Monday, 20 December 2010

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விடயங்கள்கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.

அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.

புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.

கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன்டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் “அன்ரி உங்களுக்கு என்ன வயது” என்று எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.

அந்த அன்ரி “நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41”.

மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு ,ளமை அந்த பெண்மணியிடம்.

இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் விடை இல்லை.

“ஸபாஷித ரத்ன பாண்டாகாரம்” என்ற புத்தகத்திலே ஒரு சமஸ்கிருத சுலோகம் ஒன்று வந்திருக்கிறது.

“ஆயுர் விருத்தம், க்ருவர சித்ரம், மந்த்ர மௌஷத மைதுனே தானம் மானாப மா நௌ ச நவ கோப்யானி காரவேத்” சரி இதன் தமிழாக்கம் இப்படி சொல்கிறது.

“தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் இந்த ஒன்பது விடயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது”

உண்மையில் மிக முக்கியமான சுலோகம் இது என்று படித்த பிறகு எனக்கு புரிந்தது .

என்னை எல்லோரும் எப்படி இளைமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

வீட்டில் நல்ல மனைவி, சண்டை சச்சரவு இல்லை. நல்ல இரண்டு பிள்ளைகள் தொந்தரவு இல்லை. எனக்குப் பிடித்த வேலை, பச்சைத் தண்ணீர் குடிக்கிறேன். தினமும் கீரையை உணவில் மனைவி சமைத்துத் தருகிறது. நிறைய வாசிக்கிறேன். இவைகள் சில நேரம் காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

அத்தோடு எதனையும் போட்டு அலட்டிக் கொள்ளாத மனம் இருக்கிறது. இரத்த அழுத்தம் ஏறுவதற்கு விடமாட்டேன். இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். இலங்கையில் தெளிவத்தை யோசப் எப்ப பார்த்தாலும் அப்பிடியே இருக்கிறார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எப்பவும் உசாராக இருக்கிறார். மனம் வயதுக்கு முக்கிய காரணம் என்றுதான் நான் சொல்லுவேன்.

அடுத்தது உணவு, என்ன கிடைத்தாலும் வயிற்றினுள் தள்ளப்படாது. முஹமது நபிகளாரின் மொழி ஒன்று இருக்கிறது. “வயிற்றை மூன்றாக பிரியுங்கள் ஒரு பகுதி உணவுக்கு, அடுத்த பகுதி நீருக்கு, மற்ற பகுதியை வெறுமையாக வைத்திருங்கள்”. அப்பொழுது தான் உணவு செமிபாடு அடையும். இன்னொன்று பசிக்கும் போது உணவுத் தட்டில் உட்கார்ந்து பசியுடனேயே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விட வேண்டும். அர்த்தம் வயிற்றை நிரப்பாதீர்கள் என்பதுதான். அப்பொழுதுதான் சாகும் வரை உடல் இலகுவாக அழகாக இருக்கும். தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும்.

சரி அந்த சுலோகம் சொல்லும் விடயம் வயதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது.

அந்த வீட்டுக்கு வந்த அன்ரி தனது வயதை சொல்லாமல் இருந்தால் அவவின் அழகான இளைமைத் தோற்றம் உண்மையில் ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருந்திருக்கும்.

நடிகை ஸ்ரேயா விடம் ஒரு நிருபர் கேட்டார் “இவ்வளவு அழகுக்கு என்ன செய்கிறீர்கள்” என்று அவ சொன்னா தண்ணீர் குடிக்கிறேன்.

வீட்டில் நடந்த சண்டையை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்பது உண்மைதான்.

கணவன் மனைவி அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான சண்டையை வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டால் பெரும் சிக்கலில் முடிந்து விடும்.

இங்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விடயம்தான் குடும்பங்கள் பிள்ளைகள் சீரழிய காரணமாகின்றன.

தமிழகத்தில் இருந்த ஒரு கணவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்களிடையே அரசல் புரசலான சண்டை இருந்து கொண்டிருந்தது. அதனை அவர்களால் தீர்த்து ஒற்றுமையாக முடியாமல் இருந்தது. அவர்களின் இந்த சண்டை தொடர்பாக லண்டனில் இருந்து தமிழகம் போன கணவனின் ஒரு நண்பரிடம் அந்த மனைவி சண்டையை சொல்லி அழுது கண்ணீர் விட்டிருக்கிறா.

அந்த பெண்மணியின் கண்ணீர் லண்டனில் இருந்து போனவருக்கு இரக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கணவனுக்கு தெரியாமல் லண்டன் நண்பரை அடிக்கடி ஹோட்டல்களில் சந்திக்க அவர்களுக்கிடையான அன்னியோன்யம் அதிகமாகி விட்டது.

லண்டன்காரருக்கு இங்கு இரண்டு பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். அந்த அன்னியோன்யம் காதலாகி லண்டனுக்கு அவவை கூப்பிடுகின்ற அளவுக்கு விஸ்தாரமாகி விட்டது.

இங்கு மனைவிக்கு தெரிந்து அவவும் சன்னதம் ஆட குடும்பம் பிரிந்து விட்டது. இப்பொழுது இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது. அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவரின் பிள்ளைகள் அவரை வெறுத்து விட்டன. அவரின் சொந்தக்காரர்கள் வெறுத்து விட்டார்கள். அவரின் அம்மா, அப்பா முகம் பார்ப்பதில்லை. பெரும் மன உளைச்சலோடு திரிகிறார். எனக்குத் தெரிந்தவர் அவர். சுலோகம் சொல்வது சரிதான்.

கணவன் மனைவியின் அன்பு, பாசம், பிரியம் என்பவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது என்று சுலோகம் சொல்கிறது.

கொழும்பில் எனக்குத் தெரிய நடந்தது. இரண்டு தோழிகள் சின்ன வயதில் இருந்து அவர்களை கண்டிருக்கிறேன் ஏதோ இரட்டையர்கள் போல இருப்பார்கள். கையில் பிடித்துக் கொண்டு தான் றோட்டில் போவார்கள். பேசிக் கொண்டார்கள் தாங்கள் கலியாணம் செய்தால் ஒரு ஆம்பிளையைத் தான் கலியாணம் செய்வோம் என்று. அவ்வளவு ஒட்டுதல்.

தோழிகளில் ஒருத்தி ஒருவரை காதலித்து திருமணம் செய்து விட்டாள். மற்றவள் நாள் போக இரண்டு தோழிகளும் மீண்டும் ஒட்டுதல் கூடி விட்டது. வீட்டுக்காரர்களுக்கும் ஒருவகையில் சந்தோசம். கலியாண நேரத்தில் ஒரு சின்ன மனத்தாங்கல் வந்து பிறகு ஒட்டி விட்டார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கடந்திருக்கும், தனது நண்பியின் கணவரை கொத்திக் கொண்டு மற்றவள் வெளிநாட்டுக்கு போய் விட்டாள். என்ன நடந்தது என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டது இதுதான்.

கணவன் தன்னோடு செய்யும் எல்லாவற்றையும் தனது தோழிக்கு ஒன்று விடாமல் சொல்லி வந்திருக்கிறாள் தோழி. மிக நல்ல ஆண் மகன் செக்ஸில் பெரும் திருப்தி செய்யக் கூடியவர் அவர் என்று கணவனைப்பற்றி தோழியிடம் சொல்ல சொல்ல அவளுக்கு நண்பியின் கணவன் மீது ஈர்ப்பு வந்துவிட்டது மேலெண்ணம் வர தோழியின் கணவரை தன் வசப்படுத்தி விட்டாள் நண்பி. சுலோகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கே லண்டனில் இப்பொழுது பெரும் அல்லாட்டத்தில் கிடக்கிறது. லண்டனுக்கு வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. வேக் பேமிட்டில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வேக் பேமிட்டில் இருந்தால் கொம்பனிக்காரர்களுக்கு ஒருவித அடிமை சாசனம் போலத்தான் அது. கொம்பனி என்ன சொல்லிகிறதோ அதுக்கு தலையாட்ட வேண்டும். இல்லாவிடில் கொம்பனிக்கு உரிமை இருக்கிறது வேக் பேமிட்டை கான்சல் பண்ண. வேலையும் போய்விடும் விசாவும் அதோகதி.

அதுவும் தமிழ் முதலாளிமார் பாடு பெரும் பாடு. வேக் பேமிட்டில் இங்கு லண்டனுக்கு எடுத்து விட்டால் தங்களுக்கு கீழ் படிய வேண்டும் என்று நடப்புக் காட்டுவார்கள்; காட்டுகிறார்கள்.

நான் சொன்ன குடும்பத்துக்கு பிரான்ஸ், கனடா என்று அண்ணன் தம்பிமார் இருக்கினம். அவர்கள் தங்களது சகோதரத்துக்கு ஒரு வீடு வாங்க கொஞ்சக் காசு கொடுத்தார்கள். லண்டனில் வீடு வாக்குவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. டிப்போசிட் கட்ட வேண்டும். மாதா மாதம் மோர்கேஜ் கட்ட வேண்டும் என்று அது ஒரு பெரிய விடயம்.

சொந்தக்காரர்கள் முப்பதினாயிரம் பவுண்டுகள் கொடுத்து வீடு வாங்க உற்சாகப்படுத்த இந்த விடயத்தை அந்தப் பெண்மணி வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டாள். அதுவே அவளுக்கு வினையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

பொறாமை, சூது, வஞ்சகம், குழி பறித்தல் என்பவற்றை நான் வெள்ளைக்காரரிடம் பார்க்கவில்லை. இது எமது மண்ணின் குணமோ தெரியாது தமிழரிடம் அதிகமாக இருக்கிறது.

இங்கு லண்டன் வந்தும் அந்தக் குணம் போகிறது இல்லை. தம்மை விட கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று பக்கத்து வீட்டார், நண்பர்கள் என்று யாரையும் பார்த்து போறாமைப்படும் ஆட்களைத் தான் தினமும் கண்டு கொண்டிருக்கிறேன் லண்டனில்.

அந்தப் பெண்மணி வேலை செய்யும் அலுவலகத்தில் போய் வீடு வாங்கப் போகிறோம் என்று சொல்ல ஆரம்பமானது பொறாமை வியூகம்.

அவள் வேலையிடத்தில் ஒரு பெண்மணி உயர் பதவியில் இருக்கிறா. அவ இவர்களை எப்படியாவது வீடு வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்களின் வேலை நேரத்தைக் குறைத்து ஓவர் டைம்மை குறைத்து இப்பொழுது வேக் பேமிட்டுக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது விடயம். அவர்கள் முன்னேறி வந்து விடுவார்களே என்ற பொறாமை வியூகம் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறது.

கணவனும் மனைவியும் அந்தக் கவலையால் நொந்து நூலாகிப் போய் விட்டார்கள். உண்மையில் இந்தப் பொறாமை கொள்ளும் விடயம் என்பது எங்கள் தமிழர் சமூகத்தில் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்; எரிச்சலாக இருக்கிறது.

அவரின் உழைப்பு, அவரின் பணம், அவரின் ஊதியம் அவர் முன்னேற சும்மா உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த சமூகத்தை.

சொத்தைப்பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சுலோகம் சொல்வது சரிதானே. எவ்வளவு சிக்கலில் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஒன்பது விடயங்களையும் பெரீசா போட்டோ கொப்பி எடுத்து எனது டயறியில் ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்களும் அவ்விதமே செய்யுங்கள். சொன்னால் சிக்கல் படுவீர்கள்.

Wednesday, 13 October 2010

கண்ணுக்குள் நடமாடும் கவிஎனக்குள்ளே என்ன நடக்குது
ஏதோ ஒரு தடவை
என்ன செய்யுதென்று தெரியாமல்
காணக்கிடைக்காத
கரு நிழலை
கண்டு கொண்டேன் நேற்று இரவு.

ஒற்றை நிலா ஒன்று வந்து
ஊரடங்கி போன வேளை
கண்ணிரண்டும் இருட்டாகி...

கரு விழியில் கோடு விழுந்து
சுருண்ட முடி ஒரு சுகம் தானே
வெட்டிப்பேச்சு பேச முடியாதபடி
ஒரு மோன இடைவெளியில்

வெறும் சத்தம் மட்டும்
என் காதில் தானாய் வந்து
சந்தம் எழுப்பி விட்டு மெதுவாய்
அடங்கிற்று.

எங்கிருந்து வந்ததிந்த தற்றுணிவு
எங்கேயோ போய்விட்ட புது நாணம்
கூடவே வந்திங்கு குதூகலித்த
வெண்புரவி ஓங்கி அடங்க
எத்தனை நாழிகை.

கண்ணுக்கு முன்னால்
குனிந்து மேல் தடவி
புதுப்புனுகை யாரோ முகம் பார்த்து
தடவியது போல் எல்லா மன உணர்வும்
கூடிக்குலாவியதே.

அந்தகாரம் இன்னும் வேண்டும்
ஒரு தனிமை போதாது
மீண்டும் மீண்டும் புதுத்தனிமைகள்
காலைச்சுற்றி நக்கியபடிக்கு வேண்டும்

நான்காம் சாமத்தில் மற்றுமொரு பூசை
ஐயகோ பேருவகை கொள்ள பெரு மனது வேண்டும்.
எல்லாக்கண்களும் விழித்திருக்க வேண்டும்.
புலன்கள் பத்தாவது வேண்டும்.

பேருண்மை அறிந்து விட்டேன்.
இதுவேதான் எல்லாம் நீயேதான் எல்லாம்.
உனக்குள்ளேதான் எல்லாம்.

Friday, 13 August 2010

கைத்தொலைபேசி - அந்தரங்கத்தை அபகரிக்கும் கருவிகைத்தொலைபேசி எப்பொழுதும் எனது சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. என்னை நான் தீர்மானித்துக் கொள்ள முடியாதபடிக்கு கைத்தொலைபேசியின் தாக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை நான் வெறுக்கிறேன்.

அவசரமாக காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது கைத்தொலைபேசியில் கூப்பிட்டு ‘வேலைக்கு வா’ என்கிறார்கள்.

உண்மையில் கைத்தொலைபேசிகள்தான் ஒரு மனிதனை, அவனது வாழ்வைத் தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக ஆகிவிட்டது பெரும் துன்பமான விடயம்தான்.

தொண்ணூறுகளில் இலங்கையில் கைத்தொலைபேசி பாவனை பரவ ஆரம்பித்த காலத்தில் நான் அக்குறணையில் இருந்தேன். கண்டியில் ஒரு கைத்தொலைபேசிக் கடை திறந்தார்கள். ஒரு பெரிய செங்கல் நீள அகலத்தில் கைத்தொலைபேசிகளை அலங்கரித்து வைத்திருந்தார்கள் கடையில். நானும் போய் ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது அதனை வாங்க வேண்டிய தேவையோ அதற்கான பணமோ அல்லது மாதாமாதம் கட்டும் பணமோ என்னிடம் இருக்கவில்லை.

விதவிதமான கைத்தொலைபேசிகளைக் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.

அக்குறணையில் இருக்கும் பொழுது ஹமீத் ஹாஜியார்தான் கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிவதைக் கண்டிருக்கிறேன். அவர் அங்கு பணக்காரராக இருந்தார். கைத்தொலைபேசி கையில் வைத்திருப்பது பெருமைக்குரிய விசயமாக இருந்த காலம் 1990கள்.

ஆனால் ஹமீத் ஹாஜியார் பணக்காரராக இருந்தாலும் பெருமை விரும்பாதவர். நல்ல மனிதர். தனது வியாபாரத் தேவைக்காக கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிந்தவர்.

அதனை லேஞ்சியால் சுற்றி மறைத்துத்தான் அந்தப் பெரிய கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்தார்.

பிறகு அக்குறணையில் நான் பார்த்த இரண்டாவது கைத்தொலைபேசி ஒரு நகைக் கடைக்காரரின் மகன் சின்னப் பெடியன், அவரும் பணக்காரன் என்பதனால் தகப்பனிடம் கேட்டு வாங்கிக் கையில் கொண்டு திரிவார். அவருக்கு அப்போது அது தேவையில்லாத ஒன்று. ஆனால் அதனைக் கையில் வைத்திருந்தால் பெருமை தானே, அதற்குத்தான்.

பொலிஸ்காரர் கையில் வைத்திருக்கும் ‘வோக்கி டோக்கி’ போலத்தான் அந்தக்காலத்து கைத்தொலைபேசி இருந்தது.

அக்குறணையில் நான் பார்த்த மூன்றாவது கைத்தொலைபேசி ஒரு மௌலவி வைத்திருந்தார்.

அதற்கு பிறகு கைத்தொலைபேசிகள் வந்து குவிய ஆரம்பித்தன.

ஆனால் அக்குறணையில் இருந்து ஹொலன்ட் வந்து லண்டன் வரும்வரை கைத்தொலைபேசியை நான் பாவிக்கவே இல்லை. அதற்கான தேவையும் எனக்கு ஏற்படவில்லை.

இந்தப் பதினைந்து வருடத்தில் கைத்தொலைபேசி உருமாறி உருமாறி இன்று ‘டச் ஸ்கிறீன்’வரைக்கும் போய் ‘ஐ போன்’ என்கின்ற உயர் தொழில்நுட்பங்களைச் சுமந்து நிற்கின்ற ஒரு விசயமாக மாறி விட்டது.

இப்பொழுது என்னிடம் இருக்கும் கைத்தொலைபேசியில் ஸ்கைப் வசதி இருக்கிறது. உலகத்தில் எங்குள்ளவரோடும் இலவசமாக வீடியோ உரையாடல் நடத்தலாம்.

இதுதான் தொல்லை என்கிறேன். அண்மையில் எழுத்தாளர் கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்திருந்தார். அவர் தனது வாழ்நாளில் கைத்தொலைபேசி வைத்திருக்காத மனிதர். கைத்தொலைபேசியை ஒரு வேண்டாத பொருளாகவே சொல்கிறார்.

தன்னை அது கட்டுப்படுத்துவது விருப்பமில்லை என்கிறார். அவர் 20 வருடமாக வாடகைக்கார் ஓட்டுனராக ஜெர்மனியில் இருக்கிறார். கைத்தொலைபேசி தனது சிந்தனையில் குறுக்கிட அவர் விரும்புவதே இல்லை என்கிறார்.

இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த இரண்டு சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதே இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், அது நேரத்தைக் கொன்றுவிடும் என்பதுதான். அலுவலகத்தில் தொலைபேசி இருக்கிறது. வீட்டில் தொலைபேசி இருக்கிறது. பிறகு என்னத்துக்கு கைத்தொலைபேசி என்பது அவர்கள் இருவரினதும் கொள்கை.

இங்கே லண்டனில் கைத்தொலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மூன்று பொயின்ஸ் றைவிங் லைசன்ஸில் இருந்து பறித்து விடுவார்கள். அதோடு 60 பவுண்ட் அபராதமும் விதிப்பார்கள். ஆபத்தான முறையில் வாகனத்தை கைத்தொலைபேசி பேசிக்கொண்டு ஓட்டினால் சிறையில் கூட போடும் அதிகாரம் பொலிஸுக்கு உண்டு.

கைத்தொலைபேசி எப்பொழுதும் பிரச்சினைகளை அள்ளிக் கொண்டு வரும் ஒரு சாதனமாகவே இருக்கிறது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று இத்தாலியில் இருக்கிறது. புதிதாகத் திருமணம் முடித்தவர்கள்.

ஆனால் பெடியனுக்கு சிலோன் முழுக்கப் பெண்கள் தொடர்பு இருக்கிறது. பெண்களை கவருவதில் அவன் விண்ணன். ‘எல்லாம் விட்டாச்சு’ என்று சொல்லித்தான் ஒரு பெண்ணைக் காதலித்து கலியாணம் முடித்தவர். ஆனால் கைத்தொலைபேசி கையில் இருக்கும் வரை பெண்கள் தொடர்பு எப்படி இல்லாமல் போகும். அவருக்கு சிலோனில் இருந்து ஒரே எஸ்.எம்.எஸ். வந்து கொண்டிருக்கும். எல்லாம் காதலிக்கிறேன் வகை எஸ்.எம்.எஸ்.கள்தான். புதிதாகக் கலியாணம் முடித்த பெண்மணி அழுது குளறி டிவோஸ் வரைக்கும் போய் இப்பொழுது ஒருவாறாகச் சேர்ந்து வாழுகிறார்கள். குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனமாகவே கைத்தொலைபேசி இருக்கிறது பார்த்தீர்களா?

