Tuesday, 5 May 2009

எங்களது வீடுகளைத் தாருங்கள்

எனக்கு மனம் மிகவும் அந்தரமாகவும் கவலையாகவும் இருக்கிறது. பட்டினியால் சாப்பாடில்லாமல் ஆமிக்காரர் கொடுக்கும் சோற்றுப்பார்சலை இரண்டு கைகளாலும் பிச்சை எடுப்பது போல் கெஞ்சிவாங்கும் போது வயித்தைப் பத்தி எரிகிறது எனக்கு. வன்னி மக்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.

வன்னி மண் முழுக்க ஓடித் திரிந்த காலம் எனக்கு மனம் முழுக்க வியாபித்து இருக்கிறது. நான் பிறந்த மண் அது. நான் அள்ளித்தின்ற மண் அது. நான் படித்த பூமி அது. எனது உறவினர்கள் வாழ்ந்து இறந்த பூமி அது.ஒட்டுசுட்டானுக்கு பாடசாலைக்கு கால்நடையாகவே நடந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மைல்கள் எனது பாதம் பட்ட பூமி அது. பத்து வருடம் பாடசாலைக் காலங்களில் எப்பவுமே எனக்கு பஸ்ஸில் பள்ளிக்கூடம் போன ஞாபகமில்லை. நடைதான்.

உண்மையில் நாங்கள், மக்கள் எப்பொழுதுமே தமிழீழம் கேட்கவில்லை. நிம்மதியாக வாழ்ந்த மக்கள் நாங்கள். விவசாயிகள் அன்றன்டாடம் உழைத்து வாழ்ந்த மக்கள் நாங்கள். யுத்தம் ஒவ்வொருவரையும் சின்னாபின்னப்படுத்தி சிதைத்து சிதிலமாகிப்போட்டு விட்டது. ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் யுத்தப் பேரினவாதிகள்.

வன்னியில் கமக்காரர் வீட்டில் நெல்லு மூடைகள் பன்னிரண்டு மாதமும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் பசியோடு இருந்தவர்கள் யாருமில்லை. பிச்சைக்காரர்கள் இல்லை. எமது ஊரில் வெளியூர்களில் இருந்து பிச்சைக்காரர்கள் வந்தாலும் ஊரை விட்டு போகும்போது ஒரு மூடை நெல்லாவது அரிசியாவது கொண்டு போவார்கள். ஒரு வீட்டுக்கு வந்து சாப்பாட்டுக்கு அரிசி இல்லை என்று கேட்டால் குறைஞ்சது இரண்டு பால் சுண்டு அரிசியாவது கொடுப்பார்கள். என் அம்மா எத்தனையோமுறை அவ்வாறு கொடுத்திருப்பதனை பார்த்திருக்கிறேன். அந்த இரண்டு சுண்டு அரிசி அரைக் கொத்து அளவாகும்.

எங்களது புளியங்குளத்தில் ஆடுமாடோடு பெரும் வயல் நில புலங்களோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா செத்துப் போனார்களோ தெரியாது. நான் எங்கு போய் தேடுவேன் எனது கிராமத்து மக்களை.அங்கிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு புலிகள் துரத்தியபோது பக்கத்து வீட்டு தமிழர்களெல்லாம் மனம் வெடித்து அழுதது இன்னும் ஞாபகமாய் இருக்கிறது.

மாங்குளம், கரிபட்டமுறிப்பு, மணவாளன் பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், மானுருவி, கருவேலன் கண்டல், முள்ளியவளை, தண்ணீர் ஊற்று, நீராவிப்பிட்டி,நெடுங்கேணி, சம்மளங்குளம் என்று குட்டிக் குட்டி கிராமங்களில் அழகான குழந்தை குட்டிகளோடு நன்றாக வாழ்ந்த மக்கள்.யுத்தம் என்ற சனியன் ஏன் வன்னிக்குள் புகுந்ததோதெரியாது. சிவனே என்று கிடந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டிப் போட்டார்கள். எல்லாருமாக சேர்ந்து விரட்டி விட்டார்கள். விரட்ட வைத்து விட்டார்கள். இனி அந்த செல்வம் கொழித்த பூமியை எங்களுக்கு சிங்களவர்கள் தருவார்களா? எங்கள் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க விடுவார்களா?

எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த செல்லையா அண்ணர் செத்துப் போய்விட்டார் என்று இங்கு தனது அப்பாவின் செத்தவீட்டை ,லண்டனில் அவரது மகன் தனது வீட்டில் நடத்துகிறான்.பிரேதம் இல்லாமல் செத்த வீடு நடத்தும் சமூகமாக எமது சமூகம் அவலமாகிப் போய்விட்டது.

செல்லையாண்ணை நல்ல மனிதர். 28 வருடத்துக்கு முன்பு பார்த்த மனிதர் அவர். ஊரை விட்டு வெளிக்கிட்ட போது நான் சின்னப்பொடியன். சோலி சுறட்டுக்கு போகாத நல்ல மனிதர் செல்லையா அண்ணர். குளக்கட்டோடு எட்டு ஏக்கர் வயல் காணி அவருக்கிருக்கிறது.ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கண்கொண்டு பார்க்க முடியாது அவ்வளவு செழிப்பு, எங்களுக்கு 5 ஏக்கர் நெல்வயல். அந்த ஏரியா முழுவதும் றோட்டோரமாக நெல் செழித்து நிற்கும்.

இதற்கிடையில் செல்லையா அண்ணரின் வயலுக்குள் குளக்கட்டோடு சேர்த்து ஒரு வயல் பிள்ளையார் இருக்கும். அதில் ஒன்றுமில்லை ஒரு கல்தான். தமிழன் கல்லிலே தெய்வத்தை கண்டவனல்லவா.அந்த வயல் பிள்ளையாருக்கு நிறமணிபோட்டு பொங்கல் வைப்பார்கள். அந்த எமது புளியங்குளம் கிராமத்துக்கே அந்த பிள்ளையாருக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஏனெனில், சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லோரும் அங்கு வந்து பொங்குவார்கள். நிறமணி போடுவார்கள். என்னையொத்த வயதுக்காரர் எல்லாம் அங்கு சங்கு ஊதுகிற சத்தம் கேட்டால் போதும் வெறும் மேலோடு கட்டிய சாரத்தை சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க ஓடிவந்து விடுவோம்.பிள்ளையாரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொங்கலும் வாழைப்பழமும் மோதகமும் வடையும் வாழை இலையில் வைத்து நிறைய நிறைய எந்த வஞ்சகமம் இல்லாமல் தருவார் செல்லையா அண்ணர்.பெரும் செல்வாக்கான மனிதர் இருந்தும் சேட் போடமாட்டார். நாலுமுழ வேட்டியும் சால்வையும்தான்.

அந்த நல்ல மனிதர் ஊர் பேர் தெரியாத புதுமாத்தளன் பகுதியில் போய் அந்த உப்புக்காத்தில் கிடந்து பசியால் பட்டினியால் வாடி கடைசியில் செல்லடிபட்டு செத்துப் போனார். என்ன கொடுமை இது. அந்த மனிதனை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. இப்படி இன்னும் எத்தனை பேர் செத்துப் போனார்களோ பசியால் பட்டினியால்?

எனது விவரணங்களுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அங்கிருந்து அகதிகளாக வருகின்ற இலட்சக்கணக்கான மக்களை தொலைக்காட்சியில் காட்டும்போது தொலைபேசியில் கூப்பிட்டு மக்கள் சொல்கிறார்கள் இங்கு தயவுசெய்து அந்தக் காட்சிகளை திருப்பித் திருப்பி போடுங்கள். ஏனெனில், எங்கடை சொந்தக்காரர்கள் யாராவது வருகினமோ என்று பார்ப்பதற்கு என மக்கள் சொல்லும் பொழுது எனக்கு நெஞ்சு வெடித்து போகிறது.

இரவில் நித்திரை வருகுதில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சாரிசாரியாக எல்லோரும் அந்த மண்ணை விட்டு விட்டு வந்து விட்டார்கள். எத்தனை ஆயிரம் பேரை காவு கொடுத்து விட்டோம்.தமிழீழத்தைப் பெறுங்கள் என்று சொல்லி விட்டு அரசியல் தலைவர்கள் போய் சேர்ந்து விட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை கொடுத்து விட்டோமா? இப்பொழுது அடுத்தது என்ன? எத்தனை நாளைக்கு இந்த அகதி முகாம்களில் வாழ்க்கை! வைத்திருக்கபோகிறார்கள் ஆமிக்காரர்? ஒரு பெண்மணி வவுனியா அகதி முகாமில் இருந்து தொலைபேசியில் இங்கு லண்டனுக்கு உறவினர்களோடு பேசும் பொழுதும் பெண்கள் பெரும் கஷ்டப்படுவதாக சொல்லி அழுதிருக்கிறார்.மாதவிடார் காலங்களில் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும் அந்த காலங்களில் பாவிக்கின்ற சுகாதார துவாய் போன்றவை அதிகமாகத் தேவைப்படுவதாகவும் பல நாட்களாக குளிக்க தண்ணியில்லையென்றும் சொல்லி கவலைப் பட்டிருக்கிறார். அகதி முகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். யுத்த நேரங்களில் பிள்ளைகளை பெத்து காவு கொடுத்து, பின்னர் கணவனை இழந்து விதவையாகி, பிறகு அகதி முகாம்களில் அல்லல்பட்டு என்று தமிழ் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லிமாளாதவை. இந்த கடும் இறுதி யுத்தத்தில் செத்துப்போன பெற்றோரின் பிள்ளைகள் எல்லாம் அனாதைகளாகி விட்டனர். அவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள். எந்த உத்தரவாதமும் தரமாட்டார்களாம் யாரும்.

வன்னி மக்களை அவர்களின் சொந்த பூமியில் இருந்து ஓட ஓட விரட்டியாகிவிட்டது. அடுத்தது என்ன?வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் குரலாக ஒட்டுமொத்த வேண்டுதலாக இருப்பது இதுதான். தயவுசெய்து பறித்தெடுத்த எங்கள் வீடுகளை திருப்பித் தாருங்கள். கஞ்சியோ கூழோ எங்கள் முற்றத்தில் இருந்து குடித்துவிட்டு செத்துப்போகிறோம்.


இளைய அப்துல்லாஹ்

No comments:

நண்பர்கள் கூட்டம்

Blog Archive