Wednesday, 7 July 2010

பட்டினி எனும் பெருங்கொடுமை


'தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் கோபம் இலேசதானதல்ல. சாப்பாடு இல்லாமல் உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் பசியினால் இறந்துபோகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு. ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5 கோடி பேர் தினமும் பசியினால் துடி துடித்துக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பது பெரும் துன்பம்தான். பசிக்காகவே மனிதன் உழைத்து உழைத்து சேமிக்கிறான். பசி மட்டும் இல்லாவிட்டால் மனிதனின் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கும்.
ஒரு நேர உணவு இல்லாவிட்டால் எப்படி துடி துடித்துப் போகிறோம். பசியும் தாகமும் எங்களை பின் தொடருகின்றவை. அந்த இரண்டும் பூர்த்திசெய்யப்படாத எத்தனைபேர் எங்களின் காலடிக்குள் கிடக்கிறார்கள்.
பசியையும் தாகத்தையும் எங்களுக்கு பூர்த்தி செய்யக் கிடைத்திருப்பதே பெரும் கொடையாகும். மற்றவர்களின் பசியை தீர்க்க நாங்கள் என்ன செய்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகத்தில் 15 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் செத்துப்போகிறார்கள். பசியால் இறந்துபோகின்ற அளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் அரசாங்கங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்கு என்ன செய்கின்றன. இலங்கையில் ஏழைமக்களின், அகதிகளின் வாழ்வை வளம்படுத்த எத்தனை வேலைகள் இருக்க இன்னும் ஏன் களியாட்ட நினைப்பில் இந்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். களியாட்டங்களுக்கும் வெற்றிவிழாக்களுக்கும் செலவழிக்கும் நூறு மில்லியன் ரூபாக்களை ஏன் அகதிகளின் வாழ்வு வளம்பெற செலவழிக்கக்கூடாது. இப்படி ஏன் யோசிக்கிறார்களில்லை.
ஒவ்வொரு அகதிக்கும் ஐந்து லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களின் குடும்பத்தை வாழவைக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியும். ஏன் அழிந்துபோன எல்லாவற்றையும் ஒரு வருடத்தினுள் செழிப்பானதாக்க முடியும். ஆனால் யோசிக்கிறார்களில்லை அரசியல் தலைவர்கள். களியாட்ட விழாக்கள், வேண்டாத விருது விழாக்கள், காலதாமதமான வெற்றிக்களிப்புக்களுக்கு மத்தியில் பட்டினியால் அல்லல்படும் இந்த இலங்கை தேசத்தின் தமிழ் மக்களுக்காகவும் ஒரு தடவை சனாதிபதி சிந்திக்கவேண்டும்.
வீடுகளை அவர்களே கட்டிக்கொள்ளட்டும் என்றுவிட்டு தடியும் தகரமும் கொடுக்கிற சனாதிபதி கொழும்பில் களியாட்ட செலவுகளுக்காக மில்லியன் ரூபாய்களை செலவழிக்க அனுமதிக்கலாமா? ஏன் இந்த ஓர வஞ்சனை?
பசியும் வறுமையும் வன்னியில் பெருங்கொடுமையாக இருக்கிறது. அகதிகளை பார்க்க பணம் இல்லை என்று சொல்லும் ஐ.நா. சபைக்கு தெரியும் ஒரு ஏவுகணை செய்யும் செலவுக்கு உலகம் முழுவதும் உள்ள பசித்த பாடசாலை பிள்ளைகளுக்கு 5 வருடத்துக்கு 3 வேளை உணவு கொடுக்கலாம் என்பது.
ஆனால் ஐ.நா. சபையும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருக்கிறது.
உலகத்தில் எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்றால், உலகம் யுத்தத்திற்கு செலவழிக்கும் பணத்தை இரண்டே இரண்டு நாட்களுக்கு மிச்சப்படுத்தினால் ஒரு கோடி பசித்த சிறுவர்களுக்கும் ஒரு கோடி நோயாளிகளுக்கும் விமோசனம் அளிக்க முடியும்.இந்திய உபகண்டத்தில் மட்டும் நாற்பது வீதமான மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.பசி என்பதனை உணரும்போதுதான் அதன் அருமை விளங்குகிறது. நாம் தினமும் மூன்று வேளை உணவு, நொறுக்கு தீனி, தேநீர், கோப்பி என்று அருந்தி சாப்பிட்டு அலுத்துப் போகிறோம். ஒரு வாய் தண்ணீருக்காக அலைந்து திரியும் மனிதர்களும் எங்களுக்குள்ளேயேதான் இருக்கின்றனர்.