அதுமட்டுமல்ல, உலகில் அதிகமான விபத்துகளும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் கைத்தொலைபேசியினால் ஏற்படுகின்றன.

குடும்பங்கள் குலைந்து போவதற்கும் கைத்தொலைபேசிகளே பல இடங்களில் காரணமாக அமைகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் எங்கு போனாலும் வீடியோ ஃபோனில் தான் பேச வேண்டும் என்று மனைவி கட்டளை போட்டிருக்கிறார். அப்பொழுதுதான் கணவன் எங்கு இருக்கிறார் என்று இடத்தைப் பார்க்க முடியுமாம். மனிதர்கள் மத்தியில் நம்பிக்கையீனம், அக்கறையின்மை இவற்றைச் சுமந்து கொண்டு கைத்தொலைபேசிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் விமானங்களில் வைத்து கைத்தொலைபேசிகள் பேசலாம்.

கைத்தொலைபேசிகள் எமது அந்தரங்கத்தை தோலுரித்துக் கொண்டு போகும் ஒன்றாகவே இருக்கின்றன.

இன்ரநெட்டில் கொட்டிக்கிடக்கின்ற செக்ஸ் வீடியோக்கள் அனேகமாக கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் அதிகம்.

நண்பர்கள் நண்பிகள் என்று மது பார்ட்டில்களில் கலந்துகொண்டு விட்டு இளம் பெண்கள் ஆண்களின் அந்தரங்கக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து விட்டு யு டியூப், பேஸ்புக் என்று எந்த அனுமதியுமில்லாமல் உலகத்துக்கு காண்பித்து விடும் பெரும் அபாயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கள்ள உறவுகளைக் கைத்தொலைபேசியில் படம்பிடித்து விட்டுப் பணம் கேட்டு மிரட்டும் பெரும் கொள்ளையும் செல்போன் மூலம்தான் நடக்கிறது.

எங்கு நின்றாலும் யாராவது ஒருவரின் அல்லது பலரின் தொலைபேசி உரையாடல்கள் எமது காதுக்குள் விழுந்தவண்ணம்தான் இருக்கும்.

கைத்தொலைபேசி இல்லாவிட்டால் மற்றவர்களின் அந்தரங்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும்.

கடந்த வியாழக்கிழமை மதியப்பொழுது ஒன்றில் நான் விரும்பாவிட்டாலும் என்னைச் சுற்றி நடந்த கைத்தொலைபேசி உரையாடல்களைப் பாருங்கள்.

1. அவரின் மனைவி கொழும்புக்கு போய் விட்டார். மகளோடு அங்கு போனவருக்கு டெங்கு காய்ச்சல் பிடித்துவிட்டது. அது மகளுக்குத் தொற்றுமா என்று மனைவி கேட்கிறார்.

மகள் எதற்கெடுத்தாலும் முகத்தில் அடிக்கிறா. ஒருவயது பேர்த்டேயைக் கொழும்பில் கொண்டாடுவோமா என்று மனைவி கேட்கிறார். அந்தப் புதிய மனைவிக்கு இவர் கைத்தொலைபேசியில் கொஞ்சுகிறார். முத்தம் கொடுக்கிறார்.

2. அந்தப் பெண்மணியின் காணி நல்லூரில் இருக்கிறது. அதை விற்கிறதா அல்லது வீடுகட்டி வாடகைக்குக் கொடுக்கிறதா என்று தனது கணவனோடு மிகவும் சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.

3. இங்கு லண்டனில் அகதி அந்தஸ்து கிடைத்து மூன்று வருடமாகிவிட்டது அவருக்கு. அவர் சிலோனில் இருக்கும் மனைவியை இங்கு கூப்பிடுவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார் அது றிஜக்ட் ஆகி விட்டது. பிறகு அப்பீல் பண்ணி முடிவுக்குக் காத்திருக்கிறார். மனைவி சிலோனில் இருந்து அழுது வடிகிறது.

இவர் இமிக்கிறேஸன் விவகாரங்களைச் சொல்லி அந்தப் பெண்ணின் கண்ணீரைக் கைத் தொலைபேசியினூடே துடைக்கிறார். அப்பீல் பண்ணியும் விசா கிடைக்காமல் விட்டால் லண்டனில் இருக்கக் கூடாது. என்னிடம் வந்து விட வேண்டும் என்று மனைவி சொல்வதைக் கேட்டு அப்செட் ஆகி தொலைபேசியில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்.

4. தமிழ்நாட்டில் உள்ள காதலன் ‘உப்பிடியே லண்டனில் இருந்தால் நீ அங்கேயே கிட’ என்று திட்டியிருப்பான் போல. பொலுபொலென்று கண்ணீர் கொட்டுகிறது அந்தப் பெண்ணுக்கு. நான் கண்டும் காணாதது மாதிரி போக நிர்ப்பந்திக்கப்படுகிறேன். காதலனுக்கு மெதுவாகப் பெண் ஏதோ தேற்றுகிற மாதிரி சொல்கிறாள்.

5. கணவன் செத்துப் போனதுக்கு அந்தப் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் ஆறுதல் சொல்கிறார்கள். அவள் அழுது வடிகிறாள்.

6. 2011இல் விசா கிடைத்து விடுமா என்று லோயரிடம் ஒரு அகதிப் பெண்மணி கேட்டு மனம் சலித்துக் கொள்கிறாள்.

7. இளம்பெண் ஒருத்தி தனது காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

இது என்னைச் சுற்றி நடந்த ஒரு மணிநேர கைத்தொலைபேசி உரையாடல்கள். எனக்குத் தேவையில்லாத இவ்வளவையும் நான் என்னை மீறி ஏன் கிரகிக்க வேண்டும். என்னை இவை கிரகிக்க நிர்பந்தப்படுத்துகின்றன.

எனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்னை நெருக்குகிறார்கள். உண்மையில் தங்களது அந்தரங்கங்களை யாருக்கும் சொல்ல யாரும் விரும்புவதில்லை. ஆனால் கைத் தொலைபேசி வாயிலாக எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்கிறோம்.

என்னைச் சுற்றி எனது அலுவலகத்தில் நடந்த இந்த ஏழு உரையாடல்கள் மூலமாக அந்த ஏழு பேரின் அந்தரங்கமான விடயங்களை நான் எந்தத் தேவையுமில்லாமல் அறிந்து கொள்கிறேன்.

மனைவியின் டெங்கு காய்ச்சல், நல்லூர்காணி, மனைவியின் விசா, காதலியின் கண்ணீர், செத்துப்போன கணவன், அகதிப் பெண், கொஞ்சும் காதலி. இவை என்னோடு சம்பந்தப்படாத அவர்களின் அந்தரங்கங்கள் எனக்குள் வந்து விழுந்திருக்கின்றன. கைத்தொலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது. கைத்தொலைபேசி உணர்வுகளை மறைத்து சுற்றம் சூழ உள்ள நிலைமைகளைக் குருடாக்கி விடுகிறது. கைத்தொலைபேசியில் பேசும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது என்பதனை நாம் மறந்து விடுகிறோம்.

செல்போனில் காதலிக்காகப் பாட்டுப் பாடுகிறோம், முத்தம் கொடுக்கிறோம், மனைவியை ஏசுகிறோம், கணவனைக் கண்காணிக்கிறோம், காதலனை கண்டு பிடிக்கிறோம்.

எல்லாம் கைத்தொலைபேசி காட்டிய விந்தைதான்.

அந்தரங்கம் இப்படிக் காற்றில் போவதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கைத் தொலைபேசியில் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் முகம் தெரியவேண்டியது என்ற அசௌகரியம் இல்லாமலே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு இனிமையான குரல் போதும் உணர்வுகளை எல்லாம் பகிர்வதற்கு என்னும் நிலைமை வந்து விட்டது.

இங்கு லண்டனில் கைத்தொலைபேசியில் செக்ஸ் உரையாடல்களைத் தமிழில் செய்வதற்குக் கூட தொலைபேசிகள் வந்திருக்கின்றன என்றால் பாருங்களேன்.

சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் எதையும் பேசுவதற்கு ஒரு அசட்டுத் துணிச்சலைக் கைத் தொலைபேசி கொடுத்திருக்கிறது.

பக்கத்தில் உள்ளவர்கள் பேசிப் பேசியே என்னைத் துன்புறுத்துகின்றனர். நான் படுக்கும்போது எப்பொழுதும் கைத்தொலைபேசியை அமைதியாக்கி விட்டுத்தான் தூங்குவேன். எனது நித்திரையைக் குலைப்பதற்கென்றே பலர் திரிகிறார்கள். அவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. என்னைக் கஸ்டப்படுத்தவென்றே கைத்தொலைபேசியைக் கொண்டு சிலர் அலைகிறார்கள். நான் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படுபவன். பேசுவது குறைந்தால் பிரச்சினைகளும் குறையும்.

உண்மையில் கைத்தொலைபேசியை வைத்திருக்கும்படி எனது வேலையிடம் வற்புறுத்துவதனால் மட்டுமே அதனை வைத்திருக்கிறேன்.

ஆனால் எப்பொழுதும் எனது கைத்தொலைபேசியைத் தூர எறிந்து விட்டு ஒரு சுதந்திரமானவனாக, என்னை நான் மற்றவரின் தொந்தரவு இல்லாமல் வாழும் நாளை மட்டுமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கிறேன். எனக்கு மொபைல் போன் வேண்டாம்.

Tuesday, 10 August 2010

கவிதைநிதர்சனம்

************

பூட்டோடு வரும்
எவரையும் நிராகரிக்கிறேன்
ஒரு நெருக்குதலையும் சேர்த்து
ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி
எல்லாவற்றையும் மூடி விடும்
என்பது பற்றிய கனவுக்குள் இன்னும்
நான் புதைந்து விடுவதாக இல்லை
ஒரு கண்ணிமைப்புக்குள்
எல்லாம் முடிந்தது என்றுவிட்டு
புறம் தள்ள மனம் ஒப்புதில்லை
ஒரு சக்கரத்தின் இறுக்கத்தில்
மன இழையோடு ஓடும்
வரிகளை அதட்ட மொட்டையாய் சொல்ல
மனம் ஒப்புதில்லை
அந்த திணிப்பு ஒரு கொலை

அது உயிரின் வரிகள் இதயத்தின் ஒழுக்கு
எனக்கான உரிமை என் உணர்வு
எனது எல்லாமே எனக்கானவை

ஒரு கொலைகாட்டி ஒரு பயம் காட்டி
என்னை அச்சுறுத்த உனக்கு யார் உரிமை தந்தது ?
நான் எப்பொழுதும் நானேதான்
அது உன் கண்ணாடியிலும்
முகத்திலும்

Wednesday, 4 August 2010

அம்மம்மா


அம்மம்மா எனது அன்புக்குரியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு அளவில் இருக்கும்.
அம்மம்மா பாவாடைகட்டி குளிக்கும் போதும் குறுக்கை கட்டிக் கொண்டிருக்கும் போதும் அது வெளியில் தெரிந்து வேடிக்கை காட்டும் “விடு.... சும்மா அங்காலை போ... விடு” என்று கலைத்தாலும் கைகளால் மெதுவாக அந்தப் பாலுண்ணியை விரல்களால் நசிப்பதிலும் அதனை
மெதுவாக உறுட்டுவதிலும் நான் அடையும் மகிழ்ச்சியே தனி. சில நேரம் பாலுண்ணியை வாயில் வைத்து “பப்பா” குடிப்பேன் அம்மம்மா ஏசுவா திட்டுவா ஆனால் எனக்கு பாலுண்ணி என்றால் தனி ஆகர்ஷிப்பு. அம்மம்மாவில் இருப்பதனால் அதிலும் எனக்கு தனிப்பிரியம்.
தங்கச்சியிலும் பார்க்க அம்மம்மா என்னோடு தான் சரியான விருப்பம். புளியமரத்தடிக் கடைக்கு போனாலும் ஒட்டுசுட்டான் பக்கம் போனாலும் கள்ளத் தீனி வாங்கி வருவா. அம்மம்மா எப்பொழுதும் சேலைகட்டி இருப்பா. சேலை முந்தானையை முன்பக்கமாக மடியாக்கி அந்த மடியுக்குள்ளை பிஸ்கட், ரொபி, றோஸ்பாண், பணிஸ், சிறிய சொக்லட் என்று கட்டிக்கொண்டு வந்து தருவா. அம்மம்மா எங்காவது பயணம் போய்விட்டு வந்தாவென்றால் வீட்டு ஜிம்மிக்கு நாக்கால் தண்ணிவடிகிறமாதிரி எனக்கும் வாயில் தண்ணி ஊறும். அம்மம்மாவின் மடிக்குள்ளை ஏதாவது கிடக்கும். அம்மம்மாவின் சேலை நூல் சேலையாக இருக்கும். அந்தச் சேலையின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத ஒரு விசயம் அம்மம்மா காலை அகட்டி நின்று கொண்டு மூத்திரம் பெய்வது.
“மனிதி” என்று தான் அம்மய்யா அம்மம்மாவை கூப்பிடுவார். செருமல் சத்தம் தான் அவர்கள் இருவருக்கும் அழைப்பு மொழியாக இருக்கும். அம்மம்மாவை ஏதாவது தேவைக்கு ஒரு செருமல். அம்மம்மாவுக்கு விளங்கும் அம்மய்யா என்ன சைக்கினை செய்கிறார் என்று.
விறகெடுக்க ஒவ்வொரு நாளும் பின்னேரம் அம்மம்மாவோடு போவேன். அலகரை க பக்கம் நல்ல
வீர விறகு இருக்கு. பல கதைகளை அம்மம்மா எனக்குச் சொல்லுவா. சின்ன வண்டில் எனக்கு விருப்பம். சைக்கிள் “றிம்” ஐ தடிக்குள் செலுத்தி வண்டில் ஓடுவோம் டயர் வண்டில், நொங்கு, கோம்பை வண்டில், குரும்பட்டிதேர் ஈக்கிள் குத்தி அழகாய் இருக்கும்.
எங்கள் இருவரின் கதைகள், சில நேரம் பழைய கதைகளாக இருக்கும். அம்மாவின் காதல் விவகாரம். ஐயா முரண்டு பிடித்து அம்மாவை கலியாணம் செய்து கொண்டது என்று எங்களது கதை காடு வரை நீளும்.
மாமா எப்பொழுதும் பொல்லாதவர் போலவே எங்களுக்கு காண்பிக்கப்பட்டார். குடிப்பவர் மாமியோடு உறவு மேம்பாடு இல்லாதவர். ஓட்டுத் தொழிற்சாலையில் வேலை செய்பவர் என்று மட்டுமே எங்களுக்குத் தெரியும். அம்மாவையும் ஐயாவையும் பிரிப்பதற்கு செய்வினை செய்தவர் முகமாத்து செய்வினை அது. அம்மம்மாவை எப்பொழுதும் ஒரு எதிரியைப் போலவே அம்மா பார்ப்பா. இருவருக்கும் திரிவெடி மாதிரி ஏதாவது ஒரு உரசலில் பத்திவிடும். அந்த சண்டையில் அர்த்தம் இருக்காது பழைய கோபம் ஒன்றின் தொடர்ச்சியாய் இருக்கும் பழைய கோபம் என்றால் சில நேரம் இருபது வருடப் பழையதாக இருக்கும்.
அம்மம்மா சுருட்டுப்பத்துவா. என்ன சுருட்டு என்று “பிரான்ட்” இல்லை. கிடைக்கிறதை பத்துவா. அம்மய்யா மண்டான் சுருட்டுத்தான் பத்துவார். கோடாப்போட்ட சுருட்டு நல்லாய் இருக்கும் என்று அம்மய்யாவும் முன் வீட்டு செல்லையாஅண்ணரும் கதைப்பார்கள். ஒரேயடியாக அம்மம்மா சுருட்டைப் பத்தி முடிக்கமாட்டா. அம்மய்யாவும் அப்படித்தான். குறையன் சுருட்டை வீட்டு வளையில் செருகி வைத்திருப்பா. கால் வாசி சுருட்டை வைத்து விட்டு அம்மம்மா தேடுவா. சுருட்டு காணாமல் போயிருக்கும்.
குறையன் சுருட்டுகளை சேர்த்து எடுத்து வயல் கொட்டிலுக்கு கொண்டுபோய் நூல் கழட்டி மறைத்து பத்துவதே தனி சுகம். சுருட்டின் காரம் சுகமாக இருக்கும். சிகரட் குடிப்பதில் கொள்ளை ஆசை. அதன் மணம் மிகவும் பிடிக்கும். அந்தக்காலத்தில் பீக்கொக் சிகரட் வாங்கி களவாகப் குடித்தோம். கண்டால் அம்மா தோலை உரிப்பா. காவிளாய் வேரினால் அடித்தால் அடையாளம் அடுத்த நாளுக்கும் இருக்கும்.
நெடுங்கேணிப் பக்கம் இருந்துவரும் பஸ் ஒன்று எங்களது வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. வேலங்குளம் போன அம்மம்மா ஒரு பெரிய சாக்கு கட்டோடு வந்தா. பஸ்ஸில் இருந்து இறக்கும் போது கடகட என்று சத்தம் என்னவாக இருக்கும். சாறக்கட்டோடு ஓடிவந்து சாக்கை தூக்கிக் கொண்டு வந்து அவிழ்த்துப் பார்த்தால் அதுக்குள் ஒரு குட்டி வண்டிலின் பாகங்கள். உடனடியாக எடுத்து பொருத்தினால் வண்டில் தயார். உச்சபட்ச மகிழ்ச்சி எனக்கு. ஆசை ஆசையாய் ஒரு வண்டில் கிடைத்துவிட்டது.
வருத்தம் வந்தால் அம்மம்மா. காச்சல் வந்தால் அம்மம்மா அம்மம்மாவைக் கட்டிப்பிடித்தபடி படுத்தால் தான் உடம்பு உழைவு எடுபடும். எனக்காக அம்மம்மா வாழ்ந்திருக்கிறா என் சுக துக்கங்களில் எல்லாம் அவ பங்கெடுத்திருக்கிறா.
அம்மாவுக்கும் அம்மம்மாவுக்குமான உறவு திடீர் திடீரென்று அறுபடும் பின்னர் கொஞ்ச நாட்களில் ஒட்டுப்படும்.
ஒரு சண்டையில் அம்மா அழுதா. கேவிக்கேவி அழுதா. சண்டை பெரிதாகி விட்டிருந்தது. பொறுமை, விட்டுக்கொடுப்பு, உதவியாய் இருத்தல் என்ற ஒன்றுக்குமே இருவருக்கும் அர்த்தம் தெரியாது. அம்மாவும் சாறிதான் கட்டுவா. அன்று சாறி முந்தானையை முகத்தில் மூடி கேவிக் கேவி அழுதா.
ஒட்டுசுட்டானுக்கு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி சொன்னா அம்மா. பக்கத்து வீட்டு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போனேன். மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்கு போய் கனநேரம் அம்மா அழுதா. ஆனால் மாணிக்கப்பிள்ளையார் அவர்களுடைய சண்டையை நிறுத்தி விடவில்லை. சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.
புளியங்குளத்தில் கொலனி காணிகளை அரசாங்கம் கொடுக்கும் போது ஐந்து ஏக்கர் குளத்துத் தரையை தெரிவு செய்தவர் அம்மய்யா. அது ஒரு ஊர் ஆவதற்கு அந்தக்கிராம மக்களின் அர்ப்பணிப்பு பெரியது. காணிகளை காடு வெட்டி களனியாக்கினார்கள். அந்தக்காணிக்கு அம்மய்யாவின் பங்களிப்புக்கு சமமாக அம்மம்மாவின் பங்கும் இருந்திருக்கிறது. “நீ வேர்ப்பகுதியை தூக்கினால் மரத்தின்ரை நுனியை நான் தூக்கி பாடுபட்டிருக்கிறன்” அம்மம்மா ஒரு முறை சண்டையில் அம்மய்யாவுக்குச் சொன்னா.
புளியங்குளத்தில அம்மம்மாவும் நானும் குளிக்கப்போவோம். குளிக்கப்போனால் என் கவனம் முழுக்க பாலுண்ணியில் தான் இருக்கும் “முதலை வந்திடும் ஆழத்துக்குப்போகாதை, சேறு, வழுக்கும்” என்று அம்மம்மா எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பா.
அம்மம்மாவை யாரோ கிண்டி விட்டிருக்கினம். காணி அம்மய்யாவுக்கு பின்பு உரிமை அம்மம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை அம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை தங்கச்சிக்கு அம்மம்மா சொன்னா “வயல்காணியிலை என்ரை பங்கை பிரிக்கப்போறன்”.
அம்மய்யா கண்ணை மூடினாப்பிறகு ஏற்பட்ட குடும்பப் பிளவு இது தான். காணியைத் தானே கேக்கிறா குடுக்கிறது தானே. அம்மம்மா மிக நல்லவா.
அம்மய்யா சாக முதல் ஒரு நாள் அம்மம்மா சொன்னவா “கொம்மாக்கு தெரியாம காணி உறுதியை ஒருக்கா ரங்குப்பெட்டிக்கை இருந்து எடுத்துக் கொண்டு வந்து தா” என்று அம்மா முள்ளியவளைக்குப் போனாப் பிறகு காணி உறுதியைக் கொண்டு வந்து குடுத்தேன். தெரிஞ்சால் தோலுரிபட்டிருக்கும். அம்மம்மா சொன்னா செய்தேன். அடி விழுந்தாலும் பரவாயில்லை.
ரங்குப்பெட்டி தான் வீட்டில் பாதுகாப்பான பொக்கிஷம் மற்றது அம்மய்யாவின் ஒரு மரப்பெட்டி. அதற்குள் மூன்று நாலுமுழம் மூன்று சால்வை. காசுப்பை, ஒரு வேட்டி என்பன இருக்கும். அம்மய்யா எளிமையாளவர். அழகாக ஒரு குடும்பி கட்டியிருப்பார். எனக்கு பள்ளிக்கூடத்தில் பட்டப்பெயர் அம்மய்யா.
ரங்குப்பெட்டிக்குள் கலியாண வீட்டுக்கு உடுக்கும் சேலைகள் எங்களது நல்ல உடுப்புகள் இருக்கும் ரங்குப்பெட்டிக்குள்யாரும் கை வைப்பது கிடையாது. ஆனால் அதனைத் திறக்க எனக்கு ஆசை அம்மா அதற்குள் பூச்சி முட்டைகளைப் போட்டு வைத்திருப்பா. பூச்சி முட்டை வாசம் எனக்கு விருப்பம் ரங்குப் பெட்டிக்குள் இருந்து ஒரு சேலை எழுத்துக் கட்டினால் அம்மாவின் சேலையை அடிக்கடி கொஞ்சியபடி இருப்பேன்.
அம்மம்மாவுக்கு ஒரு அக்கா இருந்தா அவ வலு துப்பரவு. காலையில் எழும்பி குளித்து முழுகி வெள்ளைச் சேலை கட்டி பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருந்தா. அவவோடு நான் பெரிதாக ஒட்டவில்லை. முருகன் பக்தை அவ.
அம்மம்மாவின் உறவினர்கள் வேலங்குளத்திலும் முன்ளியவளையிலுமே அதிகமாக இருந்தார்கள். அம்மம்மாவுக்கென்று பொழுதுபோக்கு ஒன்றுமில்லை. காலையில் எழும்புவது முகம் கழுவுவது பின்னர் தேத்தண்ணி, சாப்பாடு , சாப்பாடு செய்வதில் அம்மாவுக்கு உதவி செய்வா மீன் வெட்வது, பயித்தங்காய் உடைப்பது வாழைக்காய் சீவுதல், முருங்கைக்காய் வெட்டுதல். வெங்காயம் உரித்தல், வெள்ளைப்பூடு உரித்தல் இப்படியான உதவிகள் தான் செய்வா.
அம்மாவோடு கோபம் என்றால் அதுவும் இல்லை. முன் வீட்டு வள்ளியக்காவோடு கதை. தங்கராசா வீட்டுக்குப் போவது என்பதோடு பொழுது போய்விடும். அத்தோடு நானும் அம்மம்மாவும் பின்னேரம் விறகு எடுக்கப்போவோம்.
காலையில் அம்மம்மா பழங்கறியோடு பழஞ்சோறு தின்னுவா. தண்ணி ஊத்தி வைச்ச சோறு முத்துப்போல இருக்கும். காலையில் சுட சுட அவிச்ச புட்டோ இடியப்பமோ இருக்கும் தின்னச் சொன்னாலும் தின்னாமல் பழஞ்சோறை தானே போட்டு சாப்பிட்டு விட்டு அன்று முழுக்க புறுபுறுத்தபடி திரிவா. “நான் ஒருத்தி இருக்கிறன் பழஞ்சோறு தின்னுறதுக்கு போட்டு வடிக்கிறது எனக்கு என்னவினை பழசு தின்னுறதுக்கு என்று அன்று முழு நாளும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி இருக்கும்.
அம்மம்மாவுக்கு ஆசை கடைசி காலத்தில் தங்களின் உறவுக்கார ஆக்கள் யாருக்காச்சும் என்னை கலியாணம் செய்து குடுக்க வேண்டும் என்று. அதற்காக ஒரு மச்சாள் முறை உள்ள ஒரு பிள்ளையையும் குறிப்பாக காட்டினா.
ஓசைப்படாமல் எத்தனை கனவுகள் அம்மம்மாவின் மனதில் இருந்திருக்கும். எத்தனை விடயங்களை சொல்ல முடியாமல் தத்தளித்திருப்பா. சொன்னால் நிறைவேறுமா என்ன ஏக்கங்கள் இருந்திருக்கும். அம்மய்யா சாகும் போதும் அம்மம்மா உயிருடன் இருந்தவா. ஒரு இரவு படுத்த அம்மம்மா எழுந்திருக்கவேயில்லை என்று தங்கச்சி சொன்னாள்.

