Tuesday 5 May 2009

அப்பாவின் மரணம்

அப்பாவின் மரணம்

இளைய அப்துல்லாஹ்

“என்ரை அப்பாவை மூடாதேங்கோ! என்ரை அப்பாவை மூட வேண்டாம். என்ரை அப்பா எனக்கு வேணும். என்ரை அப்பாவை மூடாதேங்கோ. என்ரை அப்பாவை கொண்டு போகப் போகினம். என்ரை அப்பாவை கொண்டு போக வேண்டாம் எண்டு சொல்லுங்கோ என்ரை அப்பாவை மூடப்போகினம். அவர் வேணும். அவர் இல்லாமல் எங்களாலை வாழ முடியுமே. அப்பா வேணும். அம்மா அவையிட்டை சொல்லுங்கோ அப்பாவை கொண்டு போக வேண்டாமெண்டு அப்பா.... என்ரை அப்பா....” இடுகாட்டுக்கு கொண்டுபோகப் போகினம் அப்பாவை. செத்த வீட்டில் இன்னும் அக்கா அழுது கொண்டிருக்கிறா. ஃபாதர் வந்து கடைசியில் ஓதவேண்டிய பைபிள் வசனம் எல்லாம் ஓதி முடிஞ்சு போச்சு அக்கா அழுது கொண்டேயிருக்கிறா. அக்காவும் அப்பாவும் உயிர். ரெண்டு பேரும் எப்பவும் ஒண்டாகவே இருப்பினம். கதைப்பினம். அக்காவை அப்பா தன்ரை மகளாக இல்லாமல் ஒரு நல்ல நண்பியாகவே பார்த்திருக்கிறார். அக்கா நல்ல கெட்டிக்காரி. எல்லாத்திலையும் கெட்டிக்காரி. படிப்பிலை. நாட்டுக் கூத்திலை நாடகத்திலை, பேச்சிலை, கவிதை எழுதுறதிலை, எல்லாதிலையும்.

அக்கா அப்பாவை பாத்து பாத்து வளந்தவா, விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறா. அப்பாவை நாங்கள் எப்பவும் பிரேதமாக நினைச்சுப் பாத்ததில்லை. அப்பாவை உயிருடன் இல்லாமல் நினைச்சுப் பாக்க எங்களுக்கு முடியாமல் இருந்தது.

மற்ற அப்பாக்கள் மிகவும் கடுமையானவர்கள் எண்டெல்லாம் சொல்லுறவையைப்பற்றி கேள்விப்பட்டனாங்கள். ஆனால் எங்கடை அப்பா அப்பிடி இல்லை.
இப்ப அப்பா பிரேதமாக கிடக்கிறார். எங்களுக்கு இப்படி ஒண்டு வருமெண்டு, அப்பாவை இப்பிடி பாப்பம் எண்டு நான் கனவிலையும் காணல்லை. நேற்று வரைக்கும் நல்லாத் தானே இருந்தவர். வருத்த துன்பம் எண்டு அவருக்கு ஒன்டும் வந்ததில்லை. ஆஜானுபாகுவான தோற்றம் எண்டு சொல்லுவினமே அதை அப்பாவிலை தான் பாத்தனாங்கள். அப்பிடி ஒரு கம்பீரம். அப்பா திடீரெண்டு சவப் பெட்டிக்குள்ளை வந்து படுத்த மாதிரிக்கிடக்குது.
அப்பா எழும்பி வாங்கோ வீட்டுக்குப் போய் நாட்டுக்கூத்து பழகுவம் எண்டு சொல்ல வேணும் போல கிடக்கு. பிரேதம் எல்லாம் பொய்போல கிடக்கு. அக்கா, அம்மா, பக்கத்து வீட்டு கனகா அன்ரி, எங்கடை மாமா எல்லாரும் அழுகினம். நிறையப் பேர் அழுதால் இவையெல்லாம் அப்பாவோடு மிகவும் அன்பு செலுத்தியிருக்கினம் எண்டு தானே அர்த்தம். உண்மையில் அப்பா நல்லவர்தான். சந்தேகமில்லை. அக்காவுக்கு அப்பா போனது பெருங்கவலையாகத்தான் இருக்கு.எங்களுக்கு என்ன செய்யுறதெண்டு விளங்கவில்லை.