வன்னியில் யுத்த நேரத்தில் புலிகளின் பகுதிகளில் இருந்த மக்கள் இன்னும் பசியின் கொடுமையைப் பற்றி சொல்வார்கள். உணவுத் தடை இருந்த நேரம் இலை, குழைகளை சாப்பிட்டு மிருகங்களைப்போல வாழ்ந்தவர்களையும் எனக்குத் தெரியும். சக மனிதர்களின் பசியைப் போக்கவேண்டும் என்ற அறிவுரை எல்லா இடங்களிலும் கிலாகித்துச் சொல்லப்படுகிறது.
போசாக்கான உணவு இல்லாமையால் உலகில் செத்துப்போகிறவர்களின் தொகை, பட்டினியால் உலகில் வருடாவருடம் செத்துப்போகிறவர்களின் தொகை மூன்று கோடி பேர் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. தினமும் எந்தவொரு நிமிடத்திலும் சுருண்டு விழுந்து பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்.
உலகில் சனத்தொகை அதிகரித்து அதிகரித்து செல்ல உணவுத் தேவையும் அதிகரித்து செல்கிறது. ஆனால் உணவு உற்பத்தி நிலங்களை பெரும் பண முதலைகள் ஆக்கிரமித்து கோடிக்கணக்கான பணம் பண்ணும் பெரிய பெரிய நிறுவனங்களை அமைக்கிறார்கள்.ஒரு பெரும் நிறுவனம் அமைக்கும் இடம், அதனை சுற்றிய நீர் நிலைகள் அழிவு, பூமி நச்சுத்தன்மையாதல் எல்லாம் சேர்த்து பேரழிவு ஏற்பட்டு நிலம் நஞ்சாகி உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மனிதன் பட்டினியை நோக்கி தள்ளப்படுகிறான்.உலகில் பட்டினிக்குள்ளாக்கப்பட்டவர்கள் கொதித்து எழும் காலம் விரைவில் வரும் என்று அறிவாளிகள் சொல்கின்றனர். பட்டினிக் கொடுமை தாங்க முடியாமல் ஏழைகளுக்கும் பணக்காரனுக்குமான சண்டை வரும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.இது இந்தியாவில் இருந்துதான் தொடங்கும் என்கின்றனர் அவர்கள். அத்தோடு இந்தியாவில் தண்ணீருக்கான யுத்தமும் இனிவருங்காலங்களில் ஏற்படும் என்ற அச்ச நிலமை காணப்படுகிறது. மாநிலங்களுக்குள் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சினை பெரும் சண்டையில் போய் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையைப் பொறுத்தமட்டில் வடக்குக் கிழக்கு மக்கள் பெரும் போசாக்குப் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கின்றனர். இரண்டு கோடி மக்கள் கொண்ட வளமான நாடான இலங்கையில் அரசியல்வாதிகளின் ஊழல் கொடுமையினால் ஒரு கோடி பேர் மட்டும் போசாக்கான சாப்பாட்டை சாப்பிட ஒரு கோடி பேர் போசாக்கில்லாத உணவை சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதற்குப் பெரிதொரு உதாரணம் தேவையில்லை.நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட பக்கத்தில் எத்தனைபேர் சாப்பிட வழியில்லாமல் உழலுகிறார்கள் என கொழும்பின் றெஸ்ரோண்ட் வெளியே பார்த்தால் தெரியும். வேறெங்கும் போகவேண்டியதில்லை.இலங்கையில் எவ்வளவு வளமான பூமி இருக்கிறது. என்னதான் விளையாது எங்கள் மண்ணில். நெல், பயறு, கரும்பு, புரதப் பயிர்கள் எல்லாம் வளரும். பயன்தரும். ஆனால் அரசாங்க எம். பி. மார்கள் தங்கள் பையை நிரப்புவதில் மட்டும் குறிக்கோளாகக் கொண்டால் எப்படி நாட்டை வளமாக்குவது? எப்படி நாட்டை செழிப்பாக்குவது? யுத்தம் யுத்தம் என்றார்கள். அதுதான் முடிந்து தொலைந்துவிட்டதே. இனியாவது ஒவ்வொரு இலங்கையரும் செல்வச் செழிப்புள்ளவராக மாற்ற முடியும். உங்களுக்கு தெரியுமா? எமது இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் நிறை குறைவாகப் பிறக்கின்றன. நாங்கள் வயிறு புடைக்க உண்ணும்போது இந்தக் குழந்தைகளை நினைக்க வேண்டும்.தானங்களில் மிகச் சிறந்தது பசியைப் போக்கும் அன்ன தானம். இதனை ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டும். தங்களது சாப்பாட்டு நேரம் ஒருவருக்காவது ஒரு பிடி உணவு கொடுத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சிலா இன்னமும் இருக்கின்றனர்.