Saturday, 31 July 2010

லண்டன் கனவுகளின் தேசம் அல்லமட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'.இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான்.பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாக லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது இல்லை.பதினைந்து லட்சம், இருபது லட்சம் ரூபா ஏஜென்ட்மாருக்கு கொடுத்து விசா வாங்கி இங்குவந்து இறங்கி விமானத்தில் வைத்து பாஸ்போட்டை கிழித்து கக்கூசுக்குள் போட்டுவிட்டு இமிக்கிறேசனில் வந்துநின்றுகொண்டு எனக்கு போக்கிடம் இல்லை என்று சைக்கினையில் இமிக்கிறேசன் ஒபிசரிடம் சொல்ல அவர் கூட்டிக்கொண்டுபோய் அகதி அந்தஸ்து கொடுத்ததெல்லாம் இப்பொழுது பழைய கதை. லண்டன் இப்பொழுதெல்லாம் அகதிகளுக்கு, குடியேற்றவாசிகளுக்கு பெரும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. எல்லாம் இந்த கொன்சவேட்டிவ் கவர்ண்மெண்ட் வந்ததன் பிறகுதான் என்றால் அதிலும் உண்மை இருக்கிறது. ஆனால் ஏற்கனவே லேபர் கவர்ன்மன்ட் 2011 ஆம் ஆண்டு வெயில் காலத்துக்கு முன்பு அகதிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதாக அறிவித்து அதன்படி செயலாற்றி வந்தது. ஆனால் கோடன் பிறவுணின் லேபர் கவர்ன்மன்ட் வெளியில் தெரியாமல் அகதிகள்மீது கடும் கெடுபிடிகளைச் செய்திருந்தது. ஆனால் கொன்சவேட்டிவ் அரசு எப்படியாவது வெளிநாட்டுக்காரர்களை ஒரு வழியாக ஒழுங்குபடுத்தவேண்டும் என்று துடிப்பாக வேலை செய்கிறது.
முதல் அகதி அந்தஸ்து கேட்டு இதுவரை காலமும் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு இப்பொழுது விசா கொடுக்கிறார்கள். ஆனால் புதியவர்கள் விடயத்தில் அரசு கடும்போக்கையே கொண்டிருக்கிறது.
இப்பொழுது இங்கிலாந்தும் மேற்கத்தைய நாடுகளும் அகதிகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவுஸ்ரேலியா அகதிகளை அங்கு வரவேண்டாம் என்று பகிரங்கமாகவே விளம்பரம்போட்டு சொல்கிறது. ஐரோப்பிய நாடுகள் அகதிகள் விடயத்தில் எந்த இரக்கமும் காட்ட இந்தக் காலத்தில் தயாராக இல்லை. சிலோனிலிருந்து லண்டன் சீமையை பெரும் கனவாக யாரும் எண்ணவேண்டாம். இங்குவந்து வேலை இல்லாமல் கஸ்டப்படும் எத்தனையோ பேர் எங்களுக்கு முன்னால் தினமும் போய்வந்துகொண்டிருக்கின்றனர். வேலை செய்ய முடியாமலும் இன்சூரன்ஸ் நம்பர் இல்லாமலும் அகதிகளாகப் பதிய முடியாமலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் அலைந்துகொண்டிருக்கின்றனர். இங்கு இப்பொழுது பொலிசாரும் இமிகிறேசன் உத்தியோகத்தரும் சேர்ந்து சட்டவிரோதமாக லண்டனில் இருப்பவர்களைக் கைதுசெய்து வருகின்றனர். கடந்த வாரம் 20ஆம் திகதி கென்சல்கிறீன் எனும் இடத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்கள் விசாவில் லண்டனுக்கு வந்துவிசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தவர்கள்.இப்படி இருப்பவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்றுதான் பொலிஸ் சொல்கிறது. இந்த வெயில் காலத்தில் அதாவது இப்பொழுது சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடித்து கைதுசெய்யும் வேலை வெகு மும்முரமாகவே நடந்து வருகிறது.
நாட்டுக்கு உள்ளே வரும் சட்டவிரோத குடியேறிகளையும் இங்குவந்து தங்கியிருப்பவர்களையும் உடனடியாகப் பிடித்து நாடு கடத்துவதற்கு யு. கே. போடர் ஏஜன்சி எல்லாவகையான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று இமிகிறேசன் மினிஸ்டர் சொல்கிறார்.சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக பிறண்ட் உள்ளூர் இமிகிறேசன் உதவி பணிப்பாளர் ஸ்டீவ் பிஷர் சொல்கிறார் 'விசா இல்லாதவர்களைப் பிடிப்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்கும். அவர்களைக் கைதுசெய்து நாடுகடத்தப்படும். பிறண்ட் ஏரியாவில் மட்டுமல்ல லண்டன் முழுவதிலும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் துரிதமாக்கப்படும்'. பொலிசுடன் இணைந்து தேடுதல் துரிதப்படுத்தப்படும். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல், உரிய விசா இல்லாமல் வேலைக்கு வைத்திருக்கும் கடை முதலாளிமாருக்கு எதிராக கடும் நடவடிக்கையும் பெரும்தொகை தண்டப் பணம் அபராதமும் விதிக்கப்படும். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல் ஒருவரை வைத்திருந்தால் கடைக்காரருக்கு 10 ஆயிரம் பவுண்ட் தண்டப்பணம் கட்டவேண்டும். இதுதான் சட்டம் இங்கு. இதனை விளங்க வேண்டும்.இப்பொழுது லண்டனில் யாருமே வேலை தருகிறார்களில்லை. நாங்கள் லண்டனுக்கு வந்த தொண்ணூறுகளில் எங்கேயாவது ஒரு தமிழ் பெற்றோல் ஸ்டேசன்காரர் எங்களுக்கு வேலை தருவார். தமிழ் கடைகள், தமிழ் பெற்றோல் ஸ்டேசன்கள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. ஆனால் இப்பொழுது 10 ஆயிரம் பவுண் தண்டப் பணத்தைக் கட்ட எல்லோரும் பயந்துபோய் இருக்கின்றனர். அதனால் சட்டவிரோதமாக வேலை தர யாரும் அஞ்சுகிறார்கள்.அதுமட்டுமல்ல. மாணவர் விசாவில் வருகிறவர் இங்கு பெரும் சிரமப்படுகின்றனர். வேலை இல்லை. உள்ளூர்காரர்களுக்கே வேலை இல்லை. பிறகு எங்கே வெளியூர்காரர்களுக்கு வேலை என்று கையை விரிக்கிறார்கள் வேலை கொடுப்போர்.இப்பொழுது தமிழ் கடைகளிலும் பெற்றோல் ஸ்டேசன்களிலும் வேலை இல்லை.சிலோனிலிருந்து மாணவர்களாய் வருகிறவர்கள் லண்டன் தானே. இங்கு வந்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம் என்ற கனவோடு மட்டும் வராதீர்கள். இங்கு உங்களுக்கு சிவப்புக் கம்பளம்போட்டு வரவேற்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். இங்கு லண்டனுக்கு மாணவர்களாக வருகிறவர்கள் ஸ்ருடன் விசாவில் வந்துவிட்டு கொலிச்சுக்குப் போகாமல் லட்சம் லட்சமாய் சம்பாதித்து பணக்காரர்களாகலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.
எனக்குத் தெரிந்த பொடியன் ஒருவர் 15 லட்சம் ஏஜென்சிக்குக் கொடுத்து 2 வருட விசா வாங்கியிருக்கிறார். எல்லாம் லண்டன் போய் 15 மாதத்தில் கட்டிவிடலாம் என இங்கு வந்திருக்கிறார்.அங்கு சிலோனில் ஊர் முழுக்க கடன். பெற்றோர்கள் மகன் லண்டனில் இருக்கிறான். கடன் கட்டலாம் என்றால் எங்கே. இங்கு மகனுக்குக் கிழமைக்கு 10 மணித்தியாலம்தான் வேலை. அதுவும் கோழி பொரிக்கிற கடையில் கிழமைக்கு 40 பவுண்ஸ்தான் அவனின் உழைப்பு. பங்குபோட்டு தங்கும் ஒரு றூமின் வாடகையே மாதம் இருநூறு பவுண். படிப்புமில்லை. வேலையுமில்லை. இங்கு நாயாய், பேயாய் றோட்டில் அலைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு சாப்பாட்டுக்கே பெரும் திண்டாட்டமாக இருக்கிறது என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறார். அவர் கடன் வாங்கிய 15 லட்சத்தை எந்த ஜென்மத்தில் கட்டப்போகிறார். இங்கு லண்டன் சும்மா பணம் கொட்டும் பூமியாக இல்லை என்பதை ஸ்ருடன் விசாவில் வருகிறவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்ருடன் விசாவில் வந்து முழு நேர வேலை செய்யலாம் என்று யாரும் லண்டன் வந்து மொக்கையீனப்படவேண்டாம்.
• யூலை 20 ஆம் திகதி 5 பேர் கென்சல்கிறீனில் கைதுசெய்யப்பட்டனர். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல் வேலை செய்து.
• யூலை 17 ஆம் திகதி அபறோஸ் றெஸ்ரூரண்டில் நான்கு பங்களாதேஸ்காரர் சட்டவிரோதமாக வேலைசெய்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அகதிகளாகப் பதிந்தாலும் வேலை செய்யக்கூடிய பெமிட்டை பறித்திருந்தார்கள். றெஸ்ரூரண்டிற்கு தண்டம். அகதிகள் திரு;பி அனுப்பப்படப் போகிறார்கள்.
• யூலை 13 ஆம் திகதி சம்மர் பிளேஸ் றெஸ்ரூரண்டில் 42 வயது சமையல்காரர், 23 வயது பரிசாரகர், 26 வயது சமையல்காரர், 28 வயது பெண் ஆகியோர் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 28 வயது பெண் ஸ்ருடண்ட் விசாவில் வந்து வேலை செய்திருக்கிறா.
• யூலை 7 ஆம் திகதி 'பு குவாய்' றெஸ்ரூரண்டில் 2 மலேசியக்காரரை பிடித்தது பொலிஸ். அவர்களுக்கு வேலை பெமிட் இல்லை. இரண்டு மலேசியரும் நாடு கடத்தப்பட்டனர். றெஸ்ரூரண்ட்காரருக்கு 20,000 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது.
• லெஸ்ட்ரில் யூலை மாதம் 7 ஆம் திகதி சட்டவிரோதமாக வேலை செய்தவர்கள் 9 பேர் பிடிபட்டனர். அவர்களை வைத்திருந்த தையல்கடைக்காரருக்கு 90,000 ஸ்பொட் பைன் விதிக்கப்பட்டது.
தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கொடுப்பதன்மூலம் இங்கிலாந்தின் போடரைக் கட்டுப்படுத்த யு.கே. போடர் ஏஜென்சி முழு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாக இருப்பவர்களைக் கைது செய்தலும் நாடுகடத்தலும். மிக அதிகமான பணம் தண்டமாக செலுத்த எல்லோரும் அச்சப்படும் சூழ்நிலையில் நம்பர் இல்லாமல் வேலை கொடுக்க யாருமே தயாராக இல்லை. இதனால் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு வேலை இல்லை. விசா இல்லாதவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது இங்கே. ஒரு வங்கி எக்கவுண்ட் திறக்கவோ, நோய் என்றால் மருந்து எடுக்கவோ, அல்லது ட்றைவிங் தெரிந்தால் லைசன்ஸ் எடுக்கவோ ஒன்றும் முடியாது. பல்லுக்கழட்டின பாம்பாட்டம் எத்தனை நாளைக்கு லண்டனில் இருப்பது.மேலே நான் காட்டிய கைதுகள் யூலை மாதத்தில் நடந்த எனக்குத் தெரிந்த சில. இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை கைத செய்கிறார்கள். அது மட்டுமல்ல. மாணவர்கள் கிழமைக்கு 20 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது. இது சட்டம். அப்படியான வேலை செய்து பிடிபட்டால் ஸ்ருடன்ட் உடனடியாக நாடு கடத்தப்படுவார். வேலை கொடுத்தவருக்கு 10,000 பவுண் தண்டனை. ஆகவே பெரும் செல்வம் சேகரிக்கும் கனவை சிவோனிலிருந்து வரும் மாணவர்கள் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்றுதான் குறிப்பிடுகிறேன்.இன்னும் அகதிகள் கையெழுத்திடப் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டுக்கு முதல் ஏற்கனவே அகதிகளாக உள்ளவர்களுக்கு விசாவை வழங்கிவிட்டு ஏனையவர்களைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறை இப்போது லண்டனில் துரிதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் எனக்குத் தெரிந்த ஒருவர் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் 20 லட்சம் ரூபா கொடுத்து களவாக ஜேர்மனி வந்து பிறகு கென்டயினர் மூலமாக லண்டன் வந்தவர். பெண்சாதி பிள்ளைகள் இப்பொழுது ஊரில் இருக்க முடியாமல் காலிப்பக்கமாகப் போய்விட வேண்டியதுதான் என்று கொழும்பில் இருந்து என்னோடு பேசும் பொழுது சொன்னார். ஊரில் இருந்தால் கடன்காரர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது என்கிறார் அவர்.இப்பொழுது வீடுகளுக்கு வந்தும் பொலிசும் இமிக்கிரேசன் அதிகாரிகளும் செக் பண்ணுகிறார்கள். றோட்டில் வைத்து செக் பண்ணுகிறார்கள். இல்லீகல் பிஸ்னஸ் எல்லாவற்றையும் பிடித்து தண்டனை கொடுக்கிறார்கள்.அகதிகளும் தங்களுக்கு விசா கிடைத்தவுடன் அரசாங்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள். அதுதான் அகதிகள் மீதும் பெரும் கோபம் அரசாங்கத்திற்கு. அண்மையில் ஒரு தமிழ்க் குடும்பம் அகப்பட்டது. இங்கிலாந்தில் பொதுச்சொத்து மோசடியில் ஈடுபட்ட வந்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஏழு தமிழர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான செயல்கள் அரசாங்கத்தை பெரும் இக்கட்டுக்குள் தள்ளியிருக்கின்றன.அத்தோடு அகதிகளைக் கட்டுப்படுத்துகிறோம், அகதிகளால்தான் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன என்று புதிய கவர்மன்ட் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறது.பிரித்தானியாவில் உள்ள சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று பிரிட்டனின் குடிவரவுத்துறை அமைச்சர் டேமியன் கீறீன் தெளிவாகச் சொல்கிறார். விசாவுக்காக பொய்யாக கலியாணம் முடிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரப்படும் என்கிறார் அவர்.இந்தியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை டொமியன் டேமியன் நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார்.போலியான திருமணங்கள், சட்ட விரோத பணியாளர்கள், சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்கள், என்பவற்றுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் டேமியன் சொல்கிறார்.2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவின் குடிவரவு பல்லாயிரக்கணக்கில் குறைக்கப்படும் என்று திட்டவட்டமாக அவர் சொல்கிறார். பிரிட்டனின் எல்லைகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தை ஏனைய நாடுகள் கொண்டுள்ளன. பிரிட்டனுக்குள் வந்து விட்டால் இங்கு சுலபமாக இயங்க முடியும், சட்ட விரோதமாகத் தொழில்செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றுவோம் என்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு கடினமான தண்டனை வழங்குவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்துவோம் என்றும் அமைச்சர் சொல்கிறார்.அதனால்தான் இனிமேல் லண்டன் கனவுகளின் தேசமாக அமையமாட்டாது என்று நான் சொல்கிறேன்.

