Saturday, 5 September 2009

முஸ்லிமாயிருத்தல்

உண்மைத்தன்மை குறித்து பல நேரங்களில் சிந்திக்கிறேன். எவ்வாறு உண்மையாளனாகக் காட்டிக் கொள்வது, எப்படி மற்றவர்களுக்கு அதனை விளங்க வைப்பது. உண்மையில் நான் நல்லவன். என்னிடம் கெட்ட எண்ணங்கள் இல்லை. தீவிரவாதம் தொடர்பாகவோ அல்லது குண்டு வெடித்தல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவனோ அல்லது அப்படியான சிந்தனைகளிலோ நான் இல்லை என்று எப்படி அவர்களுக்கு விளங்கப்படுத்துவது?
அண்மையில் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்த ஒரு இரவுப் பொழுது நேரம் இரவு 11.50. நித்திரை, உடல் களைப்பு, பிரயாண சோர்வு, ஸ்ரண்டட் எயார் போட்டில் இருந்து எனது இடத்துக்கு ரக்ஸி பிடித்துப் போவதென்றால் அறுபது பவுன் செலவழிக்க வேண்டும். அவ்வளவு பணத்தைச் செலவழிக்க எனது மனைவி இப்பொழுதெல்லாம் அனுமதி தருவதில்லை. எல்லாம் கிறடிட் கிறஞ் செய்த மாயம்.
ஐரோப்பா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு வேறு வரிசை; எங்களைப்போல வெளிநாட்டு அன்னியருக்கு வேறு வரிசை. எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த இமிகிறேசன் அதிகாரி சீல் குத்திவிட்டார்.
ஆனால் பக்கத்தில் நின்ற சி.ஐ.டி.யோ யாரோ, பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஒரு ரூமுக்குள் இருத்திவைத்துக் கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்விகளில் பாஸ்போர்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகாரி என்னிடம் கண்டதெல்லாம் நான் ஒரு முஸ்லிமாக இருப்பதுமட்டும்தான். ஐரோப்பாவில் பிறந்த முஸ்லிமோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிமோ என்ற பாகுபாடு இல்லாமல் ‘முஸ்லிம்கள் என்றால் சந்தேகி’ என்ற ஒரு நிலைமை ஐரோப்பாவில் தோன்றிவருவது தெளிவாகத் தெரிகிறது.
எங்கே இருக்கிறீர்கள்? இங்கு முஸ்லீம் இளைஞர்கள் எப்படி? உங்களது பக்கத்து வீட்டுக்காரர் யார்? உங்களது மனநிலையில் வெள்ளைக்காரர் எப்படி? உங்களுக்கு இந்த நாடு பிடித்திருக்கிறதா? ஏதேனும் வெறுப்பு இருக்கிறதா இங்கு? என்று அந்த ஒஃபிஸர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உரையாடல். எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. நடுச்சாமத்தில் என்னை வைத்திருந்து என்ன கேள்வி?
முஸ்லீம்கள் என்றாலே குண்டு வைத்து விடுவார்களோ எனும் சந்தேகத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக பயப்படுகிறார்கள். அப்படி சில சம்பவங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய அதீத பற்று போன்ற விடயங்கள் இங்குள்ள மீடியாக்களில் அடிக்கடி பாவிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய இளைஞனை தாடி, தலைப்பாகை, ஜிப்பா, பைஜாமா தோற்றத்தில் கண்டால் பொலிஸில் இருந்து இமிகிறேஸன் ஒஃபிஸர் வரை மிரண்டு போகிறார்கள். இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக-ஐரோப்பாவில்-இருக்கிறது.
உண்மையில் இது பின்லேடன் என்ற நபரை முன்னிறுத்தியதான ஒரு தோற்றப்பாடான அச்சமாகும். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சூத்திரதாரி என்று சந்தேகிக்கும் பின்லேடன் தாடி, ஜிப்பா, தலைப்பாகை கட்டி இருக்கிறார் என்பதற்காக அந்த உடை ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனை என்ன வென்று சொல்ல.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் அல்லது மதரஸா பிள்ளைகள் பயன்படுத்தும் ரூமால் அல்லது பெரிய ஸ்காஃப் ஏதோ பயங்கரவாதத்தின்அடையாளம் போல ஒரு மருட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்துவந்த ஒருவர் எனது நண்பனுக்கு அந்த ஸ்காஃபை கொடுத்தார். குளிருக்கு கழுத்தில் சுற்றிக் கொள்ளச் சொல்லி. ஆனால் அந்தத் தமிழ் நண்பர் எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். அவர் என்னிடம் தரும்போது சொன்னார் ‘என்னத்துக்கு சும்மா வம்பு’. உண்மையில் அவர் தமிழர். இந்த விறைக்குளிருக்கு கழுத்தில் கட்டுவதற்கே பயப்படுகிறார் அந்த ஸ்காபை. அதாவது மனப்பயம் சந்து இடமெங்கும் வியாபித்துள்ளது விளங்குகிறது.
அண்மையில் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த ஸ்காஃபை கட்டியிருந்த ஒரு பாடகி பயங்கரவாதத்தின் சின்னத்தை அணிந்திருக்கிறார் என்று ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகி பிரிட்டனிலும் பெரும் செய்தியாக வந்தது.
என் பாஸ்போர்ட்டை திருப்பித்தந்த அந்த ஒஃபிஸர் சொன்னார், ‘இது ஒரு சாதாரணமான விசாரிப்புதான், குறை விளங்க வேண்டாம்’. இங்கே குறை விளங்குவதற்கு அப்பால் ஒரு முஸ்லிம் ஆளை ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் பிரச்சினை. மும்பைத் தாக்குதலின்போதும் இது தெளிவாகவே தெரிந்தது. இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதான் எல்லா டெலிவிசன், பேப்பர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ அல்லது இந்துத் தீவிரவாதி என்றோ அல்லது பௌத்த தீவிரவாதி, யூத தீவிரவாதி என்று எந்த ஊடகங்களும் குறிப்பிட்டு சொல்வதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதி என்பது ஒரு சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்க்கிற சொல். அதுதான் இப்பொழுது உலகமெங்கும் நடக்கிறது.
ஒரு பொதுமகன் எவ்வாறு உண்மையானவன் என்பதனை பொலிஸிடமும் இமிக்கிறேசன்காரரிடமும் நிரூபிக்கிறது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது ஐரோப்பாவில்.
ஐரோப்பாவில் இருக்கின்ற அனேகமான முஸ்லிம்களின் பூர்வீகம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் என்றுதான் இருக்கின்றன. அவர்களின் பூர்வீக நாடுகளில் எல்லாமே யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் யாராவது ஒரு சொந்தக்காரன் ஒரு தொடுசலாக இருப்பான். அதனால் இவருக்கும் ஒரு தொடுசல் வர சாத்தியம் இருக்கிறது. அப்படித்தான் பலர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால் மதத்தைச் சொல்லி ஒரு முழுச் சமூகத்தை விரல் சுட்டி பயங்கரவாதிகள் என்று சொல்வது தினம் தினம் அதிகரித்துச் செல்கின்ற ஒரு விடயமாக மாறிவருகிறது ஐரோப்பாவில்.
ஒபாமாகூட முஸ்லிம் ஆட்கள் கூப்பிட்ட ஒரு விருந்துக்கும் இதுவரை போகவில்லை. காரணத்தையும்அவர் சொல்லவில்லை.

8 comments:

வால்பையன் said...

அடையாளம் தீவிரவாதத்தின் முகவரி அல்ல!
ஆனால் தன்னை தீவிர இஸ்லாமிராக காட்டி கொள்ள அந்த அடையாளம் தேவைப்படுகிறதே!

நீங்களே பாருங்கள் திவிரவாதிகளாக இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களை தான் உண்மையான இஸ்லாமியர்கள் என்கிறார்கள்!

மீஸ்லீமாக இருப்பதை விட மனிதனாக இருப்பது அதிக கடினமா!?

Ponniah said...

முதலில் தலைப்பைப் பார்த்ததும் பயந்துதான் விட்டேன். காரணம் பொதுவாக மதங்கள் இருக்கும் திசையின் எதிர்த்திசையிலேயே பயணப்பட விரும்புபவன்.
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அவர்கள் முஸ்லிம்களைக் கண்டு பயப்படுவதற்கு செப்டெம்பர் 11 ஐ தவிர, அயத்துல்லா கொமெனி, பின் லாடன் போன்றவர்களுக்கு இஸ்லாமும் அதன் அடிப்படைவாதக் கொள்கைகளின் மீதிருந்த பற்றுமே காரணம். ஜெர்மனியில் ஒரு துருக்கிக்காரர் தன் மகனுக்கு பின் லாடன் என்று பெயர் வைத்தார். அரசு அதை அனுமதிக்கவில்லை. வழக்காடிப்பார்த்தார்.முடியவில்லை. ஹிட்லர், பின் லாடன் போன்ற பெயர்கள் இங்கேதடை செய்யப்பட்டுள்ளன. எல்லாளன் என்கிற பெயருடைய ஒருவர் கட்டுநாயகா விமானநிலையத்தில் தொந்தரவு செய்யப்பட்டார். இலங்கையர் ஒருவர் இஸ்லாமிய பெயரை வைத்திருந்தால் தமிழ்-சிங்களத்தேசியவாதங்கள், ஐரோபிய-அமெரிக்க முஸ்லிம் எதிப்புவாதங்களிடையே எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்கள் உணரக்கூடியவையே. என்ன செய்யலாம்…………சோதரா. யானை, நுளம்பு, நட்டுவக்காலி, பாம்புகள் நிறைந்த உலகத்தில்தானே நாமும் வாழவேண்டியிருக்கிறது?


கருணாகரமூர்த்தி.பொ, பெர்லின்.

இளைய அப்துல்லாஹ் said...

உன் பதிவு பார்த்தேன் மிகவும் வேதனையான அதே நேரம் ஆத்திரமான விடயம் .. ஒரு கறுப்பனாக இருப்பதே இந்த உலகில் பெரிய பிரச்சனை அதிலும் முஸ்லீமாக இருப்பது அதைவிடப்பிரச்சனை ..மனிதர் வாழும் உரிமையை பறித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் ..இவர்கள்தான் உண்மையில் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளை உருவாக்குபவர்களும் ..இவர்கள் இல்லாவிட்டால் அல்லது எம் நாடுகளில் தலையிடாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்கும் ..


பிரங்போட் ரஞ்சினி

இளைய அப்துல்லாஹ் said...

நல்ல பதிவு தொடர்ந்து பதியுங்கள்


மட்டுவில்
ஞானக்குமரன்

இளைய அப்துல்லாஹ் said...

Sad to read Anass. Some times I too enconter this when I am with jippa. I understand your pain. This is actually a hate crime.V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B - leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759

இளைய அப்துல்லாஹ் said...

அன்பான எனது நண்பர்களி்ன் கருத்துக்களிற்கு நன்றி

Trek Pay said...

வணக்கம்,

உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வாகர்களைத் தூண்டும் எழுத்துநடையில் தரமாக அமைகின்றன. ஈழநேசனில் நீங்கள் எழுதிய புகைப்படங்கள் மனதின் விம்பம் என்ற கட்டுரை தொடர்பில், நீங்கள் அதில் குறிப்பிட்ட போட்டோ மாஸ்ரர் பற்றி எழுதியிருந்தவன் நான்தான்.

நன்றி

வன்னியிலிருந்து நந்தன்

இளைய அப்துல்லாஹ் said...

மிக்க நன்றி நந்தன்

நண்பர்கள் கூட்டம்