லண்டவில் இந்துக் கோவில்களில் அநேகமாகப் பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் சாப்பாடு இருக்கும். யார் வேண்டுமானாலும் போய் பசியாறலாம்.ஆனால் இங்குள்ள சீக்கிய குருத்துவாராவில் றொட்டியும் சாதமும் கறியும் எப்போது போனாலும் இருக்கும். இது உண்மையில் பெரிய விசயம்தான். ஏனெனில் இங்கு லண்டனில் வேலை இல்லாத கஸ்டப்பட்ட இளைஞர்கள் நிறையப் பேர் உணவுக்குக்கூட வழியில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் பசியாற நல்ல விசயம் இது. எப்போது போனாலும் முகம் கோணாமல் எவ்வளவும் குருத்துவாராவில் சாப்பிட்டுவிட்டு வர முடியும். ஆனால் ஒரு விடயம். வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது. விருந்தினர்களை எப்பொழுதும் சீக்கிய குருத்துவாராக்கள் வரவேற்கின்றன. அது எந்த இனம், மதம் என்று பார்ப்பதில்லை.'செல் விருந்தோம்பி வரு விருந்து' பார்த்து இருக்கும் அவை. எங்கள் காலத்தில் அதாவது 35 வருடங்களுக்கு முன்னர் எங்கள் வன்னிப் பிரதேசத்தில் யாரும் பசியால் செத்தது என்று வரலாறு இல்லை. எப்பொழுதும் வீட்டுக்குள் நெல் மூட்டை அடுக்கி வைத்திருப்பார்கள் வன்னி மக்கள். மரக்கறி தோட்டத்தில் விளையும். எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் பிச்சை என்று வெளி ஊர்களில் இருந்து வந்தாலும் வயிறாற சாப்பிட்டுவிட்டுத்தான் எங்கள் ஊர்களிலிருந்து போவார்கள்.ஆனால் இப்பொழுது எமது ஊர் மக்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்க யாருமில்லை. யுத்த வெற்றியைகொண்டாடும் எல்லோரும் உணவு கொடுக்கும் எண்ணமே இல்லாமல் அலைகிறார்கள். பசியை போக்கும் வழியை கண்டு பிடியுங்கள் அமைச்சர்மார்களே!. நீங்கள் அறுசுவை உணவை புசிக்கும்போது அந்த மக்களையும் ஒரு கணம் நினையுங்கள் என்று உங்கள் மனச்சாட்சிக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.இலங்கையில் 43 வீதமான குழந்தைகள் எடை குறைவுப் பிரச்சினையை வளர்ந்த பின்பு எதிர் நோக்குகின்றனர். நாட்டின் உற்பத்தி வளர்ந்துவிட்டது என்று சொல்லும் அரசாங்கம் தன் நாட்டில் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் மனிதர்களை கொஞ்சம் பார்க்கவேண்டும்.
