Monday, 19 July 2010

பயம் எனும் கொடிய நோய்


வாழ்வில் பயப்படாத நாளே கிடையாது நமக்கு. பயம் எங்களை தினமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பயத்தினூடாகவே நாம் வளர்ந்திருக்கிறோம். அச்சம் கொள்ளுதல் என்பது எமது உடலோடு மனதோடு கலந்துவிட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது.எல்லோருக்கும் எங்களைப் பயங்கொள்ள வைத்தே வாழப் பழக்கி விட்டிருக்கின்றனர். எனது பயம் அம்மாவின் பிரம்பில் இருந்து ஆரம்பிக்கிறது.குழப்படி செய்தால் அம்மா அடிப்பா என்கின்ற பயம் ஒரு கொடும் பயமாக தொடர்ந்துகொண்டே வந்தது. பயத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அம்மா என்மீது தன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தா.வாத்திமாரின் பிரம்புகளுக்கு இன்னமும் அச்சம் ஊட்டும் தன்மை இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதிலும் மிகவும் அச்சமூட்டுபவராக தில்லையம்பலம் வாத்தியாரும் அவருடைய பிரம்பும் இருந்துகொண்டே இருந்தது. பயம் மனித உணர்ச்சிகளை மேவி நிற்கக்கூடிய ஒன்று. பயத்தின் ஊடாக எங்கள் எதிரிகள் சாதித்துவிடுபவை ஏராளம்.வலிமையில்லாதவர்களை வலிமையுள்ளவர்கள் எப்பொழுதும் பயம் காட்டியே வைத்திருக்கிறார்கள். ஊரில் உள்ள சண்டியர்கள், கப்பம் வாங்குபவர்கள், தாதாக்கள் எல்லோரும் இந்தப் பயத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளனர்.இயக்கப் பொடியன்களும் ஏ.கே.47 துப்பாக்கிகளை தோளில் போட்டுக்கொண்டு சைக்கிள்களில் சுற்றி வருவார்கள். சிலர் துப்பாக்கியை வெளியில் தெரியக்கூடியவாறும் வைத்திருந்தார்கள். அவற்றை கண்டும் மக்கள் பயப்பட்டனர்.தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களைக் கண்டு பேரச்சம்கொள்ளும் ஒரு நிலமை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. உண்மையில் நான் இந்த நிலமையை 'யாழ்தேவி' புகையிரதத்தில்தான் கண்டிருக்கிறேன்.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரைக்கும் நன்றாக தமிழில் பாட்டுப்பாடி சத்தமாகப் பேசிக்கொண்டு வருகின்ற எத்தனையோ பேர் மதவாச்சி வந்தவுடன் பேசாமல் இருப்பார்கள்.சிங்களவர்களின் ஊர் வந்துவிட்டது என்ற பயம்;.பயத்தில் கருகி உறைந்துபோகின்ற எத்தனையோ மனிதர்களைக் கண்டிருக்கிறேன்.எமது கிராமங்களை சிங்கள இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்து கொண்டுபோகும்போது பயத்தால் உயிர் பதறிப்போகும்.
அப்பாவி மக்களைக் கைதுசெய்து கொண்டுபோய் 'தலையாட்டிகள்' என்ற காட்டிக் கொடுக்கும் தமிழர்களுக்கு முன்னால் நிறுத்தும்பொழுது பயம் ஒன்று வந்துபோகுமே அது சொல்லில் எழுதிவிட முடியாத கொடுமை.தலையாட்டிகளின் முன் நின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு தலையசைவில் அந்த மனிதனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். என்ன பெரிய கொடுமை.
அச்சத்தால் இரத்தம் உறையுமே. அது அங்கு நடக்கும்.இன்னும் ஊர்களில் நிம்மதியாக வாழ முடியாத பயத்தினால்தான் எத்தனையோபேர் வெளிநாடுகளுக்கு ஓடி வருகின்றனர். கொழும்பில் இருந்தால் வெள்ளை வான் தூக்கிவிடுமோ என்ற பயத்தில் லண்டன்வந்த பலரை எனக்குத் தெரியும்.யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது, மட்டக்களப்பில் வாழ முடியாது, கொழும்பில் வாழ முடியாது உயிர் அச்சம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை பத்து லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி கனடா, லண்டன், அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து, நோர்வே, ஜேர்மனி, ஹொலண்ட், பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, டென்மார்க், சுவிட்சலாந்து என்று திக்கு திக்காகப் பிரிந்துபோய்க் கிடக்கிறார்கள். எல்லோரும் சுகபோகமாக வாழவில்லை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கையைவிட்டு ஓடியர்கள்தான் இதில் 99 வீதமானோர். ஒரு வீதம்தான் படிப்புக்காக வந்தவர்கள்.
