Wednesday 27 May 2009

தாலியால் நின்று போன திருமணம்


ங்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளை தாலியை கட்டுவோமா வேண்டாமா என்றுயோசிக்கிறார். தனக்கு தாலி கட்ட விரும்பமில்லை. கொஞ்சம் பெரியார் கொள்கைகளோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர். ஆனால், பெண் வீட்டுக்காரர் மாப்பிள்ளை லண்டன் என்றவுடன் சம்மதித்துவிட்டனர். பெண்ணுக்கு தாலி கட்டுவதுதானே மரபு. அதுதானே முறை என்று மாப்பிள்ளையின் வீட்டுக்காரர் அக்கம் பக்கத்துகாரர் ஒரே பிடியாய் பிடிக்கினம். ஆனால், மாப்பிள்ளையோ அது பெண்ணடிமைத்தனம் என்கிறார்.தாலி கட்டினால் புருசன் சாகும்வரை கழற்றக்கூடாது என்றுதான் ஊரில் வழக்கமிருக்கிறது. கழுத்திலை லேசான சங்கிலி போடுகிறவர்களும் கழுத்திலை பாரத்தை விரும்பாதவர்களும் இப்ப உள்ள பிள்ளைகளில் வேலைக்கு போகிறவர்களும் தாலியைக் கழட்டி வீட்டில் வைத்து விட்டே வருகிறவர்களை பார்க்கிறேன்.
புருசன் மரணமானபிறகு தாலியைத் தொடர்ந்து போட்டிருக்கிற ஒரு பெண்மணியையும் இங்கே கண்டிருக்கிறேன். அவ சொல்கிறா புருசன் இருக்கும் பொழுது மட்டும் ஆர் போடச் சொன்னவை? இது வேறுமாதிரியான எதிர்ப்பு.
1954 களிலே தமிழ் நாட்டில் தாலி தொடர்பான ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கிறது. தமிழர்களிடத்தில் இந்த தாலி தொடர்பான வழக்கம் ஏதும் இல்லை என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. பெரியார் தமிழகத்தில் தாலி இல்லாத பல திருமணங்களை நடத்தி வைத்தார்.
1968ம் ஆண்டு அண்ணாத்துரை காலத்தில் தமிழகத்திலே நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் தாலி இல்லாத கல்யாணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ் நாட்டிலே இது செல்லுபடியாகும்.
பெண்கள் விடயத்தில் ஆண்கள் செய்யும் அடிமைத்தன சாட்சியங்களுள் ஒன்று தாலி என்றே பெண்ணியவாதிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு பெண்விடுதலை தொடர்பாக பேசுகிறோமோ அதுபோல தாலிக்கும் மெட்டிக்கும் விடுலை வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
கணவர் இறந்தவுடன் கைவளையல்களை உடைத்து தாலியை அறுத்து குங்குமத்தை அழித்து என்று ஒரு பெண்ணுக்கு நடக்கிற கொடுமை தாங்கொணாதது எனவே இவையெல்லாம் இருந்தால் தானே அவளை அவ்வாறு செய்ய வேண்டும். தாலி அணியாவிட்டால் அறுக்கத் தேவையில்லையே என்று கேட்கும் பெண்களின் கேள்விகளும் சரியே.

உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர புதல்வற் பயந்த சிதலை அவ்வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி கற்பினின் வழா அ.
நற்பல உதவி பெற்றோன் பெட்டும் பிணைய அக! என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி, பல் இருங்கதுப்பின் நெல்லொரு தயங்கவதுவை நல் மணம் கழிந்த பின்றை

இந்த அக நானூற்று பாடலில் வருகின்ற திருமணக் காட்சியில் எங்குமே தாலி குறிப்பிடப்படவில்லையே. பிறகென்ன தாலி என்று அடம்பிடிக்கிறார் மாப்பிள்ளை. தாலி எங்கேயிருந்து தமிழர் வாழ்வில் புகுந்து இவ்வளவு பிரச்சினைகளையும் எழுப்புகிறது ஆண்டவனே!