புள்ளி விபரங்கள் எப்பொழுதும் மக்களின் பசியைப் போக்கமாட்டாது. முந்தி என்றால் எமதூர் ஆலயங்களில் எல்லாம் அன்னதானம் செய்வார்கள். ஒட்டுசுட்டான் தான்தோன்றியீசுவரர் கோயிலில் எத்தனையோ முறை அன்னதானம் சாப்பிட்டிருக்கிறேன். அன்னதான சோறும் கறியும் ஆகா என்ன ருசியாக இருக்கும். நாங்கள் பசியோடுதான் சாப்பிட்டோம். ஆனால் உணவுக்குப் பஞ்சம் என்று எங்கள் கிராமத்தில் யாருக்கும் இருந்ததில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத வேற்றூரிலிருந்து வருகிறவர்கள் அந்த அன்னதானத்தில் பசியாறிப் போயிருக்கிறார்கள் மனநிறைவோடு. இதுதானே அன்னதானத்தின் மகிமை.
உலகின் பெரிய நாடுகள் உணவு நெருக்கடியைப் போக்க உச்சி மாநாடுகளை நடத்துகின்றன. பசியால் அவதிப்படும் மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்குத் தீர்வு காண்பதற்கு இந்த உச்சி மாநாடுகள் எந்தத் தீர்வையும் முன்வைக்காமல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூடி கலைந்துபோகின்றன. 1996 ஆம் ஆண்டு ஒரு மாநாடு. பிறகு 2002 இல் இன்னொரு மாநாடு. எல்லாம் உலக உணவு நெருக்கடியைக் குறைக்கிறோம் என்றுதான் சொல்லி நடைபெற்றன. ஆனால் முடிவு ஒன்றுமே இல்லை.
இன்று இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதே 102 கோடி மக்கள் உலகில் பசியோடு தூங்கப்போகின்றனர். இது தினமும் நடக்கும் ஒரு விசயமாக இருக்கிறது. உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருந்தாலும் வளர்ந்த நாடுகள் ஏழைகளுக்கு உணவை வழங்குவதில்லை என ஐ.நா. பொதுச் செயலாளருடைய பேச்சாளர் மரி ஒகாபே முன்னர் ஒரு முறை சொல்லி கவலைப்பட்டார்.
ஏழை நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 20 கோடி சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த சிறார்களில் 90 வீதமானோர் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கின்றனர். அத்தனைக்கும் ஆபிரிக்காவில்தான் தங்கமும் இரத்தினக்கல்லும் தோண்டி எடுக்கப்படுகின்றன. உலகின் பணக்கார நாடுகளாக இருக்கவேண்டிய ஆபிரிக்காவை யுத்தம் மூலமும் குழுச் சண்டை மூலமும் கெடுத்து நாசமாக்கிவிட்டு அந்த நாடுகளின் பெற்றோலை, தங்கத்தை, இரத்தினக்கல்லை தோண்டி எடுத்துக்கொண்டு வரும் வெள்ளைக்காரர்கள் அந்த மக்களை பசியால் வாடவிட்டால் எழுந்து நடக்கக்கூட மாட்டார்களே கேள்வி கேட்க மாட்டார்களே என்றுதான் இதனை செய்கிறார்கள்.
உலக உணவு உச்சி மாநாடுகளில் முன்வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் செவிமடுப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் 4400 கோடி டொலர் உணவு உற்பத்திக்கு தேவை என்பதை உலக உணவுத்திட்டம் வலியுறுத்தினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
உலக உணவு மாநாட்டில் 2009 ஆம் ஆண்டு புனித பாப்பரசர் ஆற்றிய உரையை கொஞ்சம் பாருங்கள்.
'நம்மைப் படைத்த கடவுளிடம் பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவர் கோடிக்கணக்கான மக்களை பற்றாக்குறையில் தவிக்கவும் விடவில்லை. மனிதன் தான் விரும்புவதை, தனக்கு நன்மை தரக்கூடியதை அடைய முடியாதளவுக்கு இவ்வுலகில் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதனின் சுயநலமே இன்றைய பசி, பட்டினிச் சாவுகளுக்குக் காரணம்'.
புனித பார்பரசரின் வார்த்தை எவ்வளவு சத்தியமானது.
சுய நலத்திலும் ஊழலிலும் மலிந்துபோயிருக்கின்ற மனிதனே மற்றைய மனிதனை இவ்வுலகில் பட்டினியால் கொல்கிறான்.

No comments:

நண்பர்கள் கூட்டம்