அம்மா பேயறைஞ்சவா போல கிடக்கிறா. பெட்டியை மூடி சுடு காட்டுக்கு அப்பாவை கொண்டு போகப் போகினம். மூடுறதுக்கு கறுப்பு கோட் போட்டவை வருகினம். அவையள் எந்தவித முக உணர்ச்சியும் இல்லாமல் இயங்குகினம். அவையளுக்கு எப்பிடி உணர்ச்சி வரும். அப்பா எங்களுக்குத்தானே அவையளுக்கில்லையே. அப்பா எங்கடை அப்பா தானே அவையளின்ரை அப்பா இல்லையே. அப்பா எங்கடை அன்புக்குரியவர் தானே பிரேதம் கொண்டு போறவையின்ரை அன்புக்குரியவர் இல்லையே. ஆனால் அப்பாவை அவையளுக்கு தெரிஞ்சிருந்தால் அப்பாவோடு பழகியிருந்தால் அப்பாவோடு ஒண்டா இருந்து சாப்பிட்டிருந்தால் அப்பாவோடு வேலை செய்திருந்தால் அப்பாவிட்டை நாட்டுக்கூத்து பழகி இருந்தால் இப்ப சும்மா இப்பிடி இருந்திருக்க மாட்டினம் அவையளும் அழுதிருப்பினம்.
கறுப்பு கோட் போட்டவையிலை மூண்டு பேர் அப்பாவை சுத்தி போட்டிருந்த பூக்களை பூ வாஸ்களை, பூ செண்டுகளை, மலர் வளையங்களை எடுத்துக் கொண்டு பொகினம். போய் காருக்குள்ளை வைக்கினம். அப்பாவை தூக்க ஆயத்தமாகினம். வெப்புசாரம் மனசுக்குள் வெடிக்கிறது.அக்கா ஓ வெண்டு கத்துறா.

“என்ரை ஐயா! என்ரை ஐயா என்ரை ஐ.....” அம்மா கேவுறா. இனி எல்லாம் முடிஞ்சு போச்சுது மண்ணுக்குள்ளை போகப் போகுது. அப்பாவை கொண்டு போய் மண்ணுக்குள்ளை புதைக்கப் போகினம். இனி புதைக்கத்தானே வேணும். ஆனால் அப்பாவை அப்படியே வீட்டிலை கொண்டு போய் வைச்சாலும் அப்பா வோடை நாங்கள் இருப்பம். எண்டு தான் எனக்கு மனசுக்கு படுகிறது. ஏனெண்டால் அப்பா பிரேதமாக வீட்டிலை கிடந்தாலும் நாங்கள் எல்லாரும் அப்பாவிலை அன்பு செலுத்துவோம். அப்பா எங்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அவ்வளவு அன்பாக நேசித்தவர்.
எனவே தான் எனக்கு அப்படி நினைக்குது. அது சரியாகவும் இருக்கலாம். எனக்கு கண்ணீர் மாலை மாலையா கொட்டுகிறது. கண்ணீர் மட்டும் கண்ணாலை வராட்டில் இருதயம் வெடிச்சுப் போடுமாக்கும். அப்பாவை நினைச்சால் கண்ணீihத் தவிர வேறையொண்டும் இப்ப எங்களிட்டை இல்லை.

“என்ரை ஐயாவை கொண்டு போகாதேங்கோ. அம்பது வருஷம் வாழ்ந்தவரை கொண்டு போறீங்களே. என்ரை ஐயா என்னை பாத்து ஒரு முறைப்பு முறைச்சிருப்பாரே. என்னைப்பாத்து ஒரு கடுஞ்சொல் சொல்லியிருப்பாரே. என்னை எப்பவும் தன்ரை தோழிலை சுமந்தவரெல்லோ. என்ன கஷ்டம் வந்தாலும் தான் அதை சுமந்து கொண்டு எனக்கு கூட தெரியாமல் வாழ்ந்தவரெல்லோ என்ரை ஐயா. அவரை பிரிக்காதேங்கோ. என்னை விட்டுப் பிரிக்காதேங்கோ. அவர் எங்களுக்கு வேணும். கொண்டு போகாதேங்கோ அவர் இல்லாமல் எப்படி நாங்கள் இனி வாழுறது. ஐயா... என்ரை ஐயா... ஐயாவை தூக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ! தம்பி மோனை ஐயாவை கொண்டுபொய் மண்ணிலை போடாதேங்கோ. ஐயா குப்பைக்குள்ளை கிடந்த என்னை கோபுரத்திலை கொண்டு வந்து வைச்சவர். ஏழையாய் இருந்த என்னை தன்ரை கையிலை ஏந்தி கொண்டாடினவர். நான் அவர் இல்லாமல் இருந்ததில்லையே!. ஒருநாளும் என்ரை ஐயாவை விட்டுட்டு நான் சாப்பிட்டதில்லை. ஐயா எனக்காக காத்திருப்பார். ஐயாவுக்காக நான் காத்திருப்பேன். என்ரை ஐயாவை என்ன விட்டு பிரிக்காதேங்கோ ஐயா சாகேல்லை. அவர் போக முதல் நான் போயிருக்கலாமே. ஐயோ நெஞ்சு வெடிச்சிடும் போல கிடக்கு. நான் சாகவேணும். இப்ப சாக வேணும். ஐயாவோடை போகவேணும். உண்மையாய் ஐயா இல்லாமல் நான் இந்த உலகத்திலை வாழ முடியாது. என்ர நெஞ்செல்லாம் அடைக்குது பொடி. ஐயா இல்லாமல் உன்னாலை இருக்கேலுமாடா என்னாலை முடியாது... முடியாது... முடியாது.....”