தாலியால் ஒரு கல்யாணமே நின்று போனது எனக்குத் தெரியும். பெண் இங்கே புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு தங்கம் என்றாலே அலர்ஜி. அவள் ஒருவனை காதலித்தாள் பின்னர் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கல்யாணம் செய்ய சம்மதித்தாள். ஆனால், நோதாலி என்று சொல்லிவிட்டாள். பெற்றோர் பணக்காரர் தங்களது படாடோபங்களை இங்கு வெளிநாடுகளில் காட்டுவதற்கு கோவில்குளம், சாமத்தியவீடு, கல்யாண வீடு என்று அலைந்து திரிவார்கள். ஆனால் இங்குள்ள பிள்ளைகள் அப்படியில்லை. தாங்கள் எது நினைத்ததோ அதனைத்தான் செய்வார்கள். மற்றவர்களைப் பற்றி மிகவும் பார்க்க, கேட்க மாட்டார்கள்.

பிள்ளை சொல்லிவிட்டது தங்கம் எதுவுமே வேண்டாம். தாலி உட்பட ஆனால், பெற்றோர் தாலி கட்டாமல் என்ன கல்யாணம் என்று சொல்லி வாக்குவாதப்பட கல்யாணம் நின்று போனது. பின்னர் அந்தப் பெடியனும் பெட்டையும் லிவ் இன்டு கெதர் வாழ்க்கை வாழுகினம். அவர்களைத் தடுக்க முடியாது. அப்பிடித் தடுத்தால் அது இங்கே லண்டனில் கோட்டு கேஸ் என்று பெரிய பிரச்சினையாகிவிடும். தாலி ஒரு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் சிலருக்கு அது சுகம். பலருக்கு அது சுமையாகிக் கிடக்கிறது.

புன்னியாமீன்

நூறு புத்தகங்களை எழுதி விட்டார். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆசிரியர் என்பதற்கு அப்பால் அவர் இதுவரை 240 எழுத்தாளர்களின் முழு விபரங்களைத் தொகுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு எல்லா எழுத்தாளர்களும் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
எனக்கு 2005ம் ஆண்டு ஒரு சிவப்பு படிவம் ஒன்று அனுப்பி வைத்தார் புன்னியாமீன். அதில் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதனைப் பார்த்தவுடன் அலுப்புத்தட்டியது. நிறைய விவரங்கள். அது இது என்று அதிகம். அப்படியே வைத்துவிட்டேன்.ஆனால், ஏதோ ஒரு எண்ணத்தில் இங்கு செல்வராஜா லண்டனில் வைத்துத் தந்த ஒரு படிவத்தை பொறுமையாக உட்கார்ந்து எழுதிக் கொடுத்தேன். (தினக்குரலில் ஞாயிறு இதழில் வந்தது)அது இப்பொழுது தொகுதி 09இல் வந்திருக்கிறது. அதனைத் திறந்து பார்த்த பொழுதுதான் உண்மையில் புன்னியாமீனின் பெரும் சேவை எனக்குத் தெரிந்தது.தமிழ் எழுத்தாளர்களின் விபரத்தை முழுமையாகப் பதிவு செய்த புன்னியவான் அவர்.
எல்லா விபரங்களையும் மிகத் தெளிவாக தொகுத்திருக்கிறார். இது எல்லா நூலகங்களுக்கும் போகிறது. எல்லோரும் பார்ப்பர். அட இத்தனை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்களா இலங்கையில் என்று மூக்கில் விரலை வைப்பர். அது மட்டுமல்ல, மற்றவர்களைப் போல இல்லாமல் தெந்தட்டமான குறிப்புகள் இல்லாமல் விலாவாரியான குறிப்புகள் விபரங்களை சேகரித்து பதிப்பித்து இருக்கிறீர்கள். ஒரு சிறந்த தமிழ்ப் பணி செய்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் வன்னியில் தரமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் நிச்சயம் பதியப்பட வேண்டியவர்கள்.
கலாபூசணமே உங்களுக்கு மௌத்துக்குப் பிறகும் பேசப்படும் விடயம் இது. கை குலுக்கல்கள் உங்களுக்கு

இந்து திருமணம் தொடர்பான அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Betty LaDuke அவருக்கு நன்றி

7 comments:

M.Rishan Shareef said...

அன்பின் அனஸ் நானா,

எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களின் சேவைகள் குறித்து எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சமீபத்தில்தான் அவரது இவ் எழுத்தாளர்கள் குறித்த தொகுதிகளனைத்தையும் நூலகத்திலிருந்து பதிவிறக்கிப் பார்த்தேன். எவ்வளவு பெரிய சேவையை நமக்கு ஆற்றியிருக்கிறார் என வியந்தேன். யாரும் இதுவரைத் தொட்டுப் பார்க்காத முயற்சி. அவரது சேவைக்கு எனது பாராட்டுக்கள்.

இங்கு பதிவாக இட்டமைக்கும், பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி நானா !

இளைய அப்துல்லாஹ் said...

உண்மைதான் நன்றியடா.

சாந்தி நேசக்கரம் said...

தாலியால் நின்று போன திருமணத்தை அந்த நண்பர் தனது துணைாக வரவுள்ள பெண்ணுக்கு சரியான தெளிவை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தத் தாலிச்சோலி இன்னும் பெரும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

2வருடம் முதல் ஒரு மரண வீட்டில் நிகழ்ந்த இந்து முறைப்படியான தாலியறுப்பை எழுதியபோது எனத சகமூகத்திடமிருந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவுமறை ஆண்களிமிடமிருந்தும் வந்த நெருக்குவாரங்கள் தொல்லைகள் இறுதியில் யேர்மனியின் சமூக நீதிமன்று வரையும் கொண்டு போய்விட்டது.

ஊடகங்களில் வல்லமையுள்ள உங்கள் போன்றோரால்தான் இத்தகைய ஒன்றுமேயில்லாத தாலிக்காக வாழ்வை நாசமாக்குபவர்கள் முதல் , பல மடமைத்தனங்களைக் களைய முடியும்.

அனஸ்,
நீண்டநாளின் பின்னால் சமூகம் மீதானவொரு பார்வையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.அ ஓய்ந்துவிடாமல்.

இளைய அப்துல்லாஹ் said...

உங்கள் கட்டுரையை நான் படித்திருக்கிறேன் நீங்கள் வலு வீரியமாய் எழுதக்கூடியவர்

Kalaimahan said...

இங்கிதமாய்த் தமிழன்னைக்குப் பணிசேர்ப்பவனே
இனிதான இளைய அப்துல்லாஹ்வே!
சங்கநாதமாய உன்வரிகள் பலகளித்துளேன்
சத்தானவை அவையாவும் வாழியவே!

என்னாசான் புன்னியாமீனின் பணிகளவை
உன்னதமாய்ச் சொன்னீரையா - அவை
உறங்கும் சிலவுயிர்கள் காண்பதிலை
உந்தன்பறையைப் போற்றினேனே!

அவர்தம்பணிகள் அழிக்கவியலாப் பணிகள்
அழிகியவர் பண்பும் உச்சிமேற்கொண்டேன்
கவர்ச்சியாய் தமிழ்க்க வராற்றும்பணிகள் சொன்னீர்
கலையானும் உந்தன் பண்பினை மெச்சினேனே!

அன்புடன்
கலைமகன் பைரூஸ்

இளைய அப்துல்லாஹ் said...

மனதார வாழ்த்தியுள்ளீர்கள் அக மிக மகிழ்ந்து போனேன்.

maatrupirathi said...

இலக்கியம் ஒரு தனிவகையினமா? இலக்கியமற்றவை என வரலாற்றின் நெடிய பக்கங்களில் புறமொதுக்கப்பட்ட பிரதிகள் கலகம் செய்யும் காலமாக இன்றைய எழத்துக்களைப் பார்க்கிறேன்.
எழுத்துக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டன எனஅறிவிப்பதும்,அதைக்கொண்டாடுவதுமான ஓரு எழுத்து இயக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
நவ தந்தைவழி சமூகம் உரையாடத் தூண்டும் இடம்.உலகம் ஆண்களால் மட்டுமேயானதாக கட்டமைக்கப்பட்டு கதையாடப்படுவதற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது.
றியாஸ் குரானா. www.maatrupirathi.blogspot.com

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive