அப்பாவின் முகத்தை இறுதியாக உற்றுப் பார்த்து மனதில் அந்த இறுதி நிமிடங்களை மனிதில் அழுத்தமாக இருத்திக் கொண்டேன்.
அழகான சவப் பெட்டிக்குள் வைத்து அப்பாவை மூடி விட்டார்கள். மூடவேண்டாம் என்று அக்கா சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இப்படி எத்தனை முகம்களை அவர்கள் மூடி இருப்பார்கள். அப்பாவையும் மூடி நீளமான ஹேஸ் காரில் பெட்டியை ஏற்றினார்கள்.
அருகில் உள்ள மயானத்துக்கு அப்பாவின் உடல் போகிறது. எங்கடை அப்பாவைப் போல் யாரிருக்கிறார்கள்.

கால்கள் மயானத்தை நோக்கி நடக்கின்றன. மனம் அப்பாவின் நினைவுகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. ஊர்வலத்தில் வந்த யாரோ சொல்லக் கேட்கிறது.
இவ்வளவு நேரமும் பெய்த மழை நிண்டுட்டுது மாஸ்டர் எவ்வளவு நல்லவர்.

நண்பர்கள் கூட்டம்

Blog Archive