Wednesday, 7 July 2010

வீடு எனும் பெரும் செல்வம்


கலியாணம் முடித்து 3 வருடங்களாகியும் லண்டனில் ஒரு வீடில்லையே என ஏங்கிக்கொண்டிருந்த எனது நண்பருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு புதுவீடு கிடைத்துவிட்டது.
நேற்றுத்தான் அவர்களின் புதுவீடு புகுந்த நாள். அவர்கள் இருவரும் மிகுந்த பிரயாசப்பட்டு உழைப்பவர்கள். கஸ்ரப்பட்டு பணம் சேர்த்தார்கள். லண்டனில் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்ரப்பட்டு உழைத்தாலும் நினைத்த உடனேயே ஒரு வீடு வாங்க முடியாது.
லண்டனில் ஒரு வீடு வைத்திருப்பது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. ஆனால் வைத்திருந்தால் பெருமைதான்.
புது வீட்டுக்கு தனக்கு முதல் நாள் வந்த கடிதமே வீட்டு மோர்கேஜ் கட்டவும் என்பதான ஞாபகமூட்டல் கடிதம்தான் என்று சொன்னார் அவர்.
நண்பரின் மனைவியின் சொந்தக்காரர்களும் கொஞ்சம் உதவி ஒத்தாசை செய்ய இந்த புதிய வீடு சாத்தியமாகியிருக்கிறது அவர்களுக்கு.
அந்த புதிய வீட்டில் அவரின் மகன் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. சின்னவன் என்னோடு பாசம் அதிகம். 'வாப்பா' என்றுதான் என்னைக் கூப்பிடுவான் எனது பிள்ளைகள் கூப்பிடுவது மாதிரி. இன ஒற்றுமைக்கு மூன்று வயது கிறிஸ்தவரான அலனும் நானும்தான் உதாரணம்.
நாற்பத்தைந்து வருடமாக ஒரு சொந்த வீட்டில் வாழக் கிடைக்கவில்லையே என நினைத்துப் பார்க்கிறேன். நான் வாழ்ந்த வீடுகள் ஒவ்வொன்றும் நினைவில் பசுமையாய் நின்றுகொண்டுதான் இருக்கின்றன.
நான் பிறந்தவுடன் கொண்டுவந்து வளத்தியது முள்ளியவளை ஜி.பி. எஸ் இற்கு முன்னால் இருந்த எங்கள் பாட்டனார் வீட்டில். அதில்தான் கொஞ்ச காலம் வளர்ந்தேன்.
அந்த மண்ணின் வாசமும் காற்றின் பலாப்பழ வாசமும் எனது நாசிக்குள் இருந்து இன்னும் மணக்கிறது.
அங்கிருந்து இடம்பெயர்ந்து அம்மய்யாவும் அம்மம்மாவும் ஒட்டுசுட்டான் புளியங்குளத்திற்கு வந்தவுடன் அங்கு காடு வெட்டி மண்சுவரினால் ஒரு வீடு கட்டினார்கள். அங்குதான் தகப்பனில்லாத நானும் தங்கச்சியும் அம்மாவும் வளர்ந்தோம்.
எங்கள் பழையதும் எனக்குப் புத்தி தெரிந்த காலத்தில் இருந்த முதல் மண் சுவரும் கிடுகு செத்தையுமான வீடு இன்னும் என் மனதுக்குள் நிற்கிறது. அந்த வீட்டில் சாமான் வைக்க அலுமாரியே இருந்ததில்லை. உடுப்புக்களை கயிற்றுக் கொடியில்தான் போட்டிருப்பா அம்மா. அதில் இருந்துதான் பள்ளிக்கூடத்திற்கு உடுப்பு எடுத்துப்போட்டுக்கொண்டு போவோம். அந்தக் காலத்தில் அயன் பண்ணிய உடுப்பு வேணுமென்றெல்லாம் கவலைப்படவில்லை நாங்கள். அந்த மண் வீட்டில் இருந்த பொருட்களை கைவிரலில் எண்ணிவிடலாம். எவ்வளவு இலகுவான செலவு குறைந்த வாழ்க்கை வாழலாம். வாழ்ந்தோம்.
உலகம் வளர வளர தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க செலவு கூடி கடனாளியாகி செத்துப் போகின்ற மனிதர்களை எண்ணிப்பார்க்க கஸ்டமாக இருக்கிறது.
தேவைக்கதிகமான பொருட்களோடு எத்தனை வீடுகள் வீணாகக் கிடக்கின்றன. எங்களது மூன்றாவது வீடு ஒரு கல்வீடு. அது இன்னும் சில இடிபாடுகளுடன் கிடக்கிறது புளியங்குளத்தில்.
