Saturday, 27 June 2009

பறை மேளக்கலைஞன்

மேளம் உண்மையில் எனக்கு மிகவும் விருப்பமான இசைக்கருவி. இப்பொழுதெல்லாம் எமது கிராமத்தில் பறை மேளக்கலைஞர்கள் தங்கள் கலையை விட்டு விட்டு வேறு உத்தியோகத்துக்கு சென்று விட்டனர். காரணம் தமிழ் சமூகத்தில் அந்த கலைஞர்களை மதிக்காததும் உதா சீனப்படுத்தியதுமாகும். வெளிநாடுகளில் அவர்கள் தங்களது சாதியை சொல்லாமல் வாழக்கூடிய நல்ல தருணம் இருப்பதனால்அவர்கள் வெளிநாடுகளில் மதிப்போடு வாழ்கிறார்கள். இருந்தும் சாதிபார்க்கிற முட்டாள்கள் சாதியை தேடி அலைகிறார்கள். எனக்கு பல அனுபவங்கள் உண்டு எனது பெயரை அனஸ் என்று பலர் விளங்குவதில்லை அனக்ஸ் என்றுதான் நினைக்கிறார்கள். அதனால் கொக்கி போடுவார்கள் நீங்கள் எந்தப்பக்கம் அதற்கு அர்த்தம் ''நீ என்ன சாதி'' என்பதுதான். ''முட்டாள்களே முஸ்லிமில் சாதி இல்லையடா'' என்று மனதுக்குள் திட்டுவேன்.பரம்பரை தொழில் என்பது இப்பொழுது இல்லாமலாகி வருகிறது. வோஸிங் மெசின் வந்து விட்ட பிறகு கட்டாடி தொழில் குறைந்து விட்டது கொழும்பு போன்ற இடங்களில்.

இந்த பறையை இங்கே லண்டன் ஹவுன்ஸ்லோவில் கண்ட நான் உடனே எனது போனில் றைக்கோட் செய்தேன்.

14 வயதிருக்கும் கருவேலன்கண்டல் சிவாவின் அப்பா தம்பர் நாய் கடித்து செத்துப்போனார். அந்தக்காலத்தில் சிவாவின் அண்ணன்தான் வெளிநாட்டில் இருந்தவர். அதனால் தம்பர் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பபியவர் என்ற புகழோடு கருவேலன்கண்டலில் இருந்தவர். அவருக்கு நாய் கடித்து விட்டது. அவரின் பிரேதம் வலு சங்கையாக வீட்டின் முன் விறாந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சிவாவின் நண்பர்கள் என்ற படியால் செத்த வீட்டுக்கு போனோம். அப்போ அப்பா செத்த கவலையில் சிவா அழுது கொண்டிருந்தான்.

வீட்டுக்கு போனபோது முற்றத்தில் இருந்த பறை மேளக்கலைஞர்கள் மேளம் அடித்து நாங்கள் வந்த சேதியை ஊருக்கு அறிவித்துவிட்டார்கள். வீட்டு கேற்றடிக்கு யார் போனாலும் மேளமடித்து ஊருக்கு சொல்லிவிடுவார்கள். அதில் இருந்த மூத்த பறை மேளகக்கலைஞனுக்கு வயது 40 இற்கும் மேல் நன்றாக கள்ளுக்குடித்திருந்தார். இல்லாவிட்டால் அடிப்பதற்கு சுருதி சேராதல்லவா.

அவர் வெறும் மேலோடு இருந்தார் அவரின் முலை பெரிதாக இருந்தது. எங்களோடு வந்த ஒருவன் சொல்லிவிட்டான் ''அவற்றை பாச்சியை பாரடா'' எண்டு சத்தமாக. அவர் மேளம் அடிக்கும் ஒவ்வொருமுறையும் பாச்சி குலுங்கி குலுங்கி கெம்பி கெம்பி எழும்பியது.

அழுது கொண்டிருந்த சிவாவையும் கூப்பிட்டு காட்டியாச்சு. அப்பா பிரேதமாக கிட்க்கும் போது கெக்கட்டம் போட்டு சிரிக்கிறான் சிவா. அவனுக்கும் 14 வயதுதான் அப்பொழுது. பெரியவர்கள் எல்லோரும் சிவாவை கோபமாக பார்க்கிறார்கள். தேப்பன் பிரேதமாக கிடக்க மகன் அழாமல் சிரிக்கிறானே என்று. யாரிட்டை போய் சொல்லுறது அவரின் பப்பா ஆடுகிறது என்று அதுதான் அவன் சிரிக்கிறான் என்று.

பிரேதம் சுடுகாட்டுக்கு போகும் வரைக்கும் அவன் சிரித்துக்கொண்டுதான்இருந்தான்.

இங்கு ரவுஸர் உடுத்த பறைக்கலைஞன் மேளமடித்து பிச்சையெடுக்கிறார் மேளமும் நன்றாக அடிக்கிறார் நான் 20 பென்ஸ் போட்டேன்.

6 comments:

இளைய அப்துல்லாஹ் said...

அன்புள்ள இளைய அப்துல்லா அவர்களுக்கு
வணக்கம். நலம்தானே.
பறை மேளக் கலைஞன் வாசித்தேன். சில இடங்களில் சிரிப்பு வந்தது. ஒரு நல்ல கலை எங்கள் நாட்டில் அழிந்துவிட்டது. அதற்கு ஒரு கலாச்சார இடமும் இருக்கிறது. பழைய நினைவுகளைதிருப்பி கொண்டுவந்ததற்கு நன்றி.
அன்புடன்
அ.முத்துலிங்கம்

சாந்தி said...

சிலருக்கு இயல்பாகவே மற்றவர்களைச் சிரிக்க வைத்துவிடும் வல்லமையுள்ளவர்கள். உங்களது பறைமேள நினைவுகள் சிரிக்க வைத்ததும் மட்டுமல்ல நமது சிந்தனைக்குள் வேரோடியுள்ள சில நாசங்களையும் சொல்லியுள்ளது.

எங்கள் ஊர் பறைமேளச் சத்தம் மட்டுமல்ல எங்கள் ஊர்களின் பாரம்பரியங்களும் அழிந்து போய்விட்டது.

//முட்டாள்களே முஸ்லீமில் சாதியில்லையடா//புதிய தகவலாக உள்ளது. இதுவரை மற்றைய மதங்கள் போல முஸ்லீமும் சாதிகளால் முரண்பட்டது என நினைத்தேன். நன்றிகள் தகவலுக்கு.

சாந்தி

இளைய அப்துல்லாஹ் said...

அனஸ்
நல்வணக்கம் நன்றி பறை தொடர்பான உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது.எங்கள் இன்ஸிட்டியூவில் நாட்டுப்புறை கலைகள்,பறை மற்றும் தமிழ் துறைகள் ஆரம்பிக்கிறோம்.
என்பதனை ஒரு தகவலாக சொல்லிக்கொள்ளலாம் என்றுதான் இதனை எழுதுகிறேன்.

நன்றி
பேராசிரியர்.எஸ்.சச்சிதானந்தம்

இளைய அப்துல்லாஹ் said...

அன்புள்ள நண்பர்கள் அ.முத்துலிங்கம்,சாந்தி,பேரா.சச்சிதானந்தம்
ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ் said...

உங்கள் பறைமேளம் பற்றிய குறிப்பு என்னை 50 ஆண்டு முன்னாக
கரவெட்டிக்குக் கொண்டுபோய்விட்டது. அன்பர் ஒருவரின் மனைவி
காலமாகிவிட்டார். யான் சென்றபோது அங்கே பறைமேளம் வரவேற்றது.
தூரத்திற் போகும்பொதே அந்தப்பறை மேளச்சமாவை நயந்துகொண்டே
போய்க்கொண்டிருந்தேன். படலைக்குக் கிட்டப்போனபோது அவர்கள்
இரண்டு குழுவாகப் பிரிந்திருந்துகொண்டு நட்டுவமேளக்காரர்போலச்
சமாவைவைத்தமை மிக மிக என்னைக் கவர்ந்துவிட்டது.
படலையிலேயே நின்றுவிட்டேன். அதனைப் பலர் கவனித்திருக்கின்றனர்
போலும். அன்பரின் உறவினர் வந்து கையைப்பிடித்து அழைத்தபோதுதான்
இவ்வுலகத்துக்கு மீண்டேன். அப்போது வேறொரு பயம் ஏற்பட்டுவிட்டது.
படலையில்வைத்து வரவேற்கப்படவேண்டும் என யான் எதிர்பார்த்ததாக
நினைத்தனரோ என உள்ளூர ஒரு அரிப்பு. நல்லவேளை. பறைமேளச்சமா
முற்றுப்பெற்றிருந்தது. இருக்கும்போதே சமாவை ரசித்துக்கொண்டுநின்றேன்
என்றேன். உடனே, பலர் என்னைச்சுற்றி வந்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
அவன் கணபதி சிறந்த கலைஞன். என்றிவ்வாறு பல விமர்சனங்கள். பிரேதம்
இரண்டு மணியாகுமாம். கொள்ளிவைக்கவேண்டிய மகன் யாழ்தேவியிலேதான்
வருவாராம். யான் பாடசாலைக்குப்போய் மீண்டும் வருவதாகச் சொல்லித்
திரும்பினேன். அவர்களுள் முதியவராயிருந்தவர்தான் கணபதியாக
இருக்கக் கூடும் என எண்ணி அருகிற் சென்று பாராட்டுத் தெரிவித்தேன்.
கணபதியின் மலர்ந்த முகம் இன்றும் அகக்கண்ணில் தெரிகிறது. அந்த
மேளச்சமாவும் காதில் ஒலிக்கிறது.

அன்பான,
ஆ.தா.ஆறுமுகம்
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர்(முன்னாள்)

கே.பாலமுருகன் said...

பறை மேளம் கள்ளு இறக்கிகளின் தொன்ம கலைதானே நண்பரே? கள் இறக்கும் மரமேறிகளின் வாழ்வு (விளிம்பு மனிதர்களாக அடையாளப்படுத்தப்பட்டு- ஊருக்கு அப்பால் தள்ளியிருந்து கள் இறக்கினார்கள்) மிக ஆபத்தானதும் பயங்கரமானதாகும். அந்த வலியை அந்தப் பயங்கரத்தை மறப்பதற்காக அவர்களின் பொழுது போக்காக பற மேளங்கள் இருந்தன என்று தலித் வரலாற்றில் சொல்லப்படுகிறதே.
உண்மையா?
தங்களின் பதிவு நன்று நண்பரே.

கே.பாலமுருகன்
மலேசியா

நண்பர்கள் கூட்டம்