Monday, 26 July 2010

பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்உலகம் முழுவதும் தொடரும் பயங்கரவாதமாகவே ஆண்களின் அடக்குமுறைக்குள் பெண்கள் சிக்கிவிடுவதை காண்கிறோம். எல்லா யுத்த வெறியர்களும் ஆண்களாக இருக்க சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தும், வன்புணர்ச்சி செய்யும் கடத்திக்கொல்லும் அநியாயத்தை பெண்கள்மீது புரியும் ஆண்களை உலகம் முழுவதும் காண்கிறோம். யுத்த வெறியர்களாக ஆண்கள் இருக்கும்பொழுது பெண்களை அநியாயமாக தங்கள் யுத்தக்குள் இழுத்து பழிவாங்கும் ஆண்களைத்தான் எல்லா இடங்களிலும் காண்கிறோம்.இலங்கை, பொஸ்னியா, ஈராக், சூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தற்பொழுது கிர்கிஸ்தான் என்று முழு தேசத்திலும் பெண்கள்மீது வன்முறையை பிரயோகிக்கும் யுத்த வெறியர்களான ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.ஆண்களின் யுத்தப் பசிக்கு முதலில் இரையாவது பெண்களும் குழந்தைகளும்தான். பெண்கள் யுத்தத்தில் எந்த சம்பந்தமும் படாத பட்சத்தில் அவர்களை வன்முறைக்குள் ஆளாக்கி நேரடியாக அவர்கள்மீது அநியாயம் விளைவிக்கும் ஆண்கள் உண்மையில் கொடூரமானவர்கள்தான்.நிராயுதபாணிகளான பெண்களின்மீது ஆயுதம் தரித்த ஆண் நேரடியாக வன்முறை செய்கிறான். இதனை உலகில் கேட்க யாருமே இல்லை. எல்லா ஆட்சிக்கட்டிலும் ஆண் இருந்துகொண்டு தனக்கு தோதுவான சட்டங்களை இயற்றிக்கொண்டு பெண்களின் மீதான வன்முறையை ஏவிவிடுகிறான். யுத்த ஆயுதம் செய்வது ஆண், அணுகுண்டை செய்வது ஆண், துப்பாக்கியை செய்வது அதனை உபயோகிப்பது ஆண் ஆனால் ஏன் சாகிறோம் என்று தெரியாமல் செத்துப் போவது பெண்களும் குழந்தைகளும்.யுத்த பூமியில் அல்லது இன வன்முறையில் முதல் பலி பெண்தான். யுத்த பிரதேசங்களில் பெண் நேரடியாகப் பலிக்கடாவாக்கப்படுகிறாள். உலகில் யுத்தவாதிகள் யாரை எடுத்தாலும் அவர்கள் ஆண்கள்தான். கிட்லரிலிருந்து இன்றைய ஒபாமாவரை எல்லோரும் ஆண்கள்தான். இன்று அமெரிக்கா உலகம் முழுவதும் யுத்தத்தைப் பரப்பிவிட்டு மூள வளங்களைக் கொள்ளையிடுவதில் எவ்வளவு முனைப்போடு இருக்கிறது.தான் விரும்பும் நாடுகளுக்கு தான் விரும்பும் நேரத்தில் இராணுவத்தை அனுப்பி யுத்தம் செய்கிறது. ஆனால் அந்த தேசத்தின் இயல்பு வாழ்க்கை, அந்த கிராம மக்களின் வாழ்வு, கலாசாரம், பண்பாடு, வழிமுறைகள் எல்லாவற்றையும் பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்துவிட்டு வருகிறது.அங்கு அழிந்துபோன பெண்களைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் வந்துவிடுகிறது. பெண்கள் எப்பொழுதும் குழந்தைகளை பிரசவிக்கின்ற இயந்திரங்களாகவே ஆண் வன்முறையாளர்களால் பார்க்கப்படுகின்றனர். பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துக்கொண்டிருக்க ஆண்கள் அந்தக் குழந்தைகளை யுத்தவாதிகளாக ஆக்குகின்றனர். உலகத்துக்கு ஆக்கதாரிகளாகப் பெண்கள் இருக்க அழிக்கிறவர்களாக ஆண்கள் இருக்கின்றனர்.

எல்லா யுத்தங்களையும் எடுத்தால் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை இருக்கிறது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவு அதிகளவில் இடம்பெறுவதற்குக் காரணம் பெண்கள்மீதான கற்பழிப்பை ஆண்கள் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். யுத்தம் இடம்பெறும் உலக நாடுகளில் அதிகளவில் 80 வீதத்தினர் பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களும் சிறுமிகளும் இராணுவத்தினரான ஆண்களால் வன்கொடுமைக்கு உள்ளாவது உலகில் ஒவ்வொரு நிமிடமும் நடந்துகொண்டிருக்கின்ற கொடுமையாகும். கொங்கோவில் இடம்பெற்றபோரில் யுவிரா எனும் இடத்தில் ஒவ்வொரு நாளும் 40 பெண்கள் வீதம் 2002 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமாக ஆய்வு ஒன்று சொல்கிறது. உகண்டாவில் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறையில் 5 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருக்கின்றனர். சியாராலியோன் சண்டையில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஈராக்கில் அமெரிக்கப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தகவல்களின்படி 600 பேர் என்று சொல்லப்படுகிறது. தகவல்களை தெரிவிக்காதவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பொஸ்னியாவில் 1992 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கி;டத்தட்ட 60,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொசோவாவில் சேர்பிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பிள்ளைகளை வேண்டுமென்றே பெறவைத்து காலம்காலமாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள்.போர் நடைபெறும் இடங்களில் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை உண்டு. அரச படைகள் அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் போன்றன போர் பாலியல் குற்றங்களுக்குக் கீழ் வருகின்றது. பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெறும் இந்தக் குற்றங்கள் மனிதாபிமானத்துக்கு எதிராக பார்க்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். உலகின் எந்த மூலையில் என்றாலும் யுத்தம் நடைபெறும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை இராணுவம் அல்லது ஆயுதக் குழுக்கள் செய்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.உலகில் உள்ள பெண்களில் நூற்றுக்கு முப்பது பேர் ஏதாவது ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்பதுதான் கொடுமையாகும்.பெண்களுக்கெதிரான வன்முறை உலகில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றபோதிலும் அதனை பெருமளவுக்குப் பொருட்படுத்தாத தன்மையே காணப்படுகிறது.'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும்பொழுது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை', என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் ஒன்றும் மகிந்த சொல்வதுபோல ஒழுக்கசீலர்களாகவும் வெறுமனே எதிரியுடன் மட்டும் யுத்தம் புரிந்தவர்களாகவும் மட்டும் இல்லை. ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த கொடுமைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் சமூக அந்தஸ்துக்கு அஞ்சி தங்கள் மீதான சிங்கள இராணுவம் செய்த பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்ல அச்சப்படுவதின் காரணமாக இந்த செய்திகள் அமுங்கிப்போகின்றன.இலங்கை இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள்மீது பாலியல் வன்முறையை யுத்தத்தின் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர் என அமெரிக்க ராஜாங்க திணைக்களச் செயலர் கிலாரி கிளின்ரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் புலிகள் இயக்கப் பெண்களையும் வேறு தமிழ்ப் பெண்களையும் கற்பழித்ததாக கிலாரி கிளின்ரன் சொன்னார்.ஆனால் அரசாங்கம் இந்த பாரிய வன்முறைகளை இல்லை என்று வாதிட்டது. சில வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் சில அமைப்புக்கள் இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கின்றன என்று கெகலிய ரம்புக்வெல பொய் சிரிப்போடு இதனை மறுத்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு.இந்திய இராணுவத்தினரும் யுத்தம் நடைபெறும்பொழுது இலங்கையில் தமிழ் பெண்கள் பல நூறு பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். ஒரு சிலரைத் தவிர அவை வெளிவராமலேயே போய்விட்டது. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்களில் ஒன்று திரண்டு வழக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குப் பெரிய சட்டத்தரணிகள், தமிழ் அரசியல்வாதிகள்கூட வழிகாட்டவில்லை எமது பெண்களுக்கு.கொங்கோ நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையாகப் போன இந்திய இராணுவத்தினர் அங்குள்ள பசி பட்டினியோடு இருக்கின்ற பெண்களின்மீதும் சிறுமிகள்மீதும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் இளஞ் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறை புரிந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வெறியர்கள் இந்த வன்கொடுமையை புரிந்துள்ளது தெரியவந்து அவர்கள்மீது விசாரணை நடாத்தப்பட்டது.2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்திய இராணுவத்தைக் குற்றவாளியாகக் கண்டனர்.ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டார். இந்திய சட்டப்படி குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கோரினார். இந்திய இராணுவ அமைச்சர் அன்ரனியும் முழுமையான விசாரணை நடாத்தப்படும் என்றார்.கடந்த மாதம் விசுவமடுப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் இரண்டு குடும்பப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர். இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இராணுவமோ அல்லது கெகலியவோ இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏனெனில் அடையாள அணிவகுப்பில் இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இன்னும் முகாம்களில் இருக்கும் பெண்கள் மீதான வன்முறை தொடருவதாகவே சொல்லப்படுகிறது. பெண்களை ஒரு ஆயுதமாக இன்னும் இராணுவம் பயன்படுத்திக்கொண்டுதான் வருகிறது. சித்திரவதை மூலமாகப் புலிகளுடனான தொடர்புகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்றுவிட்டு பெண்களுக்கு அதிகபட்சமாக கற்பழிப்பு எனும் தண்டனையை கொடுப்பதுதான் பெரும் துன்பமானது.இன்னும் தமிழ்ப் பெண்கள் இராணுவ சித்திரவதைக் கூடங்களில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அல்லது எழுதினால் உடனே இலங்கை அரசின்மீது பழியைப் போடுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுதான். உலக சனத்தொகையில் பெண்கள்தான் அதிகம். அதாவது 53 வீதம். ஆனால் 47 வீதமாகவுள்ள ஆண்களால்தான் பெண்கள் ஆளப்படுகிறார்கள்.

இந்த ஆண்களின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது. ஆம் எல்லாம் இருக்கிறது. ஒபாமா நினைத்தால் இந்த உலகத்தையே அணுகுண்டுபோட்டு அழித்துவிடலாம். மன் மோகன்சிங், திமித்ரி மெத்வேதவ், கிலானி அகமதுன்னியாத், வென்ஜியாபோ என ஆண்களின் உத்தரவுக்காகத்தான் அணுகுண்டுப் பொத்தான்கள் காத்திருக்கின்றன. அழிக்கிறவர்களாக இந்த உலகத்தில் ஆண்கள்தான் இருக்கிறார்கள் பாருங்கள்.பெண்கள் எப்போதும் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படித்தான். ஒரு சமரச நிலமைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலமை பெண்களுக்குத்தான் இருக்கிறது.அக்குறணையில் நான் இருந்தபோது எனது வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் இருந்தது. ஒவ்வொருநாளும் அந்த ஆண் குடித்துவிட்டு வந்து மாலைவேளைகளில் மூர்க்கத்தனமாகத் தாக்குவான். ஆனால் அந்த மனைவி அத்தனை அடிகளையும் வாங்கிவிட்டு மறுநாள் காலை அவனுக்கு சுடு தண்ணீர் வைத்துக் குளிப்பாட்டுவாள். உண்மையில் எனது மனதுக்குள் 16 வருடமாக கிடந்து உழலும் சோகம் இது. ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பெரும்தொகையினர் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கின்றனர். அவர்கள் எல்லாமே இழந்த நிலையில் வெறும் நடைப்பிணமாக திரிகின்றனர். தந்தையை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என்று துன்பம் அனுபவிக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.சிறுநீர் கழிக்கக்கூட ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இந்த உலகில் வழங்கப்படுவதில்லை என்று எனது நண்பி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள்.விதவைப் பெண்கள் மீதான ஆண்களின் பார்வையும் கொடுமையானது. விதவைப் பெண் என்றாலே எப்பொழுதும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தலாம் என்ற ஒரு மனநிலையே ஆண்கள் மத்தியில் இருக்கிறது.எப்பொழுதும் ஆண்கள் பெண்கள்மீதான அடாவடித்தனத்தை அரங்கேற்ற விரும்பியபடியே இருக்கின்றனர்.இங்கே ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு பெற்றுக்கொள்வதைப்போல இலங்கையில் சாத்தியப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்களுடைய சுதந்திரம்பற்றிய தொடர் கவனிப்பில் இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்களை பண ரீதியாக ஆண்களிடம் தேவையற்றவர்களாக்குகின்றனர்.உதாரணமாக பஸ் ஓடுவது பார வாகனங்கள் ஓடுவது மட்டுமல்ல பாரிய கட்டட வேலைகள், என்ஜினியர் வேலைகள் என்று தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.நான் பார்த்த ஒரு விடயம் கல்வி. கல்வியை முழுமையாக கஸ்ரப்பட்டு அடைவதன் மூலம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து பெண்கள் விடுபட்டு விடுகிறார்கள். சுயமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆசிய நாடுகளில், இலங்கையில் பெண்களுக்குக் கல்வி போதாமையுள்ளது. அல்லது மறுக்கப்படுகிறது. அதன் காரணத்தினால் எப்பொழுதும் பெண் தாழ்ந்தே கிடக்கிறாள்.பூமிக்குத் தாய் என்கின்ற ஆண் பெண்களின் மீதான வன்முறைகளை எப்பொழுது கழையப் போகிறான் என்ற கேள்விக்கு அப்பால் பெண்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும்.வன்முறையற்ற உலகத்தில் தான் இது தாச்சதியமாகும். பெண்கள் மீது வன்முறை புரிகின்றவர்களுக்குக் கடும் தண்டனை தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை இல்லாமல் போகும்.

Tuesday, 20 July 2010

மெலிந்த உடலெனும் மோகம்சுவிற்சலாந்துக்கு அண்மையில் போனபோது எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கும் போனேன். இவர் எனது நீண்டகால நண்பர். அக்குறணையில் நானும் அவரும் தொண்ணூறுகளில் சுற்றித் திரிந்தோம்.பின்னர் அவரின் விதியும் ஊரெல்லாம் அழைத்துச் சென்றது. எனது விதியும் நாடு நாடாக அழைத்துச் சென்றது. நீண்ட காலத்திற்குப் பிறகு இரண்டு பேரின் குடும்பங்களும் சுவிற்சலாந்தில் சந்தித்து மகிழ்ந்து போனோம்.அவருக்கு ஒரு மகள். வயது ஆறு. நண்பரின் மனைவியின் பிரச்சினை என்னவென்றால், ஆறு வயது மகள் சோறு சாப்பிடுகிறாள் இல்லை என்பது. இது ஒரு பெரிய கவலை அவவுக்கு.'ஏனடி சோறு சாப்பிடுகிறாய் இல்லை' என்றால் சோறு சாப்பிட்டால் குண்டாகி விடுவாளாம். இப்பவே முருங்கைக் காய் மாதிரி இருக்கிறாள். சோறினைத் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டாள். காலையில் சலட், பகலுக்கு சலட், இரவுக்கும் சலட். இப்படி சலட்டை மட்டுமே சாப்பிடும் ஒரு மனிசியாக அவள் மாறிவிட்டாள்.அவள் படிக்கும் பாலர் பாடசாலையில் பிள்ளைகள் கூடிப் பேசும்போது யாரோ சுவிஸ் நாட்டுப் பிள்ளை சொல்லிவிட்டது. சோறு சாப்பிட்டால் உடம்பு குண்டாகிவிடும் என்று.அதனை அப்படியே பிடித்துவைத்துக்கொண்டு அவள் அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனையும் சொல்லி சொல்லி சோறு சாப்பிடாமல் பண்ணிவிடுவாளோ இவள் என்று அம்மாவுக்குக் கவலை.சுவிசுக்குப் போனபோது ஜெனிவாவில் ஒரு பிடி சோறு சாப்பிடவேண்டும் என்று நானும் மனைவியும் கடை கடையாக அலைந்தோம். இது ஜெனிவாவைச் சுற்றிப் பார்க்கப்போனபோது நடந்தது.ஒரு மாதிரி ஒரு மொறொக்கோ காரனின் கெபாப் கடையில் சோறு இருந்தது. பெரிய பெரிய அரிசி எங்கிருந்து இறக்கினார்களோ தெரியாது. வாயில் ஆசையோடு வைத்தால் 'சப்' என்று இருந்தது அந்தச் சோறு.எனக்கெல்லாம் மூன்று நேரத்தில் ஒரு நேரம் சோறு உள்ளிறங்க வேண்டும்.ஊர்க் குத்தரிசியை நினைத்தால் இன்னும் நாவில் நீர் ஊறுகிறது. அதன் மணமும் குணமும் தனி. கொழும்பில் இருக்கும்போது சிறி கதிரேசன் றோட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் சாப்பாட்டுக் கடையில் குத்தரிசி சோறும் மீன் குழம்பும் சாப்பிட்டது இன்னும் ருசி அடி நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.இப்பத்தைய பிள்ளைகள் சோறை வெறுக்கிறார்கள். அளவாக சாப்பிட்டு உடம்பை 'சிக்' என்று வைத்திருப்பதைவிட்டு விட்டு 'டயட்' என்ற பெயரில் உடம்பை பாரமில்லாமல் ஆக்குகிறார்கள். அதனால் பல நோய்கள் அண்டும் ஆபத்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி கவலைப்படாமல் உடலை மெலிய வைப்பதில் மட்டுமே ஆர்வம் கொள்கின்றனர்.மெலிந்த இடை, பெரிய மார்பு, ஒல்லியான உடல்வாகு என்ற நிலமைதான் மேற்குலகில் பெண்கள் மத்தியில் உள்ள வாய்ப்பாடு.ஆனால் எமது ஊர்ப் பிள்ளைகள் இந்த மூன்றையும் அடைவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.இந்திய, இலங்கை ஆண்களுக்கு கொஞ்சம் குண்டான, மார்பு பெருத்த பெண்களைத்தான் பிடிக்கிறது. சினிமாவிலும் பாருங்கள். நமீதா, முன்பு குஷ்பு என்றுதான் ரசிக ஆண்கள் இருக்கிறார்கள்.டயட் டயட் என்று உடலை மெலிய வைப்பது மட்டுமில்லமால் வளரும் இளம் பெண்கள் மிகவும் ஆரோக்கியம் பேணவேண்டும். அதோடு சத்தான உணவும் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் அவர்களின் உடலுக்கு பேரிடர் வந்துவிடும்.
உடம்பும் மெலிந்து இருக்கவேண்டும். ஆனால் சுறு சுறுப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே வைத்தியர்களின் ஆலோசனை.இளைய பெண்களே 17 வயதில் உங்கள் எலும்புகள், தோல், உயரம், வளர்ச்சி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வருகிறது. ஆகவே இந்தக் காலங்களில் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.பெண்களைப் பொறுத்தமட்டில் உடலின் கொழுப்புச் சத்து மிகவும் முக்கியம். அதாவது இனப்பெருக்க உறுப்புக்கள் அமைப்பாக வளர்வதற்கு மிகவும் முக்கியம். இளம் பெண்கள்(நான் சொல்வது 13 முதல் 17,18 வயதுவரையானோர்) மெலிதாக இருக்கவேண்டும் என்பதற்காக சரியான சாப்பாடு சாப்பிடாமல் இருக்கிறார்கள். இது சாதாரண விடயமல்ல. சரயான சாப்பாடு சாப்பிடாமல் விட்டால் முதலில் பூப்பெய்தலில் பிரச்சினை ஆரம்பிக்கும் பிறகு மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும். சரியான சத்துணவுகளை சாப்பிடாமல் விடுவதன் காரணமாக இரும்புச் சத்தும் கல்சியமும் உடம்பில் குறைந்து பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.வளரும் பிள்ளைகளினுடைய ஒவ்வொரு நாள் சக்திக்கும் 2500 கலோரி தேவை. இது குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாச்சத்து ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரிசி அல்லது கோதுமை மாப்பண்டங்கள் நல்லது. இதில் 10 முதல் 12 வயதுடைய பிள்ளைகள் நாளொன்றுக்கு 320 கிராம் வரை சாப்பிடவேண்டும். 13 முதல் 15 வரையான பிள்ளைகள் 350 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். அதற்காக தினமும் தராசு வைத்து நிறுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.ஒரு நாள் அளவு பார்த்தால் தினமும் அந்த அளவு சாப்பிடலாம்தானே. பருப்பு, பயறு வகைகள் தினமும் 70 கிராம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் புரதம் கிடைக்கும்.இறைச்சி, மீன் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய துண்டு அதாவது 60 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். மரக்கறிக்காரர் என்றால் பட்டாணிக்கடலை 50 கிராம் சாப்பிடுங்கள்.கட்டாயம் 10 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் நாளொன்றுக்கு ஒரு லீற்றர் பால் குடிக்கவேண்டும். ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ் பால் குடியுங்கள். அது ஒரு லீற்றர் பாலுக்கு சமனாகிவிடும்.ஒவ்வொரு நாளும் உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
பப்பாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம் தினமும் சாப்பிடுங்கள். இது எங்கள் ஊர்களில் கிடைக்கும். அலட்சியப்படுத்தக்கூடாது. புளிப்புள்ள பழங்கள் சாப்பிடலாம். அதில் விற்றமின் சி கிடைக்கும். ஆகவே உடல் மெலிந்து போக சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவேண்டும். அல்லது நோய் வந்து அதனை மாற்ற முடியாமல் அவதிப்படுவீர்கள்.எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண்மணி. கலியாணம் முடிக்கிற வயது. உடல் மெலிந்து இருக்கவேண்டும் என்பதற்காக காலையில் சாப்பிடமாட்டா. சாப்பிட்டாலும் ஒரே ஒரு பாண் துண்டு. பகலுக்கு சூப் மட்டும் குடிப்பா. அதுவும் கடையில் விற்கின்ற உடனடி சூப் பக்கற்றை வாங்கி வந்து தண்ணியில் சூடாக்கி குடிப்பா. இரவு சாப்பிடுவதில்லை.'நல்லா சாப்பிடு உடம்பு போய்விடும்' என்று எங்கள் ஒபிசில் உள்ளவர்கள் ஒரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவ ஒரு சிரிப்போடு போய்விடுவா. வயிறு உள்ளேபோய் அழகாகத்தான் இருந்தா. ஆனால் வந்தது ஒரு நோய். துவண்டு வழுந்துவிட்டா. அந்த நோயிலிருந்து இன்னமும் மீளவே இல்லை.
வயிற்றில் புண் வந்துவிட்டது. கை நடுக்கம், வாந்தி என்ன உணவை இப்பொழுது சாப்பிட்டாலும் உடனடியாக வயிற்றாலை போய்விடும். ஒரு சிறங்கை மருந்து உட்கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டா இப்பொழுது.
அதோடு இன்டர்நெற்றில் போய் தனக்கு என்ன வருத்தம் என்று வெப் சைட்டுக்களில் தேடி அருக்கிறா. அவ ஏற்கனவே மனது பலவீனம் உடையவா. வெப் சைட்டில் அவவினது வருத்தத்திற்குப் பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் இருக்கிறது என்று எழுதியிருக்கிறதைப் பார்த்துவிட்டு இப்பொழுது மனப் பிரமை பிடித்தவ மாதிரி இருக்கிறா.
'இன்டர்நெற்றில் போய் நோய் அறிகுறிகளைத் தேடுவதை நிறுத்து', என நான் ஏசினேன்
வெப் சைட்டில் பொதுவான அறிகுறிகளும் நோயும்தான் போட்டிருப்பார்கள். அது அப்படியே இருக்கும் என்று உடனடியாக நம்புவது மடத்தனம்.எனது நண்பன் ஒருவனுக்கு இரவுக் காய்ச்சல். தொடர்ச்சியாகவே இருந்தது. இதற்கு இங்கே லண்டனில் வைத்து மருந்து எடுத்தான்.
அவனின் மனிசி வெப்சைட்டில் போய் இரவுக் காய்ச்சல் என்ன நோய் என்று தேடினால் அது கான்சருக்கான அறிகுறி என்று இருந்தது. மனிசி குழம்பி, நண்பர் குழம்பி தனக்கு கான்சர் என்று அழுது இப்படி அல்லாடிக்கொண்டிக்கும்பொழுது குடும்ப வைத்தியர் ஏசி அனுப்பியிருக்கிறார். முதலில் வெப் சைட்டில் நோய் அறிகுறியை வைத்துத் தேடுவதை நிற்பாட்டச் சொல்லி.யாருக்குத்தான் செத்துப்போக விருப்பம். கான்சர் என்று பயந்தவன் தற்போது உசாராகி வேலை செய்கிறான்.லண்டனில் ஒரு பெண்மணி தனது மகன் மெலிந்துபோய் இருக்கிறான் என்று வெப் சைட்டில் போய் தேடி மருந்துகள் வாங்கிக் கொடுத்தா. அவன் இப்பொழுது குண்டாகி குண்டாகிக்கொண்டு வருகிறான். ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்பொழுது அந்தப் பெண் தலையிலடித்துக்கொண்டிருக்கிறா. டொக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள்.மகனின் உடல் பருத்துக்கொண்டே வருகிறது. இது அவனுக்குப் பேராபத்தை விளைவிக்கப்போகிறது. உலகம் முழுவதும் இளம் பெண்கள் மெலிந்த தோற்றமுள்ளவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். அதற்கு சரியான போதுமான உணவு, நடைப்பயிற்சி, தேகப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்கிறார்களில்லை.
வெறுமனே இலகுவான முறை என்று சாப்பாட்டை ஒதுக்குகிறார்கள். இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எமது சிலோன் பெண்கள் கலியாணம் முடிக்கும்வரை எலும்பும் தோலுமாக இருப்பார்கள். மெலிந்து துடி இடையோடு இருப்பார்கள். என்ன, மாயமோ மந்திரமோ கலியாணம் முடிந்து ஒரு பிள்ளை பெற்றவுடன் குண்டாகிப் பருத்து விடுவார்கள். ஆனால் வெள்ளைக்காரர் ஐந்து, ஆறு பிள்ளைகளைப் பெற்றாலும் அதே மெலிவாகத்தான் இருக்கிறார்கள்.உடல் என்பது கைக்குள் வைத்து பாதுகாப்பவேண்டிய பொக்கிசம். அதனை சீரழிய விடக்கூடாது.'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது உடலைப் பொறுத்தவரை பொய்யானதல்ல.

சித்திரவதை உண்மையை உரைக்குமா?


சித்திரவதை – என்ற சொல்லைக் கேட்டதுமே பலருக்கு உயிர் உதறிவிடும். ஏனெனில் இலங்கையில் பலர் அதிலும் தமிழா்கள் பலர் சித்திரவதையை அனுபவித்துள்ளனர். இராணுவத்தினர், பொலிசார், இயக்கப் பெடியன்கள், பெட்டைகள், முதலாளிமார் என்று இந்த சித்திரவதை செய்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வீட்டில் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவிமார் இருக்கின்றனர். மனைவியால் சித்திரவதை செய்யப்படும் கணவர்கள் இருக்கின்றனர். அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த தமிழர் ஒருவரை சந்தித்தேன். அவருக்கு நடந்த சித்திரவதைகளை சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு உடம்பு நடுங்கியது. அதிர்ந்தது. எனது மூளை அதனைக் கிரகிக்கும் சக்தி இல்லாததாக இருந்தது. எனக்கு இவ்வாறு நடந்திருக்குமானால் நான் தாங்கி இருப்பேனா என்று மனம் முழுக்க பதறிக்கொண்டே இருந்தேன்.இப்பொழுதும் அவருக்கு நடந்த சித்திரவதையைப்பற்றி நினைக்கும்போது முள்ளந்தண்டில் சில்லிடுகிறது. வெறுமனே ஒருவருக்கு நடந்த ஏதோ ஒன்றாக என்னால் உணர முடியாமல் இருக்கிறது. எனக்கு அல்லது உங்களுக்கு நடந்த வேதனையாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அவருக்கு உடல் ரீதியான துன்பத்தை அதிக பட்சமாகக்கொடுத்து உண்மையைக் கக்குவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பது என்றுதான் சித்திரவதையை மேற்கொள்கின்ற எல்லோரும் சொல்கின்றனர். கையில் கொலை ஆயுதம் இருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒருவகையில் ஆயுதமற்ற அப்பாவிகள்மீது சித்திரவதையைச் செய்து அந்த வலிய, அழுகுரலை, முனகலை ரசித்துச் சிரிக்கின்றனர். ஒரு மனிதன் வலியில் அவர்கள் சந்தோசத்தைக் காணும் அரக்கர் குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்.இராணுவத்தினர், பொலிசார், இயக்கப்பெடியன்கள், விசாரணையாளர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சித்திரவதை செய்பவர்கள் என்று சொல்ல முடியாது. சித்திரவதை செய்வதை விரும்பாதவர்களும் இருக்கின்றனர். லண்டனில் நான் சந்தித்த தமிழர் படித்தவர். அறிவானவர். சமூக ஆர்வம் கொண்டவர். அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கொழும்பில் வைத்து வெள்ளைவானில் வந்த விசாரணைப் பிரிவினரால் தூக்கிச் செல்லப்பட்டவர். அவர் புலிகளின் முகவராக கொழும்பில் இருந்து செயல்படுகிறார் என்பதுதான் விசாரணையாளருக்கு சந்தேகம்.உண்மையில் இப்படித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் அள்ளிக்கொண்டு போகப்பட்டனர். ஆனால் அவர்களைக் கொலை செய்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்துவிட்டார்கள். வெள்ளைவானில் கொண்டுபோன தமிழர்களின் பிரேதங்களைக் காட்டினாலாவது அவர்களின் பெற்றோர், கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், சகோதரர்கள் அந்தியட்டியை முடித்துவிட்டு செத்துப் போய்விட்டார்கள் என்று நிம்மதியாக இருப்பார்கள். இப்பொழுது இருக்கிறார்களோ? இல்லையோ? என்றுகூடத் தெரியாமல் அவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் சித்திரவதை கொடுமையானது.ஒரு மனிதனை துன்புறுத்துவதினூடாக அவர் சார்ந்த குடும்பத்தை, சமூகத்தை வேதனைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் சித்திரவதைக்காரரின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.அடுத்தது மிகவும் மோசமான அல்லது கேவலமான ஒரு செயலாக பெரு வடிவம் எடுத்திருக்கும் சித்திரவதை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்.பெண்களை துன்புறுத்துவதன் மூலமாக ஒரு சமூகத்தை துன்புறுத்தும் அடையாளமாக சித்திரவதை செய்பவர்கள் சாதிக்க நினைப்பது பெரும் கொடூரம். இந்தவகையில் எமது தமிழ் சமூகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி தீராத வலியை இன்னும் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். சிங்கள இராணுவத்தினரின், பொலிசாரின், இந்தியப் படையின் ஆயுதம் தாங்கிய இயக்கப் பெடியன்களின் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு செத்து அழிந்துபோன பெண்களின் ஆவிகளின் அலறல்கள் இன்னும் எமது வடக்குக் கிழக்குப் வெளிகளில் ஏன் இலங்கை முழுவதிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை உணர முடியாதவர்கள் கடும் மனம் படைத்தவர்கள்.பாலியல் ரீதியான சித்திரவதை மூலம் சமூகத்தில் பெண்களை ஒதுக்கும் ஒரு நடவடிக்கையை சித்திரவதையாளர்கள் மேற்கொள்கின்றனர். 'அவவோ, அவ இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவவாம்' என்ற இழிபழியுடன் முதுமை வரைக்கும் ஏன் சாகும்வரைக்கும் பெண் அந்த சமூகத்தில் வாழவேண்டிய அவலம்தான் இலங்கை முழுவதும் காணக்கிடைக்கிறது.எங்களது தமிழ்க் கிராமங்களில் இவ்வாறான அழி நிலையோடு, கண்ணீரோடு காலத்தைக் கழிக்கும் பெண்கள் உண்மையில் பாவமானவர்கள். உலகம் முழுவதும் இராணுவம் அடர்ந்தோதும் இடங்களில் பெண்கள் ரீதியான சித்திரவதைகள் இந்த நிமிடம்வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைதுசெய்யப்படும் பெண்கள் மீதான, ஆண்கள்மீதான சித்திரவதைகள் அமெரிக்க 'குவாண்டனோமோ' சிறை சித்திரவதையை ஒத்தது. இலங்கை சித்திரவதைக் கூடங்கள் என்றே சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை சோதனை செய்த வைத்தியர்கள் தங்கள் கைப்பட அறிக்கைகள் எழுதியிருக்கின்றனர். மண்டையின் பின்பகுதியில் குண்டூசி போன்ற சிறிய ஆணிகளால் அடித்து மூளையின் சவ்வுகளை சிதைத்தல், மலத்துவாரத்தில் சிறிய பைப்புக்குள் வைத்து முட்கம்பியை உள்ளேவிட்டு பைப்பை இழுத்துவிட்டு முட்கம்பியை தனியே குத வாசல் கிழிந்து வரும்படி இழுத்தல், ஆண் உறுப்பில் படிப்படியாக கூடுதல் மின்சாரம் பாய்ச்சுதல், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுவிட்டு பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பை முகத்தில் கட்டி குதிக்காலில் அடித்தல், பெண் உறுப்பில் காரமான மிளகாய் தூளை அடைத்தல், பெண்ணின் முலைக்காம்பில் மின்சார வயர்களைப் பொருத்துதல் என்று நீழுகின்ற சித்திரவதைகளில் மிகக் கடுமையானது மின்சார அடுப்பில் உயிரோடு ஒருவரைப் போட்டு கொல்லுவதை அடுத்தவர் பார்க்க வைத்தல் என்று சித்திரவதைகளின் கொடூரத்தைக் கண்ணால் கண்டு, தான் அனுபவித்தவற்றை எனக்கு அவர் சொன்னபொழுது அவர் உண்மையில் அழவில்லை. நான் தான் நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். அவர் அனுபவித்தவர். நான் கேட்பவன். இந்த சித்திரவதைகளின் கொடூரம்பற்றி அவர் எத்தனைபேரிடம் விரிவாக சொல்லி இருப்பார்.சித்திரவதை செய்பவரும் ஒரு மனிதர்தானே. அவருக்கு எப்படி சித்திரவதை செய்யும்போது மனிதர்கள் கதறும் ஒலியைக் கேட்டுவிட்டு இரவில் தூக்கம் வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
சித்திரவதை செய்யும் கூடத்தின் பொறுப்பாளர் எப்படி வீட்டில்போய் தனது குழந்தைகளுடன், மனைவியுடன் கொஞ்சி மகிழ்கிறார். எப்படி அவர் மனைவியுடன் சந்தோசமாக உடலுறவில் ஈடுபடுகிறார்? என்ற கேள்விகளை என்னால் தவிர்க்க முடியாமல் உள்ளது. உண்மையில் அவர் மனம் மரத்துப்போன ஒருவராக இருக்கிறாரா?

உலகின் எல்லா நாடுகளிலும் சித்திரவதைக்கென்றே இலங்கையில் இருப்பது போன்ற அதிகாரிகள் இருக்கின்றனர். அகதி கேஸ் வேக்கரான ஒரு நண்பரிடம் திருகோணமலையில் இருந்து ஒரு பெண் அகதியாக தஞ்சம் கோருகின்ற வழக்கோடு இங்கு லண்டன் வந்திருந்தார். அவர் தனது உடலை கேஸ் வேக்கருக்கு காண்பித்தார். பொலிசார் அவரை கைதுசெய்து விசாரணையின்போது கொழும்பில்வைத்து அவளின் உடல் முழுவதும் சிகரட்டால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.தொடை, மார்பகம், வயிறு என்று எல்லா பகுதிகளிலும் ஒரு இடம் விடாமல் சிகரட்டால் சுட்ட தழும்புகள் இருந்திருக்கின்றன அவரது உடலில். அதைவளின் முகத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது இவ்வளவு சித்திரவதை தழும்புகள் அவள் உடலில் இருக்கின்றன என்று. லண்டனில் நான் சந்தித்த (தொடக்கத்தில் குறிப்பிட்ட) அவர் இப்போது எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். அவரின் 34 வயது வாழ்க்கை சித்திரவதையினால் சீரழிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான். மனைவி இருக்கிறார். திருமணமாகி 4 வருடம். எதிர்காலம் சந்தோசமாக இருக்கவேண்டிய காலத்தில் ஆணுறுப்பில் அவர்கள் செய்த சித்திரவதையினால் அவருக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கான வலிமை இல்லாமல் போய்விட்டது.
எண்ணிப் பாருங்கள் அந்த இளம் குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது?
இவ்வளவு மிகக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த அவர் மற்றும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட இளம்பெண் ஆகியோர் புலிகள் இல்லை என்றும் பயங்கரவாதி இல்லை என்றும் பின்னர் சித்திரவதை செய்தவர்களால் விடுவிக்கப்பட்டனர்.கொடூரம் எப்படி நடக்கிறது பாருங்கள். உடலை சிதறி குதறிவிட்டு பிறகு 'சொறி, நீங்கள் குற்றவாளி இல்லை' என்று தைரியமாக எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லும் மனித அரக்கர்களை என்ன என்று சொல்வது? இதில் ஒரு மனிதன் மீதான தவறு எத்தனை பேரின் வாழ்வை பாதித்து சீர்குலைக்கிறது. இனி அவர் மீண்டு வருவதற்கு எத்தனை லட்சம் ரூபாவை செலவழிக்க வேண்டும்? அதனை யார் கொடுப்பார்கள்? சொத்துக்கள் உள்ளவர்கள் இந்தியாவில் போய், வெளிநாடு போய் நோயை குணப்படுத்த முனைகின்றனர். பணம் இல்லாத ஏழை எங்குபோய் சித்திரவதையினால் ஏற்பட்ட நோய்க்கு மருந்து தேடுவான்? எந்தவிதமான மாற்றீடும் இலங்கையில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதில்லை. சித்திரவதை முடிந்தவுடன் அவர்மீது குற்றம் இல்லை என்றால் அவரை தூக்கி ஒரு புதருக்குள் வீசிவிட்டு போய்விடும் நடைமுறைதான் இலங்கையில் இருக்கிறது. சித்திரவதைக்கு உள்ளான இன்னொரு தமிழரைச் சந்தித்தேன். அவருக்கு இலங்கையிலுள்ள சித்திரவதைக்கூடமொன்றில் வைத்து அடித்து முழங்காலை சிதைத்துவிட்டனர். நல்ல திடகாத்திரமாக இருந்தவர் ஊன்றுகோலுடன் வந்தபோது மனைவி அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
இப்பொழுது லண்டன் வந்து அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்தவுடன் மனைவி கொழும்பிலிருந்து உறவு கொண்டாடப் பார்க்கிறா. அவவுக்கும் லண்டன் வரவேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாம். இவரைவிட்டுப் பிரிந்துபோய் வேறொருவருடன் லிவ்-இன்-ரு-கெதர் வாழ்க்கை நடாத்தி வந்தவா இப்பொழுது லண்டனுக்கு வரப்போகிறேன் என்று துரத்திவிட்ட கணவனை நச்சரிக்கிறாவாம்.
சீரழிந்துபோன குடும்ப வாழ்வு, சீரழிந்துபோன சமூக வாழ்வு என்று சித்திரவதைக்கு உட்பட்டவர்கள் படுகின்ற பின் அவஸ்தை சாதாரணமானது அல்ல.
வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு அல்லலுற்ற வாழ்வாக எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வு அலைக்கழிந்துபோய்க் கிடக்கிறது இலங்கையில். யுத்தம் முடிந்துவிட்டது இலங்கையில், ஆனால் சித்திரவதைக் கூடங்கள் இன்னமும் மூடப்படவில்லை. சித்திரவதை செய்யும் அதிகாரிகள் இன்னமும் அந்த வேலையினைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வேதனை, துன்பம், துயரம், வெறுமை மட்டுமே சித்திரவதையினை எதிர்நோக்கிய மனிதரின் எஞ்சிய வாழ்க்கையாக இருக்கிறது. மனிதரின் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான தேசமாக இலங்கை எப்போது மிளிரப் போகிறது. உண்மையில் ஏக்கத்தோடும் மன வலிமையோடும் காத்திருக்கிறோம் சித்திரவதை இல்லாத ஒரு இலங்கையைக் காணுவதற்கு.

Monday, 19 July 2010

பயம் எனும் கொடிய நோய்


வாழ்வில் பயப்படாத நாளே கிடையாது நமக்கு. பயம் எங்களை தினமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பயத்தினூடாகவே நாம் வளர்ந்திருக்கிறோம். அச்சம் கொள்ளுதல் என்பது எமது உடலோடு மனதோடு கலந்துவிட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது.எல்லோருக்கும் எங்களைப் பயங்கொள்ள வைத்தே வாழப் பழக்கி விட்டிருக்கின்றனர். எனது பயம் அம்மாவின் பிரம்பில் இருந்து ஆரம்பிக்கிறது.குழப்படி செய்தால் அம்மா அடிப்பா என்கின்ற பயம் ஒரு கொடும் பயமாக தொடர்ந்துகொண்டே வந்தது. பயத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அம்மா என்மீது தன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தா.வாத்திமாரின் பிரம்புகளுக்கு இன்னமும் அச்சம் ஊட்டும் தன்மை இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதிலும் மிகவும் அச்சமூட்டுபவராக தில்லையம்பலம் வாத்தியாரும் அவருடைய பிரம்பும் இருந்துகொண்டே இருந்தது. பயம் மனித உணர்ச்சிகளை மேவி நிற்கக்கூடிய ஒன்று. பயத்தின் ஊடாக எங்கள் எதிரிகள் சாதித்துவிடுபவை ஏராளம்.வலிமையில்லாதவர்களை வலிமையுள்ளவர்கள் எப்பொழுதும் பயம் காட்டியே வைத்திருக்கிறார்கள். ஊரில் உள்ள சண்டியர்கள், கப்பம் வாங்குபவர்கள், தாதாக்கள் எல்லோரும் இந்தப் பயத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளனர்.இயக்கப் பொடியன்களும் ஏ.கே.47 துப்பாக்கிகளை தோளில் போட்டுக்கொண்டு சைக்கிள்களில் சுற்றி வருவார்கள். சிலர் துப்பாக்கியை வெளியில் தெரியக்கூடியவாறும் வைத்திருந்தார்கள். அவற்றை கண்டும் மக்கள் பயப்பட்டனர்.தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களைக் கண்டு பேரச்சம்கொள்ளும் ஒரு நிலமை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. உண்மையில் நான் இந்த நிலமையை 'யாழ்தேவி' புகையிரதத்தில்தான் கண்டிருக்கிறேன்.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரைக்கும் நன்றாக தமிழில் பாட்டுப்பாடி சத்தமாகப் பேசிக்கொண்டு வருகின்ற எத்தனையோ பேர் மதவாச்சி வந்தவுடன் பேசாமல் இருப்பார்கள்.சிங்களவர்களின் ஊர் வந்துவிட்டது என்ற பயம்;.பயத்தில் கருகி உறைந்துபோகின்ற எத்தனையோ மனிதர்களைக் கண்டிருக்கிறேன்.எமது கிராமங்களை சிங்கள இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்து கொண்டுபோகும்போது பயத்தால் உயிர் பதறிப்போகும்.
அப்பாவி மக்களைக் கைதுசெய்து கொண்டுபோய் 'தலையாட்டிகள்' என்ற காட்டிக் கொடுக்கும் தமிழர்களுக்கு முன்னால் நிறுத்தும்பொழுது பயம் ஒன்று வந்துபோகுமே அது சொல்லில் எழுதிவிட முடியாத கொடுமை.தலையாட்டிகளின் முன் நின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு தலையசைவில் அந்த மனிதனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். என்ன பெரிய கொடுமை.
அச்சத்தால் இரத்தம் உறையுமே. அது அங்கு நடக்கும்.இன்னும் ஊர்களில் நிம்மதியாக வாழ முடியாத பயத்தினால்தான் எத்தனையோபேர் வெளிநாடுகளுக்கு ஓடி வருகின்றனர். கொழும்பில் இருந்தால் வெள்ளை வான் தூக்கிவிடுமோ என்ற பயத்தில் லண்டன்வந்த பலரை எனக்குத் தெரியும்.யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது, மட்டக்களப்பில் வாழ முடியாது, கொழும்பில் வாழ முடியாது உயிர் அச்சம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை பத்து லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி கனடா, லண்டன், அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து, நோர்வே, ஜேர்மனி, ஹொலண்ட், பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, டென்மார்க், சுவிட்சலாந்து என்று திக்கு திக்காகப் பிரிந்துபோய்க் கிடக்கிறார்கள். எல்லோரும் சுகபோகமாக வாழவில்லை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கையைவிட்டு ஓடியர்கள்தான் இதில் 99 வீதமானோர். ஒரு வீதம்தான் படிப்புக்காக வந்தவர்கள்.
இலங்கையில் வாழ முடியாத உயிர் பயம் காரணமாக ஒரு தலைமுறைத் தமிழர்களை விரட்டிவிட்டிருக்கிறது யுத்தமும் சிங்கள தேசமும்.மட்டக்களப்பில் ஒரு அரசியல்வாதி மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அச்சப் பேச்சும் இன்னும் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.பொதுமக்களைப் பார்த்து சொல்கிறார் 'அரசாங்கத்துக்கு வாக்களித்தவர் யார், வாக்களிக்காதவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவாராம்'. வாக்குச் சீட்டில் என்ன புகைப்படமா ஒட்டுகிறார்கள்? இது அச்சப்படுத்துகின்ற ஒரு அடாவடித்தனம் இல்லாமல் வேறென்ன?
உண்மையில் உயிர் அச்சம் என்ன என்பதனை நான் உயர்ந்தது 'சுடரொளி' குண்டுவீச்சுக்கு பிறகுதான்.'சுடரொளி' இற்கு ஒரு கட்டுரையை கொடுப்பதற்காக சென்றபொழுது யாரோ இரு இளைஞர்கள் 2 கைக்குண்டை வீசவும் நான் கேற்றடிக்குப் போகவும் நேரம் சரியாக இருந்தது.
எனக்குப் பக்கத்தில் கிரனைட் உருண்டுகொண்டு வந்தது. ஒரு 10 செக்கன்தான் ஓடினேன். அது வெடித்தது. காலில் சிறு காயம். எனக்குப் பக்கத்தில் நின்ற செக்கியூரிட்டி ஜோர்ஜ் ஐயா நெஞ்சு வெடித்து செத்துப்போனார்.அதற்குப் பிறகு பயம் காரணமாக இரவில் எனக்குத் தூக்கமே வருவதில்லை. எங்களது வீட்டுக்கு தகர கேட் போட்டிருந்தோம். அது சும்மா தட்டுப்பட்டால்கூட எழுந்து உட்கார்ந்துவிடுவேன் பயம்.இரவு என்பது எனக்கு அச்சத்திற்குரியதாகவே இருந்தது. சிறிய சத்தங்களும் எனக்குப் பயம்கொள்ளும்படியே இருந்தது. வத்தளையில் இருக்கும்வரை எனக்கு இரவு சந்தோசமானதாக இருந்ததில்லை. லண்டன் வந்த பின்னர்தான் பயமில்லாத நித்திரை வந்தது எனக்கு.இப்படி எத்தனைபேர் இன்னும் உயிர் பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நினைக்கும்போது என்னால் உணர முடிகின்ற பயம் இது.'பயப்படாதீங்கோ. ஒன்றும் நடக்காது'. என்ற ஆறுதல் எல்லாம் எடுபடாது. பயம் என்பது மனதை அறுக்கின்ற ஒரு விடயம். அதனைவிட்டு மீளவேண்டுமானால், ஒரு மனிதன் தனது மன அமைதியின் ஊடாகவே முடியும். ஆனால் தமிழனாக பிறந்துவிட்டு சிங்களவனோடு இந்த அளவுக்கு முரண்பாடுகொண்டுவிட்டு அதனை சுமூகமாகத் தீர்க்காதவரை அச்சம்வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சர்வாதிகாரம் இருக்கும்வரை தமிழர்கள் உயிர்பயம் இல்லாமல் வாழ முடியும் என நான் நினைக்கவில்லை.லண்டனில் நான் சந்தித்த அகதி ஒருவர் அழுதுகொண்டே இருந்தார். 'ஏன்' என்று நான் கேட்டேன்.'பயமா இருக்கு', என்று கூறினார். 'என்னத்துக்கு' என்றேன். 'பொலிஸ் சைரன், அம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலிக்கு', என்றார்.பாருங்கள் அவர் இந்த உலகத்தில் வாழும்வரை பயந்துகொண்டும் அழுதுகொண்டும் இருப்பார். ஏனெனில் இலங்கையில் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டவர்.
லண்டன் வந்தபிறகும் பொலிஸ் காருக்கும் அம்புலன்ஸ் வண்டியின் சத்தத்திற்கும் அச்சப்படுகிறார்.லண்டனில் பொலிஸ் காரும் அம்புலன்ஸ் வண்டியும் ஒரு நாளுக்கு பல தடவைகள் றோட்டால் போய்க்கொண்டிருக்கும். ஆகவே அந்த தமிழரின் நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.அதே உயிர் பயத்தோடு இங்கு வந்த பலர் மனநோய் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். பயத்தின் அடுத்த கட்டம் மனநோய் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடும்.இங்கு டொக்ரர் சசிகாந்த் உடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது யுத்தம் பலரை மனநோயாளியாக்கியிருக்கிறது என்று சொன்னார்.தங்கள் உயிர்களை துப்பாக்கிதாரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பட்டபாடுதான் இந்த மனநோய்க்குக் காரணம் என்றார் அவர்.அத்தோடு ஒரு உதாரணமும் சொன்னார் அவர். நாயொன்று ஒரு மனிதனை கடித்துக் குதறுவதற்காகத் துரத்துகிறது. அப்பொழுது அச்சத்தின் காரணமாக அவன் ஓடுகிறார்.
அது பயம். அந்த நேரம் பயம் காரணமாக மூளையின் தூண்டுதல் காரணமாக சுரக்கின்ற சுரப்புக்கள், மனப் பதட்டம் என்பன நாய் மனிதனைவிட்டுப் போன பிறகு சாதாரண நிலமைக்கு வந்துவிடும். ஆனால் அதே மனப்பதட்டம், சுரப்பிகள் ஒவ்வொரு நாளும் வேலை செய்தால் மனதின் நிலமை என்னவாகும். மனம் சிதைந்துபோகும்.
இப்படியான மனிதர்கள் எத்தனையோபேர் நம்மத்தியில் இருக்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகிவிடுகின்றனர்.இங்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கான மதிப்பு இருக்கிறது. ஒருவரை அச்சப்படுத்துவது கிறிமினல் குற்றமாகும். அதிலும் உயிர் தொடர்பான அச்சம் விடுவது பாரதூரமான குற்றமாகும்.இலங்கையில் உயிர் எடுக்கவென்றே மக்கள் திரியும்போது இந்த உயிர் பாதுகாப்பு உண்மையில் தமக்கான பாதுகாப்பாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.ஆனால் இங்கும் சண்டியர்கள் ஆயுதங்கள், வாள்கள், பொல்லுகளுடன் திரிந்து தமிழர்களை அச்சப்படுத்துபவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.இப்பொழுது பொலிசாரின் கெடுபிடி காரணமாக அவர்கள் கொஞ்சம் அடங்கிப்போய் இருக்கிறார்கள்.
ஊரில் துப்பாக்கிகள், வாள்களோடு பழகியவர்கள் லண்டன் வந்தும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.பொலிசாரின் ஒரு ஒப்பறேசனில் தமிழர்களிடம் பிடிபட்ட ஆயுதங்கள் என லண்டன் தொலைக்காட்சி செய்திகளில் காண்பித்தார்கள்.என்ன நினைக்கிறார்கள் தமிழ் சண்டியர்கள். ஊரில்போல லண்டனிலும் தங்களிடம் பயந்து வாழ வேண்டும். கப்பம் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இங்கு சண்டியன்களாக 18 வயது பொடியன்கள் இருப்பதுதான் கொடுமையான விடயம்.அச்சம் எப்பொழுதும் எம்மை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விடயம்தான்.தைரியம் மட்டுமே அச்சத்தை விரட்டுகின்ற ஒரே ஒரு வழி.
ஆனால் அந்த தைரியத்தையும் மீறி அச்சமூட்டுகின்ற எத்தனை விடயங்கள் மனிதனை துரத்துகின்றன.எத்தனைபேர் உயிர் அச்சத்தினால் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்துபோய் பரதேசிகளாக மாறிவிட்டனர். உண்மையில் பயம் என்பது எம்மை ஒவ்வொரு நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.அதனை வெல்வதற்கான வழிகளைத்தான் ஞானிகள் சொல்கிறார்கள்.இந்த உலக வாழ்வில் பணம், புகழ், பூமி இவற்றை தக்கவைத்துக் கொள்ள மற்றவரை அச்சப்படுத்திக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.தன்னிடம் உள்ளவற்றைப் பறித்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக மற்றவனை இல்லாமலாக்கிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது இலங்கையானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, விதி ஒன்றுதான்.

Saturday, 17 July 2010

கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?


இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை.
கவிஞரை நான் இறுதியாக சமாதான நேரத்தில் 2006 இல் பொற்பதியில் சந்தித்தேன். நீண்ட நேரமாக என்னோடு கதைத்துக்கொண்டு இருந்தார்.
அவரின் பேச்சில் தமிழர் சிங்களவர் மத்தியில் வேலை செய்யவேண்டிய புரிந்துணர்வு பற்றியதாகவே அநேக விடயங்கள் இருந்தன. தனக்கு இருக்கும் சீனி வியாதிபற்றியும் பேசினார். என்னோடு மிகவும் அன்பாகவே இருந்தார். தொடர்ந்து நாங்கள் கதைக்கவேண்டும் என்றும் சொன்னார். என்னோடு பேசிய அன்று புலிகள் தொடர்பாக எதுவுமே பேசவில்லை. 'வெளிச்சம்' சஞ்சிகைக்கு கவிதை அனுப்பச் சொன்னார். இரண்டு கவிதைகள் அனுப்பினேன். இரண்டும் பிரசுரமாகியிருந்தன.
யுத்தத்தின் இறுதிக் காலத்தில் வெளிச்சம் 100 வது இதழில் பிரசுரிப்பதற்கு ஒரு சிறுகதை தரும்படி இங்கே லண்டனில் உள்ள நண்பர் ஒருவரூடாக கேட்டிருந்தார். நான் 'புளியங்குளம்' கதையைக் கொடுத்திருந்தேன். அது பிரசுரமாகியிருந்தது. ஆனால் வெளிச்சம் 100வது சஞ்சிகை யுத்தத்தில் அகப்பட்டு அது வன்னியைவிட்டு வெளியில் வரவில்லை என்பதுதான் சோகம். புதுவையின் 'பூவரசம் வேலிகளும் புலுனிக் குஞ்சுகளும்' கவிதைத் தொகுப்பைப் புரட்டும்போது மனது பாரமாகிக் கிடக்கிறது.
இந்த யுத்தத்தில் ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை இழந்துவிட்டோமோ என்ற கவலை மனதை அழுத்துகிறது. புதுக்கவிதைகள் போர்க்காலக் கவிதைகள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. புதுவையின் கவிதைகள் போராட்டத்தை முன் உந்தித் தள்ளியது. அது மக்கள் மத்தியில் பெரும் பெரும் தாக்கத்தை மன உத்வேகத்தை அளித்தது.
ஆனால் அந்த நல்ல தமிழ்க் கவிஞன் எங்கே இருக்கிறான், உயிருடனோ அல்லது இறந்துவிட்டானோ என்று தெரியாமல் இருப்பதுதான் பெரும் கவலை. புலிகளின் பெரும் புள்ளிகளே அரசின் அரவணைப்பில் இருக்கும்போது ஒரு கவிஞனை காணாமல் ஆக்கியிருப்பது பெரும் கொடுமைதான்.

'இத்தனைக்குப் பின்னும்
கொழும்பும் எமதென்றே
குறிப்பெழுதி
இடையிருந்த எல்லைதகர்த்து
வந்தோம் உங்கள் வாசல்
ஆணியறைந்த காலத்துயர்
மீண்டும் கையிணையும் மகிழ்வில்
அந்தப் பெரும்தெரு ஏறிவந்தோம்
துருப்பிடித்திருந்த கபாடம் திறந்து
தூசி படிந்த தெரு கழுவி
புன்னகை சுமந்தோராய்
ஊறிய நினைவில் வந்தோம் தலைவாசல்
சகோதர உறவுகளுடன்
முகிழ்த்து மலர்வோம் என
நீங்களனுப்பிய அழைப்பிருந்தது நெஞ்சில்
அச்சமில்லையெனும் நம்பிக்கையும்
உலகு உறவுகளால் நிரம்பியதென்ற உணர்வும்
அந்த வாசகத்தின் மேலே ஒளிர்ந்தது.
வரும் வழியெல்லாம் வாகனம் நிறுத்தி
வெள்ளையப்பம், கிரிபத், மாசிச்சம்பல்,
கித்துள்பாணி என
பல காலமுண்ணாப் பலகாரமுண்டோம்.
அனுராதபுரத்தில்
மேலிருந்திறங்கித் தகுமெனச் சொல்லி
அதுவே தருணமென்றுரைத்து
எல்லாள மகாராசனும்
கெமுனு இளவரசனும்
ஒன்றாக நின்று வாழ்த்தியனுப்பினர் வழி
இருளழித்து ஒளி தூவி வந்தன எம் தேர்கள்
பாதி வழி வந்து எதிர்கொண்டன
உம் பல்லக்குகள்,........

என்று தொடரும் புதுவையின் இந்தக் கவிதையை 2003 ஆம் ஆண்டிலி இருந்து எனது பையில் வைத்துக்கொண்டு இன்றுவரை திரிந்துகொண்டிருக்கிறேன் நான். இதுவரை எவரும் 'இத்தனைக்குப் பின்னும்' என்ற புதுவையின் கவிதையைப் போல எழுதவே இல்லை. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி 'ஹிரு' அமைப்பினர் தமிழ்க் கலைக்கூடல் என்ற நிகழ்வை கொழும்பில் புதிய நகரசபை மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தனர். வன்னியிலிருந்து கலைஞர்கள், கவிஞர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்வை 'ஹெல உறுமய' உறுப்பினர்கள் குழப்ப முயன்றனர், முடியவில்லை. இந்த ஒன்றுகூடல் தொடர்பான புதுவையின் பதிவு இந்தக் கவிதை மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்த கொடூர யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் முடிவடைந்த பின்னரும் திரும்பும் இடமெல்லாம் வெறுமையாகவே எல்லாம் இருக்கின்றன.

யுத்தத்தின்போது கொல்லப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட சித்திரவதைக்குட்பட்ட ஆயுதம் இல்லாத அப்பாவிகள்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற உணர்வு மட்டுமே சனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்புச் செயலர் போன்றோருக்கு இருக்கிறது. இலங்கை மிகவும் அபாயகரமானதோர் நிலமைக்கும் சர்வாதிகாரத்துள்ளும் போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. தொடர்மாடி வீடுகள், பிச்சைக்காரர்கள், நகர அபிவிருத்தி என எல்லாமே பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்சவுக்கு கீழே போவது எதிர்காலத்தில் ஒரு தனிமனித சர்வாதிகார இராணுவ பின்புலத்திற்குள் இலங்கை முழுமையாக தள்ளப்படப்போகிறதோ என்ற ஒரு பயக்கெடுதி வருகிறது.
ஒவ்வொருவரையும் ஒரு மறைமுகமான இராணுவத்தின் கண் பின் தொடரப் போகிறதா?

இடி அமீன் அப்படித்தான் செய்தார். உகண்டாவை முழு ஊழலுக்கும் அவருடன் சேர்ந்த இராணுவத்தினர் அனுபவித்து மகிழவும் ஆக்கினார். ஒரு கூட்டத்திற்குப் போனால் அங்கு அவரின் கண்ணில்படும் பெரும் பணக்காரர்களை அடுத்தநாள் ஏழையாக்கிவிடுவார். அவரின் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் அழகான பெண்கள் இருந்தால் அன்று இரவு இடி அமீன் படுக்கை அறையில் அந்தப் பெண் இருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அவருடன் இருந்த இராணுவத்தினர் முழு ஒத்தாசை வழங்கினர். அதனால் இராணுவத்தினரும் சுகபோகமாக வாழ்ந்தனர். பிறகு நாடே நலிந்து நாசமாகிப் போய்விட்டது.

நாட்டின் அபிவிருத்தி என்று நாட்டு மக்கள் சந்தோசப்படும்படி அமையவேண்டும். மக்கள் பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கும்படி ஆகக்கூடாது.

வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் மக்கள் சிதறிப்போய் இருக்கின்றனர். வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. சபையை எதிர்க்கும் சக்தியில் ஒரு கொஞ்சத்தையேனும் வன்னி மக்களின் பக்கம் திருப்புவாரேயானால் அங்கு வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கலாம். வன்னிப் பெருநிலம் காடுபத்திப்போய் கிடக்கிறது. மக்கள் இல்லா மயான வெளியாக இருக்கும் பூமிபற்றி யோசிக்கும்போது 1996 ஆம் ஆண்டு வெளிச்சம் சஞ்சிகையில் புதுவை எழுதிய கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.

'நிலவு நேராக தலைக்குமேல் நிற்க
ஓ வென்று இரைகிறது காற்று
தூரத்தே
இரணைமடுக்காடு பனியில் நனைகிறது
பழைய முருகண்டித் தனியன் யானையாய்
அருகில் ஒருவரின்றி நான்
சுற்றமிழந்து எத்தனை நாளாச்சு?
அயல் வீட்டில் குடியிருந்த அவர்களை
எங்கு தேடுவேன்?
சிதறி ஓடியது தெரியும்
பிறகு என்னானார்கள் அவர்கள்?
வாய்க்கால் நீராய்ப் பெருகி வழிந்து
வந்தடைந்தது ஓரிடமல்லவே
திக்கொன்றாய் சிலும்பிப்போனோம்.
மீண்டும் ஊர் புகும் நாளில்
எவரெவர் கூடி உள்நுழைவோமோ?
உயிரோடிணைந்த உறவுகளே!
என் அயலிருந்தோரே!
எங்கே போய்விட்டீர்?
காண ஆசை மிகுதி ஓடி வருக!
இரணைமடுக்காடு அதிரக் கத்தவேண்டும்போல
உள்ளே ஒரு வேட்கை
இன்று பங்குனித் திங்கள்
பொங்கலுக்கென்றே பிறக்கும் நாள்.
உச்சி வெயில் உருக்கிலும்
தார் உருகும் தெருவில் நடப்போம்
காலிற் செருப்பும் இருக்காது.
காவடியும் பாற்செம்பும் சுமந்து
ஊரின் ஓரிருவர் நடப்பர்
உறவெல்லாம் முன்னும் பின்னும் அணிவகுத்து
கோயில் புக மணிச்சத்தம் வரவேற்கும்.
இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்'

வன்னி இடப்பெயர்வு தொடர்பான மிக துல்லியமான புதுவையின் பதிவு இது. பங்குனி மாதம் வன்னி எங்கும் பெரும் குதூகலமாகத்தான் இருக்கும். எங்கள் வாழ்வில் அனுபவித்த நாட்கள் இன்னும் மனதுக்குள் அப்படியே கிடக்கிறது.
முள்ளியவளைக்குப் போனால் எங்களுக்கெல்லாம் மனதுக்கு சந்தோசம் மட்டுமே கிடைக்கும்.
பங்குனி மாதத்தில் எங்கள் வன்னிக் காற்றில்கூட எத்தனை எத்தனை வாசனை. இலுப்பைப்பூ பூக்கும் அற்புதமான காலம். காற்று இலுப்பைப்பூ வாசனையை அள்ளிக்கொண்டு வந்து எங்கள் நாசியில் கொட்டும். இலுப்பைப்பூ மணத்தை உணர்ந்தவர்கள் வன்னி மக்கள். எத்தனை பேருக்கு அதன் வாசனை இன்னும் நாசிக்குள் கிடக்கும்.
பங்குனி மாதத்தில்தான் பனம்பழம் பழுத்து சொரியும். காட்டு ஈச்சம்பழம் பழுத்துக்கிடக்கும். நாவல்பழம், வீரப்பழம், கூழாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் என்று எங்கள் முள்ளியவளை முழுக்க காற்றில் வாசனை வாசனையாகவே இருக்கும். மாம்பழம் பழுத்துச் சொரியும் காலமிது. எங்கள் பாதைகளில் கால்கள் மணலில் புதைய நடந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பங்குனித் திங்கள் காலத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றால் முல்லைத்தீவு, வற்றாப்பளை, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருக்கு பகுதி மக்கள்தான். வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் ஒவ்வொரு பங்குனித் திங்களிலும் களைகட்டும். அப்படியே பங்குனி முடிந்தால் வைகாசிப் பொங்கல் முழுக்க எங்களுக்குக் கொண்டாட்டம்தான். எல்லாம் அழிந்துபோய்விட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதுதான் கொடுமை.

தெற்கைப்போல வடக்கையும் கிழக்கையும் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம். நாங்களும் மனிதர்கள்தானே என்றுதான் சொல்கிறோம்.புதுவை சொன்னதுபோல,

'..இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்'

இரணைமடுக் குளக்கரையில் தனியே புதுவை மட்டும்தான் குந்தியிருந்து உறவுகளைத் தேடுவதுபோல் தெரிகிறது. ஆனால் புதுவையை நாங்கள் தேடுகிறோம். கவிஞனே நீ எங்கு இருக்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா அல்லது இறந்துவிட்டாயா? அல்லது எங்காவது சிறையிலா? அல்லது தனிப்பட்ட முகாமிலா? தெரியவில்லை. ஒரு கவிஞனாக இருந்து புதுவை சாதித்தது அளப்பரியது. புதுவை இயமனுக்கு எழுதிய கவிதை இது.

'காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் 'அப்பு' எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.'


உண்மையில் புதுவையின் உயிர் மீதான துணிச்சல் இப்படி இருந்திருக்கிறது. இறப்பது என்பது வேறு. காணாமல் போவதென்பது பெருங்கொடுமை. புதுவை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் சொல்லவேண்டும். 'விரைவில் முடியாதென் கணக்கு' என்று புதுவை சொன்னது மட்டும் தான் எங்களுக்குத் தென்பாக இருக்கிறது.

ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை அவ்வளவு சீக்கிரம் இழப்பதற்கு எனது மனது தயாராகுதில்லை. ஏனெனில் வன்னியில் நாங்கள் இழந்தது கோடி.

Wednesday, 7 July 2010

பட்டினி எனும் பெருங்கொடுமை


'தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் கோபம் இலேசதானதல்ல. சாப்பாடு இல்லாமல் உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் பசியினால் இறந்துபோகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு. ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5 கோடி பேர் தினமும் பசியினால் துடி துடித்துக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பது பெரும் துன்பம்தான். பசிக்காகவே மனிதன் உழைத்து உழைத்து சேமிக்கிறான். பசி மட்டும் இல்லாவிட்டால் மனிதனின் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கும்.
ஒரு நேர உணவு இல்லாவிட்டால் எப்படி துடி துடித்துப் போகிறோம். பசியும் தாகமும் எங்களை பின் தொடருகின்றவை. அந்த இரண்டும் பூர்த்திசெய்யப்படாத எத்தனைபேர் எங்களின் காலடிக்குள் கிடக்கிறார்கள்.
பசியையும் தாகத்தையும் எங்களுக்கு பூர்த்தி செய்யக் கிடைத்திருப்பதே பெரும் கொடையாகும். மற்றவர்களின் பசியை தீர்க்க நாங்கள் என்ன செய்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகத்தில் 15 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் செத்துப்போகிறார்கள். பசியால் இறந்துபோகின்ற அளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் அரசாங்கங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்கு என்ன செய்கின்றன. இலங்கையில் ஏழைமக்களின், அகதிகளின் வாழ்வை வளம்படுத்த எத்தனை வேலைகள் இருக்க இன்னும் ஏன் களியாட்ட நினைப்பில் இந்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். களியாட்டங்களுக்கும் வெற்றிவிழாக்களுக்கும் செலவழிக்கும் நூறு மில்லியன் ரூபாக்களை ஏன் அகதிகளின் வாழ்வு வளம்பெற செலவழிக்கக்கூடாது. இப்படி ஏன் யோசிக்கிறார்களில்லை.
ஒவ்வொரு அகதிக்கும் ஐந்து லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களின் குடும்பத்தை வாழவைக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியும். ஏன் அழிந்துபோன எல்லாவற்றையும் ஒரு வருடத்தினுள் செழிப்பானதாக்க முடியும். ஆனால் யோசிக்கிறார்களில்லை அரசியல் தலைவர்கள். களியாட்ட விழாக்கள், வேண்டாத விருது விழாக்கள், காலதாமதமான வெற்றிக்களிப்புக்களுக்கு மத்தியில் பட்டினியால் அல்லல்படும் இந்த இலங்கை தேசத்தின் தமிழ் மக்களுக்காகவும் ஒரு தடவை சனாதிபதி சிந்திக்கவேண்டும்.
வீடுகளை அவர்களே கட்டிக்கொள்ளட்டும் என்றுவிட்டு தடியும் தகரமும் கொடுக்கிற சனாதிபதி கொழும்பில் களியாட்ட செலவுகளுக்காக மில்லியன் ரூபாய்களை செலவழிக்க அனுமதிக்கலாமா? ஏன் இந்த ஓர வஞ்சனை?
பசியும் வறுமையும் வன்னியில் பெருங்கொடுமையாக இருக்கிறது. அகதிகளை பார்க்க பணம் இல்லை என்று சொல்லும் ஐ.நா. சபைக்கு தெரியும் ஒரு ஏவுகணை செய்யும் செலவுக்கு உலகம் முழுவதும் உள்ள பசித்த பாடசாலை பிள்ளைகளுக்கு 5 வருடத்துக்கு 3 வேளை உணவு கொடுக்கலாம் என்பது.
ஆனால் ஐ.நா. சபையும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருக்கிறது.
உலகத்தில் எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்றால், உலகம் யுத்தத்திற்கு செலவழிக்கும் பணத்தை இரண்டே இரண்டு நாட்களுக்கு மிச்சப்படுத்தினால் ஒரு கோடி பசித்த சிறுவர்களுக்கும் ஒரு கோடி நோயாளிகளுக்கும் விமோசனம் அளிக்க முடியும்.இந்திய உபகண்டத்தில் மட்டும் நாற்பது வீதமான மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பதனை உணரும்போதுதான் அதன் அருமை விளங்குகிறது. நாம் தினமும் மூன்று வேளை உணவு, நொறுக்கு தீனி, தேநீர், கோப்பி என்று அருந்தி சாப்பிட்டு அலுத்துப் போகிறோம். ஒரு வாய் தண்ணீருக்காக அலைந்து திரியும் மனிதர்களும் எங்களுக்குள்ளேயேதான் இருக்கின்றனர்.
வன்னியில் யுத்த நேரத்தில் புலிகளின் பகுதிகளில் இருந்த மக்கள் இன்னும் பசியின் கொடுமையைப் பற்றி சொல்வார்கள். உணவுத் தடை இருந்த நேரம் இலை, குழைகளை சாப்பிட்டு மிருகங்களைப்போல வாழ்ந்தவர்களையும் எனக்குத் தெரியும். சக மனிதர்களின் பசியைப் போக்கவேண்டும் என்ற அறிவுரை எல்லா இடங்களிலும் கிலாகித்துச் சொல்லப்படுகிறது.
போசாக்கான உணவு இல்லாமையால் உலகில் செத்துப்போகிறவர்களின் தொகை, பட்டினியால் உலகில் வருடாவருடம் செத்துப்போகிறவர்களின் தொகை மூன்று கோடி பேர் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. தினமும் எந்தவொரு நிமிடத்திலும் சுருண்டு விழுந்து பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்.
உலகில் சனத்தொகை அதிகரித்து அதிகரித்து செல்ல உணவுத் தேவையும் அதிகரித்து செல்கிறது. ஆனால் உணவு உற்பத்தி நிலங்களை பெரும் பண முதலைகள் ஆக்கிரமித்து கோடிக்கணக்கான பணம் பண்ணும் பெரிய பெரிய நிறுவனங்களை அமைக்கிறார்கள்.ஒரு பெரும் நிறுவனம் அமைக்கும் இடம், அதனை சுற்றிய நீர் நிலைகள் அழிவு, பூமி நச்சுத்தன்மையாதல் எல்லாம் சேர்த்து பேரழிவு ஏற்பட்டு நிலம் நஞ்சாகி உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மனிதன் பட்டினியை நோக்கி தள்ளப்படுகிறான்.உலகில் பட்டினிக்குள்ளாக்கப்பட்டவர்கள் கொதித்து எழும் காலம் விரைவில் வரும் என்று அறிவாளிகள் சொல்கின்றனர். பட்டினிக் கொடுமை தாங்க முடியாமல் ஏழைகளுக்கும் பணக்காரனுக்குமான சண்டை வரும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.இது இந்தியாவில் இருந்துதான் தொடங்கும் என்கின்றனர் அவர்கள். அத்தோடு இந்தியாவில் தண்ணீருக்கான யுத்தமும் இனிவருங்காலங்களில் ஏற்படும் என்ற அச்ச நிலமை காணப்படுகிறது. மாநிலங்களுக்குள் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சினை பெரும் சண்டையில் போய் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையைப் பொறுத்தமட்டில் வடக்குக் கிழக்கு மக்கள் பெரும் போசாக்குப் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கின்றனர். இரண்டு கோடி மக்கள் கொண்ட வளமான நாடான இலங்கையில் அரசியல்வாதிகளின் ஊழல் கொடுமையினால் ஒரு கோடி பேர் மட்டும் போசாக்கான சாப்பாட்டை சாப்பிட ஒரு கோடி பேர் போசாக்கில்லாத உணவை சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதற்குப் பெரிதொரு உதாரணம் தேவையில்லை.நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட பக்கத்தில் எத்தனைபேர் சாப்பிட வழியில்லாமல் உழலுகிறார்கள் என கொழும்பின் றெஸ்ரோண்ட் வெளியே பார்த்தால் தெரியும். வேறெங்கும் போகவேண்டியதில்லை.இலங்கையில் எவ்வளவு வளமான பூமி இருக்கிறது. என்னதான் விளையாது எங்கள் மண்ணில். நெல், பயறு, கரும்பு, புரதப் பயிர்கள் எல்லாம் வளரும். பயன்தரும். ஆனால் அரசாங்க எம். பி. மார்கள் தங்கள் பையை நிரப்புவதில் மட்டும் குறிக்கோளாகக் கொண்டால் எப்படி நாட்டை வளமாக்குவது? எப்படி நாட்டை செழிப்பாக்குவது? யுத்தம் யுத்தம் என்றார்கள். அதுதான் முடிந்து தொலைந்துவிட்டதே. இனியாவது ஒவ்வொரு இலங்கையரும் செல்வச் செழிப்புள்ளவராக மாற்ற முடியும். உங்களுக்கு தெரியுமா? எமது இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் நிறை குறைவாகப் பிறக்கின்றன. நாங்கள் வயிறு புடைக்க உண்ணும்போது இந்தக் குழந்தைகளை நினைக்க வேண்டும்.தானங்களில் மிகச் சிறந்தது பசியைப் போக்கும் அன்ன தானம். இதனை ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டும். தங்களது சாப்பாட்டு நேரம் ஒருவருக்காவது ஒரு பிடி உணவு கொடுத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சிலா இன்னமும் இருக்கின்றனர்.
லண்டவில் இந்துக் கோவில்களில் அநேகமாகப் பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் சாப்பாடு இருக்கும். யார் வேண்டுமானாலும் போய் பசியாறலாம்.ஆனால் இங்குள்ள சீக்கிய குருத்துவாராவில் றொட்டியும் சாதமும் கறியும் எப்போது போனாலும் இருக்கும். இது உண்மையில் பெரிய விசயம்தான். ஏனெனில் இங்கு லண்டனில் வேலை இல்லாத கஸ்டப்பட்ட இளைஞர்கள் நிறையப் பேர் உணவுக்குக்கூட வழியில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் பசியாற நல்ல விசயம் இது. எப்போது போனாலும் முகம் கோணாமல் எவ்வளவும் குருத்துவாராவில் சாப்பிட்டுவிட்டு வர முடியும். ஆனால் ஒரு விடயம். வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. விருந்தினர்களை எப்பொழுதும் சீக்கிய குருத்துவாராக்கள் வரவேற்கின்றன. அது எந்த இனம், மதம் என்று பார்ப்பதில்லை.'செல் விருந்தோம்பி வரு விருந்து' பார்த்து இருக்கும் அவை. எங்கள் காலத்தில் அதாவது 35 வருடங்களுக்கு முன்னர் எங்கள் வன்னிப் பிரதேசத்தில் யாரும் பசியால் செத்தது என்று வரலாறு இல்லை. எப்பொழுதும் வீட்டுக்குள் நெல் மூட்டை அடுக்கி வைத்திருப்பார்கள் வன்னி மக்கள். மரக்கறி தோட்டத்தில் விளையும். எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் பிச்சை என்று வெளி ஊர்களில் இருந்து வந்தாலும் வயிறாற சாப்பிட்டுவிட்டுத்தான் எங்கள் ஊர்களிலிருந்து போவார்கள்.ஆனால் இப்பொழுது எமது ஊர் மக்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்க யாருமில்லை. யுத்த வெற்றியைகொண்டாடும் எல்லோரும் உணவு கொடுக்கும் எண்ணமே இல்லாமல் அலைகிறார்கள். பசியை போக்கும் வழியை கண்டு பிடியுங்கள் அமைச்சர்மார்களே!. நீங்கள் அறுசுவை உணவை புசிக்கும்போது அந்த மக்களையும் ஒரு கணம் நினையுங்கள் என்று உங்கள் மனச்சாட்சிக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் எடை குறைவுப் பிரச்சினையை வளர்ந்த பின்பு எதிர் நோக்குகின்றனர். நாட்டின் உற்பத்தி வளர்ந்துவிட்டது என்று சொல்லும் அரசாங்கம் தன் நாட்டில் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் மனிதர்களை கொஞ்சம் பார்க்கவேண்டும்.
புள்ளி விபரங்கள் எப்பொழுதும் மக்களின் பசியைப் போக்கமாட்டாது. முந்தி என்றால் எமதூர் ஆலயங்களில் எல்லாம் அன்னதானம் செய்வார்கள். ஒட்டுசுட்டான் தான்தோன்றியீசுவரர் கோயிலில் எத்தனையோ முறை அன்னதானம் சாப்பிட்டிருக்கிறேன். அன்னதான சோறும் கறியும் ஆகா என்ன ருசியாக இருக்கும். நாங்கள் பசியோடுதான் சாப்பிட்டோம். ஆனால் உணவுக்குப் பஞ்சம் என்று எங்கள் கிராமத்தில் யாருக்கும் இருந்ததில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத வேற்றூரிலிருந்து வருகிறவர்கள் அந்த அன்னதானத்தில் பசியாறிப் போயிருக்கிறார்கள் மனநிறைவோடு. இதுதானே அன்னதானத்தின் மகிமை.
உலகின் பெரிய நாடுகள் உணவு நெருக்கடியைப் போக்க உச்சி மாநாடுகளை நடத்துகின்றன. பசியால் அவதிப்படும் மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்குத் தீர்வு காண்பதற்கு இந்த உச்சி மாநாடுகள் எந்தத் தீர்வையும் முன்வைக்காமல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூடி கலைந்துபோகின்றன. 1996 ஆம் ஆண்டு ஒரு மாநாடு. பிறகு 2002 இல் இன்னொரு மாநாடு. எல்லாம் உலக உணவு நெருக்கடியைக் குறைக்கிறோம் என்றுதான் சொல்லி நடைபெற்றன. ஆனால் முடிவு ஒன்றுமே இல்லை.
இன்று இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதே 102 கோடி மக்கள் உலகில் பசியோடு தூங்கப்போகின்றனர். இது தினமும் நடக்கும் ஒரு விசயமாக இருக்கிறது. உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருந்தாலும் வளர்ந்த நாடுகள் ஏழைகளுக்கு உணவை வழங்குவதில்லை என ஐ.நா. பொதுச் செயலாளருடைய பேச்சாளர் மரி ஒகாபே முன்னர் ஒரு முறை சொல்லி கவலைப்பட்டார்.
ஏழை நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 20 கோடி சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த சிறார்களில் 90 வீதமானோர் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கின்றனர். அத்தனைக்கும் ஆபிரிக்காவில்தான் தங்கமும் இரத்தினக்கல்லும் தோண்டி எடுக்கப்படுகின்றன. உலகின் பணக்கார நாடுகளாக இருக்கவேண்டிய ஆபிரிக்காவை யுத்தம் மூலமும் குழுச் சண்டை மூலமும் கெடுத்து நாசமாக்கிவிட்டு அந்த நாடுகளின் பெற்றோலை, தங்கத்தை, இரத்தினக்கல்லை தோண்டி எடுத்துக்கொண்டு வரும் வெள்ளைக்காரர்கள் அந்த மக்களை பசியால் வாடவிட்டால் எழுந்து நடக்கக்கூட மாட்டார்களே கேள்வி கேட்க மாட்டார்களே என்றுதான் இதனை செய்கிறார்கள்.
உலக உணவு உச்சி மாநாடுகளில் முன்வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் செவிமடுப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் 4400 கோடி டொலர் உணவு உற்பத்திக்கு தேவை என்பதை உலக உணவுத்திட்டம் வலியுறுத்தினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
உலக உணவு மாநாட்டில் 2009 ஆம் ஆண்டு புனித பாப்பரசர் ஆற்றிய உரையை கொஞ்சம் பாருங்கள்.
'நம்மைப் படைத்த கடவுளிடம் பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவர் கோடிக்கணக்கான மக்களை பற்றாக்குறையில் தவிக்கவும் விடவில்லை. மனிதன் தான் விரும்புவதை, தனக்கு நன்மை தரக்கூடியதை அடைய முடியாதளவுக்கு இவ்வுலகில் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதனின் சுயநலமே இன்றைய பசி, பட்டினிச் சாவுகளுக்குக் காரணம்'.
புனித பார்பரசரின் வார்த்தை எவ்வளவு சத்தியமானது.
சுய நலத்திலும் ஊழலிலும் மலிந்துபோயிருக்கின்ற மனிதனே மற்றைய மனிதனை இவ்வுலகில் பட்டினியால் கொல்கிறான்.

வீடு எனும் பெரும் செல்வம்


கலியாணம் முடித்து 3 வருடங்களாகியும் லண்டனில் ஒரு வீடில்லையே என ஏங்கிக்கொண்டிருந்த எனது நண்பருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு புதுவீடு கிடைத்துவிட்டது.
நேற்றுத்தான் அவர்களின் புதுவீடு புகுந்த நாள். அவர்கள் இருவரும் மிகுந்த பிரயாசப்பட்டு உழைப்பவர்கள். கஸ்ரப்பட்டு பணம் சேர்த்தார்கள். லண்டனில் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்ரப்பட்டு உழைத்தாலும் நினைத்த உடனேயே ஒரு வீடு வாங்க முடியாது.
லண்டனில் ஒரு வீடு வைத்திருப்பது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. ஆனால் வைத்திருந்தால் பெருமைதான்.
புது வீட்டுக்கு தனக்கு முதல் நாள் வந்த கடிதமே வீட்டு மோர்கேஜ் கட்டவும் என்பதான ஞாபகமூட்டல் கடிதம்தான் என்று சொன்னார் அவர்.
நண்பரின் மனைவியின் சொந்தக்காரர்களும் கொஞ்சம் உதவி ஒத்தாசை செய்ய இந்த புதிய வீடு சாத்தியமாகியிருக்கிறது அவர்களுக்கு.
அந்த புதிய வீட்டில் அவரின் மகன் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. சின்னவன் என்னோடு பாசம் அதிகம். 'வாப்பா' என்றுதான் என்னைக் கூப்பிடுவான் எனது பிள்ளைகள் கூப்பிடுவது மாதிரி. இன ஒற்றுமைக்கு மூன்று வயது கிறிஸ்தவரான அலனும் நானும்தான் உதாரணம்.
நாற்பத்தைந்து வருடமாக ஒரு சொந்த வீட்டில் வாழக் கிடைக்கவில்லையே என நினைத்துப் பார்க்கிறேன். நான் வாழ்ந்த வீடுகள் ஒவ்வொன்றும் நினைவில் பசுமையாய் நின்றுகொண்டுதான் இருக்கின்றன.
நான் பிறந்தவுடன் கொண்டுவந்து வளத்தியது முள்ளியவளை ஜி.பி. எஸ் இற்கு முன்னால் இருந்த எங்கள் பாட்டனார் வீட்டில். அதில்தான் கொஞ்ச காலம் வளர்ந்தேன்.
அந்த மண்ணின் வாசமும் காற்றின் பலாப்பழ வாசமும் எனது நாசிக்குள் இருந்து இன்னும் மணக்கிறது.
அங்கிருந்து இடம்பெயர்ந்து அம்மய்யாவும் அம்மம்மாவும் ஒட்டுசுட்டான் புளியங்குளத்திற்கு வந்தவுடன் அங்கு காடு வெட்டி மண்சுவரினால் ஒரு வீடு கட்டினார்கள். அங்குதான் தகப்பனில்லாத நானும் தங்கச்சியும் அம்மாவும் வளர்ந்தோம்.
எங்கள் பழையதும் எனக்குப் புத்தி தெரிந்த காலத்தில் இருந்த முதல் மண் சுவரும் கிடுகு செத்தையுமான வீடு இன்னும் என் மனதுக்குள் நிற்கிறது. அந்த வீட்டில் சாமான் வைக்க அலுமாரியே இருந்ததில்லை. உடுப்புக்களை கயிற்றுக் கொடியில்தான் போட்டிருப்பா அம்மா. அதில் இருந்துதான் பள்ளிக்கூடத்திற்கு உடுப்பு எடுத்துப்போட்டுக்கொண்டு போவோம். அந்தக் காலத்தில் அயன் பண்ணிய உடுப்பு வேணுமென்றெல்லாம் கவலைப்படவில்லை நாங்கள். அந்த மண் வீட்டில் இருந்த பொருட்களை கைவிரலில் எண்ணிவிடலாம். எவ்வளவு இலகுவான செலவு குறைந்த வாழ்க்கை வாழலாம். வாழ்ந்தோம்.
உலகம் வளர வளர தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க செலவு கூடி கடனாளியாகி செத்துப் போகின்ற மனிதர்களை எண்ணிப்பார்க்க கஸ்டமாக இருக்கிறது.
தேவைக்கதிகமான பொருட்களோடு எத்தனை வீடுகள் வீணாகக் கிடக்கின்றன. எங்களது மூன்றாவது வீடு ஒரு கல்வீடு. அது இன்னும் சில இடிபாடுகளுடன் கிடக்கிறது புளியங்குளத்தில்.
அதனை அம்மய்யா தனது உழைப்பால் கட்டி முடித்தார். அந்தக் கிராமத்தில் ஒரு கல்வீட்டில் இருப்பது என்பது அந்தக் காலத்தில் எழுபதுகளில் பெருமைதான். கூளாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலைதான் எங்கள் ஊர்களின் வீடுகளுக்கு எல்லாம் கல்லும் ஓடும் தந்த அமுத சுரபி.
அங்கு தினமும் கல்லும் ஓடும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். கூளாமுறிப்பு மண்ணின் வளம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பேசுவார்கள். உறுதியான கல்லுக்கும் ஓடுக்கும் சிறந்த மண் அது.
எங்கள் மூன்றாவது வீட்டுக்கு நீண்டகாலமாக முன் கதவு பூட்டப்படாமலே இருந்தது. கதவு வாங்கிப் பூட்ட காசு இல்லாமல் சாக்குப் போட்டு மறைத்து வைத்திருந்தார் அம்மய்யா. அதற்குப் பிறகு உறுதியான முதிரை மரக்கதவு ஒன்று வந்தது. அது மழைக்காலங்களில் உப்பிப் பருத்து இருக்கும். அண்ட பூட்ட முடியாது. வெயில்காலங்களில் சுருங்கி இருக்கும். பூட்டலாம். எங்கள் கல்வீட்டில் நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு என்றே ஒரு அறை இருந்தது. அதில் 12 மாதங்களும் நெற்செல்வம் நிறைந்திருக்கும்.
நெல் இருப்பதனால் அந்துப் பூச்சியும் எலியும் எங்கள் வீடுகளில் எங்களோடு வாழும். அதனை தவிர்க்க முடியாமல்தான் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீடுகளும் இருந்தன.
இப்பொழுது நினைத்தாலும் யோசிக்கிறேன். இரண்டு அறைகள் எங்கள் வீட்டில் இருந்தன. இரண்டு அறைகளுக்கும் யன்னல் கிடையாது. எப்பொழுதும் இரண்டு அறைகளும் இருட்டாகவே இருக்கும். எங்கள் வீட்டுக்கு ஒரு நாளும் மின்சாரம் இருந்ததே கிடையாது.
அந்த இரண்டு அறைகளிலும் விளைபொருட்களே இருக்கும். நிலக்கடலை, மிளகாய், வெங்காயம் என்று அறைகளில் வைத்துவிட்டு முன் விறாந்தையில் பாயைப்போட்டு படுத்து எழும்பி எங்கள் எங்கள் வேலையைப் பார்த்தோம் அன்று. ஏதோ வீடு கட்டியது விளைபொருட்கள் வைப்பதற்காகத்தான் போலிருக்கிறது. அம்மய்யா உயிருடன் இல்லை. இருந்தால் இப்பொழுது கேட்டிருக்கலாம். ஏன் எங்களுக்கு அறைகள் தரவில்லை என்று.
என்னதான் வீடு கட்டினாலும் வீட்டுக்கு வெளியே காற்றோட்டத்தில் சாக்குக் கட்டிலைப் போட்டுப் படுக்கும் சுகமே தனிதான்.
எமது வீட்டுக்கு வெளியே ஒரு குடத்தடி இருக்கும். குடத்தடிக்குக் கிட்ட ஒரு மாதுளை மரம், எலுமிச்சை மரம் இருக்கும். அவை இரண்டில் எலுமிச்சைதான் நன்றாக காய்க்கும். மாதுளை மரம் காய்த்திருக்கிறது. ஆனால் நான் மாதுளம்பழம் என்று ஆசையாகத் தின்றது முதன் முதலாக தமிழ்நாட்டிற்குப் போனபோதுதான்.
எமது மாதுளை மரம் எப்பொழுதும் ஒரு பெரிய முற்றிய பழத்தைத் தந்ததே இல்லை.
எமது புளியங்குளம் வீடு றோட்டோரத்தில் இருந்தது. எப்பொழுதும் கிராமத்தில் கிழக்கு வாசல் வைத்த வீடுதான் கட்டுவார்கள். சூரிய வெளிச்சம் உதித்தவுடன் வாசலுக்கு அடிக்கவேண்டும் என்றும் அதுதான் அபிவிருத்தி, செல்வம் வரும் என்றும் கிராம மக்கள் நம்புவார்கள். எமது வீடும் கிழக்குவாசல் வீடுதான்.
கடைசிவரை சோறு, தண்ணிக்கு கஸ்டப்படாமல்தான் நாழ்ந்தோம் நாம். இந்த மூன்றாவது வீட்டோடு எனது வாழ்க்கை ஒரு இடத்தில் தங்குவதான எல்லா விதிகளையும் கடந்துவிட்டது. அதற்குப் பிறகு ஊர் ஊராக அலைந்து திரியும்படி விதி எனக்குப் பணித்துவிட்டது.
உடுப்பிட்டியில் ஒரு வீடு. பின்னர் திக்கத்தில் ஒரு வீடு. பிறகு உடுத்துறையில் ஒரு வீடு, பிறகு திருகோணமலையில் ஒரு கடை என்று எனது தங்க முடியாத தூரத்தின் பயணங்கள் கடந்துபோயின.
கலியாணம் முடித்த பிறகு வீடு ஒன்று கட்டாயம் வேண்டும். மனைவியும் நானும் வாழ்வதற்கு. வீடு எப்படி எல்லாம் இருக்கவேண்டுமோ அந்த வரையறைகளோடு எங்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை. முதலில் முப்பது வருடம் பழமையான ஒரு வீடு கிடைத்தது. புதிதாக திருமணம் முடித்து மனைவியை ஒரு வீட்டில்வைத்து காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பு வந்ததன் பிறகு கிடைத்த முதல் வீடு இது.
இந்த வீட்டுக்கும் யன்னல் இல்லை. ஒரேயொரு அறை. மண்வீடு. அந்த வீட்டில் வாழ்ந்ததை நினைத்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது லண்டனிலிருந்து இதனை எழுதும்போது.
வீட்டின் கூரை பழைய ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. உடைந்த கூரையால் மழை வீட்டுக்குள் எல்லா நேரமும் வரும். மழைத்தண்ணீரைத் தடுப்பதற்கு பொலித்தீன் பையினால் இழுத்துக்கடிட்டியிருப்போம். அந்த பொலித்தீன் பையிலும் நீர் நிறைந்திருக்கும்.
ஒரேயொரு பல்ப் மட்டும் எங்களுக்கு வயர் இழுத்துத் தந்திருந்தார்கள். மலசலகூடம் எங்களுக்கும் எங்களுக்குப் பக்கத்தில் கல் வீட்டில் இருந்த அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் மிகுந்த சிரமமான ஒரு குழிதான் இருந்தது.
எங்கள் மண்வீட்டு அறைக்குப் பக்கத்தில் ஆடு கட்டும் அறை இருந்தது. ஒரு அறையில் ஆடுகளும் மறு அறையில் நாங்களும் இருந்து இரண்டு வருடங்கள் கழித்தோம். அங்குதான் எனது மூத்த மகள் வளர்ந்தாள்.
எல்லாம் சகித்துக்கொள்ளும் மனைவியின் மனம்தான் பெரிது.
அதற்குப் பிறகு ஒன்பதாவது வாடகைவீடு கிடைத்தது. அது பரவாயில்லை. இன்னொரு வீட்டோடு ஒட்டியதுதான். ஒரு அறை, ஒரு குசினி வீடு. பத்தாவது வீடும் அக்குறணையில்தான். வாடகையும், சும்மாவுமாக வீடுகளில் இருந்துகொண்டிருந்தோம். பதினோராவது வீட்டில் இருந்துதான் நான் லண்டன் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு லண்டனில் வாடகைக்கு அறை தேடுவது என்றால் பல பல அளவுகளில் சேர்ந்திருத்தலோ அல்லது தனித்திருத்தலோ என்ற நிலமையில் வாடகையின் பெறுமதி இருக்கும்.
1998 இல் ஒரு அறை 40 பவுண்களுக்கு இருந்தது. இது சாப்பாடு இல்லாமல். இப்பொழுது 2010 இல் ஒரு அறை 100 பவுண் சாப்பாடு இல்லாமல்.
லண்டனில் ஈஸ்ட்வரம், இல்பேட், ஸ்ரட்போட், ஹவுன்ஸ்லோ என்று ஒவ்வொரு இடத்திலும் அறைகள் மாறி மாறி வாழ்ந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஒரு அறையில் 4 பேர் தங்கிக்கொண்டு சிலோனில் இருந்து வந்த காசை ஏஜென்சிக்குக் கொடுக்கும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஊரில் அக்காவை, தங்கச்சியை சீதனம் கொடுத்துக் கட்டிக்கொடுக்க ஆலாய்ப்பறக்கும் எத்தனையோ இளைஞர்கள் ஒரு நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கிறார்கள்.
மனைவியின் விருப்பத்தில் 13 வது வாடகை வீட்டுக்குப் பிறகு ஒரு சொந்த வீடு கட்டினோம். 2004 இல்தான் அந்த கைங்கரியம் கைகூடியது. முதன்முதலில் ஒரு சொந்த வீடு எமக்கானது என்ற மனநிலையே பெரிய நிம்மதியைத் தரும்.
அதனை நான் எனது வத்தளை வீட்டில் இருக்கும்போது உணர்ந்தேன். எங்கள் வீடு மனைவியின் விருப்பத்தின் பெயரில் பார்த்துப் பார்த்துக் கட்டியது.
எனக்கு வீடு தொடர்பான அக்கறை எப்பொழுதும் இருக்கும்.
வீடு மனிதர்களுடைய உணர்வு சார்ந்த ஒரு விடயம். வீட்டுக்குப் போனால் சில வீடுகள் எமக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். போன உடனேயே பிடித்துப்போய்விடும். சில வீடுகளுக்கு ஏன் போனோம் என்று வெறுப்பு வந்துவிடும்.
மனைவிக்குத் தெரிந்தவர்கள் என்று ஜேர்மனியில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தோம். போன நேரத்திலிருந்து அந்த வீடு எங்களுடன் ஒட்டவேயில்லை. ஏதோ அந்நியப்பட்டது மாதிரி அந்த வீடு இருந்தது. அத்தோடு அந்த வீட்டு மனிசி துப்புரவு கூடின மனிசி. நாங்கள் யாரும் டொய்லட்டுக்குப் போனால் வாசலுக்கு 'மொப்' பிறசுடன் வந்துவிடும். அவ்வளவு துப்புரவு. அதுவும் பெரிய அசௌகரியமாக இருந்தது.
அந்த வீட்டின் வைபறேசன் எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. எனது மனைவிக்குத் தலையிடி, காய்ச்சல், உதடுவீக்கம் எல்லாம் அங்குநின்ற ஒரு இரவில் வந்துவிட்டது. அடுத்தநாள் அந்த வீட்டிலிருந்து எப்பொழுது கிளம்புவோம் என்றிருந்தது.
அந்த வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன் எல்லா வருத்தமும் போய்விட்டது.
சில வீடுகள் மனதோடு ஒட்டிவிடும். வீடுகள் எமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நாங்கள் தெரிவு செய்யும் பெயிண்ட் கலர், எங்கள் வீட்டிலிருக்கும் ஓவியங்கள், திரைச்சீலை எல்லாம் எமது மனதைக் கண்டுபிடிக்க உதவும் சாதனங்கள்தான்.
எமது வத்தளை வீட்டைப்பார்த்து ஆசைப்படாதவர்கள் இல்லை. ஒன்றுமே இல்லை ஆனால் என்னவோ எல்லாம் இருப்பதுபோல ஆசைப்படுவார்கள். ஒரு சின்ன இடத்தில் அவ்வளவு பெரிய வீடு எப்படி வந்தது? எல்லோரும் சொல்வார்கள் உங்கள் மனம்தான்.
வீட்டில் அது அது அந்த இடத்தில் இருக்கவேண்டும். ஒரு வீட்டை ஒரு கிழமை பராமரிக்காமல் விட்டுப் பாருங்கள். தூசி அடைந்து சுடுகாடாகிவிடும். மனிதக் கைகள் வீட்டை எப்பொழுதும் பராமரித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இங்கு லண்டனில் பேராசைக்காக மற்றவரைப்போல வீடு வாங்கவேண்டும் என்று அவாப்பட்டு மோர்கேஜ் கட்டமுடியாமல் துன்பப்பட்டு சாகிறவர்கள் ஏராளம். தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிற துன்பம் இது.
லண்டனில் எங்கள் சிறிய வாடகை வீட்டுக்கு எப்பொழுதும் யாரும் வந்தாலும் அவர்களின் மனதோடு எங்கள் வீடு ஒட்டிப் போகும். ஏனோ தெரியாது. உங்கள் வீடு அழகாக இருக்கிறது என்றுதான் வருகிறவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். ஒரு வாரமும் ஆட்கள் வராத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. இந்த வீட்டின் வைபறேசன் நன்றாகத்தான் இருக்கிறது.
நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.
'செல்விருந்தோம்பி வருவிருந்தை' பார்த்திருக்கிறது மனிசி. நான் உண்மையில் கொடுத்துவைத்தவன்தான்.

நண்பர்கள் கூட்டம்