அதனை அம்மய்யா தனது உழைப்பால் கட்டி முடித்தார். அந்தக் கிராமத்தில் ஒரு கல்வீட்டில் இருப்பது என்பது அந்தக் காலத்தில் எழுபதுகளில் பெருமைதான். கூளாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலைதான் எங்கள் ஊர்களின் வீடுகளுக்கு எல்லாம் கல்லும் ஓடும் தந்த அமுத சுரபி.
அங்கு தினமும் கல்லும் ஓடும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். கூளாமுறிப்பு மண்ணின் வளம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பேசுவார்கள். உறுதியான கல்லுக்கும் ஓடுக்கும் சிறந்த மண் அது.
எங்கள் மூன்றாவது வீட்டுக்கு நீண்டகாலமாக முன் கதவு பூட்டப்படாமலே இருந்தது. கதவு வாங்கிப் பூட்ட காசு இல்லாமல் சாக்குப் போட்டு மறைத்து வைத்திருந்தார் அம்மய்யா. அதற்குப் பிறகு உறுதியான முதிரை மரக்கதவு ஒன்று வந்தது. அது மழைக்காலங்களில் உப்பிப் பருத்து இருக்கும். அண்ட பூட்ட முடியாது. வெயில்காலங்களில் சுருங்கி இருக்கும். பூட்டலாம். எங்கள் கல்வீட்டில் நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு என்றே ஒரு அறை இருந்தது. அதில் 12 மாதங்களும் நெற்செல்வம் நிறைந்திருக்கும்.
நெல் இருப்பதனால் அந்துப் பூச்சியும் எலியும் எங்கள் வீடுகளில் எங்களோடு வாழும். அதனை தவிர்க்க முடியாமல்தான் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீடுகளும் இருந்தன.
இப்பொழுது நினைத்தாலும் யோசிக்கிறேன். இரண்டு அறைகள் எங்கள் வீட்டில் இருந்தன. இரண்டு அறைகளுக்கும் யன்னல் கிடையாது. எப்பொழுதும் இரண்டு அறைகளும் இருட்டாகவே இருக்கும். எங்கள் வீட்டுக்கு ஒரு நாளும் மின்சாரம் இருந்ததே கிடையாது.
அந்த இரண்டு அறைகளிலும் விளைபொருட்களே இருக்கும். நிலக்கடலை, மிளகாய், வெங்காயம் என்று அறைகளில் வைத்துவிட்டு முன் விறாந்தையில் பாயைப்போட்டு படுத்து எழும்பி எங்கள் எங்கள் வேலையைப் பார்த்தோம் அன்று. ஏதோ வீடு கட்டியது விளைபொருட்கள் வைப்பதற்காகத்தான் போலிருக்கிறது. அம்மய்யா உயிருடன் இல்லை. இருந்தால் இப்பொழுது கேட்டிருக்கலாம். ஏன் எங்களுக்கு அறைகள் தரவில்லை என்று.
என்னதான் வீடு கட்டினாலும் வீட்டுக்கு வெளியே காற்றோட்டத்தில் சாக்குக் கட்டிலைப் போட்டுப் படுக்கும் சுகமே தனிதான்.
எமது வீட்டுக்கு வெளியே ஒரு குடத்தடி இருக்கும். குடத்தடிக்குக் கிட்ட ஒரு மாதுளை மரம், எலுமிச்சை மரம் இருக்கும். அவை இரண்டில் எலுமிச்சைதான் நன்றாக காய்க்கும். மாதுளை மரம் காய்த்திருக்கிறது. ஆனால் நான் மாதுளம்பழம் என்று ஆசையாகத் தின்றது முதன் முதலாக தமிழ்நாட்டிற்குப் போனபோதுதான்.
எமது மாதுளை மரம் எப்பொழுதும் ஒரு பெரிய முற்றிய பழத்தைத் தந்ததே இல்லை.
எமது புளியங்குளம் வீடு றோட்டோரத்தில் இருந்தது. எப்பொழுதும் கிராமத்தில் கிழக்கு வாசல் வைத்த வீடுதான் கட்டுவார்கள். சூரிய வெளிச்சம் உதித்தவுடன் வாசலுக்கு அடிக்கவேண்டும் என்றும் அதுதான் அபிவிருத்தி, செல்வம் வரும் என்றும் கிராம மக்கள் நம்புவார்கள். எமது வீடும் கிழக்குவாசல் வீடுதான்.
கடைசிவரை சோறு, தண்ணிக்கு கஸ்டப்படாமல்தான் நாழ்ந்தோம் நாம். இந்த மூன்றாவது வீட்டோடு எனது வாழ்க்கை ஒரு இடத்தில் தங்குவதான எல்லா விதிகளையும் கடந்துவிட்டது. அதற்குப் பிறகு ஊர் ஊராக அலைந்து திரியும்படி விதி எனக்குப் பணித்துவிட்டது.
உடுப்பிட்டியில் ஒரு வீடு. பின்னர் திக்கத்தில் ஒரு வீடு. பிறகு உடுத்துறையில் ஒரு வீடு, பிறகு திருகோணமலையில் ஒரு கடை என்று எனது தங்க முடியாத தூரத்தின் பயணங்கள் கடந்துபோயின.
கலியாணம் முடித்த பிறகு வீடு ஒன்று கட்டாயம் வேண்டும். மனைவியும் நானும் வாழ்வதற்கு. வீடு எப்படி எல்லாம் இருக்கவேண்டுமோ அந்த வரையறைகளோடு எங்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை. முதலில் முப்பது வருடம் பழமையான ஒரு வீடு கிடைத்தது. புதிதாக திருமணம் முடித்து மனைவியை ஒரு வீட்டில்வைத்து காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பு வந்ததன் பிறகு கிடைத்த முதல் வீடு இது.
இந்த வீட்டுக்கும் யன்னல் இல்லை. ஒரேயொரு அறை. மண்வீடு. அந்த வீட்டில் வாழ்ந்ததை நினைத்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது லண்டனிலிருந்து இதனை எழுதும்போது.
வீட்டின் கூரை பழைய ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. உடைந்த கூரையால் மழை வீட்டுக்குள் எல்லா நேரமும் வரும். மழைத்தண்ணீரைத் தடுப்பதற்கு பொலித்தீன் பையினால் இழுத்துக்கடிட்டியிருப்போம். அந்த பொலித்தீன் பையிலும் நீர் நிறைந்திருக்கும்.
ஒரேயொரு பல்ப் மட்டும் எங்களுக்கு வயர் இழுத்துத் தந்திருந்தார்கள். மலசலகூடம் எங்களுக்கும் எங்களுக்குப் பக்கத்தில் கல் வீட்டில் இருந்த அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் மிகுந்த சிரமமான ஒரு குழிதான் இருந்தது.
எங்கள் மண்வீட்டு அறைக்குப் பக்கத்தில் ஆடு கட்டும் அறை இருந்தது. ஒரு அறையில் ஆடுகளும் மறு அறையில் நாங்களும் இருந்து இரண்டு வருடங்கள் கழித்தோம். அங்குதான் எனது மூத்த மகள் வளர்ந்தாள்.
எல்லாம் சகித்துக்கொள்ளும் மனைவியின் மனம்தான் பெரிது.
அதற்குப் பிறகு ஒன்பதாவது வாடகைவீடு கிடைத்தது. அது பரவாயில்லை. இன்னொரு வீட்டோடு ஒட்டியதுதான். ஒரு அறை, ஒரு குசினி வீடு. பத்தாவது வீடும் அக்குறணையில்தான். வாடகையும், சும்மாவுமாக வீடுகளில் இருந்துகொண்டிருந்தோம். பதினோராவது வீட்டில் இருந்துதான் நான் லண்டன் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு லண்டனில் வாடகைக்கு அறை தேடுவது என்றால் பல பல அளவுகளில் சேர்ந்திருத்தலோ அல்லது தனித்திருத்தலோ என்ற நிலமையில் வாடகையின் பெறுமதி இருக்கும்.
1998 இல் ஒரு அறை 40 பவுண்களுக்கு இருந்தது. இது சாப்பாடு இல்லாமல். இப்பொழுது 2010 இல் ஒரு அறை 100 பவுண் சாப்பாடு இல்லாமல்.
லண்டனில் ஈஸ்ட்வரம், இல்பேட், ஸ்ரட்போட், ஹவுன்ஸ்லோ என்று ஒவ்வொரு இடத்திலும் அறைகள் மாறி மாறி வாழ்ந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஒரு அறையில் 4 பேர் தங்கிக்கொண்டு சிலோனில் இருந்து வந்த காசை ஏஜென்சிக்குக் கொடுக்கும் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஊரில் அக்காவை, தங்கச்சியை சீதனம் கொடுத்துக் கட்டிக்கொடுக்க ஆலாய்ப்பறக்கும் எத்தனையோ இளைஞர்கள் ஒரு நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கிறார்கள்.
மனைவியின் விருப்பத்தில் 13 வது வாடகை வீட்டுக்குப் பிறகு ஒரு சொந்த வீடு கட்டினோம். 2004 இல்தான் அந்த கைங்கரியம் கைகூடியது. முதன்முதலில் ஒரு சொந்த வீடு எமக்கானது என்ற மனநிலையே பெரிய நிம்மதியைத் தரும்.
அதனை நான் எனது வத்தளை வீட்டில் இருக்கும்போது உணர்ந்தேன். எங்கள் வீடு மனைவியின் விருப்பத்தின் பெயரில் பார்த்துப் பார்த்துக் கட்டியது.
எனக்கு வீடு தொடர்பான அக்கறை எப்பொழுதும் இருக்கும்.
வீடு மனிதர்களுடைய உணர்வு சார்ந்த ஒரு விடயம். வீட்டுக்குப் போனால் சில வீடுகள் எமக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். போன உடனேயே பிடித்துப்போய்விடும். சில வீடுகளுக்கு ஏன் போனோம் என்று வெறுப்பு வந்துவிடும்.
மனைவிக்குத் தெரிந்தவர்கள் என்று ஜேர்மனியில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தோம். போன நேரத்திலிருந்து அந்த வீடு எங்களுடன் ஒட்டவேயில்லை. ஏதோ அந்நியப்பட்டது மாதிரி அந்த வீடு இருந்தது. அத்தோடு அந்த வீட்டு மனிசி துப்புரவு கூடின மனிசி. நாங்கள் யாரும் டொய்லட்டுக்குப் போனால் வாசலுக்கு 'மொப்' பிறசுடன் வந்துவிடும். அவ்வளவு துப்புரவு. அதுவும் பெரிய அசௌகரியமாக இருந்தது.
அந்த வீட்டின் வைபறேசன் எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. எனது மனைவிக்குத் தலையிடி, காய்ச்சல், உதடுவீக்கம் எல்லாம் அங்குநின்ற ஒரு இரவில் வந்துவிட்டது. அடுத்தநாள் அந்த வீட்டிலிருந்து எப்பொழுது கிளம்புவோம் என்றிருந்தது.
அந்த வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன் எல்லா வருத்தமும் போய்விட்டது.
சில வீடுகள் மனதோடு ஒட்டிவிடும். வீடுகள் எமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நாங்கள் தெரிவு செய்யும் பெயிண்ட் கலர், எங்கள் வீட்டிலிருக்கும் ஓவியங்கள், திரைச்சீலை எல்லாம் எமது மனதைக் கண்டுபிடிக்க உதவும் சாதனங்கள்தான்.
எமது வத்தளை வீட்டைப்பார்த்து ஆசைப்படாதவர்கள் இல்லை. ஒன்றுமே இல்லை ஆனால் என்னவோ எல்லாம் இருப்பதுபோல ஆசைப்படுவார்கள். ஒரு சின்ன இடத்தில் அவ்வளவு பெரிய வீடு எப்படி வந்தது? எல்லோரும் சொல்வார்கள் உங்கள் மனம்தான்.
வீட்டில் அது அது அந்த இடத்தில் இருக்கவேண்டும். ஒரு வீட்டை ஒரு கிழமை பராமரிக்காமல் விட்டுப் பாருங்கள். தூசி அடைந்து சுடுகாடாகிவிடும். மனிதக் கைகள் வீட்டை எப்பொழுதும் பராமரித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இங்கு லண்டனில் பேராசைக்காக மற்றவரைப்போல வீடு வாங்கவேண்டும் என்று அவாப்பட்டு மோர்கேஜ் கட்டமுடியாமல் துன்பப்பட்டு சாகிறவர்கள் ஏராளம். தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிற துன்பம் இது.
லண்டனில் எங்கள் சிறிய வாடகை வீட்டுக்கு எப்பொழுதும் யாரும் வந்தாலும் அவர்களின் மனதோடு எங்கள் வீடு ஒட்டிப் போகும். ஏனோ தெரியாது. உங்கள் வீடு அழகாக இருக்கிறது என்றுதான் வருகிறவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். ஒரு வாரமும் ஆட்கள் வராத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. இந்த வீட்டின் வைபறேசன் நன்றாகத்தான் இருக்கிறது.
நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.
'செல்விருந்தோம்பி வருவிருந்தை' பார்த்திருக்கிறது மனிசி. நான் உண்மையில் கொடுத்துவைத்தவன்தான்.

No comments:

நண்பர்கள் கூட்டம்