தொண்டையிலை இருந்து வார்த்தைகள் இல்லாமல் அம்மா கேவுறா. தொண்டை தண்ணி வத்தி போட்டுது அம்மாவுக்கு. அம்மா நேற்று காலையில் இருந்து அழுது கொண்டே இருக்கிறா. அம்மா இப்பவரைக்கும் பத்து பதினைஞ்சு தரம் மயங்கி விழுந்திட்டா.

அப்பா முற்போக்கானவர். மக்களை நேசித்தவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். அப்பா யாரையும் இழிவாக பேசினதே கிடையாது. யாருக்கும் அவன் எண்டு சொன்னதே கிடையாது. அதனாலை நாங்களும் யாருக்கும் அவன் எண்டு சொல்லுறது இல்லை. நல்ல மனிதனின் உறைவிடமாக, நல்ல பழக்க வழக்கங்களின் உறைவிடமாக இருந்தவர்.

அப்பா அம்மாவை அம்மா எண்டும். அம்மா அப்பாவை அப்பா எண்டும் கூப்பிடுவார்கள். அந்த அழைப்பிலேயே அன்பு கனிந்து கொண்டிருக்கும்.
நானும் அண்ணையும், அக்காவும் இந்த அன்பிலே திளைத்திருப்போம். அப்பாவும் அம்மாவும் எப்பொழுதும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பா ஒரு கவிஞ்ஞராக எழுத்தாளராக நாட்டுக் கூத்து கலைஞராக இருந்தார்.

ஏ9 பாதை மூடப்பட்டது அங்கு சனங்கள் கஷ்டப்படுவது போன்ற விஷயங்கள் அப்பாவை அதிகமாக கவலைப்பட வைத்தன. அப்பா கடைசி காலத்தில் தன்ரை பிரேதம் யாழ்ப்பாணத்தில் ஊரில் உள்ள தனது தாயாரின் வீட்டில் வைத்து எடுக்க வேணும் எண்டுதான் ஆசைப்பட்டார். ஆனால் ஏ9 திறக்கப்படாமலேயே அப்பா எங்களை விட்டுவிட்டு செத்துப் போனார்.
கொஞ்சம் பேர் தான் ஐயாவின்ரை செத்த வீட்டுக்கு வந்திருக்கினம். பேப்பரிலை செய்தியை பார்த்தவை தான் வந்திருக்கினம். அவையளிலை கன பேருக்கு செய்தி போயிருக்காது. மட்டக்களப்பு, யாழ்ப்பபாணம் எண்டு எல்லா இடங்களுக்கும் இப்ப பேப்பர் போகாததாலை செய்தி போயிருக்காது. ரேடியோவும் எங்கடை ஆக்கள் இருக்கிற இடங்களில் வேலை செய்றதுக்கு கரண்டும் இல்லை. பற்றறியும் இல்லை. காசும் இல்லை இனி எப்பிடி செய்தி போகும். அப்பாட்டை படிச்ச பிள்ளைகள் பெரிய ஆக்கள் எல்லாருக்கும் செய்தி போக வழியில்லை அதுதான் யோசனையாய் கிடக்கு.
அப்பா படிப்பிக்கும் போது பாக்க வேணுமே. மற்ற வகுப்பிலை பாடம் இல்லாமல் இருந்தால் அவையளும் வந்து அப்பாடை பாடத்திலை இருந்திடுவினம்.


எத்தனையோ வகுப்புகளிலை அடி மாஸ்டர் மார் வரக்கூடாது எண்டு பிள்ளையள் நேத்தி வைச்சிருப்பினம். வைரவருக்கு இளைக்கட்டுவினம். உப்படித்தான் தில்லையம்பலம் வாத்தியார் வரக்கூடாது எண்டு பாலை மரத்தடி வைரவருக்கு கற்பூரம் கொழுத்த நேத்தி வைச்சனாங்கள் நானும் ரூபனும் ஸ்ரீயும் உண்மையிலை நேத்தி பலிச்சு தில்லையம்பலத்தாருக்கு பொக்குளிப்பான் வந்திட்டுது. நாப்பது ஐம்பது நாட்கள் எங்களுக்கு கொண்டாட்டம் தான். குசி தான். சுதந்திரப் பறவைகளாய் திரிந்தோம்.
தில்லையம்பலத்தார் ஆங்கிலம் எடுத்தவர். அடி மன்னன் கன்னம் பழுக்கும். கன்னத்திலை தான் சளார் சளார் எண்டு அறைவார். அவரின்ரை வியூகம் தெரிஞ்சதன் பிறகு அவர் அடிக்க ரெடியானால் கன்னத்தை பொத்திக் கொள்ள பழகினோம் நாங்கள். ஆங்கிலம் எடுப்பார். ஆனால் அவர் நினைச்சுக் கொண்டிருப்பார் உவங்களுக்கெங்கே இங்கிலீஸ் தெரியப் போகுது உவங்களுக்குகெங்கே விளங்கப் போகுது எண்டு தான் வகுப்பு எடுப்பார்.
அவருக்கே எங்களுக்கு விளங்க வைக்க வேணும் எண்ட நினைப்பே இல்லை. பிறகு எப்படி எங்களுக்கு அவரின்ரை படிப்பித்தல் ஏறும். அப்படியே ஆங்கிலத்தை அவர் விளங்காமலே நாசமாக்கி போட்டார். உப்படி எத்தினை வாத்திமார். ஆனால் அப்பாவின்ரை கிளாஸ் வலு கலாதியாய் இருக்கும். கம்பராமாயனம் எண்டால் முழு அசோகவனமும் சீதையும் திரிசடையும் அரக்கரும் அரக்கியரும் அப்படியே எங்களுக்கு முன்னால் நிற்பார்கள். சுந்தரகாண்டம் வலு சுவையாக இருக்கும்.


சீதா எலியவில் அசோகவனத்தில் நாங்கள் இருப்பது போலவும் அடர்ந்த மரங்களுக்குள் அழகான சோலையின் தென்றல் வீசுவது போலவும் மரங்கள், புள்ளினங்கள், மான்கள், குரங்குகள், கீரிப்பிள்ளைகள்; எல்லாம் ஊசாடுவது போலவும் அப்பாவின் வர்ணனைகள் இருக்கும். நான் அப்பாவின் பள்ளிக்கூடத்தில் தான் படித்தேன்.

அப்பா கவலைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் ஆனால் இரண்டு கவலைகள் அவரை தொடர்ந்தும் வாட்டிக் கொண்டு வந்தன. ஒண்டு எங்களுடைய அண்ணா சின்ன வயதிலை செத்துப்போனது. மற்றது அக்காவின்ரை பொம்பிள பிள்ளை குழந்தையிலை செத்து போனது.
இந்த விசயத்தை அப்பாவாலை மறக்கவே முடியாமல் போய்விட்டது. அப்பா இப்ப பிரேதமாக கிடக்கிற நேரம் உது எல்லாம் எனக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு வருகுது. அவரின்ரை மூத்த மகன் எங்கடை அண்ணா செத்த போது அப்பா அப்படியே உடைந்து போய்விட்டார். அவர் அண்ணாவின் செத்த வீட்டில் வைத்து சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நான் தூக்கி வளத்த தோளிலை இன்னும் பாரம் இறங்கவேயில்லை போய் சேந்திட்டான் என்ரை மகன் எண்டு அப்பா குழறினார். அப்பா எல்லாரிலையும் அளவு கடந்த அன்பு வைச்சிருந்தார் அண்ணா செத்ததோடை உடைந்து பேனார்.

அக்காவின்ரை பிள்ளை ஆறு வயசிலை செத்தது அப்பாவால் தாங்க முடியாத ஒண்டாக இருந்தது. மிகச் சிறந்த என்ரை குழந்தை செத்துப் போச்சுது எண்டு அப்பா அழுதவர். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தவர். எங்கடை கூட்டுக் குடும்பம் அதில் இருந்து பிரிந்து போக ஆருமே விரும்பேல்லை. அப்பாவின்ரை மடிக்குள்ளை தான் மாயா எப்பவும் இருப்பாள். மாயா செத்துப் போனதை அப்பா தனது ஈரல்குலையே அறுந்து போய்விட்டதைப் போல அழுதார். விம்மினார். துடித்துத்தான் போனார். மாயாவும் அப்பா வெண்டுதான் அப்பாவை கூப்பிடுவாள். அவளின் அன்பில் அப்பா திளைத்துப் போய் இருப்பார். சோறு தீத்தவேணுமா அப்பா. மருந்து குடிக்க வேணுமா அப்பா, சட்டை போட வேணுமா அப்பா, தலை இழுத்துகட்ட வேணுமா அப்பாஇ தூக்க வேணுமா அப்பா, நித்திரைக்கு போகவேணுமா அப்பா. அப்பா இல்லாமல் மாயா இல்லை. மாயா இல்லாமல் அப்பா இல்லை. அப்படி ஆகிவிட்டது. அவர்கள் உறவு மாயாவை பிரிந்ததன் பின்னர் ஒரு மாதம் மட்டிலை அப்பா உண்ணாமல் குடிக்காமல் இருந்தார் முழுக்க உடைஞ்சு போனார்.

மாயா பற்றிய கற்பனையில் அவளின் நினைவுகளோடு தான் அப்பா வாழ்ந்தார். அவளின் பூப்போட்ட சட்டைகள், அவள் ட்றிங்ஸ் குடிக்கும் கோப்பை, மாயாவின் அழகான கலர் மூக்குக் கண்ணாடி, மாயாவின் கீச்சிடும் சப்பாத்து, மாயாவின் மொண்டசூரி பை, மாயாவின் சிரிப்பு சத்தம், மாயாவின் மொழி என்று அப்பா அவளின் நினைவுகளில் இருந்து கடைசி வரை விடுபடவேயில்லை. அவ்வளவு அன்பு அவர்.


அன்புள்ள மனிதர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உயிரோடு அப்பா அன்பின் உருவமாகவே எங்களுக்கு முன்னால் சதையும் ரத்தமுமாக இருந்தார். அன்பு அவரின் இரத்தத்தில் ஊறியிருந்த ஒன்று. எல்லோருக்கும் நல்லவராகவும் எல்லோர் மீதும் அன்பு செலுத்துபவராகவும் அவர் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களோடும் வரும் விருந்தாளிகளோடும் உறவினர்களோடும் அன்பின் உருவமாகவே அவர் இருந்தார். இயல்பாகவே இந்த குணங்கள் அவரில் இருந்தன.
எங்களுக்கு அன்பு மீது அக்கறையும் அவதானிப்பும் அப்பாவினால் தான் வந்தது.


அண்ணாவின் மரணத்தின் பின்பும் அப்பாவின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. ஒருருநாள் ஈஸி செயாரில் படுத்துக்கிடந்தவரைப் பார்த்தேன். இரண்டு கண்களின் கடைசி ஓரங்களிலும் கண்ணீர் வெகுநேரமாக வடிந்து கொண்டிருந்தது.

மனதின் கவலைகள் எல்லாம் கண்ணீராக ஓடிக்கொண்டிருந்தது. நான் அப்பாவை குழப்பவில்லை. அப்பா அழுமட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரின் வடிகாலாக அது அமைந்திருக்குமாக்கும். மௌனமாக அவர் அழுதார். அப்பா அப்படித்தான் அழுவார்.

ஒருவர் அப்பாவிடம் கடன் வாங்கி விட்டார். எழுபத்தைந்தாயிரம் ரூபாய். இது பெரிய காசு அப்பாவை பொறுத்த வரையிலும். ஏனெனில் அப்பா பக்கத்து வீட்டுக்காரரின் இக்கட்டுக்கு தனது சேமிப்பு புத்தகத்தில் இருந்தே அதை எடுத்துக் கொடுத்துவிட்டார். வாங்கியவருக்கோ கொடுக்க வசதி இல்லாமல் கிடந்து கஷ்டப்பட்டார். அப்பாவிடம் தவணைக்கு மேல் தவணை கேட்டார்.
வாங்கியவரும் கடன் சுமை தொடர்பாக கவலைப்படுவதாக இருந்தார். அவரின் கஷ்டங்களுக்கு மத்தியில் அப்பாவின் நிலைமையும் அதனை தேவைப்படுவதாக இருந்தது. அதனால் தனது மனைவியின் தாலிக் கொடியை அடைவு வைத்து விட்டுக் கடன் பணத்தை தந்தாh வாங்கியவர்;. ஆனால் விசயம் கேள்விப்பட்டவுடன் அப்பா அவரின் மனைவியின் தாலிக் கொடியை மீட்டு வந்து கொடுத்து விட்டு நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு உதவி செய்வது என்ரை கடமை என்று சொல்லிவிட்டு கடனை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

ஒருநாள் ஏனப்பா அப்படி செய்த நீங்கள் எண்டு கேட்டேன். ஒரு முறை தான் ஒரு முஸ்லிம் கலண்டரை பார்த்த தாகவும் அதில் நபிகளாரின் பொன்மொழி ஒன்று இருந்ததாகவும் சொல்லி அந்தப் பொன் மொழியை சொன்னார்.
“மறுமை நாளின் கஷ்டங்களில் இருந்து இறைவன் தம்மை காப்பாற்ற வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறாரோ! அவர் தம்மிடம் கடன் வாங்கி அதனை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவருக்கு கடனை திருப்பித் தரும் (தவணை காலத்தை) நீட்டித் தரட்டும். அல்லது (முடிந்தால்) அவரின் கடனை (திரும்பப் பெறாமல்) விட்டு விடட்டும”; என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். அதனால்த் தான் என்றார். உண்மையில் அப்பாவைப் போல் அதிசயமான நல்ல மனிதரை நான் பார்த்ததேயில்லை.அவர் ஒரு நல்லவராகவும் புதிரானவராகவும் இருந்தார்.
எல்லா மார்க்க அறிவும் அப்பாவுக்கு பூரணமாக இருந்தது. அப்பாவின் அறிவுக்கு எல்லையை தேடுகிறேன்.

இண்டைக்கு அப்பாவின்ரை செத்த வீட்டுக்கு வந்த கடன் வாங்கியவர் ஒரு பையிலை அப்பாவிட்ட வாங்கின கடன் எழுபத்தையாயிரத்தையும் இன்னும் இருபத்தையாயிரம் சேர்த்து எல்லாமாக ஒருலட்சத்தை போட்டு அப்பாவின்ரை பிரேதத்தின்ரை காலடியிலை வைச்சு குழறின குழறுவையை பாத்து பக்கத்திலை நிண்டவை எல்லாரும் கலங்கிப் போட்டினம். நான் சொன்னேன் “வேண்டாமண்ணை அப்பாவே வேண்டாமெண்டு போட்டார் எங்களுக்கு வேண்டாமண்ணை” என்றேன். அவர் சொன்னார் “உன்ரை அப்பா தெய்வமடா மோனை. ஏனென்டால் மனிசருக்கு உந்த குணம் இல்லையடா, வராது.”

அப்பாவின் செத்த வீட்டுக்கு கொஞ்சப்பேர் தான் வந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சினையால் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஆக்கள் யாருமே வரவில்லை. யாழ்ப்பாணத்திலை அப்பா செத்திருந்தால் சனம் சனமா ஆயிரக் கணக்கிலை வந்து சொரிஞ்சிருக்கும்.

இனி வீட்டிலை அப்பா இருக்க மாட்டார் அவரின் முழு புகைப்படம் இருக்கும். அதன் கழுத்தில் மாலை இருக்கும். அப்பாவின் நினைவுகளை சுமந்து மட்டுமே இருப்போம். அப்பாவின் பேச்சு இருக்கும். அப்பாவை நினைச்சு அம்மா அழுவா, அக்கா அழுவா நான் அழுவேன். என்ரை அக்காவின்ரை பிள்ளைகள் அழும். நினைவுகள் வீட்டை சூழ்ந்து போய்கிடக்கும்.

அப்பா ஒவ்வொரு பிள்ளைகளையும் எவ்வளவு அக்கறையோடு கவனிச்சவர். நினைக்கும் பொழுது நாங்கள் அப்படி இருப்பபமோ எண்ட கேள்வி வருகிறது. ஆனால் இருக்க வேணும்.

அக்கா ஒருத்தரை ஏ-எல் படிக்கிற நேரம் விரும்பீட்டா. காதல் விசயங்களில் அம்மா கொஞ்சம் கறாராகவே இருப்பா. பக்கத்து வீட்டுக்கார பிள்ளையள் காதலிச்சால் கூட அம்மா அருவருப்பா. அம்மாவின்ரை அக்கா காதலிச்சு ஒருத்தரை கலியாணம் முடிக்கப் போறனெண்டு ஒத்தைக் காலிலை நிண்டிருக்கிறா. சரி ஆர் பொடியன் பாப்பம் எண்டு அம்மப்பா விசாரிச்சால் பொடியன் பக்கம் சாதியிலை கொஞ்சம் குறைவு எண்டு தெரிஞ்சு போச்சுது.
அம்பப்பா பெரீசா சாதி பாக்காட்டிலும் அவரின்ரை இனம் சனம் விடுமே. அது பெரிய சண்டையாகி பொடிச்சி அவரைத் தான் கட்டினா கட்டுவன் எண்டு அடம்பிடிக்க அம்மப்பாவும் அம்மம்மாவும் வேண்டாமெண்ட ஒருநாள் இரவு எல்லாரும் நித்திரையாயினாப் பிறகு வீட்டு தீராந்தியிலை அம்மம்மாவின்ரை சீலையை போடடு சுருக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டா.
அதுக்குப் பிறகு அம்மாவுக்கு காதல் எண்டால் கண்ணிலை காட்டேலாது பயம்.

அக்கா காதலித்தாவே தவிர எந்த வாக்கையும் காதலனுக்கு கொடுக்கவில்லை. உங்களோடை தான் வாழக்கை கலியாணம் எல்லாம். ஆனால் என்ரை அப்பாவும் அம்மாவும் ஓம் சொல்ல வேணும் எண்டு உறுதியாக சொல்லிப் போட்டா. வலு உறுதியா அதிலை அக்காவுக்கு எந்த உறுதியும் குலையேல்லை. ஏனெண்டால் கலியாணத்தை விட காதலனை விட அப்பா உயர்ந்தவர். அவர் உள்ளம் உயர்ந்தது. அதனை உடைத்து விட்டு அவரை கலங்க வைத்து விட்டுப் போட்டு கலியாணம் மூலம் அவரை அந்தரிக்க வைக்க அக்கா எப்பவும் துணியவில்லை துணிய மாட்டா. அந்தளவிற்கு அப்பாவை அக்காவும் அக்காவை அப்பாவும் நேசிச்சவை.
எங்கள் ஒவ்வொருவர் மீதும் அப்பா பிரத்தியேக நேசம் கொண்டிருப்பதாகவே தெரியும். அதுதான் அப்பாவின் வடிவு. ஒருநாள் என்ரை காதுக்குள்ளை சக்கரப்பாண்டியன் நுழைஞ்சிட்டுது. அப்பா ஏதோ தன்ரை காதுக்குள்ளை நுழைஞ்சது மாதிரி காணப்பட்டார். அவ்வளவு வலியையும் தனதாக்கி காணப்பட்டார். இது ஆருக்கு ஏலும்.

ஒருநாள் பக்த்து ஊர் கள்ளர் ரெண்டு பேர் எங்கடை யாழ்ப்பாண வீட்டுக்குள்ளை நுழைஞ்சிட்டினம் களவெடுக்க. அப்பா நல்லா தூங்குவார்.
அம்மா அம்மம்மாவீட்டுக்கு போய்விட்டா. நாhனும் அப்பாவும் தான் வீட்டிலை, அக்காவும் அண்ணாவும் அம்மம்மா வீட்டுக்கு அம்மாவோடை போயிட்டினம்.
கள்ளர் சத்தம் போடாமல் அலுமாரியை திறந்து, அங்கை என்ன புதையலை கிடந்தது. ஏதோ இருக்கிறது எல்லாத்தையும் பெரிய சாக்கிலை போட்டுக் கட்டிக் கொண்டு நாங்கள் படுத்திருந்த ரூமுக்குள்ளை வந்திட்டினம்.
அப்பாவும் நானும் நல்ல நித்திரை. வீட்டு மூலைக் குள்ளை கிடந்த சருவச் சட்டியிலை ஒரு கள்ளனின் கால் தட்டுப்பட்டுட்டுது. அது “கிணிங் கிணிங’; எண்டு சத்தம் போட அப்பாவும் நானும் முழிச்சிட்டம். பேந்தென்ன. லைற்றைப் போட்டால் கள்ளர் ரெண்டுபேரும் நிற்கினம்.

அவையளின்ரை பெயர் அந்த சுற்று வட்டாரத்துக்கே பிரபல்யம். அவை பேர் போன கள்ளர். எத்தனை முறை எண்டு கணக்கிலாத முறை கோட்டும் மறியலும் எண்டு போட்டு வந்தவை. பார்க்க சாது மாதிரி இருப்பினம். ஆனால் பெருங் கள்ளர். களவெடுத்து திண்டு அவையளுக்கு அதை விடமுடியாமல் இருக்குது. சட்டத்தாலை, கோட்டாலை, பொலிஸாலை இந்த இரண்டு கள்ளரையும் ஒண்டும் செய்யேலாமல் போயிட்டுது.
லைட் வெளிச்சத்திலை அவையள் கூனி குறுகி போயிட்டினம். ரெண்டு பேரின்ரை இடுப்பு பெல்ட்டிலையும் கிறிஸ் கத்தி இருந்தது. எனக்கு கள்ளர் எண்டு கேள்விப்பட்டாலே பயம். ஏனென்டால் அவையள் இரவிலை தானே திரிவினம். இரவு எண்டாலே யாருக்குத் தான் பயமில்லை.
அப்பா பயப்படவில்லை. அப்பாவின் கண்கள் தீட்சண்யமானவை கள்ளர் காடர் எண்டில்லாமல் எல்லாரையும் வசீகரிக்கும்.

“தம்பியவை ஏன் களவெடுக்கிறியள்.”
“ஐயோ மாஸ்டர் இது உங்கடை வீடெண்டு தெரியாமல் போயிட்டுது. எங்களுக்கு தெரியாது மாஸ்டர் இது உங்கடை வீடு எண்டு. யாருக்கும் சொல்லீடாதேங்கோ மாஸ்டர். நீங்கள் எவ்வளவு நல்லவர் உங்கடை வீட்டிலை போய் நாங்கள் களவெடுக்க வந்திட்டமே. மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாஸ்டர்”
எண்டு சொல்லி வந்தகள்ளர் ரெண்டு பேரும் அப்பாவின்ரை கைகளைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டினம்.

அப்பா பெரிய மனிசன் தானே அவையளை மன்னிச்சு “உதிலை இருங்கோ” எண்டு சொல்லிக் போட்டு குசினிக்குள்ளை அடுப்பு மூட்டி கேற்றில்லை தண்ணீர் கொதிக்க வைச்சு தேத்தண்ணி போட்டு ரெண்டு கருப்பட்டிக் குட்டானும் தேத்தணியும் அழகான கிளாசிலை கொண்டு வந்து கொடுத்தார்.
“நாங்கள் கள்ளர் களவெடுக்க வந்தனாங்கள.; எங்களுக்கு தேத்தண்ணி தாறிங்களே மாஸ்டர்”

ரெண்டு பேரும் அழுதார்கள். யார் செய்வார்கள் இப்படி அப்பாவைத் தவிர. ஆனால் கள்ளருக்கும் சங்கோஜம். அப்பாவின்ரை வீட்டிலை களவெடுக்க வந்திட்டமே எண்டு. கவலை வேறு.

அப்பா தேத்தண்ணியும் கொடுத்து இனிமேல் களவெடுக்கக் கூடாது எண்டு அந்த சாமத்திலை உபதேசமும் பண்ணினார். உண்மையில் ஒவ்வொருவரும் ஒருவேலை தேடுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுவினம் தெரியுமா?. பணக்காரர் எப்படி சும்மா வானத்திலை இருந்து வருகினமே. அவையின் ஒண்டை ஐஞ்சாக்கி பத்தாக்கி நூறாக்கி அதை வளமா பெருக்கிறதிலை எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பினம் தெரியுமே. பணக் காரரிலை நாங்கள் பொறாமைப்படக்கூடாது தெரியுமோ. எந்தக் கஷ்டமும் இல்லாமல் பணம் வராது.

அடுத்தது நீங்கள் களவெடுக்கிறது ஒவ்வொரு சாமானும் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பொம்பிளையள் சேகரித்த சாமான்கள். இதாலை நீங்கள் சாப்பிட்டால் அது நெருப்பை சாப்பிடுவதற்கு சமன் தெரியுதோ.
ஏன் இப்பிடி நெருப்பை தின்னுறீங்கள். ஆண்டவன் உங்களுக்கு எவ்வளவு அழகான கை கால்களைத் தந்திருக்கிறார். அதைக் கொண்டு ஏன் உழைச்சுச் சாப்பிடக் கூடாது.

இரவில் உபதேசம் நடக்கிறது கள்ளருக்கு. நான் பக்கத்தில் இருக்கிறேன். அப்பாவுக்கு முன்னால் நிலத்தில் பணிய இரண்டு கள்ளர்களும் இருக்கினம்.
கள்ளர்கள் இருவரும் அழுகினம். கண்களால் பொலு பொலுவென்று கண்ணீர்; கொட்டுகிறது. மனம் கரைந்து விட்டது. அப்பா கரைத்துவிட்டார். அப்பாவுக்கு அந்த வல்லமையும் சக்தியும் இருக்கிறது. நல்லவராக்கும் வல்லமை. சக்தி.
அப்ப நாங்கள் போறம் மாஸ்டர். கையெடுத்துக் கும்பிட்டார்கள். அப்பா சொன்னார் கொஞ்சம் பொறுங்கோ வீட்டுக்குள் போய் அப்பாவின் கழிசான் பொக்கட்டில் இருந்து இருநூறு ரூபாக்களை கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் நூறு ரூபா வீதம் கொடுத்தார். கள்வர்கள் இருவரும் விம்மி அழுத்தனர். அப்பாவின் காலைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு விம்மினர். அழுதனர். அப்பா ரெண்டு பேரையும் அன்போடு அணைச்சுக் கொண்டார். நாளைக்கு பகலைக்கு வாங்கோ உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் எண்டு சொல்லி அனுப்பினார். அழுத கண்களோடை அவையள் போனது மனதுக்குள்ளை எனக்கு இன்னும் நிக்குது.
சொன்னது போல அடுத்த நாள் நல்ல மனிதராய் அவையள் வந்தினம். அப்பா என்ன சொன்னார் தெரியுமா.

எங்கடை தோட்டம் ஐஞ்சேக்கர். அதிலை ஒரு ஏக்கரிலை நீங்கள் ரெண்டு பேரும் மிளகாய் கண்டு நடுறியள். இண்டைக்கே வேலை ஆரம்பிக்க வேணும். எண்டு இரண்டு முதலை மார்க் மண்வெட்டியைக் கொடுத்தார். இரண்டு பேரின்ரை கைகளிலும.; அதனை ஏதோ செங்கோலை வாங்குவது போல் வலு பவ்வியமாக வாங்கினார்கள் அவர்கள்;.
அப்பா எல்லையை காட்டினார். எனக்கு குத்தகை தரவேணும் எண்டு அப்பா சொன்னார். சிரித்தபடி உண்மையாக சொன்னார்.
கடைசியாக ஒருதரம் முகத்தை பார்க்க எல்லாரும் முண்டியடிக்கினம். அம்மா வீறிட்டு அழுகிறா. அப்பாவின் உடலின் மிது விழுந்த குழறுகின்றா அக்கா கேவி கேவி அழுது ஐயோ... ஐயோ... ஐயோ.... என்றபடி மயக்கமாகி தரையிலை விழுகின்றா.

நான் அப்பாவின் முகத்தை இறுதியாக உற்றுப் பார்த்து மனதில் அந்த இறுதி நிமிடங்களை மனிதில் அழுத்தமாக இருத்திக் கொண்டேன்.
அழகான சவப் பெட்டிக்குள் வைத்து அப்பாவை மூடி விட்டார்கள். மூடவேண்டாம் என்று அக்கா சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இப்படி எத்தனை முகம்களை அவர்கள் மூடி இருப்பார்கள். அப்பாவையும் மூடி நீளமான ஹேஸ் காரில் பெட்டியை ஏற்றினார்கள்.
அருகில் உள்ள மயானத்துக்கு அப்பாவின் உடல் போகிறது. எங்கடை அப்பாவைப் போல் யாரிருக்கிறார்கள்.

கால்கள் மயானத்தை நோக்கி நடக்கின்றன. மனம் அப்பாவின் நினைவுகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. ஊர்வலத்தில் வந்த யாரோ சொல்லக் கேட்கிறது.
இவ்வளவு நேரமும் பெய்த மழை நிண்டுட்டுது மாஸ்டர் எவ்வளவு நல்லவர்.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive