Saturday 31 July 2010

லண்டன் கனவுகளின் தேசம் அல்ல



மட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'.இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான்.பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாக லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது இல்லை.பதினைந்து லட்சம், இருபது லட்சம் ரூபா ஏஜென்ட்மாருக்கு கொடுத்து விசா வாங்கி இங்குவந்து இறங்கி விமானத்தில் வைத்து பாஸ்போட்டை கிழித்து கக்கூசுக்குள் போட்டுவிட்டு இமிக்கிறேசனில் வந்துநின்றுகொண்டு எனக்கு போக்கிடம் இல்லை என்று சைக்கினையில் இமிக்கிறேசன் ஒபிசரிடம் சொல்ல அவர் கூட்டிக்கொண்டுபோய் அகதி அந்தஸ்து கொடுத்ததெல்லாம் இப்பொழுது பழைய கதை. லண்டன் இப்பொழுதெல்லாம் அகதிகளுக்கு, குடியேற்றவாசிகளுக்கு பெரும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. எல்லாம் இந்த கொன்சவேட்டிவ் கவர்ண்மெண்ட் வந்ததன் பிறகுதான் என்றால் அதிலும் உண்மை இருக்கிறது. ஆனால் ஏற்கனவே லேபர் கவர்ன்மன்ட் 2011 ஆம் ஆண்டு வெயில் காலத்துக்கு முன்பு அகதிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதாக அறிவித்து அதன்படி செயலாற்றி வந்தது. ஆனால் கோடன் பிறவுணின் லேபர் கவர்ன்மன்ட் வெளியில் தெரியாமல் அகதிகள்மீது கடும் கெடுபிடிகளைச் செய்திருந்தது. ஆனால் கொன்சவேட்டிவ் அரசு எப்படியாவது வெளிநாட்டுக்காரர்களை ஒரு வழியாக ஒழுங்குபடுத்தவேண்டும் என்று துடிப்பாக வேலை செய்கிறது.
முதல் அகதி அந்தஸ்து கேட்டு இதுவரை காலமும் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு இப்பொழுது விசா கொடுக்கிறார்கள். ஆனால் புதியவர்கள் விடயத்தில் அரசு கடும்போக்கையே கொண்டிருக்கிறது.
இப்பொழுது இங்கிலாந்தும் மேற்கத்தைய நாடுகளும் அகதிகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவுஸ்ரேலியா அகதிகளை அங்கு வரவேண்டாம் என்று பகிரங்கமாகவே விளம்பரம்போட்டு சொல்கிறது. ஐரோப்பிய நாடுகள் அகதிகள் விடயத்தில் எந்த இரக்கமும் காட்ட இந்தக் காலத்தில் தயாராக இல்லை. சிலோனிலிருந்து லண்டன் சீமையை பெரும் கனவாக யாரும் எண்ணவேண்டாம். இங்குவந்து வேலை இல்லாமல் கஸ்டப்படும் எத்தனையோ பேர் எங்களுக்கு முன்னால் தினமும் போய்வந்துகொண்டிருக்கின்றனர். வேலை செய்ய முடியாமலும் இன்சூரன்ஸ் நம்பர் இல்லாமலும் அகதிகளாகப் பதிய முடியாமலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் அலைந்துகொண்டிருக்கின்றனர். இங்கு இப்பொழுது பொலிசாரும் இமிகிறேசன் உத்தியோகத்தரும் சேர்ந்து சட்டவிரோதமாக லண்டனில் இருப்பவர்களைக் கைதுசெய்து வருகின்றனர். கடந்த வாரம் 20ஆம் திகதி கென்சல்கிறீன் எனும் இடத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்கள் விசாவில் லண்டனுக்கு வந்துவிசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தவர்கள்.இப்படி இருப்பவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்றுதான் பொலிஸ் சொல்கிறது. இந்த வெயில் காலத்தில் அதாவது இப்பொழுது சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடித்து கைதுசெய்யும் வேலை வெகு மும்முரமாகவே நடந்து வருகிறது.
நாட்டுக்கு உள்ளே வரும் சட்டவிரோத குடியேறிகளையும் இங்குவந்து தங்கியிருப்பவர்களையும் உடனடியாகப் பிடித்து நாடு கடத்துவதற்கு யு. கே. போடர் ஏஜன்சி எல்லாவகையான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று இமிகிறேசன் மினிஸ்டர் சொல்கிறார்.சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக பிறண்ட் உள்ளூர் இமிகிறேசன் உதவி பணிப்பாளர் ஸ்டீவ் பிஷர் சொல்கிறார் 'விசா இல்லாதவர்களைப் பிடிப்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்கும். அவர்களைக் கைதுசெய்து நாடுகடத்தப்படும். பிறண்ட் ஏரியாவில் மட்டுமல்ல லண்டன் முழுவதிலும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் துரிதமாக்கப்படும்'. பொலிசுடன் இணைந்து தேடுதல் துரிதப்படுத்தப்படும். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல், உரிய விசா இல்லாமல் வேலைக்கு வைத்திருக்கும் கடை முதலாளிமாருக்கு எதிராக கடும் நடவடிக்கையும் பெரும்தொகை தண்டப் பணம் அபராதமும் விதிக்கப்படும். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல் ஒருவரை வைத்திருந்தால் கடைக்காரருக்கு 10 ஆயிரம் பவுண்ட் தண்டப்பணம் கட்டவேண்டும். இதுதான் சட்டம் இங்கு. இதனை விளங்க வேண்டும்.இப்பொழுது லண்டனில் யாருமே வேலை தருகிறார்களில்லை. நாங்கள் லண்டனுக்கு வந்த தொண்ணூறுகளில் எங்கேயாவது ஒரு தமிழ் பெற்றோல் ஸ்டேசன்காரர் எங்களுக்கு வேலை தருவார். தமிழ் கடைகள், தமிழ் பெற்றோல் ஸ்டேசன்கள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. ஆனால் இப்பொழுது 10 ஆயிரம் பவுண் தண்டப் பணத்தைக் கட்ட எல்லோரும் பயந்துபோய் இருக்கின்றனர். அதனால் சட்டவிரோதமாக வேலை தர யாரும் அஞ்சுகிறார்கள்.அதுமட்டுமல்ல. மாணவர் விசாவில் வருகிறவர் இங்கு பெரும் சிரமப்படுகின்றனர். வேலை இல்லை. உள்ளூர்காரர்களுக்கே வேலை இல்லை. பிறகு எங்கே வெளியூர்காரர்களுக்கு வேலை என்று கையை விரிக்கிறார்கள் வேலை கொடுப்போர்.இப்பொழுது தமிழ் கடைகளிலும் பெற்றோல் ஸ்டேசன்களிலும் வேலை இல்லை.சிலோனிலிருந்து மாணவர்களாய் வருகிறவர்கள் லண்டன் தானே. இங்கு வந்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம் என்ற கனவோடு மட்டும் வராதீர்கள். இங்கு உங்களுக்கு சிவப்புக் கம்பளம்போட்டு வரவேற்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். இங்கு லண்டனுக்கு மாணவர்களாக வருகிறவர்கள் ஸ்ருடன் விசாவில் வந்துவிட்டு கொலிச்சுக்குப் போகாமல் லட்சம் லட்சமாய் சம்பாதித்து பணக்காரர்களாகலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.
எனக்குத் தெரிந்த பொடியன் ஒருவர் 15 லட்சம் ஏஜென்சிக்குக் கொடுத்து 2 வருட விசா வாங்கியிருக்கிறார். எல்லாம் லண்டன் போய் 15 மாதத்தில் கட்டிவிடலாம் என இங்கு வந்திருக்கிறார்.அங்கு சிலோனில் ஊர் முழுக்க கடன். பெற்றோர்கள் மகன் லண்டனில் இருக்கிறான். கடன் கட்டலாம் என்றால் எங்கே. இங்கு மகனுக்குக் கிழமைக்கு 10 மணித்தியாலம்தான் வேலை. அதுவும் கோழி பொரிக்கிற கடையில் கிழமைக்கு 40 பவுண்ஸ்தான் அவனின் உழைப்பு. பங்குபோட்டு தங்கும் ஒரு றூமின் வாடகையே மாதம் இருநூறு பவுண். படிப்புமில்லை. வேலையுமில்லை. இங்கு நாயாய், பேயாய் றோட்டில் அலைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு சாப்பாட்டுக்கே பெரும் திண்டாட்டமாக இருக்கிறது என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறார். அவர் கடன் வாங்கிய 15 லட்சத்தை எந்த ஜென்மத்தில் கட்டப்போகிறார். இங்கு லண்டன் சும்மா பணம் கொட்டும் பூமியாக இல்லை என்பதை ஸ்ருடன் விசாவில் வருகிறவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்ருடன் விசாவில் வந்து முழு நேர வேலை செய்யலாம் என்று யாரும் லண்டன் வந்து மொக்கையீனப்படவேண்டாம்.
• யூலை 20 ஆம் திகதி 5 பேர் கென்சல்கிறீனில் கைதுசெய்யப்பட்டனர். இன்சுரன்ஸ் நம்பர் இல்லாமல் வேலை செய்து.
• யூலை 17 ஆம் திகதி அபறோஸ் றெஸ்ரூரண்டில் நான்கு பங்களாதேஸ்காரர் சட்டவிரோதமாக வேலைசெய்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அகதிகளாகப் பதிந்தாலும் வேலை செய்யக்கூடிய பெமிட்டை பறித்திருந்தார்கள். றெஸ்ரூரண்டிற்கு தண்டம். அகதிகள் திரு;பி அனுப்பப்படப் போகிறார்கள்.
• யூலை 13 ஆம் திகதி சம்மர் பிளேஸ் றெஸ்ரூரண்டில் 42 வயது சமையல்காரர், 23 வயது பரிசாரகர், 26 வயது சமையல்காரர், 28 வயது பெண் ஆகியோர் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 28 வயது பெண் ஸ்ருடண்ட் விசாவில் வந்து வேலை செய்திருக்கிறா.
• யூலை 7 ஆம் திகதி 'பு குவாய்' றெஸ்ரூரண்டில் 2 மலேசியக்காரரை பிடித்தது பொலிஸ். அவர்களுக்கு வேலை பெமிட் இல்லை. இரண்டு மலேசியரும் நாடு கடத்தப்பட்டனர். றெஸ்ரூரண்ட்காரருக்கு 20,000 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது.
• லெஸ்ட்ரில் யூலை மாதம் 7 ஆம் திகதி சட்டவிரோதமாக வேலை செய்தவர்கள் 9 பேர் பிடிபட்டனர். அவர்களை வைத்திருந்த தையல்கடைக்காரருக்கு 90,000 ஸ்பொட் பைன் விதிக்கப்பட்டது.
தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கொடுப்பதன்மூலம் இங்கிலாந்தின் போடரைக் கட்டுப்படுத்த யு.கே. போடர் ஏஜென்சி முழு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாக இருப்பவர்களைக் கைது செய்தலும் நாடுகடத்தலும். மிக அதிகமான பணம் தண்டமாக செலுத்த எல்லோரும் அச்சப்படும் சூழ்நிலையில் நம்பர் இல்லாமல் வேலை கொடுக்க யாருமே தயாராக இல்லை. இதனால் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு வேலை இல்லை. விசா இல்லாதவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது இங்கே. ஒரு வங்கி எக்கவுண்ட் திறக்கவோ, நோய் என்றால் மருந்து எடுக்கவோ, அல்லது ட்றைவிங் தெரிந்தால் லைசன்ஸ் எடுக்கவோ ஒன்றும் முடியாது. பல்லுக்கழட்டின பாம்பாட்டம் எத்தனை நாளைக்கு லண்டனில் இருப்பது.மேலே நான் காட்டிய கைதுகள் யூலை மாதத்தில் நடந்த எனக்குத் தெரிந்த சில. இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை கைத செய்கிறார்கள். அது மட்டுமல்ல. மாணவர்கள் கிழமைக்கு 20 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது. இது சட்டம். அப்படியான வேலை செய்து பிடிபட்டால் ஸ்ருடன்ட் உடனடியாக நாடு கடத்தப்படுவார். வேலை கொடுத்தவருக்கு 10,000 பவுண் தண்டனை. ஆகவே பெரும் செல்வம் சேகரிக்கும் கனவை சிவோனிலிருந்து வரும் மாணவர்கள் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்றுதான் குறிப்பிடுகிறேன்.இன்னும் அகதிகள் கையெழுத்திடப் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டுக்கு முதல் ஏற்கனவே அகதிகளாக உள்ளவர்களுக்கு விசாவை வழங்கிவிட்டு ஏனையவர்களைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறை இப்போது லண்டனில் துரிதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் எனக்குத் தெரிந்த ஒருவர் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் 20 லட்சம் ரூபா கொடுத்து களவாக ஜேர்மனி வந்து பிறகு கென்டயினர் மூலமாக லண்டன் வந்தவர். பெண்சாதி பிள்ளைகள் இப்பொழுது ஊரில் இருக்க முடியாமல் காலிப்பக்கமாகப் போய்விட வேண்டியதுதான் என்று கொழும்பில் இருந்து என்னோடு பேசும் பொழுது சொன்னார். ஊரில் இருந்தால் கடன்காரர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது என்கிறார் அவர்.இப்பொழுது வீடுகளுக்கு வந்தும் பொலிசும் இமிக்கிரேசன் அதிகாரிகளும் செக் பண்ணுகிறார்கள். றோட்டில் வைத்து செக் பண்ணுகிறார்கள். இல்லீகல் பிஸ்னஸ் எல்லாவற்றையும் பிடித்து தண்டனை கொடுக்கிறார்கள்.அகதிகளும் தங்களுக்கு விசா கிடைத்தவுடன் அரசாங்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள். அதுதான் அகதிகள் மீதும் பெரும் கோபம் அரசாங்கத்திற்கு. அண்மையில் ஒரு தமிழ்க் குடும்பம் அகப்பட்டது. இங்கிலாந்தில் பொதுச்சொத்து மோசடியில் ஈடுபட்ட வந்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஏழு தமிழர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான செயல்கள் அரசாங்கத்தை பெரும் இக்கட்டுக்குள் தள்ளியிருக்கின்றன.அத்தோடு அகதிகளைக் கட்டுப்படுத்துகிறோம், அகதிகளால்தான் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன என்று புதிய கவர்மன்ட் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறது.பிரித்தானியாவில் உள்ள சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று பிரிட்டனின் குடிவரவுத்துறை அமைச்சர் டேமியன் கீறீன் தெளிவாகச் சொல்கிறார். விசாவுக்காக பொய்யாக கலியாணம் முடிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரப்படும் என்கிறார் அவர்.இந்தியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை டொமியன் டேமியன் நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார்.போலியான திருமணங்கள், சட்ட விரோத பணியாளர்கள், சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்கள், என்பவற்றுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் டேமியன் சொல்கிறார்.2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவின் குடிவரவு பல்லாயிரக்கணக்கில் குறைக்கப்படும் என்று திட்டவட்டமாக அவர் சொல்கிறார். பிரிட்டனின் எல்லைகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தை ஏனைய நாடுகள் கொண்டுள்ளன. பிரிட்டனுக்குள் வந்து விட்டால் இங்கு சுலபமாக இயங்க முடியும், சட்ட விரோதமாகத் தொழில்செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றுவோம் என்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு கடினமான தண்டனை வழங்குவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்துவோம் என்றும் அமைச்சர் சொல்கிறார்.அதனால்தான் இனிமேல் லண்டன் கனவுகளின் தேசமாக அமையமாட்டாது என்று நான் சொல்கிறேன்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள், சரியான நேரத்தில் வந்த பதிவு.

லண்டன் மட்டும் அல்ல கனடா, australia, new zealand,, துபாய் போன்ற நாடுகளிலும் இதே நிலைமை. எனவே தமிழர்களே agentukalidam பணம் கட்டி ஏமாற வேண்டாம்.

வந்தியத்தேவன் said...

அனைத்தும் உண்மையா? யாராவது நண்பர்கள் உறவினர்கள் பக்கபலமாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம் இல்லையென்றால் கஸ்டம் தான்.லண்டனில் உள்ள சில இடங்களை விட மட்டக்குளி மோதரைப் பகுதிகள் மிகவும் சுத்தமானவை.

free counters

நண்பர்கள் கூட்டம்