Sunday 7 June 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே அவதானிக்கபடுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.


எனது வாள்

கூர்வாளொன்றுஎப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்துகம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்பிரியம் காட்டுவதாய்
நினைத்து குரல்வளையை கீறிவிடும்
ரோஸாக்களைக் கொய்துகைப்பிடியில்
சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்கூர்வாளொன்று…

இது அவருடைய கவிதை இது போதும் அவரை அறிவதற்கு

6 comments:

M.Rishan Shareef said...

கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மறைவு என்னை மிகவும் கவலையடையச் செய்துகொண்டே இருந்தது. இந்த வருடம் தொடங்கியது முதல் நாம் கவிஞர்களை, நல்ல எழுத்தாளர்களை இழந்துகொண்டே இருப்பதாகப்படுகிறது. :(

தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கும் இக் கவிதை அருமை அனஸ் நானா.

பகிர்வுக்கு எனது நன்றி.
அன்னாருக்கு எனது அஞ்சலிகள் !!!

selventhiran said...

'சாலை விபத்தொன்றில் பலியானார் ராஜமார்த்தாண்டன்' எனும் குறுஞ்செய்தி அகநாழிகையிடமிருந்து நேற்று வந்திருந்தது. அதிர்ச்சியாக இருந்து.

இன்று அச்செய்தியை உறுதி செய்துகொள்ள தினசரிகள் அத்தனையும் புரட்டியாகிவிட்டது. எவ்வித தகவல்களும் இல்லை. அது சரி எழுத்தாளன் மரணம் குறித்து அவர்களுக்கென்ன அக்கறை?!

இளைய அப்துல்லாஹ் said...

தினசரிகள் பரபரப்புக்கு பின்னால் முந்தானை பிடித்து அலையவே நேரம் சரி. நயன்தாராவை பிரபுதேவா கலியாணம் முடித்து விட்டார்?(ஆண்டவனுக்குத்தான் தெரியும்) என்ற தகவலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன பாருங்கள் செல்வா!

திருமாவளவன் said...

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமான செய்தி என்னை மிகவும் துயரத்துள் வீழ்த்தியது. நம்பவே மனசு மறுக்கிறது.
கவிஞர் ராஜமார்த்தாண்டனை ஆரம்பத்தில் பெயரளவில் அறிந்திருந்தாலும் அவரது கவிதைகளை படித்துப் பார் என ஒரு ஊக்கிவிப்பைத் தந்தவர் வெங்கட் சாமிநாதன். இதன் பின் அவரது கவிதைகளை தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஈழத்து கவிதைகள் பால் வெகு அக்கறை கொண்டிருந்தார். இவர் போண்றவர்களின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு.
கடந்த ஜனவரியில் வெளியான எனது இருள்-யாழி கவிதைத் தொகுப்பில் பின் இணைப்பாக எனது கவிதைகள் தொடர்பான நீண்ட மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். வருகிற ஜனவரியில் இவரை நேரில் சந்திப்பேன் என்கிற பேராவலில் இருந்தேன்
இவ்வளவு எளிதில் காலன் அவரை கவர்வான் என எதிர் பார்க்கவில்லை.
அன்னாருக்கு தலை சாய்த்து என் அஞ்சலி.
திருமாவளவன்

சாந்தி said...

தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

இறையடி சேர்ந்த கவிஞனுக்கு இதய அஞ்சலிகள்.

இப்போதைய அவசர உலக மனிதர் போல ஊடகங்களும் எதற்கெதற்கோவெல்லாம் முண்டியடித்துச் செய்தியெழுதுகின்றன. ஆனால் இப்படி எம் சமூகத்துக்காக வாழ்ந்து போனவர்களைக் கண்டுகொள்வதேயில்லை என்பது கசப்பான உண்மைகள்.

சாந்தி

இளைய அப்துல்லாஹ் said...

திருமா! மனம் கனத்து போகிறது அறிவாளிகளின் மரணங்கள் உண்மையில் பேரிழப்புதானடா ஒன்றும் செய்ய முடியா நிலை அல்லது கையறு நிலை என்பது இதுதான். எங்களால் ஒன்றுமே செய்யமுடியாமல் தொண்டைக்குள் அடைத்து போகிறது பார்த்தாயா?

சாந்தி ! ஊடகங்களை பற்றி சொல்லாதீர்கள். வெறுப்பு மட்டுமே வருகிறது.

free counters

நண்பர்கள் கூட்டம்