இலங்கையில் வாழ முடியாத உயிர் பயம் காரணமாக ஒரு தலைமுறைத் தமிழர்களை விரட்டிவிட்டிருக்கிறது யுத்தமும் சிங்கள தேசமும்.மட்டக்களப்பில் ஒரு அரசியல்வாதி மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அச்சப் பேச்சும் இன்னும் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.பொதுமக்களைப் பார்த்து சொல்கிறார் 'அரசாங்கத்துக்கு வாக்களித்தவர் யார், வாக்களிக்காதவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவாராம்'. வாக்குச் சீட்டில் என்ன புகைப்படமா ஒட்டுகிறார்கள்? இது அச்சப்படுத்துகின்ற ஒரு அடாவடித்தனம் இல்லாமல் வேறென்ன?
உண்மையில் உயிர் அச்சம் என்ன என்பதனை நான் உயர்ந்தது 'சுடரொளி' குண்டுவீச்சுக்கு பிறகுதான்.'சுடரொளி' இற்கு ஒரு கட்டுரையை கொடுப்பதற்காக சென்றபொழுது யாரோ இரு இளைஞர்கள் 2 கைக்குண்டை வீசவும் நான் கேற்றடிக்குப் போகவும் நேரம் சரியாக இருந்தது.
எனக்குப் பக்கத்தில் கிரனைட் உருண்டுகொண்டு வந்தது. ஒரு 10 செக்கன்தான் ஓடினேன். அது வெடித்தது. காலில் சிறு காயம். எனக்குப் பக்கத்தில் நின்ற செக்கியூரிட்டி ஜோர்ஜ் ஐயா நெஞ்சு வெடித்து செத்துப்போனார்.அதற்குப் பிறகு பயம் காரணமாக இரவில் எனக்குத் தூக்கமே வருவதில்லை. எங்களது வீட்டுக்கு தகர கேட் போட்டிருந்தோம். அது சும்மா தட்டுப்பட்டால்கூட எழுந்து உட்கார்ந்துவிடுவேன் பயம்.இரவு என்பது எனக்கு அச்சத்திற்குரியதாகவே இருந்தது. சிறிய சத்தங்களும் எனக்குப் பயம்கொள்ளும்படியே இருந்தது. வத்தளையில் இருக்கும்வரை எனக்கு இரவு சந்தோசமானதாக இருந்ததில்லை. லண்டன் வந்த பின்னர்தான் பயமில்லாத நித்திரை வந்தது எனக்கு.இப்படி எத்தனைபேர் இன்னும் உயிர் பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நினைக்கும்போது என்னால் உணர முடிகின்ற பயம் இது.'பயப்படாதீங்கோ. ஒன்றும் நடக்காது'. என்ற ஆறுதல் எல்லாம் எடுபடாது. பயம் என்பது மனதை அறுக்கின்ற ஒரு விடயம். அதனைவிட்டு மீளவேண்டுமானால், ஒரு மனிதன் தனது மன அமைதியின் ஊடாகவே முடியும். ஆனால் தமிழனாக பிறந்துவிட்டு சிங்களவனோடு இந்த அளவுக்கு முரண்பாடுகொண்டுவிட்டு அதனை சுமூகமாகத் தீர்க்காதவரை அச்சம்வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சர்வாதிகாரம் இருக்கும்வரை தமிழர்கள் உயிர்பயம் இல்லாமல் வாழ முடியும் என நான் நினைக்கவில்லை.லண்டனில் நான் சந்தித்த அகதி ஒருவர் அழுதுகொண்டே இருந்தார். 'ஏன்' என்று நான் கேட்டேன்.'பயமா இருக்கு', என்று கூறினார். 'என்னத்துக்கு' என்றேன். 'பொலிஸ் சைரன், அம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலிக்கு', என்றார்.பாருங்கள் அவர் இந்த உலகத்தில் வாழும்வரை பயந்துகொண்டும் அழுதுகொண்டும் இருப்பார். ஏனெனில் இலங்கையில் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டவர்.
லண்டன் வந்தபிறகும் பொலிஸ் காருக்கும் அம்புலன்ஸ் வண்டியின் சத்தத்திற்கும் அச்சப்படுகிறார்.லண்டனில் பொலிஸ் காரும் அம்புலன்ஸ் வண்டியும் ஒரு நாளுக்கு பல தடவைகள் றோட்டால் போய்க்கொண்டிருக்கும். ஆகவே அந்த தமிழரின் நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.அதே உயிர் பயத்தோடு இங்கு வந்த பலர் மனநோய் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். பயத்தின் அடுத்த கட்டம் மனநோய் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடும்.இங்கு டொக்ரர் சசிகாந்த் உடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது யுத்தம் பலரை மனநோயாளியாக்கியிருக்கிறது என்று சொன்னார்.தங்கள் உயிர்களை துப்பாக்கிதாரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பட்டபாடுதான் இந்த மனநோய்க்குக் காரணம் என்றார் அவர்.அத்தோடு ஒரு உதாரணமும் சொன்னார் அவர். நாயொன்று ஒரு மனிதனை கடித்துக் குதறுவதற்காகத் துரத்துகிறது. அப்பொழுது அச்சத்தின் காரணமாக அவன் ஓடுகிறார்.
அது பயம். அந்த நேரம் பயம் காரணமாக மூளையின் தூண்டுதல் காரணமாக சுரக்கின்ற சுரப்புக்கள், மனப் பதட்டம் என்பன நாய் மனிதனைவிட்டுப் போன பிறகு சாதாரண நிலமைக்கு வந்துவிடும். ஆனால் அதே மனப்பதட்டம், சுரப்பிகள் ஒவ்வொரு நாளும் வேலை செய்தால் மனதின் நிலமை என்னவாகும். மனம் சிதைந்துபோகும்.
இப்படியான மனிதர்கள் எத்தனையோபேர் நம்மத்தியில் இருக்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகிவிடுகின்றனர்.இங்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கான மதிப்பு இருக்கிறது. ஒருவரை அச்சப்படுத்துவது கிறிமினல் குற்றமாகும். அதிலும் உயிர் தொடர்பான அச்சம் விடுவது பாரதூரமான குற்றமாகும்.இலங்கையில் உயிர் எடுக்கவென்றே மக்கள் திரியும்போது இந்த உயிர் பாதுகாப்பு உண்மையில் தமக்கான பாதுகாப்பாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.ஆனால் இங்கும் சண்டியர்கள் ஆயுதங்கள், வாள்கள், பொல்லுகளுடன் திரிந்து தமிழர்களை அச்சப்படுத்துபவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.இப்பொழுது பொலிசாரின் கெடுபிடி காரணமாக அவர்கள் கொஞ்சம் அடங்கிப்போய் இருக்கிறார்கள்.
ஊரில் துப்பாக்கிகள், வாள்களோடு பழகியவர்கள் லண்டன் வந்தும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.பொலிசாரின் ஒரு ஒப்பறேசனில் தமிழர்களிடம் பிடிபட்ட ஆயுதங்கள் என லண்டன் தொலைக்காட்சி செய்திகளில் காண்பித்தார்கள்.என்ன நினைக்கிறார்கள் தமிழ் சண்டியர்கள். ஊரில்போல லண்டனிலும் தங்களிடம் பயந்து வாழ வேண்டும். கப்பம் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இங்கு சண்டியன்களாக 18 வயது பொடியன்கள் இருப்பதுதான் கொடுமையான விடயம்.அச்சம் எப்பொழுதும் எம்மை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விடயம்தான்.தைரியம் மட்டுமே அச்சத்தை விரட்டுகின்ற ஒரே ஒரு வழி.
ஆனால் அந்த தைரியத்தையும் மீறி அச்சமூட்டுகின்ற எத்தனை விடயங்கள் மனிதனை துரத்துகின்றன.எத்தனைபேர் உயிர் அச்சத்தினால் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்துபோய் பரதேசிகளாக மாறிவிட்டனர். உண்மையில் பயம் என்பது எம்மை ஒவ்வொரு நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.அதனை வெல்வதற்கான வழிகளைத்தான் ஞானிகள் சொல்கிறார்கள்.இந்த உலக வாழ்வில் பணம், புகழ், பூமி இவற்றை தக்கவைத்துக் கொள்ள மற்றவரை அச்சப்படுத்திக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.தன்னிடம் உள்ளவற்றைப் பறித்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக மற்றவனை இல்லாமலாக்கிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது இலங்கையானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, விதி ஒன்றுதான்.

No comments:

நண்பர்கள் கூட்டம்