Monday, 27 July 2009

லண்டனில் கார்லண்டனில் ஒரு கார் வாங்குவதும் இலங்கையில் ஒரு யானை வாங்குவதும் சரி. இரண்டையும் கட்டி மேய்க்கும் செலவு ஒன்றுதான். லண்டனுக்கு வந்து பத்து வருடமாகியும் கார் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. காரணம் இங்கு போக்குவரத்துக்கு அவ்வளவாகப் பிரச்சினை இல்லை. முந்தி என்றால் எனது அலுவலகத்துக்கு மேலேயே ரூம் இலவசமாக தந்திருந்தார்கள். ஆகவே, படியில் இறங்கி படிகளில் ஏறினால் வீடும் அலுவலகமும் வந்துவிடும். அதற்குப் பிறகு அலுவலகமே 5 நிமிட நடை தூரத்தில் ஒரு வீடு வாங்கித் தந்தது எனக்கும் வேலை நண்பர்களுக்கும். அதில் எனக்கு ஒரு ரூம். ஆகவே, காரின் சிந்தனை வரவில்லை. இப்பொழுது இருக்கும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 10 நிமிட தூரம்தான் நடை.
ஆனால், குடும்பத்துடன் போகவர ஒரு கார் இருந்தால் நல்லது என்று மனிசி ஒருவருடத்துக்கு முன்பு ஒரு கதையைப் போட்டது. அதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது கார் பற்றிய கவலை. லண்டனில் உள்ள குளிர் சாதாரணமானது இல்லை. சாறி உடுத்துக் கொண்டோ சாதாரணமான சேட்டை உடுத்துக் கொண்டோ இந்தக் குளிர் காலத்தில் போகமுடியாது. அதுக்கு ஹீற்றர் போட்ட ஒரு கார் இருந்தால் நல்லதுதான் என்பது மனிசியின் வாதம்.
வத்தளையில் இருக்கும் போது மனிசி படிச்சுப் படிச்சு சொன்னது, ''கார் பழகுங்கோ, கார் பழகுங்கோ ஒரு 15 ஆயிரம் ரூபாய்தானே பழகுங்கோ'' என்று ஆனால் அசட்டையீனத்தால் மனிசி சொன்னதைக் கேட்கவில்லை.இங்கு வந்ததன் பின்பு என்னதான் இலங்கையில் ஓடத் தெரிந்திருந்தாலும் இங்கு லைசன்ஸ் எடுப்பதற்கு லேனர்ஸிடம் போய் கார் பழகி சட்டதிட்டங்களை முறையாகப் படித்து அதனை அவதானித்து ஐம்பது பவுண் காசு கட்டி பின்னர் லேனர்ஸ் கார்காரருக்கு எழுபது பவுண் அளந்து போய்த்தான் எக்ஸ்ஸாமினர் 45 நிமிடம் ஓடவைத்துப் பார்த்து எல்லாம் நூற்றுக்கு நூறு சரியென்றால் மாத்திரம் அவர் லைசன்சுக்கு பாஸ் பண்ணுவார்.
எக்ஸாமினர் கண்ணுக்குள் எண்ணெயை விட்டுக் கொண்டு நாங்கள் கார் ஓடுவதைப் பார்த்துத்தான் ஓ.கே. பண்ணுவார்.ஊர் உலகத்துக்குத் தெரியாத பல பிழைகள் அவரது கண்களுக்குப் பட்டுவிடும். 16 சிறிய பிழைகளில் 15 விடலாம் என்றிருக்கிறது. அந்த சின்ன பிழைகளில் கண்ணாடி சரியாகப் பார்க்க வேண்டும், ஸ்ரேறிங் அங்கும் இங்கும் அல்லாடக்கூடாது, வெள்ளை கோட்டை மீறக்கூடாது என்று மயிர்போல சிறிய அவதானமும் தேவை.
பெரிய பிழைகளில் மஞ்சள் கோட்டில் மனிதர் இறங்கி விட்டால் காரை சிறிது மூவ் பண்ணினாலும் உடனே பெயிலாக்கிவிடுவார். றவுண்ட் எபெளட்டில் சரியான லேனை தெரிவு செய்யாவிடில் ,பொக்ஸ் ஜங்சனில் பிழையாக போய் நின்றால் வன்வே பாதையில் பிழையான பக்கத்திற்குப் போய் நின்றால் பின்னுக்கு எடுக்கும்போது சரியாக எடுக்காவிடில் பெயில் பெயில் தான்.
அதுதான் இங்கு லண்டனில் ஒருவர் லைசன்ஸை எடுத்துவிட்டால் ஒரு பெரிய பேறு பெற்றவராக தன்னை நினைத்துக் கொள்வார்.
அது சரிதான்இந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நூல்போல எல்லாம் சரியாக செய்து விட்டால் அவர் பாஸாகி விடுவார். இது ஒரு வெட்டிமுறிக்கிற வேலை இல்லைத்தான். அப்படி என்றால் இத்தனை பேர் கார் வைத்து ஓட முடியாதே.
ஆனால், எல்லாம் மிக நுணுக்கத்தில் இருக்கிறது. இரண்டு பரீட்சைகள் பாஸ் பண்ண வேண்டும். ஒன்று கேள்வி தொடர்பான பரீட்சை அதனை 35 பவுண் கட்டி பாஸ் பண்ணின சேட்டிபிக்கட்டோடுதான் அடுத்த பிறக்டிக்கலுக்கு போக வேண்டும். இவ்வாறு பல கட்டங்கள் தாண்டினால் பிறகு கார் எடுக்க வேண்டும் இதனைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னனான். கார் வாங்குவது மிகவும் சுலபம். 10 ஆயிரம் பவுண் காரையும், ஒரு ஆயிரம் பவுண் கொடுத்துவிட்டு வீட்டுக்கு கொண்டு வந்துவிட முடியும். பிறகு மாதா மாதம் கட்ட வேண்டும். இங்கே சாதாரண வருமானம் உள்ளவர்களுக்கு கார் ஒரு பெரும் சுமை. றோட் ரக்ஸ் வருடம் 220 பவுண், இன்சூரன்ஸ் வருடம் 800 பவுணில் இருந்து....., எம்.ஓ.ரி. 100 பவுண் வருடம் என் று இவ்வளவும் இருந்தால் தான் காரை றோட்டில் இறக்க முடியும்.இப்பொழுது பொலிஸ்காரரிடம் இருக்கும் சாதனம் மூலம் காரின் நம்பர் பிளேட்டை அது கண்டவுடன் இன்சூரன்ஸ், எம்.ஓ.ரி, இருக்கிறதா? றோட் ரக்ஸ் இருக்கிறதா என்று பார்த்து றீட் பண்ணி விடும். பொலிஸ்காரர் மறித்து செக் பண்ணத் தேவையில்லை.
அப்போ நான் கார் பழக ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மாதத்தில் 4 கிளாஸ் ஒரு வகுப்புக்கு 21 பவுண் கொடுத்தாயிற்று. கார் இப்பொழுது நான் சொன்னபடி கேட்கிறது. டொமினிக் ஜீவாவின் பாணியில் சொல்வதென்றால் வாலாயப்பட்டிருக்கிறது.இனித்தான் எக்ஸ்ஸாம் எடுக்க வேண்டும்.
மாத்தளையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஓடப்பழகி விட்டேன். ஆரம்பத்தில் கந்தரோடையில் இருக்கும் பொழுது மாமாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் ஒரு கிழவிக்கு இடித்த ஒரு கதையும் இருக்கிறது. மோட்டார் சைக்கிள் லைசன்சுக்கு அப்ளை பண்ணிவிட்டேன். மாத்தளையில் வைத்து,
இது நடந்தது 1983 அப்போ எனது நண்பனின் அப்பா படிவங்களையும் நிரப்பி ஒரு லேனர்ஸ் காரரை பிடித்து எக்ஸ்ஸாமினரிடம் கொண்டு போகும் போது படிவத்துக்குள் 100 ரூபா நோட்டொன்றும் வைத்து எக்ஸ்ஸாமினரிடம் கொடுத்தார். ஏன் நூறு ரூபா என்று கேட்டேன். அவர் பாஸ் பண்ணிவிடுவார் என்றார். 100 ரூபா வைக்க படிவம் எல்லாம் பெயிலானவர்களுடையதாக இருந்தது அன்று.
ஒரு சுவரில் கீறி இருக்கும் ஹைவே கோட் களை ஒரு குச்சியால் தொட்டு காட்டி இது என்ன என்று கேட்பார் அவர் 100 ரூபா படிவம் காரராக இருந்தால் பிழையாகச் சொன்னாலும் பரவாயில்லை.பின்னர் 8 போடச் சொன்னார். கால் ஒரு முறை ஊன்றிவிட்டேன். ஆனால் நான் பாஸ் தான் என்பது எனக்கு தெரியும்.ஏனெனில் 100 ரூபா காரர்களில் ஒருவராக நானும் இருந்தேன். மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் பிரச்சினை ஒருவாறு முடிந்தது. அன்றைக்கு மட்டும் ஒரு ஐம்பது பேர்வரை வந்திருப்பார்கள். அவருக்கு மாதம் என்ன வருவாய் லஞ்சமாக கிடைத்திருக்கும்.எம்.ஓ.ரீ என்றொரு சாமானை எனக்கு லண்டன் வரும் வரை தெரியாது. றோட்டில் ஓடுவதற்கு புகை, நச்சுவாயு, நாசமறுப்பு எதுவும் இல்லாமல் நல்ல வாகனம் என்று உறுதிப்படுத்தி பதிவு செய்த கராஜ் ஒன்று சான்றிதழ் தரவேண்டும்.இலங்கையில் இந்தியாவில் எம்.ஓ.ரீ. செய்யப் போனால் 90 வீதமான வாகனங்களை இரும்புக் கடைக்கு தான் போடவேண்டும். அவைகள் விடும் புகை மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் ஓட்டை விழுந்து விடும் அளவுக்கு இருக்கின்றது.அதுவும் ஆட்டோவில் போகும் போது லொறிகாரர் அல்லது பஸ் காரர் நேரே இருக்கைக்கு பக்கத்தில் வைத்து அக்ஸிலேட்டரை அமத்துவார் பாருங்கள். எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது தினமும்.ஒரு ரெஸ்ரிங்கும் இல்லை மண்ணும் இல்லை. நாலு ரயரும் ஒரு இரும்பு துண்டும் இருந்தால் அது வாகனம். மனிதரின் சுகாதாரமாவது மண்ணாவது? ஊழலிலும் லஞ்சத்திலும் எல்லாவற்றையும் சாதித்து விடத் துடிக்கும் இலங்கையராகிய எமக்கு வேறு என்னத்தைப் பற்றி யோசிக்க.இங்கு லண்டனில் லஞ்சம் இல்லாத அதிகாரிகளால் தான் நாடு முன்னேறிக் கொண்டே போகிறது.
ஒருமுக்கியமான விடயம் எல்லா பரீட்சைகளும் பாஸ் பண்ணி ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி 2009இல் லைசன்ஸ் தந்து விட்டார் எக்ஸ்ஸாமினர் எனக்கு. இப்ப கார் என்ற சுமையை தூக்கி கொண்டு மனிஸியையும் ஏத்திக்கொண்டு திரிகிறேன்.

8 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அனஸ் நானா, இலங்கையிலும் நிலைமை இப்பொழுது மாறிவருகிறது. பரீட்சை எழுத வேண்டும். பிறகுதான் எல்லாம்.

கத்தாரில் சற்றுச் சிக்கல் இருக்கிறது. லண்டனைப் போலவே நுணுக்கமாகப் பார்க்கிறார்கள்.

ஒரு மாதிரியாக நானும் லைசன்ஸ் எடுத்துவிட்டேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம் :)

இளைய அப்துல்லாஹ் said...

ஓம் சந்தோசம் ரிஷான்

இளைய அப்துல்லாஹ் said...

Dear Anas,
I enjoyed your car episode tremendously. Congratulations for the car and license. More congratulations for your wife. She won. Good thing happen because of a wife.

anbudan

a.muthulingam
canada

இளைய அப்துல்லாஹ் said...

அதுசரி, ஒருதடவை கார் அடிபட்டு , இன்சூரன்சு அது இது என்று இழுபறிப்படும்போது அடுத்த கண்டம் தெரியும் அனஸ்.

சி.இதயச்சந்திரன்

Ponniah said...

அன்பின் அனஸ்;

உங்கள் ஆனந்தத்தின் அலைவரிசையைப் புரிந்தேன். அதை அலைபரப்பவும்
மற்றவர்க்ளுக்குத் தொற்றவைக்கவும் ஒரு இலக்கியருக்குத்தானேமுடிகிறது?
பெருமைதான். நல்லவண்டியும் ஒரு இன்பமான இன்னொரு துணைதான். 16 வகைச்செல்வங்களில் அதுவும் ஒன்று என்று அன்றே சொல்லிவிட்டார்கள்.
”சந்தோஷம் தரும் சவாரிபோவீர். சலோச்சலோ....................!!!”

Karunaharamoorthy.Po

இளைய அப்துல்லாஹ் said...

"எப்போதும் ஒரு நல்ல கதை சொல்லியாக இருக்கிறாய் மச்சான். நன்றான நடை சுவாரசியமாக இருக்கிறது. நானும் தான் இந்த கொஞ்ச நாளா நோர்வேயில் 100 ரூபா காரரரைதேடித்திரிந்துகொண்டிருக்கிறேன். லைசன்ஸ் எடுக்க முன்னர் ஓட்ட கார் ஒன்றை வாங்கிவிட்டேன்.
பழகத்தான்....
ஹி.... ஹி...."

சரவணன் நோர்வே

காலப் பறவை said...

அனுபவித்தால் தான் தெரியும் அந்த சந்தோசமும் அதன் உள்ளே இருக்கும் வலியும். இப்போது உங்களுக்கு :-(

SAME PINCH

CHANDRA.RAVINDRAN said...

மனசிற்குள் இருக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்களில் ஒன்று அழகாய் வெளிவந்திருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் கதைகள் ஞாபகத்தில் வருகிறது.

உங்கள் கதைகளில் எள்ளல் சுவை அதிகம்! தொடருங்கள்…

-சந்திரா இரவீந்திரன்

நண்பர்கள் கூட்டம்